This entry is part 6 of 6 in the series 31 மே 2026

பொதிகை கோவிந்தராஜன்

அரசியல் கட்சி என்பது அதிகாரத்தினை நிர்வகிக்க கொள்கை அடிப்படையில் மக்கள் பங்கேற்புடன் உருவாக்கப்படும் அமைப்பு. இதில் தலைவராக உருவாகிறவர், அறிவு மற்றும் செயல்திறமையால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஆளுமையாக இருக்கிறார். தமிழக அரசியலில் அறிஞர் அண்ணாவை அப்படி வளர்ந்தெழுந்த ஒரு தலைவராக நாம் பார்க்கிறோம். அண்ணாவிற்குப்பிறகு அவருக்கு இணையான கொள்கைத் துணிவும், எளிமையும், அறிவாற்றலும் கொண்ட ஒரு தலைவரை இதுவரையில் தமிழகம் சந்திக்கவில்லை. அண்ணா அதிகாரத்தில் இருந்தது குறைவான காலம்தான் என்றாலும் கூட அதிகாரம் ஒரு தலைவரை என்ன செய்யும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அந்த அதிகாரம், தன்னை கரைப்படுத்தாமல் பார்த்தும் கொண்டார்.

சினிமாத்தனம் என்பது நிஜவாழ்க்கைக்கு அந்நியமான மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தனம் மற்றும் செயற்கைத்தனம் என்றே நாம் புரிந்துகொள்கிறோம். கண்டதும் காதல், டுயட் பாடும் காதலன் காதலி, நம்பமுடியாத சண்டைக் காட்சிகள் அல்லது அளவுக்கு அதிகமான உணர்ச்சிவசப்படுதல் போன்றவை “சினிமாத்தனம்” என்று அழைக்கப்படுகின்றன. ஆக இதன் பொருள் நிஜத்தில் நடக்க வாய்ப்பில்லாத, சினிமாவில் நடப்பதுபோன்ற விசயம் என்பதே ஆகும்.

தற்போது தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் வழியாக மிகப்பெரும் மாற்றம் நடந்துவிட்டதாக ஒரு நடிகரின் புதிய கட்சியின் வெற்றி ஊதிப் பெரிதாக்கப்படுகிறது. அரசியலை அவ்வப்போது கவனிக்கும் சாமானியனும்கூட இந்த புதிய கட்சியின் வெற்றியென்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதையும் இந்த மாற்றத்தில் ஒரு சினிமாத்தனம் இருப்பதையும் எளிதில் நாம் புரிந்துகொள்ள முடியும். நமது நாட்டின் அரசியலுக்கு மேலும் சீரழிவை இது கொண்டுவருமோ என்ற அச்சத்தை நம்முள் இப்போது ஏற்படுத்தியிருக்கிறது. 

தற்போதைய அரசியலில் எந்த ஒரு கட்சிக்குள்ளும் தலைமை உருவாகும் போக்கு, அறிவு மற்றும் கொள்கை சார்ந்ததாக இல்லாமல் வாரிசு, அதிகாரம், பணம், சாதி என்ற அடிப்படையில் மாறிப்போனது. அண்ணாவிற்குப்பின்பு தமிழக அரசியலில் கொள்கை வழியில் கட்சித் தலைமை உருவாகும் செயல்முறையும் குறைந்துவிட்டது. கொள்கை வகுத்துக்கொண்டு வந்த தலைவர்களும் கூட தாங்கள் வகுத்துகொண்ட கொள்கைகளில் காலத்திற்கேற்ற மேம்பாடுகள் கொண்ட பொருத்தமான கொள்கைகளை வகுத்துக்கொள்ளாததால் தோல்வியடைந்தனர் என்பதுதான் தமிழக அரசியல் அனுபவப்பாடம்.

தமிழக அரசியலில் தலைவர்களை உருவாக்குவதில் அரசியல்துறை தோல்வியடைந்தாலும், சினிமாத்துறை தனது பங்களிப்பை தொடர்ந்து செய்துவருகிறதே எப்படி? தமிழகத்தை பொருத்த வரையில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் வளர்ச்சி துவங்கிய போதிருந்தே சினிமாவும் தனது அரசியல் கணக்கைத் துவங்கிவிடுகிறது. எம்.ஜி.ஆர், துவங்கி இன்று விஜய் வரை அது தொடர்கிறது. அது மேலும் நீண்ட காலங்களுக்கு எதிர்காலத்தில் தொடரவும் வாய்ப்பிருக்கிறது.

அரசியல் சினிமாவையும், சினிமா அரசியலையும் ஒன்றையொன்று பயன்படுத்திக்கொண்டே பயணப்பட்டுவருகிறது. சினிமாவில் உருவாக்கப்படும் காட்சி பிம்பங்களும், கருத்து உருவாக்கமும், மக்களின் உளவியலிலும் மாற்றத்தை உருவாக்குகின்றன என்பதை கண்கூடாகக் கண்டும், அனுபவித்தும்  வருகிறோம். ஒரு புராணக்கதை, மற்றும் நாவலின் பாத்திரங்கள் மக்கள் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும் சினிமா உருவாக்கும் கதாநாயக பிம்பம் மற்றும் நாயகி பிம்பம் தாக்கத்தை உருவாக்குவதை ரசிகர்களின் அபிமானங்களிலிருந்தும் கொட்டாட்டங்களிலிருந்தும், நடிகருக்குக்கூடும் கூட்டத்திலிருந்தும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

அண்ணாவிற்குப்பின்பு தமிழக அரசியலில் கொள்கைவழியில் கட்சித் தலைமை உருவாகும் செயல்முறை குறைந்துவிட்டது ஏன்? என்பது குறித்துப் பேசுவதும், அதற்கான காரணத்தை நாம் சரியாக புரிந்துகொள்வதும் இன்றைய தருணத்தின் ஒரு அரசியல் விவாதமாக நாம் முன்னெடுக்க வேண்டிய தேவையாக நம்முன் நிற்கிறது. 

25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் மக்கள் பிரச்சினை குறித்து ஒரு வார்த்தைகூட பேசாத ஒரு சினிமா நடிகரை, இரண்டு ஆண்டுகளில் உயர்அடுக்கு அதிகாரவர்க்கம் சமூக ஊடகங்களின் துணையோடு ஒரு அரசியல் தலைவராக உருமாற்ற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது பலருக்கும் வியப்பு ஏற்படுத்தும் ஒரு விசயமாக இருந்தாலும் கூட,  நாட்டின் எதிர்காலம் குறித்தும், வருங்காலத் தலைமுறையின் முன்னேற்றம் குறித்தும் அக்கறை கொண்டவர்கள் இதனை ஒரு சரியான மாற்றமாகக் கருதி மகிழவில்லை; மாறாக ஒரு சங்கடமான மனநிலையில் சகித்துக் கடந்துபோகிறார்கள். உயர்தட்டு அதிகாரப்பிரிவினரால் திட்டமிட்டு தலைவர்களும் கட்சியும் உருவாக்கப்படுகின்றன மற்றும் விலைக்கு வாங்கப்படுகின்றன என்பதுதான் நாம் தற்போது அரசியலில் விழிப்புடன் கவனிக்க வேண்டிய விசயமாக உள்ளது.

அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற உணர்வு நடிகராக பிரபலமானபிறகு ஒருவருக்கு ஏன் வருகிறது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விசயம். சமூகத்திற்கும், மக்களுக்கும் பணியாற்றவேண்டும் என்ற நேர்மையான உணர்வை நாம் சந்கேகத்திற்குள்ளாக்க விரும்பவில்லை. ஆனால் துவக்கம் முதலே அரசியலில் இறங்கி மக்கள் பணி செய்து அல்லது ஒரு கொள்கை ஈடுபாட்டோடு ஒரு அரசியல் கட்சியில் இணைந்து அதில் தனக்கான இடத்தை அடைவது என்ற நடைமுறையை வசதியாகத் தவிர்த்துவிட்டு, சினிமாவில் புகழடைந்த பிறகு அரசியலில் குதித்து நேராக முதல்வர் பதவிக்குவந்து மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று சொல்வதை நாம் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.  சினிமாத்துறையில் தனக்கு கிடைத்த புகழை அப்படியே விட்டுவிட யாரும் விரும்புவதில்லை. அந்த புகழை அரசியலில் முதலீடு செய்வதன் மூலம் தனது அடுத்தகட்ட அதிகார, அரசியல் பதவிகளுக்கு வந்து தனது எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ளவே நினைக்கிறார்கள்.

இதனோடு தொடர்புடைய மற்றொரு பிரச்சினை குறித்தும் இங்கே இணைத்துப் பேச வேண்டும். அரசியல் கட்சிகள் புதிதாக உருவாவதும், பழைய கட்சிகள், உடைவதும், குழுக்களாக பிரிவதும் தற்போதைய அரசியல் நிலைமையில் சகஜமான விசயங்களாக மாறிவிட்டன. அரசியல் கட்சிகள் உடைந்து சிதறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. உட்கட்சி ஜனநாயகம் இல்லாதிருப்பது. கட்சிக்குள் உள்ள தனிநபர்கள் ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பது. கொள்கையும், ஆளுமையும் மிக்க தலைவர்கள் உருவாவதில் சிக்கல்கள் நீடிப்பது என பிரச்சினைகள் ஏராளம். மொத்தத்தில் கொள்கை வழியில் இளைஞர்களை, மக்களை அரசியல் படுத்துவதில் அரசியல் இயக்கங்கள் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. 

இயல்பாக சமூகத்தில் உருவாகி எழுகின்ற ஜனநாயக அரசியல் விளிப்புணர்வின் தாக்கம் காரணமாக ஆளுமையான தனிநபர்களின் பங்களிப்புடன் அரசியல் கட்சிகள் உருவாவதற்கு நேரெதிரான முறையில், பிரபலமடைந்த தனிநபர்களைக் கொண்டு கூட்டம் சேர்ப்பதும், அவர்களுக்கான கொள்கையை வெளியிலிருந்து திணிப்பது என்ற முறையில் கட்சிகள் உருவாகின்றன என்பதை நாம் கூர்ந்து கவனிக்காமலே புரிந்துகொள்ளமுடியும். இதில்தான் நடிகர்கள் அரசியலுக்கு இழுக்கப்படுவது ஏன்? நடிகர் அரசியலுக்கு வர ஆசைப்படுவது ஏன்? என்ற இரண்டு கேள்விகளுக்கும் விடை உள்ளது. மக்களை கொள்கை வழியில் அரசியல்படுத்துவதில் உள்ள சிரமங்களைத் தவிர்த்து பெருங்கூட்டத்தை ஆதரவாளர்களாக திரட்ட அரசியல் கட்சிகளுக்கு  புகழடைந்த நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த தேவையை நடிகர்களும்கூட புரிந்து கொண்டுவிட்டார்கள்.

தொழில் நுட்பம் வளர்ந்த சம காலத்தில், உணவில் பாஸ்ட் புட், உடையில் ரெடிமேட், அனைத்துவகையான பொருள் உற்பத்தியிலும் ரெடிமேட் என எல்லாவற்றிலும் அவசரம் காட்டப்படுவதைப்போலவே நாட்டை ஆள்வதற்கான அரசியல் கட்சித் தலைவரும் அவசர அவசரமாக ரெடிமேடாக உருவாக்கப்படுகிறார்கள். அவ்வாறு உருவாக்கப்படுவதற்கு எந்தஒரு துறையின் பிரபல்யம், சினிமாபுகழ் என்பது பெரும் முதலீடாக பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் தனது சினிமா புகழை மிக நேர்த்தியாக சினிமாவில் முதலீடு செய்து வெற்றிபெற்றுள்ளார். பாஸ்ட் புட் உணவுவகைகள் பக்கவிளைவுகளை அதிகம் ஏற்படுத்துவதைப் போலவே, அவசரமாக உருவாக்கப்படும் ரெடிமேட் தலைவர்களால் அரசியல் ஆரோக்கியத்திற்கு கேடு மட்டுமே உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அரசியல் ஏற்கனவே கேடு கெட்டுத்தானே கிடக்கிறது என்று சொல்லும் சிலரின் மனக்குரலும் நமக்குக் கேட்கத்தான் செய்கிறது. எது எப்படியோ நாம் விழிப்புடன் இருப்போம், நடக்கவிருக்கும் அரசியல் விபத்துகளைத் தவிர்ப்போம்.

  • பொதிகை கோவிந்தராஜன்

11, பாத்திமா காம்ப்ளக்ஸ்

மதுரை ரோடு,

திருப்பத்தூர்,

 சிவகங்கை மாவட்டம்-630211

செல் : 9787627558

E.Mail: podhigai7@gmail.com

Series Navigationதெளிவில்லா முன்னும் / தெளிந்த பின்னும்…