வசந்ததீபன்
_____________________________
நேசம் எல்லா இருதயங்களிலும் பூக்காது
அன்பு எல்லா மனங்களிலும் ஊற்றெடுக்காது
ஒரு இதயம் ஒரு இதயத்துடன் தான் சங்கமிக்கும்
தோழியே உன் வார்த்தைகள்
என் இருதயத்திற்குள் பூக்கள்
என் வாழ்வின் அற்புதக் கனிகள்
உண்மை அன்பு பிதற்றும்
பொய்மைப் பிரியம்
அளந்து அளந்து பேசும்
குயில் மட்டும் தான் பாடி மகிழ்விக்கும்
கண்கள் கோடி பார்க்கும்
மனம் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்கும்
பிரியம் கொள்வது ஒரு அதிசயம்
உலகில் ஆயிரம் பறவைகள்
தோட்டத்தில் ஆயிரம் புஷ்பங்கள்
ஒரு பூ ஒரு பறவை உண்மையான நேசிப்பிற்குரியது
உன் ஆழி ( அழகு) க்குள் காலெடுத்து வைக்கிறேன்
என்னை வாரிச் சுருட்டுகிறாய்
நீச்சலிட்டுக் கரை தேடித் தத்தளிக்கிறேன்
உன் அழகு கவிதை
உன் வார்த்தை கவிதை
உன் அன்பு கவிதை
மஞ்சள் வண்ணப் பறவை
மனசுக்குள் கனவுக்கூட்டைக் கட்டுகிறது
ஒளிப் பிழம்பில் மூழ்கித் திளைக்கிறேன்
தேவதையின் கடைக்கண் திறக்கட்டும்
தேவலோக கனவுகள் பலிக்கட்டும்
தேனும் பாலும் நதியாய் பிரவகிக்கட்டும்
பொன்மஞ்சள் வண்ண மலர்
பூத்திருக்கிறது
பூமியெல்லாம் தங்கமயம்
மனதோடு பேசும்
கனவோடு உறவாடும்
நீருள் விளையாடும் உன் பேரழகு.

வசந்ததீபன்