This entry is part 4 of 7 in the series 19 ஏப்ரல் 2026

​இந்த விசித்திர உயிரினங்கள் இனி வரும் காலங்களில் நசிந்து போகலாம்(போயே தீர வேண்டும் என்பது என் அவா!) எனினும் தற்போது ஐம்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுள் விரவிக் கிடக்கும் இவ்வகையினத்தின் பண்புநலன்களை எடுத்தியம்புதல் வருங்கால வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காறித் துப்ப வசதியாய் இருக்கும். 

கிச்சன் ஓனரம்மாக்களிடம் ஏதேனும் ஒரு உணவின் செய்முறையைத் தெரிந்து கொள்ள விரும்பிக் கேட்டால் அந்தச் சமையல் குறிப்பில்தான் தமது சாணக்கியத்தனத்தைக் காட்டுவார்கள் – “ஒண்ணும் வித்தியாசம்லாம் இல்ல. எல்லாரும் செய்யுற மாதிரிதான் செஞ்சேன்”. அடேங்கப்பா! ஏதோ ஒரு நுணுக்கத்தைச் சொல்லிக் கொடுக்காமல் மறைப்பதில்தான் இந்த அற்பப் பதர்களுக்கு உலகை வென்ற உவகை கிட்டும் போலும். 

அடுப்படி ஆணையர்களிடம் அமிர்தத்தையே கடைந்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்தாலும் “ஏற்காட்டு ஏலக்காய ரெண்டு நுணுக்கி போட்டுருக்கலாம். மான்ட்யா மண்டை வெல்லத்தை ஒரு இணுக்கு இடிச்சு போட்டுருக்கலாம்” என அதிலும் குறைதான் கூற வாய் வரும். நல்லதாக நாலுவார்த்தை நாபிக் கமலத்தில் இருந்து முக்கித் தக்கி மேலே வந்தாலும் கூட தொண்டையைத் தட்டி நின்று விடும். இப்படிப்பட்ட சில நளபாக நரகாசுரிகளின் ஒரு சோற்றுப் பதமாக…

​​​*********************************​

கரண்டி கமாண்டர் ஒருவரை உபசரிக்க வேண்டிய சூழல் அமைந்து தொலைத்தது. நான் அவரது வீட்டிற்குச் சில முறை சென்றிருக்கிறேனே தவிர அங்கு நான் சமைத்ததில்லை. சமைக்க அனுமதிக்கப்பட்டதில்லை என்பது இன்னும் பொருத்தமாய் இருக்கும். எனக்குச் சிரமம் அளிக்க வேண்டாமென்று தவிர்க்கிறார்கள் என்றே நம்பியிருந்தேன். அவர் ஒரு சமையல் சர்வாதிகாரி என்பதுஎனக்கு அன்று வரை தெரியாது ஆகையால் ‘விருந்தோம்பல்’ பொருட்டு மினி இட்லி-சாம்பார், சட்னி, பொங்கல், வடை, கேசரி என காலை உணவிற்குச் செய்திருந்தேன். அவரைப் பற்றித் தெரிந்திருந்தால் இ்வற்றையெல்லாம் செய்ய எனக்கென்ன வேண்டுதலா? ‘வருந்தோம்பல்’ தான் நடந்திருக்கும்.

நான் என்பதற்காகச் சொல்லவில்லை. சும்மா சொல்லக்கூடாது, நன்றாகவே சமைப்பேன்என்பதை எவ்விதத் தன்னடக்கமும் இல்லாமல் பதிவு செய்து கொள்கிறேன். ஐயமிருப்பவர்கள் என்னவன், என் பெற்றோர், தங்கை ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இவர்களது நிலைப்பாடு ஒரு தலையாக இருக்கும் என நினைப்பவர்கள் தாராளமாக நேரில் வந்து என் சமையலை உண்டு பார்த்து முடிவுக்கு வரலாம். My confidence says everything.

ஒரு கிண்ணத்தில் நெய் தடவி பொங்கலை அதனுள் இட்டு நல்ல வடிவமாகத் தட்டில் வைத்து இன்ன பிற பதார்த்தங்களுடன் பரிமாறிய பின், என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கு நிலவிய அசவுகரியமான அமைதியை உடைக்க எதையாவது சொல்லித் தொலைக்க வேண்டுமென “பொங்கல்ல நெய் ரொம்ப ஜாஸ்தி” என்றார். இரண்டு கழுதை வயதான பிறகும் மிளகைப் பொறுக்கி வைத்தவாறே “ஏன் இவ்ளோ மிளகு போட்டுருக்கே? இஞ்சி போடாம உனக்கு சமைக்கவே வராதா?” என்று பாராட்டுப் பத்திரம் நீண்டு கொண்டே சென்றது. “இப்படி செஞ்சாதான் அது பேரு பொங்கல்” என்று கூற வேண்டும் போல் இருந்தது. சாஸ்திர சம்பிரதாயத்திற்குத்தான் அந்தப் பொருட்கள் சமையற்கட்டில் புழங்குகின்றன என்பது அந்த அஞ்சறைப் பெட்டி அதிமேதாவியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கும் போலும். 

எனக்கு வேறு அப்போதுதான் அவர் செய்யும் பொங்கல் மிகச் சரியாக நினைவுக்கு வந்து தொலைத்தது. வாய்ல அடிங்க! வாய்ல அடிங்க! அதைப் பொங்கல் என்று சொன்னால் பொங்கல் கோபத்தில் பொங்கி எழும். அரை உழக்கு பச்சரியை குக்கரில் இட்டு பாசிப்பருப்பை அதன் கண்ணில் வெறுமனே காட்டிவிட்டுத் தூர வைக்கப் போகும்போது, இவரைப் பார்த்த விரக்தியில் தற்கொலை எண்ணம் மேலிட்டு இரண்டு தேக்கரண்டி பாசிப்பருப்பு உள்ளே தவறி விழுந்தது. உடனே தண்ணீரை வாரி ஊற்றி மிகச் சரியாக எண்ணி நான்கே நான்கு மிளகை இட்டு வேக வைத்து ஒரு வஸ்துவைக் கிண்டி, வீட்டில் இருப்பதிலேயே குட்டிக் கரண்டியை நெய்ச் சட்டியில் லேசாக முக்கி எடுத்து ஒரு முறை குக்கரின் மீது விளாவி விட்டு அதனை ‘…..’ என அந்தப் பெயரால் அழைத்தார். 

தான் கோந்துப் பசையா அல்லது உருளைக்கிழங்கு மசியலா என்று வெகுவாகக் குழம்பிப் போய் இரண்டாகவும் இருக்க முடிவு செய்தாற் போல் அந்தப் பொங்கல் பரிதாபமாக முழி முழியென்று முழித்தது. இது மட்டுமல்ல….. அமெரிக்காகாரன் பார்த்தால் உடனே படையெடுத்து வந்துவிடும் அளவிற்கு உளுந்த வடை செய்வது; மட்டைப் பந்து விளையாட்டிற்கென பக்குவமாக இட்லிகள் தயாரிப்பது; மெத்தையின் தடிமனையும் எருமையின் தோல் சொரசொரப்பையும் தோற்கடிக்கும் கின்னஸ் சாதனையை நிகழ்த்தும் உயரிய நோக்கில் தோசை சுடுவது; தாளித்த தயிர் சாதத்திற்கு உலகில் எவருமே அறிந்திராத புதிய உத்தியாக கடுகு, உளுந்து, மிளகாய், கறிவேப்பிலையுடன் தயிரையும் கொட்டித் தாளிப்பது (தயிர் திரிதிரியாகக் கண்ணீர் விட்டுக் கதறுவதைப் பார்த்த நானே சாட்சி!); எலுமிச்சை சாதம் செய்கையில் தாளிப்பு முடித்தும் அடுப்பை அணைக்காமல் அதில் வைத்தேஎலுமிச்சை சாறு ஊற்றி, கொதித்து அடங்கும் அதன் குமிழ்களை ரசித்து முடித்து சாதத்தையும் போட்டுக் கிளறிய பின்னரே அடுப்புக்கு ஓய்வு கொடுப்பது; உளுந்தம்பருப்புச் சோற்றில் மஞ்சள் பொடி இடுவது; பொரிகடலைத் துவையலைக் கூட தண்ணி சட்னியைப் போல ஆறாக ஓட விடுவது எனப் பல வித்தைகளை விரல் நுனியில் வைத்துக் கொண்டே சுற்றுபவர்.

சாதாரணமாக நான் யார் சமையலையும் சாடியதே இல்லை. ஆனால் இவர் சாதாரணமானவர் இல்லையே! So I couldn’t resist the temptation. No, actually she induced it. இவ்வளவு பெருமைகளை வைத்துக் கொண்டு அவருக்குத்தான் என் சமையலைப் பற்றி கித்னா வாய்! ‘இவருக்குப் போய் பார்த்துப்பார்த்துச் சமைத்துக் கடைசியாகப் பொங்கலில் நெய்யில் வறுத்துப் போட்ட ஒரு கை முந்திரிப்பருப்புஒன்றுதான் கேடு!’ என்பதை ‘ஈஈஈ’ என அசடு வழிந்தவாறே வெளிப்படுத்தினேன்.

உண்ட மயக்கத்தில் இருந்த போதும் கூட உணவு செரிக்க வேண்டி எனது சமையல் அறிவு பரிசோதனை துவங்கியது. “அந்த மினி இட்லி… இப்படி ரொம்பவும் பஞ்சா இருக்கக் கூடாது.தொடதுக்குள்ள பிஞ்சுட்டு வருது. (மிருதுவா இருந்துச்சுன்னு சொல்ல வாய் வருதா பாரேன்!) உளுந்து ஜாஸ்தின்னு நினைக்குறேன். மாவு அரைக்கும் போது எவ்வளவு உளுந்து போடுவ?” என்று கேட்டார்.எனக்கு அப்போது உழக்குகளின் அளவை பெயர்கள் தெரியாது. “ஒரு உழக்கு உளுந்துக்கு ஒரு உழக்கு அரிசி” – உளுந்து என்று கூறுகையில் குட்டி உழக்கைக் குறிக்கும் வகையில் வலது கையின்கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் இடைவெளியைக் குறுக்கியும், அரிசி என்று கூறுகையில் இடைவெளியைப் பெரிதாக்கியும் காட்டினேன். 

வருட காலமாகச் சமைத்துக் கொட்டுபவருக்கு என் மொழி புரியவில்லையாம். “அப்படி சொல்லிக் குடுத்துருக்க மாட்டாங்களே! ஒரு உழக்குக்கு ஒரு உழக்குன்னு யார் சொல்லித் தந்தது?”  இந்த இடத்தில் வேறு என்ன வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். அல்லது அளவைகளின் பெயரைக் கற்றுத் தந்திருக்கலாம். உச்சபட்சமாக “இது கூட தெரியாதா?” என்று கூட கேட்டிருக்கலாம். [அதற்கும் இவரைக் கழுவி ஊற்றியிருப்பேன் என்பது வேறு விஷயம்] ஆனால் என்னை மட்டுமல்லாது என் வழி மூத்த பெண்கள் அனைவரின் சமையலையும் பரிகசிக்க வேண்டி அரிப்பெடுத்திருக்கிறது போலும். ஆங்! இந்த வன்மமும் இந்த ஈனப் பிறவிகளுக்கே உரித்தான குணாதிசயம். Note it down, your honor!

தானியம் இடிக்கும் போது வெளியே சிதறாமல் இருக்கவென உரலின் விளிம்பில் வைக்கப்படும் அகன்ற வாய் கொண்ட அந்தப் பாதுகாப்புப் பாத்திரத்தின் பெயர் சொல்லி அவரை அன்போடு அழைக்கும் ஆவலைக் கூட கஷ்டப்பட்டு மட்டுப்படுத்திவிட்டேன். ஞமலியின் பெண்பால் பெயரைச் சொல்லிக் கொஞ்ச வேண்டும் இருந்தது. அது ஆங்கில வார்த்தை என்பதால் அதே ஒலியில் எதுகையுடன் அமைந்த kvetch என்னும் Yiddish மொழிச் சொல்லைத் தும்முவதைப் போன்ற பாவனையுடன் சொல்லி அடுத்த வேளையும் அவருக்கு வடித்துக் கொட்டக் கிளம்பினேன். 

அந்தப் பொங்கல் பெசலிஸ்ட் அன்று மதியம் தான் ரசம் செய்வதாகக் கூறினார். தீயலையும் கூட்டையும் நான் செய்து முடித்ததும் அடுக்களையை அவர் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார். தீயலை உண்ட நளவட்ட நாயகியின் நாயகர் “அந்தக் காலத்துல என் ஆச்சி செய்வா. அவ கையால சாப்பிட்டது. அப்புறம் இப்போதான் சாப்பிடுறேன். நல்லா மணமா இருக்கு” என்றார். புன்னகை முழுவதுமாக என் முகத்தை ஆக்கிரமிக்கத் துவங்கும் முன்னரே “X தீயல் நல்லா செய்வா” என்று பாய்ந்து கொண்டு சொன்னார், தற்போது தனக்குத் தானே ரச வல்லுநராகப் பதவி உயர்வு அளித்துக் கொண்டவர். 

ரசம் சோற்றை ஒரு கவளம் வாயில் போட்டதும் அவரது கணவர், “அன்னைக்கு ஒரு நாள் நம்ம வீட்டுல ரசம் வச்சேல்ல?” என்று தொடர்ந்து ஏதோ சொல்ல வர வல்லுநர் பெருந்தகையும் “ஆமாங்க” என்று ஆர்வம் பொங்க அவர் மேலே சொல்லப் போவதை ஆசையாக எதிர்நோக்கி இருந்தார். “அது மாரியே கேவலமா இருக்கு” என்று அவர் கணவர் கூறவும் நானோ சிரிப்பை அடக்கிக் கொண்டு தயிர் எடுத்து வருவதாகக் கூறி சமையலறைக்கு நழுவினேன். 

அவரது வீட்டில் நான் சமையலில் உதவ முனைந்த போது “அவாளுக்கு நான் செஞ்சாத்தான் புடிக்கும். இல்லைன்னா ஓ ஓன்னு ஏதாவது சொல்லுவா” என்று அக்கறையோடு என்னை அடுப்பங்கரைக்குள் நுழைய விடாமல் தடுத்த காவல் தெய்வத்திற்கா இந்த நிலைமை!? ஹ்ம்ம்ம்… என்ன பண்றது? எனக்கு ஜாலியாத்தான் இருந்துச்சு. சாதாரணமாக அவரது கணவர் மீது எனக்கு கோபம் வந்திருக்கும். வாங்கிக் கட்டுவது யார் என்பதைப் பொறுத்துதான் நீதி, நியாயம் எல்லாம் போல.  

  ​​​​*********************

இந்த ‘நொட்டை சொல்லுதல்’ என்னும் பண்பாடு ஆண்களிடம் இல்லாமல் இல்லை. உணவு வேளையின் போது உண்ண அழைத்ததும் பல்வகை ஆளுமை நோயின் (Multiple Personality Disorder) விளைவாகத் தம்மைத் தாமே திருவிதாங்கூர் மகாராஜாவாக எண்ணி உண் மேசையில் வந்தமரும் சில ஆண்கள், பெண்களின் வியர்வையையும் கால் கடுக்க நின்று சமைத்த அவர்களின் உழைப்பையும் புரிந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பே இல்லை ஆதலால் அவர்களைக் கணக்கிலேயே எடுக்கவில்லை. But it doesn’t mean they don’t deserve our loathing! ஆனால் அப்படிப்பட்ட அந்தச் சிலர்கூட சமயங்களில் தம்மை மறந்து புகழ்ந்து விடுவார்கள். 

ஆனால் தன்னைப் போலவே பிரயத்தனங்கள் மேற்கொள்ளும் இன்னொரு பெண்ணின் மீது (தனக்குக் கிடைப்பது போன்ற) நிந்தனைகளைத் தயக்கமே இல்லாமல் கொட்டும் இந்தக் கிச்சன் கட்டப்பாக்களின் கரண்டிகள் வளைந்து நெளிந்து போக! “பிறரது சமையலை எக்காரணம் கொண்டும் நானும் பாராட்ட மாட்டேன். என்னைச் சார்ந்தவர் எவரும் எனது சமையலை விடுத்து மற்றவரின் சமையலை மெச்சினாலும் பொறுக்க மாட்டேன் – இதுவே என் (மட்டமான) கட்டளை; என் கட்டளையே (நாசமாய்ப் போகிற) சாசனம்” என்பதுதான் இவர்களது சமையல் குறிப்பு புத்தகத்தின் முதல் அத்தியாயம்.

“என்ன இருந்தாலும் எங்கம்மா சமையல் மாதிரி வராது” என்று ‘சமையல் சக்கரவர்த்தினிகளின்’பிள்ளைகளும் ரொம்பவே சிலாகிப்பது கூட இதனால் தான் இருக்குமோ : கர்ப்ப காலத்தில் அம்மாவின் சில உயிரணுக்கள் குழந்தையின் உடலிலும் குழந்தையின் சில உயிரணுக்கள் அம்மாவின் உடலிலும் நிரந்தரமாகத் தங்கிவிடும். எனவே அம்மாவின் விரல்களில் உள்ள நொதிகள்(enzymes) அவரது குழந்தைகளுக்கு இயற்கையாகவே சுவையானதாகத்தான் தெரியுமோ? பதின் பருவத்தில்தான் உணவு, இசை, திரைப்படங்கள், வாசிப்பு மற்றும் ஏனைய பொழுதுபோக்கு அம்சங்களில் நமக்கென ஒரு ரசனை உருவாகத் துவங்கும். அவை நமது ஆளுமையையே செதுக்கும். அப்பேற்பட்ட பருவத்தில் தனக்குக் கிடைத்த உணவின் சுவைதான் காலா காலத்திற்கும் ஆகச் சிறந்ததாகத் தெரியும் போலும்.பழக்கப்பட்ட உணவு, அவ்வளவுதான்! 

​​​​*******************************

ஒருவரது சமையலில் குற்றம் காண்பது, ஒருவர் புதிதாக ஒன்றைச் செய்து எடுத்து வரும் போது அதை ருசிக்கும் முன்னரே முசரக்கட்டையை எட்டு கோணலாகச் சுழிப்பது, அதி நுணுக்கமாக ‘உப்பு ஒரு கல்லு கூட; வத்தல் இன்னும் ரெண்டு போட்டுருக்கணும்’ போன்ற சிறு சிறு ஏற்ற இறக்கங்களைக் கூட அவ்வுணவை உட்கொள்ளத் தடுக்கும் தடைக்கல்லாகப் பாவித்து ஊதிப் பெரிதாக்குவது, ஏதேனும் பிசகு இருந்தால் உண்டு முடிக்கும் வரை அதை சொல்லிக் காண்பித்துக் கொண்டே இருப்பது –இவற்றையெல்லாம் செய்யும் எவரும் வெறுப்புக்கும் அருவருப்புக்கும் முழு தகுதியுடையவர்கள்.

It’s one’s efforts that matter என்பதே அடிப்படை நாகரிகம். “உணவு விஷயத்தில் நொரநாட்டியம் செய்யக் கூடாதுன்னு சொல்லிக் குடுத்து வளர்க்கலையா?” என்று அநாகரிகமாகக் குத்தலாக இவர்களிடம் கேட்டு வைப்பதில் தவறே இல்லை. இப்படிப்பட்டவர்களுக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டிய நிலை மட்டும் என் வாழ்வில் வந்துவிடவே கூடாது!

திருத்தம் சொல்வது வேறு. ஒவ்வொரு வேளையும் ஏதோ அதன் பிறகு வாழ்க்கையில் உண்ணவே போவதில்லை என்பதைப் போல் குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பது வேறு. எனில் ‘எதுவுமே சொல்லக் கூடாதா?’ என்றால் ‘கூடாது’ என்று முகத்திலறைந்து கூறத்தான் விருப்பம். ஆனால் இப்படிக் கூறுகிறேன் – முதலில் நிறைகளைக் கூறிவிட்டு மட்டம் தட்டாமல் மிகவும் பக்குவமாகக் குறைகளைக் கூறத் தெரிந்தால் மட்டுமே திருவாய் மலர்ந்தருளவும்! தெரியவில்லையெனில் உண்பதற்கு மட்டுமே வாயைத் திறக்கவும்!

‘Driving is my forte’ என்று சில ஆண்கள் நினைப்பதைப் போல் ‘Cooking is my forte and Kitchen is my domain’ என்பதைத் தமது தாரக மந்திரமாக வைத்திருக்கும் மண்டையில் மசாலா இல்லாத இந்த மாஃபியாக்களின் மனநிலையை எவ்வளவோ முயன்றும் என்னால் புரிந்து கொள்ளவே முடிந்ததில்லை. அடுத்தவர் சமையலைக் குறை கூறும் அடுப்பங்கரை அதிகாரிகள் தங்களது சமையலைப் போலவே அரைவேக்காடுகள் என்னும் உண்மை அவர்களுக்குக் கடைசி வரை உறைப்பதே இல்லை. பிறர் வந்து நன்றாகச் சமைத்தால் சமைத்துவிட்டுப் போகட்டுமே? அதனால் என்ன? இதிலெல்லாம் ‘என் சமஸ்தானம்’ என்று பெருமை கொள்ள என்ன இருக்கிறது? ஒருவேளைஅடுக்களை என்பது அதிகாரத்தைப் பறைசாற்றி தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடம் என நிறுவப் பார்க்கிறார்களோ? எனில் அதுவும் அற்பத்தனம்தானே!

இந்த சைக்கோக்களின் சமையலில் இவர்களது மனப்பான்மையின் நெடி தூக்கலாக இருக்கும் ஆதலால் அது சுவைமிக்கதாக இருக்க வாய்ப்பில்லை. தப்பித் தவறி நன்றாகச் சமைத்து விட்டார்கள் என்றாலும் கூட அவர் நாண பாராட்டி நன்னயம் செய்துவிடாதீர்கள். 

முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு தின்னுபவர்களைப் பார்க்கையில் அதற்கான காரணத்தை அறிய விரும்பி தட்டை உற்று நோக்கிய போதெல்லாம் உணவு மொத்தமாக இஞ்சியாக மாறிப் போயிருந்த அதிசயம் இதுவரை என் கண்களுக்கு மட்டுமே புலப்பட்டுக் கொண்டு வந்தது. இனி அவை நிஜமாகவே இஞ்சியாக மாறிப் போகட்டும்! உண்ணும் கோலாங்கூலங்களைப் பார்த்து “நீ சமைத்த உணவெல்லாம் உன்னைக் காறி உமிழக் காத்திருக்கும்!” என்று சாபமிடட்டும் !

Series Navigationஉயிர்மையின் நாடிஇணைய இயலாத இதயங்கள்