This entry is part 8 of 8 in the series 29 மார்ச் 2026

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்

அனந்த ஞான சொரூபா, நமா ஓம்!

அனந்த ஞான சொரூபா!

கனங்கொள் மகிமையின் கர்த்தாவே,

காத்திர நேத்திர பர்த்தாவே

நரர் காண்க வந்தாரே – நமா ஓம்!

காண்க வந்தாரே

கருணாகர தேவா, தேவா.. அனந்த ஞான சொரூபா!      

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் – கீர்த்தனை

வில்லாளன், சிம்பாரி மலை அடிவாரம் பாபுவா நியூ கினியா

எங்கள் திருச்சபை இருந்த, மோர்ஸ் பி துறைமுகத்தில் இருந்து, சிம்பாரி மலை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன், இதோ மலை அடிவாரத்தை அடைந்து விட்டது.

நானும், பாதர் ஜேம்சும் முதலில் இறங்கினோம். அதன் பின், ஒன்றன் பின் ஒன்றாக, கூட வந்த சிம்பாரி இன, இளம் பெண்களும், ஆண்களும், கீழே இறங்கினார்கள்.

அவர்களுக்குள், எதை எதையோ கலகலவென பேசிக்கொண்டு, அந்த இளம்பிராயத்தார், வேனை விட்டு இறங்கிய விதம், எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசத்தைக் கொடுத்தது.

“கள்ளம் கபடம் இல்லாத எனது சிம்பாரி இனம்…” நான் எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன்.

அப்போதுதான் நான் கவனித்தேன், அந்த உயரமான சிம்பாரிப் பையனை. வநதிருந்த சிம்பாரி இனப் பையன்களில், அவன்\ மட்டும் உயரமாக, தனித்துத் தெரிந்தான். வநதிருந்த பையன்களில், அவன் சற்று வயதானவன் ஆகவும் கூட, எனக்குத் தோன்றினான்.

நல்ல கட்டு மஸ்தான, ஆண்மை ததும்பும் மீசை, அகன்ற மார்பு, அங்கே வந்திருந்த சிம்பாரி இன ஆண்களில், அவன் பேரழகன் ஆக, எனக்குத் தோன்றினான்.

மற்ற சிம்பாரிப் பிள்ளைகளுடன், அதிகம் பேசாமல், அவன் மட்டும் தனித்து நின்று கொண்டிருந்தான்.

“மாணவர்களே… எல்லோரும் தேநீர் அருந்துங்கள். எதிரில் இருக்கும், நமது திருச்சபை விடுதிக்குள், நமக்கெல்லாம், சாப்பாடு தயார் ஆகிக் கொண்டு இருக்கிறது. இப்போது தேநீர், அப்புறம் சாப்பாடு…” என்று பாதர் ஜேம்ஸ் உரக்கச் சொன்னார்.

அதைக் கேட்ட பிள்ளைகள் எல்லோரும், தேநீர் இருந்த மேசையை நோக்கி நடந்தார்கள். அங்கே, சில கிறித்தவ சகோதரிகள், தேநீர் ஏற்கனவே தயார் செய்து பரிமாறுவதற்காய், காத்துக் கொண்டு நின்றார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து, தேநீர் இருந்த மேசையை நோக்கிப் போனேன்.

எல்லோரும் தத்தம் தேநீர்க் குவளையோடு, அருகில் இருந்த உயரமான திண்டில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். ஆனால், நான் முன்னர் கவனித்த, அந்த உயரமான பையன் மட்டும், வேறு ஒரு உயரமான திண்டுக்குப் போய், தனியே உட்கார்ந்து கொண்டான்.

நான், இதுதான் சமயம் என, எனது தேநீர்க் குவளையோடு, அவனது அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன். அவனைப் பார்த்து புன்னகைத்தேன்.

“தம்பி.. உனது பெயர் என்ன?” நான், தணித்த குரலில், அவன் பெயர் கேட்டேன். “எனது பெயர் ராபர்ட் அண்ணா” என்றான்.

நான், ராபர்ட்டின் மூக்கு துவாரத்தை கவனித்தேன். அவனது மூக்கின் இரண்டு புறமும் பெரிய துவாரங்கள் இருந்தன. எனக்கு அவனைப் பற்றிப் புரிந்து போனது. அவன் மற்ற பிள்ளைகளிடம் இருந்து, ஏன் எப்போதும் தனியே நிற்கிறான் என்பதும் எனக்குப் புரிந்தது.

இந்தப் பையன், என்னைப் போலவே, புனிதக்குழல் விழாவில் பங்கேற்றவன். மூக்குச் சில் உடைக்கப்பட்டவன். காட்டுப்பன்றியின் கொம்புகளை, இதற்கு முன்னர் மூக்கில் அணிந்தவன். என்னைப் போலவே, கிறித்துவன் ஆன பின்னர், மூக்கில் இருந்த அந்த பன்றிக் கொம்புகளை, இவன் கழட்டி எறிந்து இருக்க வேண்டும்.

நான் அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன். “தம்பி ராபர்ட்.. நீ.. நீ.. மூங்கேன்யு ஆகி விட்டாயா?”

நான் கேட்ட இந்தக் கேள்வியில், அவன் சற்று அதிர்ந்து போனான். ஆனால், அவனை மறுபடியும் அதிர்ச்சிக்குள்ளாக்காது, நான் எச்சரிக்கையாகப் பேசினேன்.

“தம்பி.. நான் கூட, ஒரு காலத்தில், மூங்கேன்யு ஆக இருந்தவன்தான். எனது வாலிபப் பருவத்தில், மூங்கேன்யு ஆகி, நமது சிம்பாரி இன சிறுவர்களுக்கு, எனது ஆண்பால் புகட்டியவன்தான் நான்.. உன்னைப்போலவே, நான் இப்போது கர்த்தரின் வழியில் வாழ்கிறேன் ராபர்ட்”, நான், மெதுவாக, அவன் காதுகளில் சொன்னேன்.

அதைக் கேட்டவுடன், “அப்படியா?” என்று மிகவும் சந்தோசம் அடைந்து போனான்.

அதன் பிறகு, அவன், என்னோடு பேசிக்கொண்டே வந்தான். அத்தோடு, அதன் பிறகு, என்னோடான அவன் பேச்சை, அவன் நிறுத்தவே இல்லை. நாங்கள் இருவரும், நல்ல நண்பர்கள் ஆனோம்.

அவன், அவனது மாக்கு பற்றியும், இம்பூட்டு பற்றியும், கடைசியாக இப்வாங்கி முடித்து, மூங்கேன்யு என்ற முழு வாலிபன் ஆன, கதையை, என்னிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனான்.

என்னிடம், எனது கதையைக் கேட்டான்.

நான் என்ன சொல்வேன். நான் ஆண்பால் குடித்த கதையைச் சொல்வேனா.. இல்லை நான் ஆண்பால் கொடுத்த கதையைச் சொல்வேனா… இல்லை, எனது பூவரசியை, அம்போவென, விட்டு விட்டு ஓடி வந்த கதையைச் சொல்வேனா… இப்போது எனது கண்களில் என்னையும் அறியாமல், கண்ணீர் வந்தது.

ஒரே ஒரு கேள்விதான் அவனிடம் கேட்டேன். “தம்பி.. உனக்கு.. பூவரசி பற்றித் தெரியுமா?” நான், ராபர்ட்டிடம், ஆவலாகக் கேட்டேன்.

ராபர்ட், ஏதாவது நல்ல பதில் சொல்வான் என்று நினைத்தேன். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

“யார் அந்தப் பூவரசி அண்ணா? எனக்கு அப்படி யாரும் தெரியாதே  ? அவர்கள், உங்களுக்கு உறவு முறையா?” என்று ராபர்ட், என்னிடமே கேள்வி கேட்டபோது, அதற்கு மேல், பூவரசி குறித்து, அவனிடம், எதுவும் என்னால், பேச முடியவில்லை.

நான் அவனிடம், அன்புடன் விடை பெற்றுக்கொண்டேன்.

இப்போது, எல்லோரும், சாப்பாடு சாப்பிடுவதற்காய், திருச்சபை விடுதியின் உள்ளே சென்றோம். எல்லோரும், அந்த மலை உணவை, சுவைத்து சாப்பிட்டார்கள். ஆனால், என்னால் மட்டும் முடியவில்லை.

எனது, மனதுக்குள் இருந்த பூவரசி, என்னைச் சரியாகச் சாப்பிட விடவில்லை.

எல்லோரும், விடுதிக்குள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்றோம். நானும் எனது தனியறைக்குச் சென்றேன்.

படுக்கையில் அப்படியே சரிந்தேன். அந்தப் பையனுடன் பேசிய விசயங்கள் அனைத்தும், ஒன்றன் பின் ஒன்றாய், எனது நினைவில் வந்தது.

பாதர் ஜேம்ஸ், சிம்பாரி மலை அடிவாரம் பாபுவா நியூ கினியா

வில்லாளன், வேன் டிரைவர், மற்றும் அந்த சிம்பாரிப் பிள்ளைகள், எல்லோரும், அவரவர் அறைக்கு, படுக்கச் சென்று விட்டனர்.

கர்த்தருக்கு நன்றி. எல்லா சிம்பாரிப் பிள்ளைகளையும், சிம்பாரி மலையடிவாரம் வரை, வேனில், கொண்டு வந்து சேர்த்தாயிற்று. இனி, மலை ஏறினால், அந்தப் பிள்ளைகள் எல்லோரும் அவரவர் வீடு போய்ச் சேரலாம்.

நாங்களும் அந்தப் பிள்ளைகளோடு சேர்ந்து மலை ஏறவேண்டும். வில்லாளனும், நானும், மலையேறிய பிறகு, மலையில், நாங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என, நான் யோசித்துக்கொண்டே இருந்தேன்.

ஏற்கனவே, மலையில் ஒரு வில்லியம்ஸ் போதகர் இருக்கிறார். ஆனால், அவர் என்னைப்போல், முறைப்படி பயிற்சி பெற்ற, கிறித்துவப் பாதர் அல்ல. மலையில் தற்போது, பிள்ளைகளுக்கு கிறித்துவப் பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டு இருக்கும், வில்லியம்ஸ் ப்ரதரும், சிம்பாரி இனத்தைச் சேர்ந்தவர்தான்.

எட்டு வருடங்களுக்கு முன்னர், இப்போதுள்ள சிம்பாரி இனப் பிள்ளைகள் போலவே, பாபுவா நியூ கினியாவின்,  தலைநகர் மோர்ஸ் பியில் இருக்கும், எங்கள் திருச்சபைக்கு வந்து, கரத்தரின் அருள் பெற்றவர்தான் வில்லியம்ஸ் ப்ரதர்.. இப்போது, மேல் மலையில், கிறித்துவ ஊழியம் செய்து கொண்டு இருக்கிறார்.

ஆனால், வில்லியம்சிற்கு, அங்கு உள்ள மலைமக்களின் எதிர்ப்பைச் சமாளிப்பது என்பது, மிக மிகக் கடினம் ஆக இருந்தது.

முக்கியமாக, அந்த மாந்தரீக குரு மசளையான் செய்யும் அட்டகாசம். மாந்தரீகம், தாந்தரீகம் போன்ற பல சித்து விளையாட்டுக்கள் தெரிந்தவனாம், அந்த மாந்தரீக குரு, மசளையான்.

பழங்குடியினர் கலாச்சாரத்தை எதிர்த்துப் பேசும், அனைத்து கிறித்துவர்களையும், தனது மாந்தரீக சக்தியால் கொன்று விடுகிறானாம்.

அவனது அட்டகாசங்கள் அனைத்தையும் பார்த்துப் பயந்து போன, ப்ரதர் வில்லியம்ஸ், எங்கள் திருச்சபைக்கு வந்த, இந்த சிம்பாரிப் பிள்ளைகளிடம், ஒரு நீண்ட கடிதம் கொடுத்து அனுப்பி இருந்தார்.

அந்தக் கடிதத்தை படித்த பின்னரே, எங்கள் திருச்சபை பேராயர், என்னை இங்கே அனுப்பி வைத்து இருக்கிறார்.

நான் எப்படியெல்லாம், மலையில் நடந்து கொள்ளவேண்டும் என, சிம்பாரி மலைக்குப் புறப்படும் முன்னர், தலைமைப் பேராயர் சொன்னது, இப்போது எனக்கு நினைவில் வந்தது.

“பாதர் ஜேம்ஸ்… அந்த மாந்தரீக குருவை… நீங்கள் எப்படியாவது கொல்ல வேண்டும். நமது, கிறித்துவ மக்களின் உயிரை நீங்கள் காக்க வேண்டும்” என்று, தலைமைப் பேராயர், அன்று என்னிடம் சொன்னது, இப்போது எனக்கு நினைவில் வந்தது.

“ஒருவரைக் கொல்லச் சொல்வதுதான்.. ஒரு தலைமைப் பேராயரின் நற்பண்பா?.. கொல்வதைத்தான், கர்த்தர், அவருக்கு போதித்தாரா?”, இந்தக் கேள்வியை, எனக்குள் கேட்டுக்கொண்ட போது, எனக்கு திடீரென்று சிரிப்பு வந்தது.

“உன்னைப் போல பிறரையும் நேசி” என்று சொன்னார் இயேசு பிரான். “ஒருவர், உன் ஒரு கன்னத்தில் அடித்தால், உன் மறு கன்னத்தையும் காட்டு” என்றும் சொன்னார் இயேசு பிரான்.

அப்படி இருக்க, கர்த்தரின் மகிமையைப் பரப்ப, நான் கொலைகள் வேறு செய்ய வேண்டும் என்பதை நினைத்தால், எனக்குக் கொஞ்சம் கவலை வந்தது. அதே வேளையில், “எனது கிறித்தவ மதத்தைக் காக்க, நான் ஏன், கொலை செய்யக்கூடாது?” என்ற ஆவேசமும், எனக்கு வந்தது.

நாங்கள் கிறித்துவ பாதர்கள்தான். ஆனாலும், திருச்சபையின் சாப்பாட்டுக் கூடங்களிலும் சரி, எங்காவது நடக்கும் கிறித்துவப் பொது விழாக்களிலும் சரி, பாதர்கள் நாங்கள், நண்பர்களாகச் சேர்ந்து ஒரு குழுவாக உட்கார்ந்து, ஜாலியாகப் பேசும்போது, சில நேரங்களில், கிறித்துவத்தின் மோசமான பண்புகள் குறித்து, அவ்வப்போது பேசுவதும் உண்டு.

கிறித்துவ மதத்தைப் பரப்ப, மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட, பல கிறித்துவக் கொலைகள் குறித்து, எனது மற்ற பாதர் நண்பர்கள் பேசியதை, நான் கேட்டு இருக்கிறேன்.

1820-களில், அமெரிக்காவின் பழங்குடியினர் பலரை, இறைவனின் பெயரால் கொலை செய்த, கிறித்துவ பாதர் ஜான் சிவிங்க்டன் பற்றிய உண்மைகளை, எனது நண்பர்கள் பேச, அதை நான் செவி மடுத்து இருக்கிறேன்.

1830-களில், கனடா நாட்டின், பழங்குடியின மாணவர்களுக்கான, கிறித்துவ போர்டிங் பள்ளிகளில், நடந்த கலாசாரக் கொலைகள் பற்றியும், நாங்கள் நண்பர்கள், விவாதிப்பது உண்டு.

கிட்டத்தட்ட, 150,௦௦௦ கனடா நாட்டுப் பழங்குடியினக் குழந்தைகளை, அவர்தம் பெற்றோரிடம் இருந்து, வலுக்கட்டாயமாகப் பிரித்து, அவர்களை, கிறித்துவ உறைவிடப் பள்ளிகளில், வலுக்கட்டாயமாகச் சேர்த்த கதையையும் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

அப்படிப்பட்ட கிறித்துவ உறைவிடப் பள்ளிகளில், தங்கிப் படிக்கும் பழங்குடியின மாணவர்களை, அவர்களது தாய் மொழியான, பழங்குடி மொழியில் பேச அனுமதி மறுப்பது, மீறிப் பேசினால், அத்தகைய மாணவர்கள் நாக்கில், ஊசியால் குத்தி காயப்படுத்துவது, பள்ளிகளில் தங்கும் பழங்குடியின மாணவர்களின், சொந்த பழங்குடிப் பெயர்களை நீக்கிவிட்டு, அவர்களை அடையாள எண்களின் மூலம் அழைப்பது, இன்னும் கொஞ்சம் கூடப் போய், மாணவர்களையே கொலைகள் செய்வது.. ஐயகோ..

இதையெல்லாம் படித்த, நானும் எனது நண்பர்களும், கிறித்துவத்தின் பெயரால், “இவை போன்ற கொடுமைகளைச் செய்துதான் ஆகவேண்டுமா?” என்று விவாதிக்காமல் இருந்தது இல்லை.

எனது சில நண்பர்கள், “கொலைகள் செய்வது தவறு இல்லை” என்று பேசுவார்கள். இன்னும் சில நண்பர்கள், “இயேசு அப்படி போதிக்கவில்லை” என்று பேசுவார்கள்.

“சிலுவையில் அறைந்து, தன் இரத்தத்தை, நமக்கு காணிக்கை ஆக்கிவிட்டுச் சென்ற கடவுளையல்லவா நாம் கும்பிட்டுக்கொண்டு இருக்கிறோம்?. ஏன் இயேசு நினைத்து இருந்தால், தனது எதிரிகளை, தனது மகிமையால், நேரடியாகக் கொன்று இருக்கமாட்டாரா? மாறாக, ஏன் அவர், தன்னை சிலுவையில் அறைந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்?” இப்படி வாதம் செய்த நண்பர்களும் உண்டு.

நான், எனது நண்பர்கள் செய்த. அந்த அத்தனை வாதங்களையும், இப்போது, இந்த, சிம்பாரி மலை அடிவாரத்தின், திருச்சபை விடுதியின், எனது படுக்கை அறையில் இருந்து, ஒன்றொன்றாய் அசை போட்டேன். கூடவே, “கொல்லுங்கள்” என்று மிக அழுத்தத்துடன் சொல்லி, என்னை அனுப்பிய, தலைமைப் பேராயரின் கட்டளை குறித்தும் நான் யோசித்தேன்.

யோசிக்க யோசிக்க, எனக்கு, குழப்பம் கூடிக்கொண்டே போனது.

கூடவே என்னுடைய இன்னொரு குழப்பம், தலைமைப் பேராயர் கேலி செய்த, சிம்பாரிப் பழங்குடிகளின், அந்த ஆண்பால் குடிக்கும் வழக்கம். அதை நினைக்கும் போதும், எனக்கு சிரிப்பு வந்தது.

பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி.. ஆண்பால் குடிப்பது குறித்து, எந்த வித, நேரடியான வாசகமும் இல்லை.

“மனிதன், தனது வித்துக்களை, இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்” என்பதை வலியுறுத்த, பைபிளின் பழைய ஏற்பாட்டில், ஒரு மறைமுகமான கதை ஒன்று இருக்கிறது.

இறைவன், ஆதாம் ஏவாளின் மூலம், அவனது சந்ததிகளை பெருகச் செய்யும்  காலத்தில், ஆதாமின் ஒரு சந்ததியான, ஓனான் என்பவனின் மூத்த சகோதரன் இறந்து போகிறான்.

இப்போது ஓனான், அவனது அண்ணன் மனைவி தாமருடன் சேர்ந்து, உடலுறவு கொண்டு அடுத்த சந்ததிகளை உருவாக்க வேண்டும்.

ஓனானுக்கு, தனது அண்ணன் மனைவியோடு, உடலுறவு செய்யப் பிடித்து இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில், அவளுக்கு பிள்ளை கொடுத்தால், அது தனது நேரடி சந்ததி ஆக இருக்காது என்ற சுயநல எண்ணமும் ஒனானுக்கு வருகிறது.

எனவே, அண்ணியுடன் உடலுறவு கொள்ளும்போதே, தனது விந்தை மட்டும், கீழே விட்டு, நிலத்தில் வீணாக்குகிறான். ஒனானது சுயநலத்தை கவனித்த கடவுள், ஓனானைக் கொன்று விடுகிறார்.

“விந்து என்பது இனப்பெருக்கம் செய்ய மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும், மாறாய், கையடித்தல் போன்ற விஷயங்கள் செய்து, வீணடிக்கப்படக் கூடாது” என்ற மறைமுக சிந்தனையை மட்டுமே, பழைய ஏற்பாடு, நமக்குச் சொல்லுகிறது. ஆனால், அந்தக் கருத்தும் கூட, இந்த ஆண்பால் குறித்து எதுவும் பேசவில்லை.

பேராயர் எதைக் கிண்டல் செய்கிறார்? ஒரு பெண், ஆணிடம் ஆண்பால் குடித்தால், அதை தலைமை ஆயர், கிண்டல் செய்யவில்லை. ஆனால் ஒரு ஆண், இன்னொரு ஆணிடம் பால் ஆண்பால் குடித்தால், அதைக் கிண்டல் செய்கிறார்.

ஆணின் பால் குடிக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும் வாய் ஒரே மாதிரிதானே? ஆண் பால் குடிப்பதால், இருவருக்கும் தானே நோய் வரும்?

ஆண் பால் குடிப்பதால், ஒரு பெண்ணுக்கு, பிள்ளை பெறவும் வாய்ப்பில்லை. அப்படி இருக்க, பெண்ணின் செயலை ஆதரித்து, ஆணின் செயல் ஏன் கேலிக்குள்ளாக்கப் படவேண்டும்?

இந்தத் தலைமைப் பேராயரும், ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவர்தான். நானும், ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவன்தான். அங்கே எல்லாம், பல தன்பாலின ஈர்ப்பு ஆண்கள், ஆண்பால் குடிக்கிறார்கள். அங்கே, மதம் ஒன்றும், அதிகமாக வலியுறுத்தி, எதையும் சொல்வதில்லை.

ஏன், கிறித்தவசபைகளில் பணி புரிபவர்களில் கூட, ஒன்றிரண்டு தன்பாலின ஈர்ப்பு ஆண்கள், ஆண் பால் குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள்தான். வெளியில் தெரியாமல் குடித்தால், அது பரவாயில்லையா?

கடவுள், அத்தகையவர்களை, திருச்சபையில் இருந்து, வெளியே தள்ளி விட்டு விட்டாரா? அப்படியே அவர்கள் பிடிபட்டு வெளியே தள்ளப்பட்டாலும், அவர்கள் அப்போதும், கிறித்துவின் பிள்ளைகள் தானே?

சிம்பாரிப் பழங்குடிகள், எப்போதாவது அவர்கள் விழாவில், ஆண்பால் புகட்டுகிறார்கள். பொதுவெளியில் செய்வதால், அவர்கள், குற்றவாளிகள் ஆகி விடுகிறார்களா? காட்டு மிராண்டிகள் ஆகி விடுகிறார்களா?

ஆஸ்திரேலியச் சட்டங்கள், ஆண்பால் குடிப்பது, தவறென்றே பேசினாலும், பல அரசியல்வாதிகள், “இவை போன்ற சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்” என்று, இப்போது, ஆங்காங்கே, பேசிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?.

அப்படி இருக்க, நாம் மட்டும், ஏதோ ஒரு மலைக்குப் போய், மதம் பரப்புகிறேன் பேர்வழி என்று, அந்தப் பழங்குடியினரின், ஆண்பால் குடிக்கும் வழக்கத்தை, ஏன் கிண்டல் செய்யவேண்டும்?

எனது குழப்பம் இன்னும் அதிகரித்தது.

நான் யோசித்து, யோசித்து, ஒரு விசயத்தை, சிம்பாரி மலையில், உறுதியாகச் செய்தே தீருவது என்று முடிவெடுத்தேன்.

அது, எப்பாடுபட்டாவது, அந்த மாந்தரீக சைத்தான், மசளையானைக் கொன்று விடுவது என்ற விசயமே.

மாந்தரீக சைத்தான், மசளையானைக் கொல்ல, நான் இப்போதே, பல திட்டங்கள் தீட்டினேன்.

நீண்ட தூரம், நெடுநேரம் பயணம் செய்த களைப்பில், நான் தூங்கிப் போனேன்.

தொடரும்

அழகர்சாமி சக்திவேல்

சிங்கப்பூர்

Series Navigationகதைப்போமா நண்பர்கள் குழுமம் – ஏப்ரல் 2026 மாத நாவல் திறனாய்வு