This entry is part 3 of 8 in the series 21 டிசம்பர் 2025

வசந்ததீபன்

நாயாய்  நிழல்  துரத்துகிறது

கல்லுக்குத்  தப்ப ஓடுகிறேன்

ஒளிய  வெளிச்சம்  

என்னைத்  தேடி  வருகிறது.

வீடு  திறந்து  கிடக்கிறது

பறவைகள்  இரை  தேட  போயிருக்கின்றன

இருள்  மெல்லக்  கவியத்  தொடங்குகிறது.

அழகான  பூஞ்செடி

பூவொன்றைத்  தர  அசைந்து  அழைக்கிறது

காற்று  சட்டென  தட்டிவிட  மண்ணில்  விழுகிறது  நேசம்

அனாதரவாய்  தெருவில்  கிடக்கிறாள் 

பச்சதண்ணீ  கொடுக்க  ஆளில்லை

அவள் தாய்பாலை  தானமிட்டவள்

அக்னி குஞ்சொன்று

மனித வனத்தில்

கனிந்து

கொண்டிருக்கிறது

மறைத்த குறுவாள்

அவனின் மரணம்

நிழலாய்

படரும் துரோகம்

கார்ப்பரேட்டுக்கு 

விளம்பரம் செய்யத் தேவை

முகமல்ல

பாலுறுப்புகள் மட்டும்

மிடிமையும் அச்சமுமில்லை

உண்மைகள் சொல்ல

தீமைகள் ஒழிந்து விடும்

நேசம் முழக்கமிட

புத்தரின் துவராடையில்

பளிச்சிடுகிறது

யசோதையின்

ஒரு துளிக் கண்ணீர் 

சிலுவையில்

அறையப்பட்ட பின்

கனவுகளின்

மலைப் பிரசங்கம் 

உள் காயத்தில்

ஊறும் வலி

வார்த்தையற்ற

ஒலியாய்.

Series Navigationசாந்தம்மாவும் பரமேசுவரியம்மாவும்வாழ்க்கை