(திண்ணை இதழில் பிரசுரிக்க வேண்டி “வைபவம்” எனும் நீள் கவிதையை தங்கள் பரிசீலனைக்கு இம்மின்னஞ்சலுடன் இணைத்துள்ளேன்.
இஃது, தவத்திரு நொச்சூர் ஸ்வாமிகளின் “மஹாதேவ மாலா” எனும் மலையாளக் கிருதியைத் தழுவியும், இராமலிங்க ஸ்வாமிகளின் திருவருட்பாவைத் (மகாதேவ மாலை) தழுவியும் இயற்றப்பட்டுள்ளது.
நீர் நிலைகளில் தோன்றும் கதிரவனின் பிரதிபிம்பம், அருகிலுள்ள சுவற்றில் பிரதிபலிக்கும் வெளிச்சத்தில் நிழலாடுவதைப் பார்த்து, “ஆகாயத்தில் ஸூரியன் இருக்கின்றான்” எனும் நிதர்சன உண்மையைத் தெரிந்து கொள்கிறோம். அதுபோலவே, ஸத்துவம்-ராஜஸம்-தாமஸம் எனும் குணவேற்றுமைகளால், மூன்றுவிதமான அஹங்காரம், மனம்-புத்தி-புலன்கள் மற்றும் உடல் முதலியவற்றில், “இருப்பு” (அவைகள் இருக்கின்றன) என்ற விளக்கம் ஏற்படுகிறது. இவ்வுணர்விலிருந்தே உண்மையில் உள்ள பொருளாம் பரமாத்மவைப் பற்றிய அறிவு தெளிவாகிறது.
சான்றாக, ஆழ்ந்த உறக்கத்தில், பூத-ஸூக்குமப் புலன்கள், மனம், புத்தி ஆகியனவெல்லாம் தங்கள் தோற்றத்திற்குக் காரணமான அஹங்காரத்தில் ஒடுங்கிவிடுகின்றன. அஹங்காரம் ஆன்மாவில் லயமாகி விடுகின்றது. அப்போது, விழிப்பு-உறக்கம்-கனவு ஆகிய மூன்று நிலைகளிலும் ஸாக்ஷியாக எப்பொழுதும் விழித்துள்ள ஆன்மா மட்டும் எப்போதும் போல் ஒளிர்கிறது. அதனால்தான், “நான் நன்றாக உறங்கினேன்” எனும் உணர்வு பின்னர் தோன்றுகிறது. மனம் செயலற்றுக் கிடக்கும் போது, ஆன்மா எப்பொழுதும் போல் உயிர்ப்புடன் விளங்குவதால்தான் உடல், உயிருடன் (ஶிவமாய்) இருக்கிறது. இல்லையெனில் உடலின் பெயரே (ஶவமாய்) மாறிவிடும்.
இவ்வுயிரொளி உணர்வு (ஶிவ) வைபவத்தையே இக்கவிதை பலவித கோணங்களில், பரிமாணங்களில், படிமங்களில் எடுத்தாள்கிறது. இஃது, திண்ணை வாசகர்களுக்கும், தமிழ் கூறும் நல்லுலக ஆன்மீக அன்பர்களுக்கும் வாசிக்கத்தக்க படைப்பாக இருக்குமென நம்புகின்றேன்.
இப்படிக்கு அன்புடன்,
வேங்கடேஶன் நாராயணஸ்வாமி)
வைபவம்
விஶ்வமிது எங்கெங்கும் வியாபித்தேக
ஜீவாதி கலையேந்தி ஆங்காங்கே
நிருபாதி நிர்மாய ககனமாய்
பிராணிகள் தன் ஹிருதயத்தில் சித்ததாய்
கதியாய் மெய்ஞானக் கண்ணதாய்
கூட்டாய் தனித்து இணை ஒன்றில்லாதாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (1)
விஶ்வம் தான் தனுவாய் விளங்கி நிற்கும்
வெளியாய் வளியாய் ஒளியதாய்
யோகிகள் தன் அனுபவத்தில் வேத்யமாய்
விகல்பமற்ற உபஶாந்த நிலையதாய்
நிஷ்களமாய் அருள் ஞானச்சுடராய் நின்ற
வியோமம் தான் தானாய் ஞாதாவாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (2)
வித்தாய் முளையாய் விளையுமாய்
வளமாய் நிலமாய் வழியுமாய்
கொத்தாய் பயனாய் போக்தாவாய்
மண்ணாய் நீராய் காற்றுமாய்
சித்தாய் ஸத்தாய் ஸதாநிலையாய்
அன்பாய் ஜீவன்முன் ஸாக்ஷியாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (3)
இரண்டாய் மூன்றாய் பின் ஏகமாய்
ஐந்தாய் யோகத்தின் ஐந்ததாய்
நன்று ஆய மலமதியின் மரு உன்னதாய்
ஸித்தானுபூதிக்கு வித்ததாய்
தானில்லா தன்யமாய் நிற்பிலாற்ற
தன்னில் தான் தானாய யோகமதாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (4)
நிருபாதி சைதன்ய வடிவாய் ஏக
களங்கம் தானற்றதாய் தானாய் நின்ற
சித்பரமாய் தத்பரமாய் சித்வியோமத்தில்
திருநடனம் செய்யும்தன் கோலம் தானாய்
நிருபமமாய் நித்யத்தின் தெளிவாயாதி
நிர்மாய ஜ்யோதியதாய் கண்டகத்தில்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (5)
பரமாய் ஸூக்ஷமுமாய் ஸ்தூலமாய்
பரமார்த்த நிலையதாய் பதாதீதத்தில்
ஶிரமாய் நின் அருளும் கிருபையுமாய்
ஆத்மாவின் சித்ஶக்திப் பிரஸரமாய்
ஸ்திரமாய் ஜீவத்வ நிவிருத்தியாய்
ஶிவமாய் ஶிவானுபவ நிதியுமாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (6)
இந்திரியமாய் கரணாதி ஐந்துமாய்
பிரகிருதியும் பின் புருஷனுமாய் தானுமாய்
காலமுமாய் தேஶமுமாய் நிமித்தமாய்
பந்தமற்ற தலமதுவாய் பரமமாய்
சிந்தைக்கு வழங்காத மௌனமாய்
மஹாமௌன நிலையாய் விஶ்வமுண்டு
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (7)
அஹமாய் சின்மாத்ர போதமாய்
சித்தத்தில் விருத்திகள் தானற்றதாய்
கேவலமாம் யோகத்தின் முனம்பதாய்
நிர்வாண பூமாவாய் மௌனமாய்
ஞானத்தின் அருளதுவாய் தனலேகுன்ன
வேதாந்தத் தருவாய் வலியதாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (8)
தத்பதமாய் அருமறையில் விளங்கி நிற்கும்
த்வம் பதமாய் ஜீவத்வ கலையுமாய்
அஸிபதமாய் குருவாய் போதமாய்
நிர்வ்ருதியாய் சைதன்ய ககனமாய்
நின்றுழலும் ஸம்ஸார நிவிருத்தியாய்
கரைகாணா கைவல்யக் கடலுமாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (9)
நின்மயமாய் ஸன்மயமாய் திருஷ்யஹீன
நிராமயமாய் நிர்விகல்ப நிலையுமாய்
தன்மயமாய் தத்பரமாய் விமலமாய்
தடஸ்தமாய் ஸ்வரூபமாய் ஸஹஜமாய்
சித்பரமாய் சின்மயமாய் அசலமாய்
சித்பதத்தின் பொருளாய ஶிவமாய் என்றும்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (10)
மௌனானுபவமாய் வாகாதீத
ஸித்தானுபூதியதாய் நிஷ்டையாய்
வாக்காய் மனதாய் பிந்துவாய்
கலையாய் நாதமுமாய் பாவாதீத
ஸன்மாத்ர நிலையதுவாய் இருப்புமாய்
நின்றொளிரும் தனிவைரமணியுமாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (11)
காலாதி மூன்றினும் முடிவாய் நின்ற
காரணமாய் மஹத்தாகும் தத்துவமாய்
வியக்தவுமாய் அவ்வியக்தமதுவாய் நின்ற
புத்திக்கும் அப்புறமாய் காஷ்டயாய்
யோகானுபவத் திங்கள் மனனாதீத
முக்தி ஸுகமணியாய் துளங்குந்தோறும்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (12)
வாக்காய் வாக்கற்ற மௌனமாய்
மதமாய் மதம் கடந்த பூதியாய்
காயாய்ப் பழமாய் தருவுமாய்
கரணங்கள் கலந்தொரு பிரிவுமாய்
தாயாய் தாதனுமாய் மகனுமாய்
தானாய் நானாய் ஸகலமாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (13)
ஒன்றாய் பலதாய் ஓங்கி நின்ற
ஒடுங்காத ஶக்தியெல்லாம் நிறைந்ததாய்
தானாய் நிஜரூப மௌனமாய்
பழுத்தொழுகும் கைவல்யப் பழமுமாய்
நானற்ற நிர்வாண ஶாந்தி தண்டின்
பரிமளமாம் அனுபவத்தின் மலருமாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (14)
அண்டங்கள் பலதாய் பரமமாய்
அளவாய் நிர்மேய தத்துவமாய்
பிண்டங்கள் அனந்தமாய் பலதரத்தில்
பிறந்துழலும் பொருளாய் பிறந்து வீழும்
பண்டங்கள் பலதாய் தோன்றினாலும்
தங்கம் தானேகமாய் நின்ற போலே
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (15)
பொன்னாய் மணியாய் போகமாய்
புறமாய் அஹமாய் பவித்திரமாய்
மண்ணாய் மலையாய்க் கடலுமாய்
மதியாய் ரவியாய் பலதுமாய்
முன்பாய் பின்பாய் நடுவுமாய்
முக்கால முதலாய்ச் சித்துமாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (16)
அறிவாய் என்னறிவின் ஆதாரமாய்
அறியும் அஜ்யோதியதாய் ஆத்மாவுமாய்
அளவற்ற காருண்யம் ஸலிலம் பெய்யும்
நிர்மலமாம் சித்ககன முகிலுமாய்
முழுதாய் நாதமாய் முழங்கியெங்கும்
மின்னும் அஜ்யோதியதாய் அருளாய் நின்ற
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (17)
வாசகமாய் வாச்சியமாய் நடுவில் நின்ற
வாக்கும்தான் வாச்சியமதும் கடந்த மௌனம்
தேசிகனாய் ஆத்மாவாய் அருளாய் வந்த
தேசிக்கும் வைபவமாய் கருணையாய்
பாஶ நிலையாதி ஒன்றும் பகராதாய்
நாஶமற்ற வெளியாய் ஒளியுமாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (18)
கலனாதி வெளியாய் கலைகளாய்
கலைகட்கும் அதீதமாய் கரணாதீத
தெளிவாய தளமதிலாய் அருளின் பூதி
ஶொரிகின்ற மஹஸ்ஸாய் தெய்வமாய்
சித்ஸபையில் நானாய் போதமாய்
நிகமாந்த ஸாரமதாய் நிருத்தியம் செய்யும்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (19)
வேதாந்த நிலையாய் ஸித்தாந்தத்தின்
தாத்பர்ய நிர்ணயமாய் அத்வயமாய்
நாதாந்த போதமதாய் த்வனியொடுங்கி
மும்மைக்கும் மூலமதாய் ஆத்மாவுமாய்
பிரம்மாண்ட கோடிகளும் தான் உன்னதாய் (உண்ணதாய்)
சின்மாத்ர போதமதாய் பரவுமாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (20)
கண்ணாய் தன்னில்தான் கண்ணில்லாதே
காணுதல் வைபவமாய் தானாய் நின்று
கண்ணிற்கு கண்ணாகும் மனதை உண்ணும்
கண்ணாய பொருளாய் ஸம்வித்தாய்
விஷயத்தை விளக்குகின்ற விளக்குமாய்
விஞ்ஞான போதமய தீபம் தானே
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (21)
உள்முகமாய் மதி குளிர்ந்த கிரணமாய்
தாபங்கள் கறுகியிடும் ஶாந்தியாய்
அன்புமய நறுமணத்தின் தென்றலாய்
மனம் கலந்த மெய் கலந்த போதமாய்
தீராத கிருபை ஶொரியும் மேகமாய்
ஞானிகள் தன்மதியில் ஊறும் அமுதமாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (22)
அறிவெல்லாம் கடந்த மலையோகமாய்
மனம் கடந்த மறையோதும் அறிவுமாய்
அளவில்லா பரமபத மதுவாய் எல்லா
நிலைகளிலும் சின்மாத்ர தீபமாய்
களவாய காக்ஷிக்கும் அப்புறமாய்
ஏகாத்ம பிரத்தியயத்தின் பொருளாய் மின்னும்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (23)
சுழியில்லா பரங்கருணைக் கடலுமாய்
தூண்டா மணிவிளக்கின் ஜ்யோதியாய்
ஒழிவில்லா கதிர் வீஶும் ரவியுமாய்
விழியாலும் மொழியாலும் மனஸ்ஸினாலும்
வழியாய் வளர்கின்ற தபஸ்ஸினாலும்
காணாத மௌனத்தின் வெளியுமாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (24)
அண்டமெல்லாம் கண்ணாய் வீக்ஷித்தாலும்
கண்டறியான் வழியில்லா அனந்தபூதி
மிண்டியதின் பொருள் கூறி ஓலமிடும்
பண்டை மறையெல்லாமும் பதறும் வண்ணம்
விண்ணறியா மனமதியின் விண்ணாய் மின்னும்
அகண்டமய அருள்வெள்ளக் கடலாயென்னும்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (25)
நானாய் நானல்லா நானுமாய்
நானாகும் பதமாய் நானே கண்ட
தானாய் தானற்ற தானுமாய்
தானாகும் பதமாய் ஸஹஜமாய்
வானாய் வியந்து இன்னும் அதீதமாய்
மௌன நிலை தானாய் துரீயமாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (26)
அரணி கடைந்தெடுக்கும் ஸம்வாதத் தீ
அதுவாய் இங்கு ஆஶானாய் அறிவுமாய்
நிலையல்லாம் கடந்துபரி நாலாய் நின்ற
ஶிவமாய் ஶிவயோகத் தருவுமாய்
ஃபலமாய் வேதாந்த ஸித்தாந்தத்தின்
ஸாரமதாய் ஆத்மாவாய் அஹமாய் என்றும்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (27)
உதித்து வரும் அனுபவத்தின் நீரோட்டங்கள்
லயித்து திடம் நிறைந்த நிஜக் கடலாய் என்றும்
தங்குவதின் தனலேகும் தருவுமாய்
ஶ்ருதி பறையும் பறந்துயரும் கதியுமாய்
ஸங்கமறுத்தானந்தம் பொங்கி வியப்பின்
ஶங்கரமே மலர்ந்தருளும் மலரே வளர்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (28)
அறிவு கடன் இச்சை கடன் அறிவாய் நின்று
அஞ்ஞானவத்தின் (அவ்வாணவத்தின்) கரு வருத்து அகிலமாய்
தெளிந்து வரம் பற்று அதுவே தானாய் என்றும்
அகண்ட பர ககனவுமாய் ஏகமாய்
விளங்கும் ஒரு பரம ரஸம் துளும்புமொரு
கையிலிரு கனியுண்ணும் மதியுமாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (29)
வெளியென்னும் வெளியில் தானாடும்
ஒரு சித்தென்னும் ஶிவமென்னும் போதானந்த
மதுவென்னும் மதியென்னும் பலதுமாய்
பலவாத ஜாலத்தின் பிரமையுமாய்
இதுவென்னும் அதுவென்னும் பரவானாக
விது விளங்கும் முடியேந்தும் ஈஶனாய்
பர வியோம மாளிகையில் விளங்குமேக
பர ஶிவத்தின் வைபவமே விமலதேவே! (30)