மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்
(THE CONQUEST OF HAPPINESS)
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்!
(BERTRAND RUSSEL)
பாகம் – 1
மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள்
அத்தியாயம் – 7 பாவ உணர்வு / குற்ற உணர்ச்சி
(தொடர்ச்சி)
[THE SENSE OF SIN]
தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்
இலட்சியார்த்த அளவில் ஒழுக்கசாலியான நபர் நாம் துறவியியல் என்பதை அகற்றிவிட்டால், எல்லாவிதமான நல்ல விஷயங்களின் ஆனந்தங்களையும் அவற்றின் இன்பங்களை மீறிய அளவில் வேதனை மிக்க விளைவுகள் அவற்றால் ஏற்படாத வரை, தான் அனுபவங்கொள்ள அனுமதிப்பவராகவே இருப்பார். பொய்யுரைத்தல் என்ற விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் உலகத்தில் மிக அதிக அளவு பொய்யுரைத்தில் இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. நாம் எல்லோருமே இன்னும் கொஞ்சம் அதிகமாக உண்மையாக இருத்தல் மேம்பட்ட விஷயமாக இருக்கும் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், பொய்யுரைத்தல் என்பது எந்தவிதமான சந்தர்ப்பங்களிலும் நியாயப்படுத்த முடியாதது என்பதை நான் மறுக்கிறேன். தர்க்கபூர்வ அறிவுடைய ஒவ்வொரு மனிதரும் அப்படி மறுதலிக்கவேண்டியது அவசியம். கிராமப்புறத்தில் ஒரு சமயம் நான் காலாற நடந்துகொண்டிருந்தபோது களைத்த நரி ஒன்று உச்சகட்டமான களைப்புக்கு ஆளாகியிருந்தபோதும் இன்னமும் ஓடுமாறு தன்னைத்தானே கட்டாயப்படுத்திக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது. சில நிமிடங்கள் கழித்து நான் அதை வேட்டையாடவிருப்பவர்களைப் பார்த்தேன். அந்த வேட்டைக்காரர்கள் என்னிடம் ’அந்த ஓநாயைப் பார்த்தேனா/” என்று கேட்டார்கள். ’ஆம், பார்த்தேன்’ என்றேன். ’எந்த வழியாக அது போயிற்று?’ என்று கேட்ட போது நான் அவர்களிடம் பொய் சொன்னேன் அப்போது நான் உண்மையைச் சொல்லியிருந்தால் இன்னும் மேம்பட்ட மனிதனாக இருப்பேன் என்று நான் நினைக்கவில்லை.
ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, பாலியல் என்ற விஷயத்தில்தான் ஆரம்பகால ஒழுக்கவியல் போதனை மனிதனுக்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்துகிறது. ஒரு குழந்தை மரபார்த்தமான வழிகளில் கண்டிப்பான பெற்றோர்களால் அல்லது செவிலியர்களால் கற்பிக்கப்பட்டு, வளர்க்கப்படும் பட்சத்தில் அவனுக்கு ஆறு வயதாகும் சமயத்திலேயே பாவத்திற்கும் பிறப்புறுப்புகள்/பாலியல் உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு மிக வலுவாக அவனிடம் வேரூன்றப்பட்டுவிடுகிறது. அதன் பின் அவன் வாழ்நாள் முழுக்க ஒருபோதும் முழுமையாக தன்னிடமிருந்து அவற்றை அகற்ற முடிவதேயில்லை. இந்த உணர்வு Oedipus Complex மூலம் அவன் வாழ்வில் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. குழந்தைப்பிராயத்தில் மிகவும் நேசித்த ஒரு பெண்ணிடம்தான் பாலுறவு சார் சுதந்திரங்கள் அனைத்தும் அவனுக்கு அசாத்தியமானதாக இருக்கிறது. இதன் விளைவாக வளர்ந்த ஆண்கள் பலர் பெண்கள் பாலுறவின் மூலம் மதிப்பழிக்கப்படவேண்டியவர்கள் என்று நினைக்கிறார்கள். மனைவி கலவியை வெறுத்தாலொழிய அவள் இந்த ஆண்களால் மதிக்கப்படுவதில்லை. ஆனால், கலவியின்பம் பிடிக்காமல் இருக்கும் பெண்ணை மனைவியாக அடைந்திருக்கும் ஆண் உள்ளுணர்வார்ந்த திருப்தியை வேறு எங்காவது நாடும்படி அவனது உள்ளுணர்வால் தூண்டப்படுவான். ஆனால், அந்த உள்ளுணர்வார்ந்த திருப்தி, அதை கணநேரமே அவனால் கண்டடையமுடிந்தாலும் கூட , ஏதோ பாவ காரியத்தை செய்து விட்ட குற்ற உணர்வால் நஞ்சூட்டப்பட்டதாகவே இருக்கும். எனவே, திருமண உறவோ அதற்கு வெளியேயான உறவோ – ஒரு பெண்ணுடனான எந்தவிதமான தொடர்பிலும் அவனால் நிறைவு உணரவியலாது. பெண்ணை எடுத்துக்கொண்டால் எது தூய்மை என்பது குறித்து அவளுக்கு மிக அதிகமாக அவளுக்கும் கற்பிக்கப்பட்டிருந்தால் அவளுக்கும், மேலே எடுத்துகாட்டியவாறு, ஆண்கள் விஷயத்தில் நிகழ்ந்ததே நேர்கிறது. தனது கணவனுடன் கலவியில் அவளால் முழுமையாக ஈடுபட முடியாமல் அவள் தன்னை ஒடுக்கிக்கொண்டுவிடுகிறாள். இன்பம் துய்ப்பது என்பது அவளுக்கு அச்சமூட்டுவதாகவே அமைகிறது இந்த நாட்களில் பெண்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் உணர்வதில்லை, நடந்துகொள்வதில்லை என்பது உண்மை. தற்போது படித்த மனிதர்கள் மத்தியில் பாலியல் வாழ்க்கை என்பது பெண்களை விட ஆண்கள் விஷயத்தில்தான் அதிக அளவு சீர்குலைந்ததாக, அதிக அளவு நஞ்சூட்டப்பட்டதாக இருக்கிறது என்பதைச் சொல்லியாக வேண்டும்
மிகவும் சின்ன குழந்தைகளை பொறுத்தவரை, வழிவழியாக அவர்களுக்கு போதிக்கப்படும் மரபார்த்தமான பாலியல் கல்வியின் தீமைகள், பாதகங்கள் குறித்த விழிப்புணர்வு பரவத் தொடங்கி இருக்கிறது அரசு அதிகாரிகளிடம் அப்படி எந்த விழிப்புணர்வும் ஏற்படவில்லை என்பதும் உண்மை. இந்த விஷயம் குறித்த சரியான விதிமுறை, அணுகுமுறை இதுதான்; பருவ வயதை குழந்தைகள் அடையும் வரை அவர்களுக்கு எந்த வகையான பாலியல் சார் ஒழுக்கம் குறித்தும் போதிக்காதீர்கள். குறிப்பாக, உடல்சார் இயல்பான இயக்கங்களில் அருவருக்கத்தக்க விஷயங்கள் இருப்பதான கருத்தை குழந்தைகள் மனங்களில் ஊன்ற முயலாதீர்கள். ஒழுக்கவியல் போதனைகளைத் தருவதற்கான உரிய நேரம் வரும்போது, அத்தகைய போதனை அத்தியாவசியமாகும்போது அந்த போதனை அதன் ஒவ்வொரு கட்டத்திலும் பகுத்தறிவு சார்ந்ததாக, தர்க்கபூர்வமானதாக நீங்கள் சொல்வதற்கான சரியான காரண காரியங்களைக் கொண்டிருப்பதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், இந்த புத்தகத்தில் நான் பேச விரும்புவது கல்வி குறித்து அல்ல. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அளவில் ’பாவி’, ’பாவக்காரியம் புரிந்துவிட்டவன் என்பதான குற்ற உணர்வை மனித மனங்களில் ஏற்படுத்துவதன் மூலம் விவேகமற்ற கல்வி ஏற்படுத்தும் மோசமான, பாதகமான விளைவுகளைக் குறைக்க வளர்ந்த மனிதன் என்ன செய்யலாம், செய்ய வேண்டும் என்பதைப் பற்றியே என் கவனமும் கவலையும் நிலைகொண்டிருக்கிறது
இங்குள்ள பிரச்சனை இதற்கு முந்தைய அத்தியாயங்களில் நம்ம எதிர்கொண்ட அதேவிதமான பிரச்சினைகளே. அதாவது நம்முடைய பிரக்ஞாபூர்வமான எண்ணத்தை, சிந்தனையை நிர்வகிக்கும் தர்க்கபூர்வமான நம்பிக்கையை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்படியாக நம் நனவிலி மனதை வற்புறுத்துவது.
ஆண்கள் தங்களுடைய மனநிலை மாற்றங்களால், ஒருகணம் ஒன்றை நம்பியும் இன்னொரு கணம் இன்னொன்றை நம்பியும், அலைக்கழிக்கப்படக்கூடாது. பாவி என்ற உணர்வு, குறிப்பாக, ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது மதுவருந்தியதால் அல்லது வேறு காரணங்களால் அவருடைய பிரக்ஞாபூர்வ மன உறுதி சோர்ந்து, பலவீனமாக இருக்கும் தருணத்தில் அவரிடம் மேலோங்கியிருக்கும் இத்தகைய தருணங்களில் ஓர் ஆண் என்ன உணர்கிறான் என்பது (மது காரணமாக உண்டான உணர்வாக இருந்தாலொழிய) அவனுடைய மேம்பட்ட ’தான்’ இலிருந்து வெளிப்பட்டிருக்கும் தரிசனமாக, ஞான ஒளியாக பாவிக்கப்படுகிறது. (சாத்தான் நோயுற்றிருக்கும்போது பெருந்துறவியாக இருக்கும்). ஆனால் ஒருவர் பலவீனமாயிருக்கும் தருணங்களில் அவர் பலமாயிருக்கும் தருணங்களை விட அதிக உள்ளொளிகள், ஞானங்கள் கிடைக்கும் என்று எண்ணுவது அபத்தம். பலவீனமாய் உணரும் தருணங்களில் குழந்தைத்தனமான சிந்தனைகளை, எண்ணப்போக்குகளை, மனநிலைகளைத் தடுப்பது மிகவும் சிரமமான காரியம். ஆனால், இத்தகைய எண்ணப்போக்குகள் வளர்ந்த மனிதருடைய முழு பிரக்ஞையிலான நம்பிக்கைகளை விட மேலானதாக கொள்ளப்படலாகாது. அவர் தன்னுடைய அத்தனை புலன்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்போது, முழுப்பிரக்ஞையோடு இருக்கும்போது அவருக்கு வரவாகும் சிந்தனைகள், நம்பிக்கைகளை விட பலவீனமாக அவர் உணரும் தருணங்களில் தான் அதிக உள்ளொளிகளை பெறுகிறார் என்று எண்ணுவது அபத்தம். மாறாக, தனது முழு காரணகாரிய தர்க்க அறிவோடு முழு திறனாற்றல் சக்தியோடு இருக்கும்போது ஒரு மனிதர் நம்புவதுதான் எல்லா சமயங்களிலும் அவர் உறுதியாக நம்பிக்கைகொள்ளவேண்டிய வழக்கமாக, நியமமாக இருக்க வேண்டும்
நனவிலி மனதில் பிள்ளைப்பிராய எண்ணங்கள், நம்பிக்கைகளை ஒதுக்கி மேலேறுவதும், நனவிலி மனதின் உள்ளடக்கங்களை மாற்றுவதும்கூட முடியவில்லை. சரியான உத்திகளை கையாண்டு, உங்களுடைய தர்க்கப்பூர்வ அறிவு தீய விஷயம் அல்ல என்று சொல்லும் ஒரு செயலுக்காக நீங்கள் வருத்தப்படும்போதெல்லாம் அப்படி உணர்வதற்கான காரணங்களைப் பரிசீலித்துப்பாருங்கள். அந்த காரணங்கள் அபத்தமானவை என்பதை விளக்கமாக உங்களுக்கு நீங்களே எடுத்துரைத்து அதை உங்களை நீங்களே உறுதியாக நம்பச்செய்யுங்கள். உங்களுடைய பிரக்ஞாபூர்வமான நம்பிக்கைகள் மிகவும் துல்லியமாகவும் அழுத்தமாகவும் இருக்கட்டும். அவ்வாறு இருந்து அவை உங்களுடைய நனவிலி மனதில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தி, நீங்கள் எதற்காக குற்றவுணர்வு கொண்டிருக்கிறீர்களோ அவற்றின் அபத்தத்தன்மையை விளக்கமாக உங்களுக்கு நீங்களே எடுத்துரைத்துக்கொள்ளுங்கள்
உங்களுடைய பிரக்ஞாபூர்வ நம்பிக்கைகள் மிகவும் துல்லியமாக அழுத்தமாக உங்களுடைய நனவிலி மனதில் உங்கள் தாயாராலோ, உங்கள் தாதியாலோ நீங்கள் குழந்தையாக இருக்கும்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆழ்மனப்பதிவுகளை கையாளும் அளவுக்கு வலிமையாகவும் துல்லிய மாகவும் இருக்கட்டும், தர்க்கபூர்வ, பகுத்தறிவார்ந்த அறிவுத் தருணங்களுக்கும், அப்படி அல்லாத தருணங்களுக்கும் இடையே மாறி மாறி இடம்பெறுவதில் திருப்தியடைந்துவிடாதீர்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களுக்குள் தீர்க்கமாக ஊடுருவிப் பாருங்கள். உன்னிப்பாகப் பாருங்கள். அது மரியாதைக்குரியதல்ல என்ற திட்டவட்டமாக முடிவுடன், அது உங்களை ஆதிக்கம் செய்ய அனுமதிக்கலாகாது என்ற திட்டவட்டமான முடிவுடன், அதை உற்று நோக்குங்கள். எப்போதெல்லாம் இந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத அபத்தத்தன்மை மடத்தனமான எண்ணங்களை அல்லது உணர்வுகளை உங்களுடைய பிரக்னையில் திணிக்கிறதோ அப்போதெல்லாம் அவற்றை வேரோடு பிடுங்கி மேலே இழுத்து அவற்றை பரிசீலித்து மறுதலியுங்கள். இதிலும் அதிலுமாக ஊசலாடிக்கொண்டிருக்கும் பிறவியாக இருக்கும்படி உங்களை அனுமதித்துக்கொள்ளாதீர்கள். பாதியளவு காரணகாரியஞ்சார் தர்க்க அறிவினாலும், பாதியளவு குழந்தைத்தனமான மடமையினாலும் அங்குமிங்கமாக ஊசலாடிக் கொண்டிருக்கும்படி உங்களை செய்துகொள்ளாதீர்கள். உங்களுடைய குழந்தைப்பிராயத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களின் நினைவை அவமரியாதை செய்வது குறித்து பயப்படாதீர்கள். உங்கள் குழந்தைப்பருவத்தில் அவர்கள் வலுவானவர்களாகவும் விவேகமானவர்களாகவும் உங்களுக்குத் தெரிந்ததற்கு காரணம் அப்போது நீங்கள் பலவீனமாகவும், முட்டாள்தனமாகவும் இருந்தீர்கள். இப்போது நீங்கள் அந்த இரண்டுமாகவும் இல்லை என்பதால் அவர்களிடம் இருப்பதாகத் தோன்றும் வலிமையையும், விவேகத்தையும் பரீட்சித்துப்பார்க்கவேண்டியதும் பழக்கம் காரணமாக நீங்கள் இன்றளவும் அவர்களுக்கு அளித்துவரும் மரியாதைக்கு அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள்தானா என்பதை சோதித்தறியவேண்டியதும் உங்கள் வேலையே. வழிவழியாக இந்த உலகம் இளையவர்களுக்கு அளிக்கும் அறவியல் போதனைகளால் உலகம் ஏதாவது விதத்தில் மேம்பட்டிருக்கிறதா என்று உங்களை நீங்களே தீவிரமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். மரபார்ந்த அளவில் ஒழுக்கசாலியாக இருக்கும் ஒரு மனிதரை உருவாக்கியிருப்பதில் எந்த அளவுக்கு கலப்படமில்லாத, முழுமொத்த மூடநம்பிக்கை ஊடுருவிச் செல்கிறது என்பதை கவனித்துப்பாருங்கள்.
அதேபோல், அனைத்துவிதமான கற்பனையான ஒழுக்கவியல் சார் அபாயங்களும் மிக மிக அபத்தமான தடைகளால் தடுத்துநிறுத்தப்பட்டிருந்தாலும் வளர்ந்த மனிதன் எந்தவித தடையரண்களும் இல்லாமல் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் மெய்யான அறவியல் அபாயங்கள் பேசப்பட்டதேயில்லை என்பதை எண்ணிப்பாருங்கள். ஒரு சராசரி மனிதன் மேற்கொள்ளத் தூண்டப்படும் அபாயகரமான செயல்பாடுகள் யாவை? வர்த்தகத்துறையில் சட்டரீதியான தண்டனைக்குரியது அல்லாத கறார் வழக்கங்கள், ஊழியர்க ளிடமும் கடுமையாக நடந்துகொள்வது, மனைவி குழந்தைகளுக்கு கொடுமையிழைத்தல், போட்டியாளர் களிடம் வெறுப்பு, வன்மம், காழ்ப்பு, அரசியல்ரீதியான மோதல்களில் வெறித்தனம் – இவைதான் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குடிமக்களிடம் இயல்பாக இடம்பெற்றிருக்கும் மெய்யாகவே கொடுமையான பாவங்கள். இந்த பாவகாரியங்களின் மூலம் ஒருவன் தான் புழங்கும் வட்டத்தில் துன்பத்தை, வேதனையை பரப்புகிறான். அவ்விதமாய் மனித நாகரீகத்தை, வளர்ச்சி மேம்பாட்டை பாழாக்குவதில் தன் பங்கை செவ்வனே செய்கிறான். ஆனால், அவன் நோய்வாய்ப்பட்டுக்கிடக்கையில், அவனைப் பாவியாக பாவித்துக்கொள்ளச் செய்யும், தெய்வ அனுக்கிரகம் கிடைக்க வழியற்ற அன்னியனாக தன்னைத்தானே பாவித்துக்கொள்ள செய்யும் விஷயங்கள் இவையல்ல. அவனுக்கு பீதிக் கனவுகளை வரவாக்குவது, அந்தப் பீதிக்கனவுகளில் தனது தாய் தன்னை நோக்கி குனிந்து குற்றஞ்சாட்டும், தண்டிக்கும் பார்வையால் அவனைத் துளைப்பது போன்ற காட்சிகளை உண்டாக்கும் விஷயங்கள் இவையல்ல.
எதனால் இவ்வாறு அவனுடைய நனவிலி மனம் காரண காரிய அடிப்படையிலான தர்க்கபூர்வ அறிவிலிருந்து இருந்து பிரிந்து நிற்கிறது? ஏனெனில், குழந்தைப்பருவத்தில் அந்த மனிதனைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் நம்பிய அறவியல் அபத்தமானதாக இருந்தது. ஏனெனில், அவர்களுடைய விழுமியங்கள் தனி நபருக்கு சமூகத்தின் பால் உள்ள கடமை பொறுப்பு குறித்த எந்த விதமான ஆழ்ந்த ஆய்வலசலிலிருந்தும் பெறப்படவில்லை. மாறாக, அவை காரண காரியங்கள் அற்ற அளவில் அமைந்த பண்டைய சமூகரீதியான ‘தடைகள்’ குறித்த துண்டுதுணுக்குகளில் இருந்து பெறப்பட்டது. ஏனெனில், இந்த விழுமியங்கள் ஒழுக்கவியல் சார் கண்ணோட்டங்கள், இறந்து கொண்டிருந்த ரோமானிய பேரரசை உறுத்திக்கொண்டிருந்த நோய்மையான பயங்களை, கவலைகளை (elements of morbidness) தன்னுள் வைத்துக்கொண்டிருந்தன. நம்முடைய குருமார்களாலும், மனரீதியாக அடிமைப்பட்டுக்கிடக்கும் பெண்களாலும் வடிவமைக்கக்கப்பட்டவை. இந்த உலகின் இயல்பான வாழ்வில் இயல்பான பங்கு வகிக்கவேண்டிய மனிதர்கள் இந்த நோய்மையான அபத்தத்தை எதிர்த்து நிற்கக் கற்கவேண்டிய நேரம் வந்தாயிற்று.
ஆனால் அவர்களுடைய எதிர்ப்பு தனிமனித மகிழ்ச்சியைக் கொண்டுவருவதிலும், ஒரு மனிதன் ஒரே வாழ்வுத்தரத்தின் அடிப்படையில் தொடர்ந்து வாழ்ந்துவருவதை அவனுக்கு சாத்தியமாக்குவதிலும் வெற்றிகரமான அணுகுமுறையாக இருக்கவேண்டுமானால், இரண்டு விதமான தராதரங்களுக்கு இடையே அவன் ஊசலாடிக்கொண்டிருக்கும்படி செய்யாமலிருக்கவேண்டுமானால் அவன் தன்னுடைய தர்க்கபூர்வ அறிவு சொல்வதை எண்ணிப் பார்க்கவேண்டியதும், அதைப்பற்றி ஆழ்ந்து உணரவேண்டியதும் இன்றியமையாதது. பெரும்பாலான ஆண்கள் தங்களது குழந்தைப்பிராய மூடநம்பிக்கைகளை மேலோட்டமாகத் தூக்கியெறிந்துவிடும்போது, அதற்குமேல் செய்யவேண்டியது ஒன்றுமில்லை என்று எண்ணுகிறார்கள். பிள்ளைப்பிராயத்தில் வரவான அந்த மூடநம்பிக்கைகள் இன்னமும் அவர்களுக்குள் அடியாழத்தில் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கின்றன என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஒரு தர்க்கபூர்வமான நம்பிக்கையை அவர்கள் எட்டும் போது அதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்து பார்க்க வேண்டியதும், அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்கவேண்டியதும், இந்த புதிய நம்பிக்கையோடு, உறுதிப்பாட்டோடு பொருந்தாத அளவில் நம்மில் உள்ள பிற வேறு நம்பிக்கைகள் அதையும் மீறி நம்முள் உயிர்த்திருக்கிறதா, உயிர்த்திருக்கக்கூடும் என்பதையெல்லாம் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். பாவம் செய்த உணர்வு மேலோங்கும்போதெல்லாம் – அவ்வப்போது அப்படி ஆகும் – அதை ஓர் அறவியல் சார் உள்ளொளியாகவோ, இன்னும் மேம்பட்ட விஷயங்களை செய்வதற்கான அழைப்பாகவோ பாவிக்காமல், அதை ஒரு நோயாகவும், பலவீனமாகவும் பாவிக்கவேண்டியதும் அவசியம். அதாவது, பகுத்தறிவார்ந்த ஒரு விழுமியம் அல்லது அறவியலின் கண்டனத்துக்குரிய ஏதேனும் ஒரு செயலினால் அது ஏற்பட்டிருக்காதவரை. ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் அறவியல் எல்லாம் தேவை யில்லை என்று நான் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம் இதுதான்; மனிதன் மூடநம்பிக்கைககளான ஒழுக்க நறி அறவே அற்றவனாக இருக்க வேண்டியது அவசியம் என்று மட்டுமே நான் சொல்கிறேன். இது மிகவும் வேறுபட்டதொரு விஷயம்.
ஆனால், ஒரு மனிதன் தன்னுடையதேயான தர்க்கபூர்வமான நன்னெறிக்கு ஊறு விளைவித்துவிட்டால் கூட, அதிலிருந்து உய்வதற்கான வழி, இன்னும் மேம்பட்ட வாழ்முறையை அடைவதற்கான வழி குற்ற வுணர்வு கொள்வதுதான், தான் பாவ காரியம் செய்துவிட்டதான உணர்வு கொள்வதுதான் என்பதைப் பற்றி எனக்கு மிகவும் சந்தேகமாக இருக்கிறது. குற்றம் புரிந்துவிட்டதான உணர்வில் மிகவும் அற்பமான ஒன்று இருக்கிறது. சுயமரியாதை இல்லாத ஒரு விஷயம். சுயமரியாதை இழப்பினால் எவருக்கும் ஒருபோதும் எந்த நன்மையும் விளைந்தது இல்லை. பகுத்தறிவார்ந்த மனிதன் மற்றவர்களுடைய ஒவ்வாத செயல்பாடுகளை எப்படி பாவிக்கிறாரோ அதைப்போலவே தன்னுடைய ஒவ்வாத செயல்பாடுகளையும் பாவிப்பார். சில குறிப்பிட்ட சந்தர்ப்பச் சூழல்களால் உருவாக்கப்பட்டுள்ள செயல்களாக, அவை ஒவ்வாத செயல்கள் என்பது குறித்த முழுமையான அறிதல் மூலம் தவிர்க்கப்படவேண்டியவையாக, அல்லது முடிந்தால் அந்த செயல்களுக்குக் காரணமான சந்தர்ப்ப சூழல்களைத் தவிர்ப்பதன் மூலமாகத் தவிர்க்கப்படவேண்டியவையாக ஒரு தர்க்கபூர்வ மனிதன் உணர்ந்துகொள்வான். சொல்லப்போனால் குற்றம் புரிந்து விட்ட உணர்வு, பாவம் செய்துவிட்ட உணர்வு, ஒரு நல்ல வாழ்க்கைக்கு வித்திடுவதாக இதுகாறும் இருந்துவந்தது, உண்மையில் அதற்கு நேர்எதிரானது. இந்த உணர்வு ஒரு மனிதனை மகிழ்ச்சியற்றவனாக்குகிறது. தன்னை தாழ்ந்தவனாக, இழிவானவனாக உணரவைக்கிறது. மகிழ்ச்சியற்றவனாக இருப்பதால் அந்த மனிதர் மற்ற மக்கள் மீது அதீத உரிமைகோரல்களை வைக்கிறார். மற்றவர்களுடனான அவருடைய தொடர்புறவில் அவரால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. தாழ்ந்தவராகத் தன்னை உணர்வதால், தன்னைவிட மேலானவராகத் தோன்றுபவர்கள் மேல் அவருக்கு வெறுப்பும், வன்மமும் வளர்கிறது. மற்றவர்களை வியந்து பாராட்டுவது அவருக்குக் கடினமான காரியமாக இருக்கிறது. மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுவது அவருக்கு எளிதாக இருக்கிறது. அவர் எதற்கெடுத்தாலும் முரண்டுபிடிப்பவராக, இணக்கமற்ற மனிதராக மாறுகிறார். அதிகதிகமாகத் தனிமையில் உழல்பவராகிறார். சக மனிதர்கள் குறித்த விசாலமான பெருந்தன்மையான கண்ணோட்டம் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் இத்தகைய கண்ணோட்டத்தை கைக்கொண்டி ருப்பவருக்கு அது மகிழ்ச்சிக்கான அளப்பரிய வள ஆதாரமாகவும் விளங்குகிறது. காரணம், இத்தகைய விசாலமான, பெருந்தன்மையான கண்ணோட்டம் உடைய ஒருவர் பொதுவாக மற்றவர்களால் விரும்பப்படுகிறார். ஆனால், குற்ற உணர்வால், பாவம் செய்துவிட்ட உணர்வால் பீடிக்கப்பட்டிருக்கும் மனிதரிடம் மேற்கூறிப்பட்ட கண்ணோட்டம் இருப்பது அரிது. அத்தகைய கண்ணோட்டம் நிதானம், நிறைவமைதி, தன்னம்பிக்கை ஆகியவற்றால் வரவாவது. அத்தகைய கண்ணோட்டத்தைப் பெற உளரீதியான ஒருங்கிணைப்பு அவசியம். பிரக்ஞாபூர்வ, ஆழ்மன, நனவிலி மனங்கள் ஒன்றோடொன்று இணக்கமாகச் செயல்படுதலையே நான் உளரீதியான ஒருங்கிணைப்பு என்கிறேன். இவை மூன்றும் எல்லா நேரமும் ஒன்றோடு ஒன்று நிரந்தரமாக சண்டையிட்டுக்கொண்டிருக்காமல் ஒத்திசைவோடு செயல்படுதல், இத்தகைய உளரீதியான ஒத்திசைவை ஏற்படுத்துதல் சாத்தியமே. பெரும்பாலானோர் விஷயத்தில் நல்ல பக்குவமான கல்வி மூலம் இது சாத்தியமாக முடியும். ஆனால், கல்வி அத்தகைய பக்குவமான ஒன்றாக இல்லாதபோது இந்த உளரீதியான ஒத்திசைவைக் கொண்டுவருதல் கடினமான காரியமாகிவிடுகிறது.
உளவியல் ஆய்வாளர்கள் மேற்கொள்ளும், முயற்சி செய்யும் வழிமுறை இதுவே. ஆனால், பெருவாரி யானவர்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட நோயாளியே இந்த வேலையைச் செய்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். அதிக தீவிரமான பாதிப்புள்ளவர்களுக்கு வல்லுநர்களின் உதவி தேவையாக இருக்கும். ’இத்தகைய உளவியல் சார் வேலைக்கு எல்லாம் எனக்கு நேரமே இருப்பதில்லை, என்னுடைய வாழ்க்கை மிகவும் பரபரப்பானது, எத்தனையோ வேலைகளை செய்யவேண்டியிருக்கிறது, இதில் என் நனவிலி மனதைப் பற்றி நான் எப்படி யோசிக்க முடியும்? அது பாட்டுக்கு தனது தந்திரங்களை, தகிடுதித்தங்களை நடத்திக்கொள்ளட்டும் என்று விட்டுவிடவேண்டியதுதான்’ என்று சொல்லாதீர்கள். ஒரு நபர் தனக்குத்தானே பிளவுண்டு நிற்பதைப் போல் மகிழ்ச்சியை மட்டுமல்ல திறனாற்றலையும் மிக அதிக அளவு குறைத்துவிடுவது வேறு எதுவுமேயில்லை. ஒருவருடைய ஆளுமையின் வெவ்வேறு கூறுகளிடையே ஒத்திசைவு ஏற்படுத்த செலவிடும் நேரம் மிகப் பயனுள்ள முறையில் செலவிடப் பட்டதாகும். ஒரு மனிதன் தினமும் சுயபரிசோதனையில் செலவிட ஒரு மணி நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரை அது எந்த வகையிலுமே சிறந்த வழிமுறை அல்ல. ஏனெனில், இப்படிச் செய்வது தன்னைப் பற்றிய சிந்தனையில் ஆழ்வதை அதிகப்படுத்துகிறது. தன்னிலையில் ஆழ்ந்திருத்தலை அதிகப்படுத்துகிறது. இது குணப்படுத்தவேண்டிய நோயின் ஓர் அங்கமாக விளங்குகிறது. காரணம், ஒத்திசைவார்ந்த ஒருவர் புறவயமாகச் செயல்படும்படி வழிநடத்தப்படுகிறார். நான் பரிந்துரைப்பது இதுவே; மனிதன் தர்க்கபூர்வமாக, பகுத்தறிவின் பாற்பட்டுத் தான் நம்புவனவற்றைக்கொண்டு அவை ஆழமாக வேரூன்றிய அளவில் தன்னுடைய மூளையைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கைகளுக்கு மாறாக உள்ள, பகுத்தறிவின்பாற்படாத நம்பிக்கைகள் தன் மனதை/மூளையை எந்தக் கேள்வியும் இல்லாமல், அது எத்தனை குறுகிய நேரம் ஆனாலும் சரி, ஆக்கிரமிக்க அனுமதிக்கலாகாது. இது அவர் பிள்ளைப்பிராயத்து மனோநிலையில் நடந்துகொள்ளுமாறு அதிகப்படியாகத் தூண்டப்படும் தருணங்களில் தனக்குத்தானே தர்க்கபூர்வ, காரண காரியங்களை அலசியாராய்ந்துகொள்வதைப் பொறுத்தது ஆனால், அப்படியான தர்க்கபூர்வ காரண காரியங்கள் கூட, அவை போதுமான அளவு அழுத்தம் தரக்கூடியதாக அமையுமெனில் அதுவும் கூட மிகவும் சுருக்கமானதாக அமையக்கூடும். எனவே அதற்காகும் நேரம் மிகவும் சொற்பமானதாகவே இருக்கும்
நம்மில் பலரிடம் பகுத்தறிவு குறித்து, காரண காரிய தர்க்கபூர்வ அணுகுமுறை குறித்த ஒவ்வாமை குறித்த ஒவ்வாமை இருக்கிறது. இத்தகைய ஒவ்வாமையுணர்வு இருக்கும் இடங்களில் நான் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் தேவையற்றதாகவும் முக்கியத்துவம் இல்லாததாகவும் தோன்றும். பகுத்தறிவு/ தர்க்கப்பூர்வ அறிவு என்பதைச் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் அது ஆழமான உணர்வுகளைக் கொன்றுவிடும் என்று ஒரு கருத்து நம் மத்தியில் நிலவுகிறது. பகுத்தறிவு/ தர்க்க நியாயம் நம் வாழ்வில் என்ன வகையில் செயலாற்றுகிறது என்பது பற்றிய ஒட்டுமொத்தமான அளவிலான பிழையான கண்ணோட்டத்தின் விளைவு இந்த சிந்தனையோட்டம் என்று எனக்குத் தோன்றுகிறது. உணர்வுகளைக் கிளர்த்துவது தர்க்கபூர்வ அறிவின் வேலை இல்லை. மனிதனின் நல்வாழ்க்கைக்கே தங்குதடையாக உள்ள உணர்வுகளைத் தடுப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவது காரணத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தாலும்கூட வெறுப்பையும், பொறாமையையும் மட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறிவது கண்டிப்பாக தர்க்க பூர்வ உளவியலின் ஒரு செயல்பாடு தான் என்றாலும், இந்தத் தீவிர வேட்கைகளைக் குறைப்பதில் நாம் தர்க்கபூர்வ அறிவின் கண்டனத்திற்காளாகாத வேறு சில தீவிர பற்றுகளையும் மட்டுப்படுத்துவோம் என்ற அனுமானம் தவறானது. தீவிர காதலில், பெற்றோர்களுக்கே உரிய தீவிர அன்பில், நட்புறவில், பிறருக்கு உதவும் மனப்பான்மையில், அறிவியல் அல்லது கலைத் துறையில் உள்ள தீவிர ஈடுபாட்டில், ஒருவருக்குள்ள தீவிர முனைப்பும், பற்றும் குறையவேண்டும் என்று எதிர்பார்க்க எந்தக் காரணமும் இல்லை. பகுத்தறிவுள்ள மனிதர்கள் மேற்குறிப்பட்ட உணர்வுகள், பற்றுகளைக் கொண்டிருந்தால், அதற்காக ,அவற்றை உணர முடிவதற்காக ஆனந்தப்படுவாரே தவிர தன் மீது அவற்றுக்குள்ள சக்தியைக் குறைக்க முற்பட மாட்டார்கள். ஏனெனில், இந்த உணர்வுகளெல்லாமே நல்ல வாழ்க்கையின் அங்கங்கள். தனக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை வரவாக்கும் வாழ்க்கை. இவ்விதமான தீவிரப் பற்றுகள் அவற்றின் அளவில் எந்தவகையிலும் பகுத்தறிவுக்கொவ்வாதவை யல்ல. மேலும், பகுத்தறிவற்ற பலர் மிக அற்பமான பற்றுகளையே உணர்பவர்களாக இருக்கின்றனர். எனவே, தன்னை தர்க்கபூர்வமாகச் சிந்திக்கத் தெரிந்த பகுத்தறிவாளனாக்கிக்கொள்வது தன் வாழ்க்கையையே சுவாரசியமற்றதாக்கிவிடுமோ என்று எவரும் பயங்கொள்ளத் தேவையில்லை. அதற்கு மாறாக, பகுத்தறிவு என்பது உள்வயமான ஒத்திசைவையே பிரதானமாகக் கொண்இருப்பதால், அதை அடைந்துவிடும் மனிதர் உலகைப் பற்றிய தனது அவதானிப்பிலும், புறவயமான நோக்கங்களை சாதிக்கத் தன் சக்தித் திறனாற்றல்களைப் பயன்படுத்துவதிலும், உள்வய முரண்களாலும், மோதல்களாலும் எப்பொழுதுமே முடக்கப்பட்டிருக்கும் மனிதரை விட அதிக சுதந்திரமாகச் செயல்பட முடியும். ஒருவர் தனக்குள்ளாகச் சிறைப்பட்டிருக்கும் நிலையைக் காட்டிலும் உயிர்ப்பற்ற , சுவாரசியமற்ற விஷயம் எதுவுமில்லை. புறவயமாகத் திருப்பப்படும் கவனத்தையும், ஆற்றலையும் விட பரவசமளிக்கும் விஷயம் வேறெதுவுமில்லை.
நம்முடைய மரபார்ந்த ஒழுக்கவியல் மிகவும் அதீதமான அளவு தன்வயமானதாக இருந்துவந்திருக்கிறது. பாவம் / குற்றம் என்பது பற்றிய சிந்தனை இந்த தன் – மைய அவதானிப்பு குறித்த விவேகமற்ற, தேவையற்ற் முனைப்பான கவனத்தின் ஓர் அங்கமே. இந்த பழுதுபட்ட ஒழுக்கவியலால் தூண்டப்படும் தன்வயமான மனநிலைகளினூடாக ஒருபோதும் கடந்துசெல்லாதவர்களுக்கு பகுத்தறிவுச் சிந்தனை தேவையில்லாம லிருக்கக்கூடும். ஆனால், மேற்குறிப்பிட்ட நோய்மையை ஓருமுறை அடைந்துவிட்டவர்களுக்கு, பகுத்தறிவார்ந்த, தர்க்கபூர்வ சிந்தனை நிவாரணத்திற்கு இன்றியமையாதது. ஒருவேளை, இந்த நோய்மை என்பது மூளை வளர்ச்சிக்குரிய இன்றியமையாத கட்டங்களில் ஒன்றோ என்னவோ. இந்த நோய்மையான தன்வய மனநிலைகளினூடாக காரண காரிய தர்க்கபூர்வ அறிவின் உதவியோடு மேற்சென்றுவிட்ட ஒருவர், இந்த நோய்மையையோ அல்லது அதற்கான நிவாரணத்தையோ ஒருபோதும் அனுபவித்திராதவரு டையதை விட மேலான நிலையை அடைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
தர்க்கபூர்வ அறிவு குறித்து நம்முடைய காலகட்டத்தில் இருக்கும் வெறுப்பு, இந்தத் தர்க்கபூர்வ அறிவு எந்தெந்த விதங்களில் செயல்படுகிறது என்பது பற்றி போதுமான அளவு அடிப்படையான வழியில் இங்கே சிந்தனாபுர்வமாக உள்வாங்கப்படவில்லை என்ற உண்மையிலிருந்தே எழுகிறது. தனக்குத்தானே பிளவுண்டிருக்கும் மனிதன் பரவசத்தையும், கவனச்சிதறலையும் எதிர்பார்க்கிறான். தீவிர விருப்பங்களே அவனுக்குப் பிடிக்கிறது – தெளிவான, உறுதியான காரணங்களுக்காக அல்ல.; தர்க்கநியாயங்களுக்காக அல்ல. அந்தத் தருணத்தில் அவை அவரை அவருக்கு வெளியே எடுத்து, சிந்தித்தல் என்ற வலியார்ந்த தேவையைத் தடுப்பதனால்தான். எந்தவிதமான தீவிர வேட்கையும் அவரைப் பொறுத்த அளவில் ஒருவிதமான போதை தான். அவரால் அடிப்படையான மகிழ்ச்சியை கற்பனை செய்யவே முடியவில்லையென்பதால், வலியிலிருந்து கிடைக்கக்கூடிய எந்த நிவாரணமும் அவருக்கு போதையின், கிறக்கத்தின் வடிவில் மட்டுமே சாத்தியமாகிறது. இது உள்ளே புரையோடியிருக்கும் ஒரு நோய்மையின் அறிகுறியாகும். இத்தகைய நோய்மை/ சீர்கேடு இல்லாத இடத்தில் ஒருவர் தனது திறனாற்றல்கள், புலனாற்றல்கள் ஆகியவற்றை முழுமையாகத் தன் வசமாக்கியிருக்கும் அளவில் மிக உன்னத மகிழ்ச்சியை அடைபவராகிறார். மூளை மிகவும் உயிர்ப்போடு, விழிப்போடு இருக்கும் தருணங்களில் தான், மிக மிகக் குறைந்தவையே நினைவிலிருந்து நழுவிப்போன நிலையில்தான் ஆகத்தீவிரமான மகிழ்ச்சிகள் அனுபவங்கொள்ளப்படுகின்றன. இது, மகிழ்ச்சியின் முக்கிய உரைகற்களில் ஒன்றாகும். போலியான, திருப்தியை வரவாக்காத கிறக்கங்கள் எவையும் தேவைப்படாத மகிழ்ச்சி. மெய்யான மனநிறைவை வரவாக்கும் மகிழ்ச்சி. நம்முடைய புலன்கள், ஆற்றல்களின் முழுமையான செயல்பாடுகளோடு இணைந்த அளவில் வரவாகும் மகிழ்ச்சி அது. நாம் வாழ்கின்ற உலகைப் பற்றிய முழுமையான அறிதலும் புரிதலும் உடன்வர வரவாகும் மகிழ்ச்சி அது.
*