This entry is part 1 of 9 in the series 12 ஏப்ரல் 2026


ஆர் சீனிவாசன்

நவீன அமெரிக்க கவிஞர்களுள் சார்லஸ் புக்கோவ்ஸ்கிக்கு தனித்துவமான இடம் உண்டு (Charles Bukowski). அமெரிக்க கவிதை இயக்கம் ராபர்ட் ஃபிராஸ்டின் உருவக படிமங்களில் துவங்கி, வால்ட் விட்மனின் கொள்கை வரிகளை கடந்து சார்லஸ் வாழ்ந்த காலங்களுக்கு (தொண்பதுகள்) வருகையில், அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த பொருளாதாரமாகவும், அதிநவீன போர் படை கொண்ட நாடாகவும் வளர்ந்திருந்தது. வால்ட் விட்மனை போலவே சார்லசின் கவிதைகள் அமெரிக்காவை மைய படுத்தினாலும் மரபு அழகியல் கோட்பாடுகளிலிருந்து விலகி, முதலாளித்துவ சமூகம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வு பிரிவினையால் உருவாகிய அடிமட்ட வர்க்கத்தின் குரல்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்தது. புலம்பெயர்ந்த ஜெர்மன் பெற்றோருக்கு பிறந்த சார்லஸின் எழுத்து பாணி நேர்த்தியான பதங்களையும் மரபையும் வலுக்கட்டாயமாக தவிர்த்து எளிமையான நடையில், சில சமயம் மரபு கவிதை நயத்தை தவிர்த்து, சிந்தையை கவிழ்க்கும் முயற்சிகளாகவும், மெல்லிய நகைச்சுவை, நையாண்டித்தனத்தின் மூலம் அமெரிக்க சமூகத்தை விமர்சித்தது.

தனிப்பட்ட அனுபவங்கள், சமூக அபத்தங்கள், அப்பட்ட பாலியல், வன்முறை போன்றவற்றில் அடிப்படை கொண்ட அவரது வரிகள், நிலையான வாழ்க்கையையும், மன நிம்மதியையும் தேடும் முயற்சிகள்.

எனக்குள்ல ஒரு
பாட்டு பறவை,
வெளியில வர துடிக்குது
ஆனா அத சிறை பிடிச்சு
வெச்சிருக்கேன்
‘உள்ளேயே கிட,
யாரையும் உண்ண
பார்க்க விடமாட்டேன்’

எனக்குள்ல ஒரு
பாட்டு பறவை,
வெளியில வர துடிக்குது
அதுமேல விஸ்கி ஊத்தி
சிகரெட் புகை ஊதறேன்
தெவிடியாக்களுக்கும்
ஒயின் கடைகாரனுக்கும்
குமாஸ்தாவுக்கும்
அது இருக்குற இடம்
தெரியக்கூடாது
எனக்குள்ல ஒரு
பாட்டு பறவை,
வெளியில வர துடிக்குது
ஆனா அத வலுக்கட்டாயமா
தடுக்குறேன்
‘என்னை ரூட் எடுக்கலாம்னு
பாக்கறியா?
நான் செஞ்சதெல்லாத்தையும் அழிக்கலாம்னு
பாக்கறியா?
என் கவித விக்கிறது உனக்கு
பிடிக்கலையா?’

எனக்குள்ல ஒரு
பாட்டு பறவை,
வெளியில வர துடிக்குது
ஆனா நான் கில்லாடி
எல்லாரும் தூங்கின பின்னேதான்
அத வெளியில விடுவேன்
‘நீ உள்ள இருக்கேன்னு
எனக்கு தெரியும்,
ஆனா என்ன செய்யறது?’ன்னு சொல்லி,
கொஞ்சம் பாட விட்டுட்டு
அப்புறம் உள்ள
அடச்சுடறேன்
அத சாக விட மனசில்லை
அது இருக்குறதால
அழுக வருது.
ஆனா ஆம்பள அழுகூடாது
அதனால

  • Bluebird

கவிதையின் உள்ளர்த்தங்கள் வாசகரின் சிந்தைக்கு எளிதில் விளங்கக்கூடியது. சார்லஸ் அப்பட்ட எதார்த்தங்களை கொச்சை வார்த்தைகளால் எழுதும் கவிஞர் என்ற அடையாளம் இலக்கிய உலகில் நிலவுவதால், சுதந்திரமாக வேறு எந்த தலைப்பை பற்றி எழுதினாலும் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளதை மறைமுகமாக குறிக்கும் அதேநேரம், சார்லசின் தனிப்பட்ட ஆளுமையை பற்றியும் விமர்சிக்கிறது. கடுமையான, முரட்டுத்தனமான தோற்றமுடைய ஒருவனின் மனதினுள் இரக்கம் மற்றும் நிறைவே இருக்காது என்ற பாரபட்ச பார்வையின் பிரதிபலிப்பு. இத்தகைய உணர்ச்சிகள் வேறு கவிதைகளிலும் வெளிவருகிறது.

இரவு விடுதிய
பார்காதவங்க வாழ்க்கைய
பார்த்ததே இல்லன்னு தான் சொல்லணும்
அம்பத்தாறுபேருக்கு
ஒரு லைட்டு பல்பு
அறுப்பு சிக்கன் மாதிரி
ஒருத்தன் மேல ஒருத்தன்
கொறட்ட விட்டு தூங்குறத
நீங்க பார்க்கணும்
அதுல சில கொறட்ட சத்தம்
அடிவயித்திலிருந்து,
கிழிஞ்ச தொண்டையிலிருந்து ,
அழிஞ்ச நுரையீரலிலிருந்து
அப்பா! நரக வேதனையா
கொமட்டிகிட்டு வரவைக்கும்
தொவைக்காத சாக்ஸ்,
மூத்தற, கக்கூஸ் ஜட்டி
நாத்தத்த மெதுவா
சுத்துற ஃபேன்
திறந்த சாக்கடை மாதிரி
ரூம் முழுக்க
பரப்பும்
அந்த இருட்டுல
ஊதின
மெலிஞ்ச
வளஞ்ச
கையில்லாத
காலில்லாத
உருவங்க
முக்கியமா
சுத்தமா
நம்பிக்கை
இழந்த
பேரில்லாத
உருவங்க
தூங்கமுடியாம
தெருவுல
மேலையும்
கீழையும்
பெரிய பெரிய
கட்டிடங்களுக்கு
மத்தியில
நடந்தாலும்
அவங்கள
பத்தி மறக்கமுடியல.
ஒரு காலத்துல
அவங்களும் குழந்தையா
இருந்தாங்க.
அவங்களுக்கு என்ன ஆச்சு?
எனக்கு என்ன ஆச்சு?
வெறும்
இருட்டும்
குளிரும்தான்
மிஞ்சுது.

-Flophouse

அமெரிக்க வாழ்க்கையை ஆடம்பரத்திற்கு ஒப்பிடும் பொது சிந்தனையை இந்த படைப்பு தகர்த்தெறிகிறது. சந்தர்ப்பங்கள் ஏராளமாக வழங்கும் சமூகத்திலும் தலைக்குமேல் கூரையின்றி, வீதியில் வாழும் வீடற்றவர்கள் ஏன் இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது.

காலையில எழுந்து யோசிக்கிறது உண்டு
இந்த நாள எப்படிடா கடக்குறதுன்னு.
ஆனா இந்த மாதிரி எவ்வளவோ நாள
பார்த்தாச்சுன்னு நினைச்சு மனசுக்குள்ள சிரிச்சிகிட்டு
பாத்ரூமுக்கு போய் வேலைய மூச்சு
கண்ணாடில முகத்தை பார்த்தா
‘எப்பா என்ன கன்றாவிடா இது’ ன்னு யோசிக்க தோணுது.
என்ன செய்ய? முடி வாரிக்கிட்டு
தொவச்ச துணிய எடுத்து, பூனைக்கு பாலு வெச்சு,
கொலவெறி பிடிச்ச உலகத்த காட்டும் பேப்பரை எடுத்து,
காபி டேபிள் மேல வெச்சு, பொண்டாட்டிக்கு குட் பை சொல்லி
காரை ஸ்டார்ட் பண்ணி, ரெவெர்ஸ் கியர்ல போட்டு
ஆடுகளத்துல இறங்கறேன்.

ஹைவே நெருசல்ல போகற இடம் தெரிஞ்சும் தெரியாம
வெறுமையை நோக்கி போறப்ப, ரேடியோவ போட்டா
அருமையான மோட்சார்ட் சிம்பொனி ஒலிக்குது.
அத கேட்டா எப்படியோ சோகம், அதிர்ச்சி, சந்தோசம்
துக்கம் எல்லாத்தையும் கடந்து போயிடலாம்னு தோணுது.
எல்லா நாளும் நல்ல நாள்தான். எல்லாம் அழகுதான் ஆனா
ஒருத்தன போல இன்னோருத்தன் இருக்குறதில்ல.

ஹைவேலெறிந்து பிரிஞ்சு நகரத்திலேயே ரொம்ப டேஞ்சரான ஏரியாவுக்கு
வந்தாலும் மோட்சார்டோட சிம்பொனி ரேடியோல ஒலிக்கும்போது
மூளைக்குள்ள எலும்புக்குள்ள, நரம்புக்குள்ள சுகமாயிருக்கு.

என்ன சொல்ல,
இன்னொரு நாள்
இன்னொரு போர்
ஆனா வாழற ஆசை
இன்னும் போகல.

-Gamblers All

Bluebird (பாட்டுப்பறவை) கவிதையும் இதுவும் ஒரே கருத்தைத்தான் சொல்கின்றன. போராட்டங்களுக்கு மத்தியில் மோட்சார்டின் இசையும், பாட்டுப்பறவையின் ஒலியும் உருவக கண்ணாடி பிம்பங்கள்.

அந்த நாள், இருபத்தெட்டாம் தேதி, ராத்திரி முழுக்க ஒயின் குடிச்சு
அவள பத்தியே நினச்சுக்கிட்டிருந்தான்.
அவ நட ,உட ,பாவன
பொய்யின்னு தெரிஞ்சும் அவ பேசின வார்த்தைங்க
ஒவ்வொரு ட்ரெஸ்ஸு, ஒவ்வொரு ஷு
அந்த ட்ரெஸ்ஸும் ஷுவும் உருவாக்கின அவ வடிவு
எல்லாத்தையும் நினச்சுக்கிட்டிருந்தான்.

அன்னிக்கு அவன் வீட்டுக்கு வரும்போது அவ இல்ல,
அன்னிக்கும் அதே வாடையோடதான் வருவான்னு நினைசிச்சான்
அப்படியேதான் நடந்துச்சு
விடியற்கால மூணு மணிக்கு
பீதின்ன பன்னி வாடையோட
வீட்டுக்கு வந்தா.

கத்திய எடுத்தான்
அலறிக்கிட்டு ரூம் இடுக்குல ஓடி ஒளிஞ்சப்பவும்
தப்பு செஞ்சவளைப்போல இல்லாம
ஏனோ அழகாத்தான் இருந்தா
மெதுவா ஒயினை குடிச்சுக்கிட்டு

அவளையே பார்த்துக்கிட்டிருந்தவன்
அவனுக்கு பிடிச்ச
மஞ்சள் ட்ரெஸ்ச அன்னிக்கு அவ
போட்டிருக்குறத பார்த்தான்
திரும்பவும் அலறினா

கத்திய எடுத்து
பேண்ட்டை கழட்டி
அவ முன்னாடியே
கொட்டைய அறுத்து

பலாகொட்டைய போல
கையில எடுத்துக்கிட்டுபோயி
டாய்லெட்ல போட்டு ஃபிளஷ் பண்ணான்
ரூமே செகப்பா ஆகும்போது
அலறிக்கிட்டே இருந்தா

‘அடப்பாவி என்னடா செஞ்சிட்டே!’ ன்னா

மூணு டவல தொடைக்கு நடுவுல
வச்சுக்கிட்டு,
இருக்காளா போய்ட்டாளாண்ணுகூட
கவலைப்படாம
அவ ட்ரெஸ்ஸு மஞ்சுளா செவப்பான்னுகூட
கவலைப்படாம
க்ளாஸுல இன்னொரு ரௌண்டு
ஒயின ஊதினான்.

-Freedom

மேற்கண்ட அப்பட்ட வன்முறை பாலியல் கவிதைகளுக்கு பேர்போனவர்தான் சார்லஸ். இப்படிப்பட்ட வன்முறை, பாலியல் தலைப்புகளை நுகர்விற்கு விற்பதாக சார்லஸ் மேல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஓரளவுக்கு அது உண்மையும்கூட. சார்லஸின் கவிதைகள் ஒருவித ஆணாதிக்க பிரதிபலிப்புகளே. படிக்கும்போதே பீதியோட்டும் வரிகளின் அடிப்படை சொந்த அனுபவமா அல்லது கற்பனையா என்பது சர்ச்சைக்குரிய விவாதம். இதைப்போன்ற விமர்சனங்கள் அவர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தன.

‘அழகிய பெண்ணும்
மெய்சிலிர்க்கும் வானிலையும்
அறிதில்தான் வரும்
வந்தாலும் அதிக நேரம்
நீடிக்காது’

என்ற வரிகளை எழுதியவரா இப்படி எழுதினார் என்ற கேள்வியையும் எழுப்பும்.

பல நாள் தற்கொலை செய்யணும்னு நினைச்சதால
என்னால எதிர்காலத்தை பார்க்கமுடியுது-
முதியோர் இல்ல வாசல்ல
சுமாரான நர்ஸு ஒருத்தி
சக்கர நாற்காலியில என்ன
உட்காரவெச்சு தள்ளிக்கிட்டு வர்றா
(அதாவது நா பிரபலமானத்துக்கு அப்புறம் )
நேர உட்கார்ந்த குருடனை மாதிரி
கண்ணோட கருவள மண்டையோட்டுக்குள்ள
போயி சாவ தேடுது

‘அருமையான நாள் இல்லையா மிஸ்டர் புக்கோவ்ஸ்கி’
‘ஆமா ஆமா’
நா இருக்குறதுகூட தெரியாம
நடந்து போறாங்க சின்ன பயலுங்க.
நா இருக்குறதுகூட தெரியாம
நடந்து போறாங்க சின்ன பொண்ணுங்க

‘மூணு நாளுக்கு அப்புறம்
முத சூர்ய வெளிச்சம் பாருங்க மிஸ்டர் புக்கோவ்ஸ்கி ‘
‘ஆமா ஆமா ‘
அந்த சக்கர நாற்காலியில் நா
பேபரைவிட வெள்ளையான
தோளுக்குள்ள ரத்தமே இல்லாம
மூளை மலிஞ்சு
என்னையே அழைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்

‘அருமையான நாள் இல்லையா மிஸ்டர் புக்கோவ்ஸ்கி’
‘ஆமா ஆமா’
என் பைஜாமாவுல ஒண்ணுக்கு அடிச்சுகிட்டு
வாயோரமா ஜொள்ளு வழியறத
என்ன தாண்டி ஓடுற ரெண்டு பசங்க பார்க்கறாங்க
‘டேய் அந்த கிழத்த பார்த்தியாடா’
‘எப்பா வாந்தியே வந்திருச்சு’
செஞ்சுக்குவேன் செஞ்சுக்குவேன்ன்னு
பயமுறுத்திட்டு, எனக்கு பதிலா வேற எவனோ
தற்கொல செஞ்சுக்கிட்டான் போல

முடிவா ஒரு இடத்துல நாற்காலியை நிறுத்தி
ரோஸ் செடியிலிருந்து ஒரு ரோஸ் பூ பறிச்சு
என் கையில கொடுக்குறா அந்த நர்ஸு
அது என்னன்னுகூட எனக்கு தெரியல
என் கையில இருக்குறது பூகாம்பா
இல்ல என் கம்பா
குறைஞ்சது அதுவாவது நிக்குது

-Last days of the suicide kid.

ஆங்கில கவிதை உலகில் சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதைகள் ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Series Navigationகாக்கைகளே ஜாக்கிரதை