This entry is part 2 of 9 in the series 12 ஏப்ரல் 2026

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                    

                           

தனம்  தோழியரிடம் சொல்லிவிட்டு நடைப்பயிற்சியைமுடித்துக் கொண்டு வீட்டிற்கு வருகையில் மணி ஏழுஆகிவிட்டது. தயாராக இருந்த கோபால் மைதானத்திற்குப்புறப்பட்டார். நண்பர்களோடு நடைப்பயிற்சி செய்துவிட்டுபூங்காவில் அமர்ந்து  உரையாடிவிட்டு எட்டு மணிக்குத்திரும்புவார். அதற்குள் சமையலை முடித்து  மதியத்திற்கானஉணவை டிபன் கேரியரில் எடுத்து வைத்து விடுவாள் தனம். கோபால் வந்து குளித்து விட்டுத் தயாராகி வரும்போதுஇருவருக்குமான காலைச் சிற்றுண்டியைப் பரிமாறவந்துவிடுவாள். ஒன்பது மணிக்கு கடைக்குப் புறப்படுவார். பி.யு.சி வரை படித்துவிட்டுத் பெரிய கடைவீதியில் இவருடைய அப்பா வைத்திருந்த மளிகைக்கடையில் தந்தைக்கு உதவியாகச் சேர்ந்து  தைமாதம் வந்தால் ஐம்பதுஆண்டுகள் ஆகிவிடும்.
இருவரும் விடியலில் ஐந்தரை மணிக்கு எழுந்து விடுவது வழக்கம். தனம் ஆறு மணிக்கு நடைப் பயிற்சிக்குச் செல்வாள்.
‘என்னங்க, நாளைக்கு எத்தன மணிக்குப் புறப்படறோம்?’
‘ ஏழுமணிக்குக் கடை சாத்திட்டு வரேன், எட்டு மணிக்குக் கெளம்பலாமா?’
‘வேணாங்க, ஊரும் நாடும் கெட்டுக் கெடக்குது, மத்தியானம் கடை திறக்க வேணாம்’
‘சரி. அப்போ மூணு மணிக்கு டிரைவரை வரச்சொல்லிடறேன்’
‘சரிங்க’

தனத்தின் பெரியப்பா பெண்ணின் மகளின் திருமணம் சென்னையில் நடக்கிறது. அதற்குதான் இவர்கள் புறப்படுகிறார்கள்.கணவரை அனுப்பிவிட்டு மலருக்கு ( வேலைக்கார,ப் பெண்) பாத்திரங்களை ஒழித்து வைத்தாள். அலைபேசியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்து ஊஞ்சலில் அமர்ந்து தங்கைகள் இருவரிடமும் பேசலானாள். வாட்ஸ் அப்பில் இருவரையும்  ஒன்றாக அழைத்தாள்.

‘நீங்க ரெண்டு பேருமே வரலையா?’

‘ சின்னவனுக்கு பரீட்சை நடக்கிறதே அக்கா,’ என்றாள் பெரியவள்,

‘ நான் உன்னோட வரலாம்னுதான் நெனச்சேன் , இவருக்கு ரெண்டுநாளா சரியான காய்ச்சல்’ என்றாள் சின்னவள்.

‘ நம்ம வீட்டு சார்புல நீயும் மாமாவும் போறதே போதும் ‘ என்றாள் பெரியவள்.

‘சரிம்மா , நான் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்து சொல்றேன்’

என்று சொல்லி எழுந்தாள் கதவைத் திறக்க,

மலர் வந்திருந்தாள்.

‘ வா மலர் , ஏன் ஒரு மாதிரி இருக்கே, பொண்ணு நல்லா இருக்காளா?’

மூன்று மாதத்திற்கு முன்தான் மகளுக்குத் திருமணம் செய்திருந்தாள் மலர்.

‘ நல்லா இருக்கா அக்கா, ரெண்டு நாளா  என்வீட்டுக்காரருக்கு ஒடம்பு முடியல’

‘ஏன் என்னாச்சு மலர்?

”முந்தா நாளு ராத்திரி சவாரி முடிச்சுட்டு வந்தாருக்கா,(மலரின் கணவன் ஆட்டோ ஓட்டுகிறான்)

ராவிக்கெல்லாம் ஒரே வாந்தி, ‘

‘ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனியா?’

‘அதிகமா குடிச்சிட்டு வந்துட்டாருனு  நெனச்சேன், ஆனா சாப்பிட்டது ஒத்துக்கலேன்னாரு’

பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனேங்கா, ரெண்டு நாளா குளுகோஸ், ஊசிமருந்து, மாத்திரை எல்லாம் ஏத்தினாங்க,’

‘இப்ப எப்படி இருக்காரு? 

‘நல்லாருக்காரு, ராத்திரி அவுரு சாப்பிட்ட சிக்கன் பிரியாணி  ஒத்துக்காம புட் பாய்சன்’ ஆயிடுச்சாம்.’

‘ நான் வேலைய பார்த்துக்கறேன், நீ கெளம்பு, இந்தா இத வெச்சுக்கோ’

என்று ஐநூறு ரூபாயை  அவளிடம் தந்தாள் தனம்.

‘இருக்கட்டுங்கா, இப்ப வீட்டுக்கு வந்துட்டாரு, மாமியார் பார்த்துப்பாங்க’

என்று வேலைகளைச் செய்ய முற்பட்டாள்.

யாருக்கும் மலரைப் பிடிக்கும், சுத்தமாக வருவாள், கருப்புதான்  ஆனால் களையான  சிரித்த முகம், அன்பான பேச்சு, சொந்த வீடுபோல அக்கறையுடன் வேலைகளைச் செய்வாள். நிறைய வீடுகளைப் பிடித்துக் கொண்டு ஆலாய்ப் பறக்கமாட்டாள். இந்த ஒரு வீடுதான்.இது போதும் என்பாள்.

‘ மலர் உனக்கு இட்டிலி எடுத்து வெச்சிருக்கேன், மொதல்ல சாப்பிடு,’

‘சரீக்கா’

வேலைகளை முடித்துவிட்டு வீட்டின் பக்கவாட்டில் இருந்த மல்லிகைக் கொடியை நிமிர்த்திக் கட்டினாள்,

‘வரேங்கா’ என்று புறப்பட்டாள்.

அவள் சென்றபின் புத்தக அலமாரியை அடுக்க ஆரம்பித்தாள் தனம்.பகல் ஒருமணிக்கு தான் சாப்பிடுவதற்கு முன்னர்  , மறக்காமல் உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்து, காக்கைக்கு சாதம் எடுத்துச்சென்று வாசலிலிருந்த வேப்பமரத்தின் அருகில் மதிலின்மீது வைத்தாள். ஏனென்றால் முன்பெல்லாம் அப்பளமோ, வடையோ விரும்பி எடுக்கும் காகங்கள் இப்போது  அவற்றைத் தொடுவதில்லை.சிப்ஸ் வைத்தாக வேண்டும், எங்கிருந்தாலும் கிரில் கதவு திறக்கும்  சத்தத்திலேயே கூட்டமாய் ஓடிவந்து ஆவலோடு பறந்து எடுக்கும். இவை மட்டுமா, இரண்டு அணில்கள் வேப்ப மரத்தின் கிளைகளில் காத்திருக்கும் என்ன உடன்படிக்கையோ தெரியாது, காகங்கள் இவற்றுக்காக மீதம் வைத்து நகரும். அவை சென்றபின் அணில்கள் கும்மாளமிட்டு இரண்டு கைகளால் எடுத்து உண்பதே  தனி அழகுதான்.

உணவருந்தி முடித்து ஊஞ்சலில் சற்றே கண்ணயர்ந்தாள் தனம். திடீரென ஏதோ பேச்சுக்குரல். என்னவென்று பார்க்க வாசலுக்கு வந்தாள்,  பக்கத்து வீட்டு விசாகம் இவளைப் பார்த்ததும்,

‘ அக்கா இங்கே பாருங்க, அணில் புடிக்கறாங்களாம்’ 

எதிரில் இரண்டு பெரிய காலி மனைகள் அவற்றில் மூன்று பெரிய மாமரங்களும். நான்கைந்து தென்னை மரங்கள், வாத நாராயணன், பூவரச மரங்களும் இருந்தன

இரண்டு புதிய முரட்டுத்தனமான ஆட்கள் நின்றிருந்தார்கள். ஒருவன் கையில் சிறுவர்கள் வைத்து விளையாடும் உண்டிக்கோல் வைத்திருந்தான், இன்னொருவன் பெரிய சாக்குப்பை வைத்திருந்தான்.

‘ ஏம்பா என்ன பண்றீங்க,?’

‘ சும்மா ஒண்ணு ரெண்டு அணில புடிக்கறோம்’

‘ அதெல்லாம் புடிக்கக் கூடாது , கெளம்புங்க’ என்றாள் தனம். ஆனாலும் உண்டிக்கோலால் ஒருவன் மரத்திலிருந்த அணிலை அடிக்க அடிபட்டு அது ‘பொத்தென்று ‘ விழ , இன்னொருவன் அதை எடுத்து சாக்கில் போட்டுக்கொள்ள,கிளம்பினார்கள்.

மறுநாள் மதியம் ஒரு மணிக்கு கடையை மூடிவிட்டு வந்துவிட்டார் கோபாலன், 

‘ தனம் எல்லாம் எடுத்து வச்சிட்டியா?’

‘உங்களுக்கும், எனக்கும் வேண்டிய எல்லாம் எடுத்து வச்சிட்டேன்,

சாப்பிட வாங்க’

‘  உன் செல்லப் பிள்ளைகளுக்கு வச்சிட்டு வா’

வழக்கம்போல் உணவு எடுத்து வைத்தவளுக்கு ஆச்சரியம், ஒரு காக்கை கூட வரவில்லை,’ காகா, காகா`என்று அழைத்தும் பார்த்தாள், ஒன்று மட்டும் பூவரச மரத்திலிருந்து  பறந்து வந்து வேப்ப மரத்தில் அமர்ந்தது, பின் என்னவானதோ உணவைத் தொடாமலே பறந்து சென்றுவிட்டது

மனக்கலக்கத்துடன் உள்ளே வந்தாள்,

‘ என்னங்க, இன்னக்கி அதுங்க வரவே இல்ல, ஒண்ணுமட்டும் வந்து பார்த்துட்டு எடுக்காமலே போயிடுச்சி’

‘சரியான அசடுடி நீ’ அப்புறமா வந்து சாப்பிடும் வா’ என்றார் கோபாலன்.

மூன்று மணிக்கு ஓட்டுநர் திருநாவு வந்துவிட்டார் ,சென்னைக்குப் புறப்பட்டனர். தெருக்கோடிக்கு கார் வந்த போது காக்கைகள் கூட்டமாக கரைந்து கொண்டிருந்தன, திருநாவு வண்டியை நிறுத்திவிட்டுச் சென்று பார்த்து வந்தார்

‘சார் அங்க ஒரு காக்கா செத்து  விழுந்திருக்குது’ என்றார்.

‘ ஓ இந்த துக்கத்தினால்தான் காகங்கள் வந்து உண்ணவில்லையோ’

என்று நினைத்துக் கொண்டாள் தனம். 

திருமணத்தில் கலந்துகொண்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு மூன்றாம் நாள் மாலை ஐந்து மணிக்குகோபாலனும்,தனமும். ஊருக்குப் புறப்பட்டனர். இரவு எட்டு மணிக்கு வழியில் ஒரு உணவகத்தில் உணவருந்த வண்டியை நிறுத்தினார் கோபாலன்.

‘சார் நீங்க இங்க சாப்பிடுங்க, நான் எதிர்ல சாப்பிடறேன்’

‘ மட்டன் பிரியாணி யா? ‘ என்று இருநூறு ரூபாயைத் தந்து திருநாவை அனுப்பிவிட்டு கணவனும் மனைவியும் சைவ உணவகத்தில் நுழைந்தனர்.

அடுத்த அரைமணி நேரத்தில் பயணம் தொடர்ந்தது.  வீடுவந்து சேர அரைமணி நேரம் இருந்தது, ஓட்டுநருக்கு வயிற்றுவலி அதிகமானது. ஒருகட்டத்தில் மனைவியை முனனால் வரச்சொல்லிவிட்டு  அவரை  பின் இருக்கையில் அமரவைத்துத் தானே வண்டியை ஓட்டினார் கோபால்.. திருநாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு மருத்துவரைப் பார்க்கச் சொல்லி அவரது மகனிடம் பணத்தைத் தந்துவிட்டு வீடு வந்து சேரும்போது மணி பதினொன்றைத் தாண்டிவிட்டது.

மறுநாள்  விடிந்தவுடன் திருநாவிடமிருந்து அலைபேசி அழைப்பு.

‘ சார் உங்களுக்கு கஷ்டம் தந்துட்டேன், புட் பாய்சன் ஆயிடுச்சி’

‘ அடக்கடவுளே, இப்ப எப்படி இருக்கே?’

‘ எங்க பக்கத்து வீட்டு முருகன் டாக்டர் ராத்திரியே வந்து பார்த்தார்.அதனால நல்லாயிட்டேன் , பெரிசா பாதிக்கல’

‘ சரிப்பா உடம்ப பாத்துக்கோ , ‘

மனைவியிடம் இதைச் சொல்லிவிட்டு கடைக்குச் சென்றார் கோபாலன்.   

மலர் வந்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் , அப்போது பக்கத்து வீட்டு விசாகம் அவசரமாக ஓடிவந்து,

‘ அக்கா இங்க வாங்க’

என்று அழைத்தாள். மலரும்,தனமும் வாசலுக்கு விரைந்தனர்.அக்கம் பக்கத்தவர் கூடி விட்டிருந்தனர். நரிக்குறவப் பெண்போல் ஒருத்தி ஐம்பது வயதிருக்கலாம் கையில் சாக்குப்பை வைத்திருந்தாள். அதில்லாமல் ஒரு மஞ்சள் தாம்பூலப்பையில் ஒரு எவர்சில்வர் தூக்கு வைத்திருந்தாள்.அதில் மீன்குழம்பு இட்டுக் கலந்த சோறு இருந்தது.

அந்தப் பெண்ணைப் பிடித்து கேள்விகள் கேட்டனர்.

‘ ஏம்மா எதுக்கு மூணு நாளா இங்க சுத்திகிட்டருக்கே?’ 

‘சும்மாதான் மாங்கா எடுக்க வந்தேன்’

‘ எங்கே சாக்குப்பைய தெறந்து கொட்டு’

வேறுவழி இல்லாமல் திறந்து கவிழ்த்தாள். அதிலிருந்து மயங்கிய நிலையில் நான்கைந்து காகங்கள் விழுந்தன.

‘ஏய் இன்னா இது? காக்கா புடிக்கிறியா?’

‘ ஒழுங்கா உண்மையச் சொல்லிடு, இல்லன்னா போலீசுல புடிச்சுத் தந்துடுவோம்’

‘ இதுங்களுக்கு மயக்கமருந்து கலந்த மீன்கொழம்பு சோற எலையில வைப்பேன்  எல்லாம் சாப்பிட்ட கொஞ்ச நேரத்துல சுருண்டு விழுந்துடும்,’

‘ அதெல்லாம் எடுத்துட்டுபோயி கடையில தருவேன் பணம் தருவாங்க’

‘சார் இவள விடக் கூடாது, கயிறு கொண்டாங்க ,கட்டிப்போட்டு போலீசுல ஒப்படைப்போம்’

‘வேணாஞ் சாமி , இனி காக்கா புடிக்க மாட்டேன், வுட்டுடுங்க’

என்று கெஞ்சிக்கொண்டே தூரத்தில் நின்றுகொண்டிருந்தவனின்  இருசக்கர வாகனத்தில் ஏறினாள், காற்றாய்ப் பறந்தது அது. அதிலிருந்தவன் அன்று அணில் பிடிக்க வந்தவன். வனவிலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லை, பறவைகளுக்கும் பாதுகாப்பு இல்லை, சனி பகவானின் வாகனம், முன்னோர்களின் வார்ப்பு என்பதெல்லாம் என்ன?

காகத்தைக் கூட விட்டு வைக்காத மனிதன், இனி மனிதரை ஒருபோதும் காகங்கள் நம்பாது போகுமோ என்னவோ?‘காக்கைகளே ஜாக்கிரதை! என்று மனதுக்குள் புலம்பிக்கொ்ண்டு உள்ளே வந்தாள் தனம்.

Series Navigationசார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதை உலகம்மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்: 6