This entry is part 5 of 6 in the series 31 மே 2026

பாலமுருகன்.லோ

கடல் அலைகளைப் பார்த்தவாறு, தன்னை மறந்து அந்த மணல் பரப்பில் அமர்ந்திருந்தார் விநாயகம். எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கையில், “சார், சுண்டல் வேணுமா? சூடா இருக்கு, வெங்காயம், மாங்காய், தேங்காய் எல்லாம் போட்டிருக்கு சார்,” என்றார் சுண்டல் விற்பவர்.

விநாயகம் குரல் கேட்டு, ஒலி வந்த திசையில் திரும்பி, “என்ன பெரியவரே?” என்றார்.

“சார், சூடான சுண்டல் இருக்கு, வேணுமா?”

“இல்லைங்க, எனக்கு இப்ப சாப்பிடணும்னு தோணல,” என்றார்.

விநாயகத்திடம் பதிலைக் கேட்டு மனச்சோர்வுடன் தன் நடையை வேறு பக்கம் திருப்ப ஆரம்பித்தவரை, விநாயகம் பார்க்க மனதில் என்னமோ தோண, “பெரியவரே நில்லுங்க,” என்றார்.

“என்ன சார்?” என்றார் அந்த முதியவர்.

“சுண்டல் எவ்வளவு?”

“பொட்டலம் பத்து ரூபாய்.”

“சரி, ஒரு பொட்டலம் கொடுங்க,” என்று அவரிடத்தில் பத்து ரூபாயை நீட்டினார் விநாயகம்.

முக மகிழ்ச்சியுடன் விநாயகத்திடமிருந்து அந்தப் பத்து ரூபாயை வாங்கித் தன் சட்டைப் பையில் போட்ட பின், மீண்டும் கேட்டார் அந்த முதியவர், “ஒண்ணு போதுமா சார்?”

“போதுங்க, நீங்க அழுத்திச் சொன்னதால நான் வாங்குறேன், இல்ல இப்ப எனக்கு சாப்பிடணும்னு தோணல.”

“நீங்க வேணும்னா பாருங்க, நான் வேறு பக்கம் போயிட்டு வர்றதுக்குள்ள நீங்க இன்னொன்னு கேட்பீங்க என்கிட்ட,” என்றார் அந்த முதியவர்.

புன்னகைக்கும் போது வாய் பகுதி நம்மை அறியாமலே அகன்று, உதடுகள் அதன் நிலையிலிருந்து விலகி லேசாகப் பற்கள் தெரியும். அத்தருணம், நெற்றி சுருங்கி, விபூதிப் பட்டை அடித்தாற்போல் மூன்று சுருக்கங்கள் தென்படும். விநாயகத்தின் முகத்தில் மெல்லிய சிரிப்பலை தோன்றி மறைந்தது.

‘எப்படி காக்கை தன் அலகால் கொத்தித் தன் உணவை உண்ணுமோ, அப்படி…’ சுண்டலைத் தன் வாயினுள் ஒவ்வொன்றாகப் போட்டு மெல்ல ஆரம்பித்த விநாயகத்திற்கு, மீண்டும் எண்ண அலைகள் அந்தக் கடல் அலையைப் போலத் தன் பக்கம் வருவதும் போவதுமாக இருந்தது. அதில் குறிப்பாக, தன் மனைவி லட்சுமி சொன்னதுதான் விநாயகத்தை அதிகம் யோசிக்க வைத்திருந்தது. அவளது ஒவ்வொரு வார்த்தையுமே நிதர்சனம்தான். ‘அவளைச் சொல்லி என்ன பண்ண?’ அவளுக்கு, அவளுடைய பெண்ணின் திருமணம் சரியான நேரத்தில் நடந்தேற வேண்டும் என்ற ஆதங்கத்தில் அத்தனை கேள்வியையும் கேட்டாள்.

நாமதான’ப்பா, நம்ம பொண்ணுக்கு என்ன வேண்டுமோ, எது நல்லதோ, அதை காலம் கடத்தாமல் சரியான நேரத்தில் செய்ய வேண்டும். ஆனால் குடும்ப சூழல் ஒன்றும் சரியாக இல்லையே! பெரியவள் மலர் கல்யாணத்துக்குக் காத்திருக்கா, அவளை அடுத்து இருப்பவன் நவீன், அவன் கல்லூரியில் படிக்கிறான். இருவருமே தங்களது நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்.

குறிப்பாக, முதலில் மலரின் கல்யாணம் முடிய வேண்டும். அடுத்தது, இன்னும் இரண்டு வருஷம் நவீன் படிப்பதற்குப் பணம் வேண்டும். இந்த இருபது வருஷமா வேலை செஞ்சு என்ன சேர்த்து வைத்தோமென்று பார்த்தால், தலைச் சுற்றி கீழே விழுவது போல் தோன்றுகிறது. ‘என்ன சம்பாதிச்சு என்ன புரோஜனம், கையில் பணம் நிக்கலையே! ஏதாவது ஒரு செலவு வருது.’

லட்சுமி கேட்டதுல ஒரு விதத்துல நியாயம் தான் போல!

“ஏங்க, கையில காசு வச்சுக்காம, வாங்குற சம்பளத்துல பாதிக்கும் மேல காப்பீட்டுலயும், லோன்லயும் போட்டா குடும்பத்தை எப்படி நடத்துறது? மலர் இப்ப கல்யாணத்துக்குக் காத்திருக்கா. இப்படியே வர்ற சம்பளத்தையெல்லாம் லோனுக்கே போட்டுட்டா, எப்படி அவளுடைய கல்யாணத்தைப் பண்றது?”

குடும்பச் சுமையில் மாட்டிக்கொண்டு தத்தளித்த விநாயகத்திற்கு ஒரு தீர்வு வேண்டித்தான் தன்னால் ஆன மட்டும் போராடிப் பார்க்கிறார். ஆனால், பொதி சுமப்பவனின் முதுகில் எவ்வளவுதான் பாரத்தை ஏற்ற முடியும்? அளவுக்கு மீறிய பாரத்தை அவனது முதுகில் ஏற்றும்போது, அவனால் சுமக்க முடியாமல் திண்டாடுகிறான். அந்த நிலையில்தான் விநாயகமும். இன்னும் பத்து ஆண்டுகள் பணி உள்ளது. ஆனால் சம்பளம் என்னவோ சொற்பச் சம்பளம்.

விநாயகத்தின் மனதினில் அடிக்கடி எண்ணுவதுண்டு. ‘இவ்வளவு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் வச்சு என்ன பிரயோஜனம்? போதுமான சம்பள உயர்வு கிடைப்பதில்லையே.’ மேலதிகாரியிடம் கேட்டால், அவரு பெரிய விளக்கம் சொல்லுறாரு.

உங்களுக்குப் புரியுதா இல்லையா! உங்க வேலையைச் செய்ய உங்களை விடத் தகுதி வாய்ந்த ஆட்கள், நல்லா டிகிரி முடிச்ச ஆட்களெல்லாம் லைன்ல காத்துக்கிட்டிருக்காங்க. நீங்க என்னடான்னா இன்னும் பழைய ஆளா இருக்கீங்களே. அவங்க மாதிரி அவங்களுக்கு ஈடுகொடுத்து உங்களால் ஓட முடியுமா? சொல்லுங்க,” என்றார்.

விநாயகத்தால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. போர்க் களத்தில் தன் ஆயுதங்களையெல்லாம் இழந்து நிராயுதபாணியாக நிற்கும் போர் வீரனின் மனநிலையில்தான், தன் மேலதிகாரிக்கு முன் விநாயகம் நின்றிருந்தார். ஆனால், அவர் தன் மேலதிகாரியிடம், “சார், ஆனா என்னைப்போல் உள்ளவன்தான் புதுசா வர்ற பசங்களையும் சரி, பொண்ணுங்களையும் சரி, டிரெய்னிங் கொடுத்து, வர்றவங்களுக்கு கிளாஸ் எடுத்து, சொல்லிக்கொடுத்து, நிறுவனத்தோட நெளிவு சுளிவு எல்லாத்தையும் கத்துத் தரோம்,” என்றார்.

“ஆமாம் விநாயகம், அது உங்க கடமை. உங்களை மாதிரி ஆட்கள் தானே புதிதாக வருபவர்களுக்குக் கத்துக்கொடுக்கணும்.”

“ஒண்ணு தெரியுமா உங்களுக்கு?”

“என்ன சார்?” என்றார் விநாயகம்.

“இப்ப புரியும்படியே சொல்றேன் விநாயகம், உங்க சம்பளத்துல பாதி கொடுத்தா போதும், ஒரு ஆள் இல்லை, ரெண்டு பேர் வருவாங்க. அந்த மாதிரி ஆயிப்போச்சு நிலைமை. ‘மூலை முடுக்கெல்லாம் இன்ஜினியரிங் கல்லூரி ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு ஆண்டு டிகிரி முடிச்சவங்க எவ்வளவு பேர் வெளியில் வராங்க தெரியுமா? சுமார் பதினைந்து லட்சம் நபர்கள்.’ இருக்கிற வேலையைத் தக்க வைத்துக்கொள்வதே பெரிய சிரமமா இருக்கு. இதுல வந்து எனக்கு இன்கிரிமென்ட் கொடுக்கலைன்னு மேலதிகாரிகிட்ட வாக்குவாதம் செஞ்சா எப்படி விநாயகம்?”

இத்தனையும் விநாயகத்தின் எண்ணச் சிதறலாக அவரது கண்முன் வந்து போனது. விநாயகத்தின் அமைதிக்கும் விரக்திக்கும் இதுவே காரணம். தற்போது கடற்கரையில் உட்கார்ந்துகொண்டு அந்த நினைவுகளையே அசைப்போட்டுக் கொண்டிருந்த விநாயகத்திடம் மீண்டும் ஒரு குரல் ஒலிக்க, தனது சிந்தனையிலிருந்து வெளியே வந்து யார் என்று பார்த்தார்.

அதே பெரியவர்தான், கொஞ்ச நேரம் முன்னர் சுண்டல் விற்றுவிட்டுப் போனாரே**,** அவரே.

“என்ன பெரியவரே, என்ன இந்தப் பக்கம் மறுபடியும்?” என்று கேள்வியை எழுப்பினார் விநாயகம்.

“ஒண்ணுமில்ல சார், மறுபடியும் உங்களுக்கு வேணுமானு கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்,” என்று தழுதழுத்த குரலில் தனது பதிலைச் சொன்னார்.

“பெரியவரே, ஏன் இந்த வயசுல சுண்டல் விற்கிறீங்க? வீட்ல அக்கடான்னு உட்காரலாமில்ல!” என்றார் விநாயகம்.

எல்லாம் இந்த பாழாப்போன வயித்துக்கோசரமும், பெத்தப் பிள்ளைங்களுக்காவும் ஓட வேண்டியதா இருக்கு, என்ன பண்ணச் சொல்றீங்க. வேளாவேளைக்குப் பசிக்குது. பசியை அடக்கணும்னா பணம் தேவை. அதுக்கு ஒரு வேலை அவசியம். அதான் தெரிஞ்ச வேலையைச் செய்யுறேன். எப்படியோ மூணு பொண்ணுப் புள்ளைங்கள்ல ரெண்டு பேரைக் கரை சேர்த்துட்டேன். இன்னும் ஒண்ணு எங்களோட ஒட்டிக்கிட்டு இருக்கு. அதையும் எப்படியாவது ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுத்தா, கொஞ்சம் நிம்மதியா வீட்டோட உட்கார்ந்திடலாம். வீட்ல என்னால என்ன முடியுமோ அதைச் செஞ்சுகிட்டு காலத்தைத் தள்ளலாம். ஆனா இப்ப இன்னும் எங்களுக்கு ஒரு நல்ல வழியை ஆண்டவன் காட்டல. அதான் இப்படித் தினம் தினம் ஓடிக்கிட்டே இருக்கிறேன்,” என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட விநாயகத்திற்கு மண்டையில் ஓங்கி அடித்தது போல இருந்தது. ‘இந்த வயதான காலத்துலயும் மனசுல உத்வேகத்தோட தளறாம தன் பிள்ளைகளுக்கு ஒசரம் ஒரு பெரியவர் பாடு படும் போது… நமக்கு அப்படி என்ன வயசு ஆச்சு? இன்னும் அறுபது தொடல; முழுசா பத்து வருஷம் இருக்கு ரிடையர்மெண்ட் ஆகறதுக்கு. பிறகு ஏன் தேவையில்லாம மனச போட்டு குழப்பிட்டு, தானும் குழம்பி, மற்றவர்களையும் குழம்பும் படி செய்யறது சரியா?’ என்று ஒரு பக்கம் யோசிக்கத் தொடங்கினார்.

‘நம்மக்கிட்ட என்ன இல்லை? இருக்க வீடு இல்லையா? அல்லது உடுத்த ஒழுங்கான துணிமணி இல்லையா? கடவுள் நம்மளை, ஒரு நல்ல நிலைமையிலதான் வச்சிருக்காரு. முதலில் நாம அந்த கடவுளுக்கு நன்றியைத் தெரிவிக்கணும். ஏதோ இந்த அளவுக்கு நம்மை வச்சிருக்காரே என்று. நம்மோட வேலையை ஒழுங்கா செஞ்சாலே போதும், பலனை எதிர்பார்க்காம. இன்னும் ஒரு பத்து வருஷம் அப்படியே ஓடிட்டோம்னா, நம்ம பெத்த இரண்டு பேரும் நல்ல நிலைமைக்கு வந்துடுவாங்க. அப்புறம், ‘என்ன, கடைசி காலத்துல பிள்ளைங்க கஞ்சி ஊத்த மாட்டாங்களா!’ என்று சிந்தித்தார் விநாயகம்.

இனி ஆபீஸ்ல மேலதிகாரி என்ன சொன்னாலும் சரி என்று செஞ்சுட்டா போச்சு. வேண்டாத விஷயத்தையெல்லாம் இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட வேண்டியதுதான். எப்படியாவது வேலையைத் தக்க வச்சுக்கணும்.

யாருக்காகப் போராடுறோம்? ‘நம்ம பெத்த பிள்ளைங்க கோசரம்தானே.’ பிறகு என்ன வீண் வீராப்பு, வெட்டி ஜம்பமெல்லாம்? “இருக்கிற வரைக்கும் இருக்கிற இடம் தெரியாத மாதிரி இறுந்துட்டுப் போயிடணும்”னு ஒரு சினிமாவுல சொன்ன டயலாக்தான் ஞாபகம் வந்தது.

விநாயகம், உத்வேகத்துடன் தெளிந்த மனநிலையில் எழுந்து, தன் வீட்டை நோக்கிப் பயணிக்க முற்பட்டார். ஒரே எண்ணம்தான்—இனி லட்சுமி மட்டுமல்ல, நம் ஆபீஸ் மேலதிகாரி தேவையில்லாமல் நம்மகிட்ட என்ன சொன்னாலும் வச்சாலும், அதை மனசுக்குள்ள போட்டுக்கறதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அவர்.

-பாலமுருகன்.லோ

Series Navigationநேசத்தின் வர்ணமயம்தமிழக அரசியலில் கலந்து விட்ட சினிமாத்தனம்