முனைவர் நா. ஹேமமாலினி , கவுரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மா. மன்னர் கல்லூரி (தன்.,) புதுக்கோட்டை
நவீனத்தோடு கூடிய ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ மூன்று வரிகளில் உலகத்தை அடக்கும் ஆற்றல் கொண்ட இக்கவிதை வடிவத்தை தமிழில் செழுமைப் படுத்தியவர்களில் கவிஞர் தங்கமூர்த்தி முக்கியமானவர். தமிழில் ஹைக்கூ என்பது குறைந்த சொற்களில் ஒரு முழுமையான வாழ்வியலை புரியவைக்கும் நுட்பமான கலை. இந்தத் துறையில் தங்கமூர்த்தி அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தனது ஹைக்கூ கவிதைகளில் அன்றாட நிகழ்வுகளை கவித்துவமாக மாற்றுகிறார். இயற்கையும் மனித உணர்வுகளையும் இணைக்கும் பாலமாக இவரது வரிகள் அமைகின்றன. ஹைக்கூவின் இலக்கணமான மூன்று வரிகள் தெளிவான சொற்கள் ஆகியவற்றை கையாண்டு வாசகனை சிந்திக்க வைப்பதே இவரது சிறப்பு. சமூக அவலங்கள் இயற்கை அழிவு மற்றும் மனிதநேயம் போன்றவை இவரது கவிதைகளில் அடிநாதமாக விளங்குகின்றன.
கூடு திரும்புதல் எளிதன்று என்பது கவிஞர் தங்க மூர்த்தி எழுதிய புகழ்பெற்ற ஒரு கவிதை நூல். இந்த தலைப்பின் கீழ் அமைந்துள்ள ஹைக்கூ கவிதைகள் மனித வாழ்வின் எதார்த்தங்களையும் இயற்கையோடு நமக்கு இருக்கும் பிணைப்பையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது கூடு திரும்புதல் என்பது வெறும் பறவை தன் இருப்பிடம் திரும்புவதை குறிப்பதல்ல. அது வெளி உலகப் போராட்டங்களுக்குப் பிறகு மனிதன் தேடும் அமைதி. தன்னிலையை அறிந்து கொள்ளும் பயணம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தங்கள் தாயகத்தை அடைய எதிர்கொள்ளும் சவால்கள் . பறவைகள் இரைத்தேடி சென்று மாலையில் கூடு திரும்புவது போல தோன்றினாலும் ஒவ்வொரு திரும்புதலும் ஒரு போராட்டமே. மனித வாழ்விலும் ஒருவன் தன் இயல்பான நிலைக்கு திரும்புவது அல்லது ஒரு பயணத்தை நிறைவு செய்வது என்பது அத்தனை எளிதானதல்ல என்பதை இத்தலைப்பு உணர்த்துகிறது. அவ்வகையில் கூடு திரும்புதல் எளிதன்று என்பது வெறும் கவிதை தொகுப்பு மட்டுமல்ல அது தேடலின் பதிவு. வாழ்வின் சிக்கல்களை மிக எளிமையாக மூன்று வரிகளில் கடந்து செல்லும் வித்தையை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
கவிஞர் தங்கமூர்த்தி
வானம்பாடி கவிதைகளில் வேர் பிடித்து நவீனத்துவத்தில் கிளைவிரித்துப் பூத்திருக்கிற கவிதை மொழியில் தேர்ந்த மரபார்ந்த எளிமையும் தெளிமையும் இயல்பாக அமைந்தவர் கவிஞர் தங்கமூர்த்தி. வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இயல்பான கவிதைகளை தருபவர், இனிய எளிய கவிதை மொழிக்குச் சொந்தக்காரர்,,அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் மனதை குளிர்விக்கும் கவிதைகளைப் படைப்பவர் எனப் போற்றப்படுபவர், கவியரங்குகளில் சுழலும் கவியரங்கம் என்ற புதுமையை தந்தவர், புதுக்கோட்டை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர், கவிஞர், கல்வியாளர், சமூகசேவகர், சொற்பொழிவாளர் என பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர், ஹைக்கூ கவிதை கட்டுரை என தொடர்ந்து எழுத்துலகில் இயங்கிக் கொண்டிருப்பவர், தமிழ்நாட்டில் நிகழும் பல்வேறு கவியரங்குகளில் கவிதைகள் வழங்கி வருபவர், ஓய்வறியாத உழைப்பாளியாக இயங்கிக் கொண்டிருப்பவர், பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர், இவரின் முதல் நூலான ஒரு ஹைக்கூ கவிதை தொகுப்பான முதலில் பூத்த ரோஜா தொடங்கி கூடு திரும்புதல் எளிதன்று என பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
கூடு திரும்புதல் எளிதன்று- தலைப்பின் ஆழம்:
பறவைகள் இறைத் தேடி வெகு தூரம் சென்றாலும் மாலையில் தன் கூடு திரும்பும். ஆனால், மனித வாழ்வில் பிழைப்புக்காகவோ அல்லது வேறு காரணங் களுக்காகவோ (சொந்த ஊர், குடும்பம்) விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது அத்தனை எளிதானதல்ல. நாம் ஒரு இடத்தை விட்டு செல்லும்போது இருந்த அதே சூழல் நாம் திரும்பி வரும்போது இருப்பதில்லை காலமாற்றத்தால் மனிதர்களும் இடங்களும் உறவுகளும் மாறி இருக்கும். இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு மீண்டும் பழைய கூட்டிற்குள் பொருந்துவது ஒரு சவாலான விஷயம் இதனை கவிஞர், “இரை தேடி
சிறகைச் சுமந்து
கூடு திரும்புதல்
அத்தனை எளிதன்று “ (கூ. தி. எ. ப. 78)
என்ற கவிதையின் வாயிலாக விளக்கியிருப்பது நோக்கத்தக்கது. மனிதன் தம் மனதிற்குள் அமைதியை தேடித் திரும்புவது (தன் நிலை அறிதல் ) எளிதான காரியமல்ல. உலகியல் மாயைகளில் சிக்கிய மனம் மீண்டும் தனது இயல்பு நிலைக்குத் திரும்புவதில் உள்ள சிக்கல்களை இக்கவிதை உணர்த்துகிறது
“இசைநயமிக்க கொசுக்கள்
பெரும்பாலும் பறக்கின்றன
காதருகே’’ (கூ.தி.எ. ப.14)
என்ற கவிதையில் கவிஞர், இயல்பாகவே கொசுக்கள் பறக்கும் போது ஒரு வித ரீங்கார சத்தத்தை எழுப்பும். அந்தச் சத்தம் நமக்கு எரிச்சலை தந்தாலும் கவிஞர் அதை இசைநயம் என்று முரண் சுவையோடு குறிப்பிடுகிறார். கொசு கடிப்பது வலியை தரும் ஒரு விஷயம். ஆனால் அது கடிக்க வருவதற்கு முன்னால் காதருகே வந்து பாடுவது போல சத்தமிடுவதை ஒரு கச்சேரி நடப்பது போல உருவகப் படுத்துகிறார்.
கவிஞர், நம் நிஜ வாழ்க்கையிலும் சிலர் நமக்கு தீங்கு செய்ய நினைப்பார்கள். ஆனால், அதைச் செய்வதற்கு முன்னால் நம்மிடம் மிகவும் இனிமையாக இசை நயத்தோடு பேசி நம்மை ஏமாற்ற முயல்வார்கள். அத்தகைய மனிதர்களை இந்த கொசுக்களுக்கு ஒப்பிடலாம்.
“சான்றளிக்கும் அதிகாரியின்
அறைக்குள் பறக்கின்றன
வெட்டுக்கிளிகள்’’ (கூ. தி. எ. ப., 14.)
என்ற கவிதையில் கவிஞர் தங்கமூர்த்தி ஊழல் எப்படி ஒரு அமைப்பை அரிக்கிறது என்பதை மிகக் கூர்மையாக விமர்சிக்கிறார். இயற்கையில் வெட்டுக்கிளிகள் என்பவை பயிர்களை அழிப்பதற்கே பெயர் பெற்றவை. அவை கூட்டமாக வந்து ஒரு விவசாயியின் ஒட்டுமொத்த உழைப்பையும் தின்று தீர்த்து விட்டு எதையும் மிச்சம் வைக்காமல் சென்று விடும். இங்கே, கவிஞர்
வெட்டுக்கிளிகள் என்பதை ஊழல் மற்றும் பேராசைக்கு ஒர் உருவமாகப் பயன்படுத்துகிறார்.
இந்த கவிதையின் களம் ஒரு சான்றளிக்கும் அதிகாரியின் அறை ஒரு சாமானியனுக்கு உண்மையை உறுதிப்படுத்தி நேர்மையான முறையில் முத்திரை இட்டு உதவ வேண்டிய ஒரு இடம் அது. ஆனால், அத்தகைய அறையிலேயே வெட்டுக்கிளிகள் இருப்பதாகக் கவிஞர் கூறுவதன் மூலம் நீதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே சாமானியனின் வாழ்வாதாரத்தை சுரண்டும் நபர்களும் முறைகளும் மலிந்து கிடக்கின்றன என்பதை இக்கவிதையில் கவிஞர் சுட்டிக்காட்டுகிறார். பறப்பது என்பது அங்கு நடக்கும் லஞ்சத்தை (கையூட்டு) குறிக்கிறது. வெட்டுக்கிளிகள் எப்படி ஒரு விவசாயியின் அறுவடையைப் பாழாக்குமோ அதேபோல் ஊழல்வாதிகளும் உதவி தேடி வரும் ஏழை மக்களின் உழைப்பை உறிஞ்சி அவர்களை நிலைகுலையச் செய்கிறார்கள். கோப்புகளும் பேனாக்களும் இருக்க வேண்டிய இடத்தில் பேராசை நிறைந்து இருப்பதை இக் ஹைக்கூ கவிதை உணர்த்துகிறது.
“கொடையாளர் பெயரை
செதுக்கினர்
மெழுகுவர்த்திகளில்” (கூ. தி. எ., ப. 26)
என்ற கவிதையில் கவிஞர் மனிதர்களின் புகழுரைக்கும் ஆசை மற்றும் அறச்செயல்களில் போலித் தனத்தையும் மிக நுட்பமாக விமர்சிக்கிறார்.
பொதுவாக கோயில்கள், பள்ளிகள் அல்லது பொது கட்டிடங்களுக்கு கொடை அளிப்பவர்கள் தங்கள் பெயரை கல்வெட்டுகளில் செதுக்கி வைப்பார்கள். அது காலம் கடந்தும் நிலைத்திருக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். ஆனால், இங்கே கவிஞர் மெழுகுவர்த்தியில் பெயர் செதுக்கப்பட்டதாக கூறுகிறார். ஒரு மெழுகுவர்த்தி என்பது இருளைப் போக்க தன்னையே உருக்கிக் கொண்டு வெளிச்சம் தரும் தியாகத்தின் குறியீடு. அந்த தியாகப் பொருளின் மீதும் தங்களைப் பற்றிய சுய விளம்பரத்திற்காக செய்யப்படும் அற்பமான கொடைப் பண்பையும், அழியக்கூடிய புகழுக்காக மனிதர்கள் படும் அவஸ்தையையும் கவிஞர் தங்கமூர்த்தி இந்த மூன்று வரிகளில் ஆழமாக பதிவு செய்துள்ளார்.
“ஆழ்குழாய் கிணற்றில்
அறுநூறு அடிக்குக் கீழிருந்து
தாத்தாவின் கண்ணீர் “(கூ. தி. எ., ப. 46)
என்ற கவிதையில் கவிஞர் தங்க மூர்த்தி வறட்சியின் கோரத்தை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறார். ஒரு விவசாயி தண்ணீருக்காக பூமியை ஆழமாக தோண்ட தோண்ட அவனுக்கு வறட்சியே மிஞ்சுகிறது. இறுதியில் 600 அடிக்கு கீழிருந்து வருவது நிலத்தடி நீர் அல்ல, வறட்சியால் அனைத்தையும் இழந்த ஒரு தாத்தாவின் கண்ணீர் என்று கவிஞர் உருவகப்படுத்துகிறார். இங்கே தாத்தா என்று சொல்லை பயன்படுத்துவதன் மூலம், அந்த நிலத்திற்கு அந்த தலைமுறைக்கும் உள்ள பந்தத்தை கவிஞர் சுட்டுகிறார். பல தலைமுறைகளாக அந்த நிலத்தில் விவசாயம் செய்த ஒரு குடும்பத்தின் மூத்தவர், தன் கண்முன்னே நிலம் சாவதைக் கண்டு கலங்குகிறார். அந்த கண்ணீர் ஒரு தனிமனிதனின் வலி மட்டும் அல்ல. அழியும் நிலையில் இருக்கும் ஒட்டுமொத்த விவசாய சமூகத்தின் கூட்டு துயரம்
ஆழ்குழாய் கிணறு என்பது இயற்கையின் கட்டுப்பாட்டை வெல்ல மனிதன் கண்டுபிடித்த ஒரு தொழில்நுட்பம். ஆனால் 600 அடி சென்றும் தண்ணீர் கிடைக்கவில்லை எனும்போது தொழில்நுட்பம் தோற்றுப் போகிறது நாம் இப்போது பூமியிலிருந்து தண்ணீரை இறக்கவில்லை மாறாக விவசாயிகளின் ரத்தத்தையும் சோகத்தையும் இறைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை இக்கவிதை உணர்த்துகிறது.
காய்ந்து போன ஒவ்வொரு ஆழ்குழாய் கிணற்றுக்கு பின்னாலும் உடைந்த கனவுகளும் நிஜமான கண்ணீரும் கலந்த ஒரு மனிதக் கதை இருக்கிறது என்பதை இக்கவிதை நமக்கு நினைவூட்டுகிறது.
“சரக்கு கப்பல்கள்
தள்ளாடுவதில்லை
தண்ணீரில்” கூ. தி. எ., ப. 116)
என்ற கவிதையில் கவிஞர் தங்க மூர்த்தி அவர்கள் ஆழமான வாழ்வியல் உண்மையை விளக்குகிறார்.
சரக்கு கப்பல்கள் டன்கணக்கான எடையை சுமந்து செல்கின்றன. அந்த அதிகப்படியான பாரம்தான் அதன் நிலைப்பு தன்மைக்கு காரணமாகிறது. பாரமில்லாத வெற்றுப் படகுகள் காற்றில் எளிதில் தள்ளாடும். ஆனால், பொறுப்புகளை சுமக்கும் கப்பல் உறுதியாக நிற்கும். அதேபோல் தான் வாழ்விலும் எவர் ஒருவர் அதிக பொறுப்புகளை சுமக்கிறாரோ அவரிடம் ஒருவித அமைதியும் நிதானமும் தானாகவே வந்துவிடும். அனுபவங்கள் மற்றும் சவால்கள் என்ற பாரத்தை சுமப்பவர்கள் வாழ்க்கையின் இக்கட்டான சூழ் நிலைகளிலும் (தண்ணீரில் ) நிலை தடுமாறிப் போவதில்லை. இந்த கவிதை ஒரு நேர்மறையான சிந்தனையை தருகிறது. நம் வாழ்வில் வரும் கஷ்டங்களையும் பொறுப்புகளையும் சுமையாகக் கருதாமல் அவை நம்மை தள்ளாட விடாமல் காக்கும் வலிமையாக கருத வேண்டும் என்பதை இக்கவிதை உணர்த்துகிறது. சுமைகளே ஒருவனை நிலை நிறுத்துகின்றன என்பதே இக்கவிதையின் சாராம்சம். பொறுப்புகள் நிறைந்த வாழ்க்கை தள்ளாட்டம் இல்லாதது என்பதை கவிஞர் தங்கமூர்த்தி மிக அழகாக சொல்லி இருக்கிறார்.
“மௌன மாளிகையின்
செங்கற்கள் உதிர்கின்றன
இரைச்சல் பூமியில்” (கூ. தி. எ., ப. 116)
என்ற கவிதையில் ஒரு சத்தமான மற்றும் குழப்பமான உலகில் மௌனம் இறந்து கொண்டிருப்பதை கவிஞர் தங்கமூர்த்தி வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.
மௌனத்தை ஒரு பிரம்மாண்டமான மாளிகைக்கு ஒப்பிடுகிறார். மௌனம் என்பது இங்கே மிகவும் மதிப்புமிக்க கம்பீரமான மற்றும் காலப்போக்கில் கவனமாக கட்டப்பட்ட ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது. இது ஒரு நபரின் உள்மன அமைதி, ஞானம் மற்றும் ஆன்மீக நிலைத் தன்மையை குறிக்கிறது. அந்த மௌனத்தின் அடித்தளமாக இருப்பவை செங்கற்கள் அவை ஒவ்வொன்றாக உதிர்வதாகக் கவிஞர் கூறுகிறார். அதாவது, வெளி உலக குழப்பங்கள் நம்மை அவ்வளவு தூரம் ஆக்கிரமித்து நம்முடைய உள்ளார்ந்த அமைதியை சிறுகச் சிறுக உடைக்கின்றன. அமைதியாகவும் மௌனமாகவும் இருக்கும் திறனை நாம் மெல்ல மெல்ல இழந்து வருகிறோம் என்பதை இக்கவிதை உணர்த்துகிறது.
“வாய் திறக்காதிருக்க
புகார்ப் பெட்டிகளுக்கு
பூட்டு” (கூ. தி. எ., ப. 117)
என்ற கவிதையில் கவிஞர் இந்த புகார்ப் பெட்டியை வாய் கொண்ட ஒரு உயிருள்ள பொருளாக சித்தரிக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாகப் பேசுவதற்காகவே புகார்ப் பெட்டி .வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால், அதற்கு பூட்டு போடுவதன் மூலம் ஒடுக்கப் பட்டவர்களின் குரலை அதிகாரிகள் மௌனமாக்குகிறார்கள். என்பதை இக்கவிதை உணர்த்துகிறது.
“அரண்மனையில்
என்றுமேமுதலிடம் தான்
வாயில் காப்போனுக்கு”(கூ. தி. எ., ப. 117)
என்ற கவிதையில்
ஒர் அரண்மனையில் அரசன் தான் மிக உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவர். ஆனால், கவிஞர் முதலிடம் என்ற வார்த்தையை வாயில் காப்போனுக்கு கொடுத்ததன் முக்கியத்துவம் என்னவென்றால் இந்த காவலன் தான் வெயில் மழை மற்றும் எதிரிகளை முதலில் எதிர்கொள்பவன் அவனது முதலிடம் என்பது ஆடம்பரமான ஒன்று அல்ல. அது இடைவிடாத விழிப்புணர்வையும் ஆபத்தையும் கொண்டது என்ற ஹைக்கூ கவிதை மூலம் சாதாரண உழைப்பாளியின் முக்கியத்துவத்தை முரண் சுவையுடன் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார்
“நேரத்தைத் தொலைத்த பயத்தில்
மௌனமாக நிற்கிறது
மணிக்கூண்டு “ கூ. தி. எ., ப. 118)
என்ற கவிதையில் கவிஞர் ஒரு இயந்திர கோளாறை ஆழ்ந்த மனித உணர்வாக மாற்றி உள்ளார். நம்மிடம் இருக்கும் விலைமதிப்பற்ற ஒன்றை ( காலத்தை) நாம் தொலைத்து விட்டால் இறுதியில் எஞ்சி இருப்பது ஒரு பயங்கரமான வேதனை நிறைந்த மவுனம் மட்டுமே என்பதை இக்கவிதை உணர்த்துகிறது
ஒரு மணிக்கூண்டு என்பது காலத்தின் அடையாளம் கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரத்தையும் கணக்கிட்டு உலகிற்கு அறிவிப்பதே அதன் ஒரே வேலை பழுதாகி நின்று இருக்கும் மணிக்கூண்டை கவிஞர் பார்க்கிறார் அது பழுதாகி விட்டது என்று சொல்வதற்கு பதிலாக நேரத்தை தொலைத்து விட்டது என்று கூறுகிறார் ஆழமான தளத்தில் இக்கவிதை மனித வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.
நம்மில் பலர் நேரத்தை வீணடித்தோம் அல்லது வாய்ப்புகளை தவற விட்டோம் நேரத்தை தொலைக்கிறோம், ஒரு கட்டத்தில் நம் வாழ்வின் பெரும்பகுதி அர்த்தமின்றி போய்விட்டதை உணரும்போது நாம் ஒருவித அதிர்ச்சியில் அல்லது வருத்தத்தில் மௌனமாகி விடுகிறோம். நின்றிருக்கும் கண்ணாடி என்பது உண்மையில் ஒரு தேங்கி போன வாழ்க்கையின் கண்ணாடி
“சகதியில் சிக்கியது
மணல் லாரி
பழி வாங்கியது ஆறு ” (கூ. தி. எ., ப.119)
என்ற கவிதையில் கவிஞர் தங்கமூர்த்தி இயற்கையைச் சுரண்டுவதால் ஏற்படும் விளைவுகளை அழுத்தமாக பதிவு செய்கிறார். ஆழமான நோக்கில் ஆற்றில் நாம் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது அது அபாயகரமான சதுப்பு நிலங்களை உருவாக்கி ஒட்டுமொத்த சூழல் அமைப்பையும் சிதைக்கிறது என்பதை இக்கவிதை எச்சரிக்கிறது. ஒரு நாள் நமது செயல்களின் விளைவுகளே சகதியில் சிக்கிய லாரியைப் போல நம்மை சிக்க வைக்கும் என்பதை இக்கவிதை உணர்த்துகிறது.
“நினைவுகளை நிறுத்திப்
பார்த்த தராசு
உன் பக்கமே சாய்கிறது” (கூ. தி.எ.ப.118)
என்ற கவிதையில் கவிஞர், தன் நினைவுகளை ஒரு தராசில் வைத்து எடை போட முயல்கிறார் தராசின் ஒரு தட்டில் மற்ற எல்லா வாழ்க்கை அனுபவங்களும் மறுத்தட்டில் அன்பிற்குரியவர்களின் நினைவுகளும் இருக்கின்றன தராசு உன் பக்கமே சாய்கிறது உலகில் உள்ள மற்ற எல்லா நினைவுகளையும் ஒன்றாக சேர்த்தாலும் நினைவுகள் மட்டுமே அதிக கனமானவை( முக்கியமானவை ) என்பதை இக்கவிதை உணர்த்துகிறது”
தராசு என்பது உண்மையைச் சொல்லும் ஒரு கருவி இந்த உருவகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தன்னால் சமநிலையில் அல்லது நடுநிலையாக இருக்க முடியாது என்பதை கவிஞர் ஒப்புக்கொள்கிறார் அவர் இதயம் இயல்பாகவே நேசிக்கும் நபர் பக்கமே சாய்கிறது அந்த நபர் தன் மனத்தில் எவ்வளவு இடத்தை ஆக்கிரமித்துள்ளார்
ஆயிரக்கணக்கான பிற நினைவுகள் இருந்தாலும் நேசிப்பவரை பற்றிய ஒரு சிறிய தருணம் அல்லது ஒரு துளி எண்ணம் அதிக கனம் கொண்டதாக இருக்கிறது உணர்வு உலகில் எண்ணிக்கையால் அளவிடப்படுவதில்லை அது ஏற்படுத்தும் தாக்கத்தின் ஆழத்தாலேயே அளவிடப்படுகிறது என்பதை இக்கவிதை சுட்டுகின்றது
தராசு ஒரு பக்கம் சாய்வது என்பது ஒருவித சரணடைதலை வலிமையான காட்சி படிவம் ஆகும் தன் எண்ணங்கள் இப்போது தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் அவை ஒரு சார்பு விசையைப் போல தன்னை இழுக்கின்றன என்பதையும் கவிஞர் இக்கவிதையில் பதிவு செய்கிறார்
இந்த மூன்று வரி கவிதை மூலம் கவிஞர் தங்கமூர்த்தி ஏக்கத்தின் தீவிரத்தைப் படம் பிடித்து காட்டுகிறார் அவர் தன் வாழ்க்கையை எவ்வளவுதான் சமநிலைப்படுத்த முயன்றாலும் அன்புக்குரியவரின் நினைவுகளே எப்போதும் வெல்கின்றன
முடிவுரை
வானம்பாடி இயக்கத்தின் கவிதை மரபையும், நவீனத்துவத்தின் தெளிவையும் இணைத்து எளிமையான மொழியில் கவிஞர் படைத்துள்ளார். கவிஞர் தங்கம் மூர்த்தியின் ஹைக்கூ கவிதைகள் ‘துளிப்பா’ எனப்படும் சுருக்கமான வடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.: ஒரு புகைப்படத்தைப் போல நிகழ்வுகளை அப்படியே கண்முன் நிறுத்துகின்றன: மரங்கள், பறவைகள், மழை என இயற்கையின் கூறுகளைக் கொண்டு மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன.:எளிய சொற்களில் சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
“கூடு திரும்புதல் எளிதன்று” என்னும் இத்தலைப்பு வெறும் பறவைகளின் வீடு திரும்புதலை மட்டும் குறிக்காமல், மனித வாழ்வின் சிக்கல்கள், போராட்டங்கள் மற்றும் அமைதி தேடி அலைவதைக் குறிப்பிடுவதாக இடம்பெற்றுள்ள
கூடு திரும்புவது ஏன் எளிதன்று? உலகம் இன்று இயந்திரமயமாகிவிட்டது. ஓயாத உழைப்பு, பொருளாதார நெருக்கடி, உறவுகளுக்கு இடையிலான இடைவெளி போன்றவை மனிதனைத் தன் மன நிம்மதி என்னும் ‘கூட்டிற்கு’த் திரும்ப விடாமல் தடுக்கின்றன. இந்தக் கவிதைத் தொகுப்பு, இழந்த அமைதியை மீண்டும் கண்டடையத் தூண்டுவதாக அமைந்துள்ளன
சான்று நூல்கள்
கூடு திரும்புதல் எளிதன்று தங்கமூர்த்தி டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், 2ம் பதிப்பு, ஜூலை 2023.
,
- மழை புராணம்: 34
- வேடிக்கையாகிவிட்ட மதக் கோட்பாடுகள்… இயந்திர புத்த பிக்கு!
- கவிஞர் தங்கம்மூர்த்தியின் கூடுதிரும்புதல் எளிதன்று ஹைக்கூ கவிதைகளில் சமுதாயப் பார்வை
- நேசத்தின் வர்ணமயம்
- தெளிவில்லா முன்னும் / தெளிந்த பின்னும்…
- தமிழக அரசியலில் கலந்து விட்ட சினிமாத்தனம்