என் பெயர் ஃபுர்கான். நான் பிறந்தது முதல் இன்று வரை புக்கிட்மேரா பகுதியில்தான் வாழ்கிறேன். தொடக்கப்பள்ளியில் தொடங்கி பட்டயக் கல்வி முடித்து, திருமணமாகி, இரண்டு வயது மகனுடன் அதே வீட்டில்தான் இருக்கிறேன். என் அத்தா ஒரு சின்ன கடையை நடத்திவருகிறார். எனக்கு ஞாபகமிருக்கிறது. நான் தொடக்கநிலை 1 ல் பள்ளிக்கு செல்கிறபோது, என் மேசையில் 2 வெள்ளி இருக்கும். எடுத்துக் கொள்வேன். தொடக்கநிலை 6ல் அது 5 வெள்ளியாக மாறியது. பிறகு பட்டயக் கல்வி தொடங்கும்போது அது 10 வெள்ளியானது. அந்தக் காசை வைக்க அத்தா மறந்ததே இல்லை. எந்த வேலையும் என்னிடம் சொன்னதேயில்லை. நான் என்ன படிக்கிறேன் என்பது கூட அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இரவுத் தொழுகை முடித்து 9 மணிவாக்கில்தான் அத்தா சாப்பிடுவார். எப்போதாவது அவரோடு நானும் சாப்பிட்டிருக்கிறேன். அப்போதுகூட என்னிடம் எதுவும் கேட்டதில்லை. அத்தாவுக்கு உரக்கப் பேசத் தெரியாது. சாப்பிடும்போது அத்தா ஏதாவது சொல்வார். அம்மா சிரிப்பது எனக்குக் கேட்கும். அத்தா சிரிக்கும் சப்தமும் கேட்கும். அத்தாவுக்குச் சிரிக்கத் தெரியும், சிரிக்கவைக்கவும் தெரியும் என்று அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன்.
அத்தா அந்தக் கடையை எப்படி நடத்துகிறார் என்று யோசித்திருக்கிறேன். எனக்குத் தோன்றும் எதுவுமே உண்மையல்ல என்றும் தெரிந்திருந்தேன். அதுபற்றி அத்தாவிடம் நான் கேட்டதே இல்லை. என் உறவுக்காரர் தங்கையா என்பவர்தான் அத்தாவுக்குத் துணையாக இருக்கிறார். நாணயத்தில், நடப்பில், பழக்கத்தில் தங்கமானவர் என்பதால்தான் அவர் பெயர் தங்கையா என்று அத்தா சொன்னதாக அம்மா சொல்லியிருக்கிறார்.
எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். நாங்கள் ஒன்றாகத்தான் பள்ளிக்குப் போவோம். உயர்நிலைக்கு மேல் அவர் படிக்கவில்லை. என் சொந்த ஊர் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டிணம். நாகப்பட்டிணத்தில் அத்தாவின் அத்தா, என் ஐயா கட்டிய பூர்வீக வீடு ஒன்று உண்டு. கொஞ்சகாலமாக அது பூட்டியே கிடந்தது. அதற்காகவே என் மாமா மகனுக்கு அக்காவைக் கட்டிவைத்து அந்தப் பூர்வீக வீட்டிலேயே அக்கா இருக்க ஏற்பாடுகள் செய்து, இப்போது அக்கா அந்த வீட்டில்தான் இருக்கிறார்.
அத்தா ஒரு தடவை சொன்னார். எப்போதாவது இப்படிச் சில தகவல்களைச் சொல்வதுண்டு. வீடுகட்ட ஆரம்பிக்கும்போது என் அத்தாவுக்கு 10 வயதாம். அவரும் செங்கல், மண் தூக்கியிருக்கிறாராம். ஒரு தடவை செங்கல் அடுக்கைப் பிரித்தபோது, ஒரு பெரிய பாம்பு வெளிப்பட்டு ஓடியதாம். அதை அடிக்க அத்தா கம்போடு ஓடினாராம். ஐயா கம்பைப் பறித்துவிட்டுச் சொன்னாராம். ‘எந்த உயிரையும் கொல்லாதே. அதை நாம் தொந்தரவு செய்தால்தான் நம்மை அது தொந்தரவு செய்யும்’ என் அத்தாவுக்கு ஒரு தம்பி இருக்கிறார். நான் சின்னத்தா என்று கூப்பிடுவேன். அவர் அருமையாகப் பாடுவார். சீராப்புராணப் பாடல்களைத் திருமண வீடுகளில் பாடுவதற்காக அவர் அழைக்கப்படுவார். பள்ளிவாசலில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நிச்சயமாக அவருடைய கச்சேரி இருக்கும். அவர் மாதிரியே நானும் பாடுவேன். நாகூர் அனிபா பாடல்களை அச்சு அசலாகப் பாடுவேன். எப்போதாவது அத்தா என்னைப் பாடச் சொல்வார். நான் பாடியிருக்கிறேன்.
‘இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையெனன்று சொல்லுவதில்லை’
அத்தாவுக்கு கண் கலங்கும். கண்ணீரை மறைக்க சிரம்ப்படுவார். எனக்கு ஞாபகமிருக்கிறது. பட்டயக்கல்வி படிக்கும்போது முதல் தவணை 800 வெள்ளி செலுத்தவேண்டி யிருந்தது. அத்தாவிடம் சொன்னேன். அடுத்த நாள் காலை எனக்கான 10 வெள்ளியோடு இன்னொரு காகித உரையில் 800 வெள்ளி இருந்தது. எடுத்துப் பார்த்தேன். ஒவ்வொரு 50 வெள்ளியிலும் அத்தாவின் முகம் தெரிந்தது.
இந்தக் கடையை வைத்துத்தான் அத்தா வீடு வாங்கியிருக்கிறார். என்னைப் படிக்க வைத்திருக்கிறார். எனக்கும் அக்காவுக்கும் கண்ணியமான முறையில் திருமணம் செய்து வைத்திருக்கிறார். இவரால் எப்படி முடிகிறது? யாரிடமும் அவர் கடன் கேட்டதில்லை. அம்மா சொல்லியிருக்கிறார். அவரின் எந்தத் தேவைக்குக் அவர் எந்தச் சிரமும் பட்டதில்லை.
அத்தா தூங்கும்போது கவனித்திருக்கிறேன். உதடுகள் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். ஏதோ குர்ஆன் வசனத்தைத்தான் அவர் முணுமுணுக்கிறார். அவர் உண்மையில் தூங்குகிறாரா? இப்படிப் பதில் தெரியாத கேள்விகள் எத்தனையோ.
எனக்கு எப்போதாவது காய்ச்சல் வந்தால். ஒரு குவளை தண்ணீரைக் கையில் வைத்துக்கொண்டு, அதில் குர்ஆன் வசனங்களை ஓதி, ஊதி குடிக்கச் சொல்வார். அடுத்தநாளே நான் வழக்க நிலைக்குத் திரும்பிவிடுவேன். தொழுகை நேரத்தில் அத்தா கடையிலேயேதான் தொழுவார். மாலை 7.30க்கு மஹரிப் தொழுகைக்குப் பின் சிலர் குவளைத் தண்ணீருடன் கடைக்கு முன் வரிசையாக நிற்பதைப் பார்த்திருக்கிறேன். அத்தா தண்ணீரை வாங்கி, ஓதி, ஊதிக் கொடுப்பார். ஒரு நாள் கடைக்குச் சென்றபோது, நாகூர் அனிபா இருந்தார். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அவருக்கு முன் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடினேன். என்னை அப்படியே அணைத்துக் கொண்டார். பிறகு சொன்னார். ‘இவர் வயதில் எனக்கு இப்படிப் பாடத்தெரிந்த தில்லை. என் வயதில் இவர் மிகச் சிறப்பாகப் பாடுவார்.’ அத்தா மகிழ்ச்சி பொங்க ‘ஆமின்’ என்றார்.
அம்மாவுக்கு ரொம்பகாலமாகவே ஆஸ்த்மா இருக்கிறது. நாகப்பட்டிணத்தில் அவ்வளவு பெரிய வீட்டில் அக்கா மட்டும்தான் மச்சானோடு இருக்கிறார். வீட்டைச்சுற்றி ஏராள மரங்கள், பூச்செடிகள். தொலைபேசி போதும். எல்லாச் சாமான்களும் வீட்டுக்கு வந்துவிடும். வேலைக்கு ஏகப்பட்ட ஆட்கள் வருவார்கள். எங்களின் குடும்ப மருத்துவர் வீட்டுக்குப் பக்கத்திலேயேதான் இருக்கிறார். நெருங்கிய உறவினர். எல்லாவற்றையும் அனுசரித்து அத்தா அம்மாவை சில மாதம் ஊரில் இருக்க அனுப்பிவைத்தார். அக்காவுக்கும் துணையாக இருப்பார் எனறும் விரும்பினார். அந்த வீட்டுச் சூழ்நிலை அஸ்துமாவுக்கு நல்லது என்று அத்தா நம்பினார். அம்மா ஊருக்குப் போய்விட்டு இரண்டு மாதத்தில் வரவேண்டியது. அக்கா அப்போது கர்ப்பமாக இருந்ததால், அம்மா அங்கேயே தங்கவேண்டியதாகிவிட்டது. அத்தாவுக்கு அம்மா இல்லாததால் எந்தச் சிரமமும் இல்லை. அவர் எப்போதும்போல்தான் இருக்கிறார்.
ஒரு நாள்.
குடும்ப மருத்துவரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது. ‘அம்மாவுக்கு மாரடைப்பாம். இப்போது பரவாயில்லையாம். என்றாலும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டுமாம்’ அதிர்ந்தேன். அத்தாவிடம் சொன்னேன். அத்தா அதிர்ச்சியடையவில்லை. அத்தாவுக்கு அக்கா ஏற்கனவே சொல்லியிருக்க வேண்டும். எந்த உணர்ச்சிப் பெருக்கையும் நான் காணவில்லை. ஒரு கவலையும் முகத்தில் தெரியவில்லை. நான்தான் சொன்னேன். ‘நீங்கள் உடனே ஊருக்குப் புறப்படுங்கள். நான் பிறகு வருகிறேன்’ அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. அன்று இரவு 10 மணிக்கு அத்தாவை சென்னைக்கு அனுப்பிவைத்துவிட்டேன். எனக்கு ஊரில் வழக்கமாக வாகனமோட்டும் கனியிடம் சொல்லி சென்னை விமான நிலையத்துக்கு வரச்சொல்லிவிட்டேன். அத்தா நல்லபடியாக நாகப்பட்டிணம் சேர்ந்து, அம்மாவோடு இருப்பதாக அடுத்த நாள் தகவல் வந்தது.
வழக்கம்போல் நான் அலுவலகத்துக்குப் புறப்படும்போது, தொலைபேசி அழைத்தது. அது சிங்கப்பூர் எண்தான். யார் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எடுத்தேன். ஒரு பெண்தான் பேசினார். ‘நீ ஃபுர்கான் தானே. உன்னை எனக்கு நன்றாகத் தெரியும். உன் அம்மாவுக்கு அங்கே மாரடைப்பு. அத்தாவை அனுப்பிவிட்டு நீ என்ன செய்கிறாய். நீயெல்லாம் ஒரு மகனா? உடனே புறப்படு’ ‘அம்மா நீங்க யாருன்னு………’ என்று நான் கேட்கத் தொடங்கியது அந்தப் பெண்ணுக்குக் கேட்டிருக்காது. தொலம்பேசி துண்டிக்கப்பட்டுவிட்டது. மண்டையைக் குடைந்து யோசிக்கிறேன். அந்தக் குரலுக்குரிய பெண்ணை என்னால் கண்டுகொள்ள முடியவில்லை. அப்படி ஒரு குரலை அன்றுவரை நான் கேட்டதும் இல்லை. ஆனாலும் அந்தப் பெண் பேசியது நியாயம்தானே. மனைவியிடம் சொன்னேன். உடனே என்னை நாகப்பட்டிணம் புறப்படச் சொன்னார்.
அன்று மதியமே புறப்பட்டேன். கனி சென்னை விமான நிலையத்துக்கு வந்துவிட்டார். சென்னையிலிருந்து நாகப்பட்டிணம் போக 8 மணி நேரம் ஆகும். அப்போது திருச்சி விமான நிலையம் இல்லை. நான் நாகப்பட்டிணம் சேர்ந்தேன். வீட்டில் எல்லாம் சுமுகமாக இருக்கிறது. அம்மா கட்டிலில் கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறார். சுற்றி உறவுக்காரர்கள். அத்தா சற்று தூரத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அத்தாவோடு மச்சானும் இருக்கிறார். அக்கா காப்பிபோட்டு எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அம்மாவும் வாங்கி கையில் வைத்திருக்கிறார். மிகச் சாதாரணமான, சுமுகமான, மனதுக்கு மகிழ்ச்சியான காட்சி. அந்த மருத்துவர் சொன்னது உண்மைதானா என்றே நம்பமுடியவில்லை. என்னைப் பார்த்ததும் அத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் கரங்களைப் பற்றி கண்களில் ஒற்றி ‘சலாம்’ சொன்னேன். பிறகு எல்லாரும் வழிவிட அம்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்தேன். அம்மா தன் இரு கரங்களையும் என் உச்சந்தலையில் வைத்து, அப்படியே என் கன்னங்கள் வழியாகச் சரித்து, கன்னத்தில் முத்தமிட்டு, கைகளைப் பற்றி கண்களில் ஒத்திக்கொண்டு ‘சலாம்’ சொன்னார். ‘அலைகும் வஸ்ஸலாம்’ கொஞ்ச நேரம் அமைதி. பிறகு அக்கா ஊர்க்கதைகளைக் கேட்க நானும் பேச ஆரம்பித்து விட்டேன். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நான் பாடாமல் இருக்க முடியாது. எல்லாரும் பாடச் சொன்னார்கள்
‘ஃபாத்திமா வாழ்ந்த கதை உனக்குத் தெரியுமா?’ பாடினேன். கூடம் அசைவற்றது. பாடிமுடித்தேன். மீண்டும் கலகலப்பு, சிரிப்பு
என் அலுவலகம் வித்தியாசமானது. இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தால், என்னுடைய வேலைகளைச் செய்ய நான்தான் வேறு ஒருவரை ஏற்பாடு செய்யவேண்டும். அப்படி ஏற்பாடு செய்துவிட்டுத்தான் வந்தேன். நான் இரண்டு நாளில் சிங்கப்பூர் செல்ல எந்தப் பிரச்சினையும் இருக்காது என்ற மகிழ்ச்சியும் எனக்கு இருந்தது. இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு நான் சென்னைக்குப் புறப்பட்டேன். அன்று இரவு 11.30 எனக்கு சிங்கப்பூர் விமானம். 8 மணி. விமானநிலையத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். தொலைபேசி அழைத்தது. எடுத்தேன். குடும்ப மருத்துவர்தான் அழைக்கிறார். ‘எங்கிருக்கிறீர்கள்? உடனே திரும்புங்கள்.அம்மாவுக்கு இரண்டாவது மாரடைப்பு. இரண்டு மணிநேரம்தான் உயிரோடிருப்பார்கள்’ கடைசி வார்த்தைகள் அறுபட்டு அறுபட்டு காதில் விழுந்தன. கனியிடம் உடனே நாகப்பட்டிணம் திரும்பச் சொன்னேன். விரைகிறேன். மருத்துவர் 2 மணிநேரம் என்று ஆயுளை எழுதிவிட்டார். நான் போய்ச் சேரவே 7 மணிநேரமாகும். வாகனம் விரைகிறது. என் அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. நல்ல நிலையில் நான் அம்மாவைப் பார்க்கவேண்டும். திடீரென்று எனக்குள் ஏதோ ஓர் உணர்சசிப் பெருக்கில் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று உச்சதொனியில் கத்திவிட்டேன். கனி அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தார். ஒன்றுமில்லை என்று சைகை காட்டி, வாகனத்தை விரைவாக ஓட்டச் சொன்னேன். பாட்டைத் தொடர்ந்து பாடுகிறேன். அவ்வப்போது என் குரல் உச்சத்தைத் தொடுகிறது. எனக்கு என்ன ஆனது? ‘இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன். ‘ அடுத்த வரி மறந்துவிட்டது. அந்த வரியை நானே கட்டினேன். ‘துயரம் ஏதும் நடவாமல் காத்து நிற்பவன்’ . வாகனம் விரைகிறது. வீட்டை நெருங்கிவிட்டேன். வீட்டுக்கு முன் பெருங்கூட்டம் இல்லாதது ஆறுதலாக இருந்தது. ‘அம்மா நன்றாகத்தான் இருக்கவேண்டும்’
வீட்டுக்குள் நுழைந்தேன். கட்டிலில் அம்மா இப்போது படுத்திருந்தார். அத்தா அருகிலேயே அமர்ந்திருந்தார். அக்கா கால்களை நீவியபடி கால்மாட்டில் அமர்ந்திருந்தார். நான் குனிந்து அம்மாவின் நெற்றியில் கைவைத்தபோது, அம்மா கண் விழித்து என்னை ஏற இறங்கப் பார்த்தார். ஒரு கையை லேசாக அசைத்தார். அந்தக் கையை எடுத்து என் கன்னத்தில் பரப்பிக் கொண்டேன். லேசாகச் சிரிப்பதுபோல் மேல்உதடு வலப்பக்கம் லேசாக இழுத்தது. பிறகுதான் தெரிந்தது. அது கடைசி அசைவு என்று. அம்மா வஃபாத்தாகிவிட்டார். என் அம்மா முடிந்துவிட்டார். என் அம்மா முடிந்துவிட்டார். என் கண் முன்னே நிகழவேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பெண் குரல் உடனே ஊருக்குப் போ என்று விரட்டியதோ? எல்லாம் முடிந்துவிட்டது. ஏகப்பட்ட கூட்டம் வருவதும் போவதுமாய் இருந்தது.
எல்லாரும் சேர்ந்து 7ஆம் நாள் ஃபாத்திஹாவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அதை முடித்துவிட்டு நான் சிங்கப்பூர் செல்லலாம் என்று எண்ணியிருந்தேன். 7 ஆம் நாள் ஃபாத்திஹாவும் முடிந்தது. அன்று மாலை வீடு நிசப்தமாக இருந்தது. எல்லாரும் போய்விட்டார்கள். அக்கா அடுப்படியில் காப்பி போடுகிறார்.
அத்தா ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். நான் அத்தாவைப் பார்த்தேன். அருகில் அழைத்தார். அவர் கரங்களைக் கண்களில் ஒற்றிக்கொண்டு வெடித்து அழுதேன். அத்தா அமைதியாக நெற்றியில் கைவைத்து என்னை அருகில் அமரச் சொன்னார். என்னிடம் எதையுமே கேட்காதவர், பேசத் தொடங்கினார்.
‘மகனே! இந்த வீடு என் அத்தா கட்டியது. எங்கு தட்டினாலும் அத்தாவின் பெயரே கேட்கிறது. நான் இங்கேயே இருந்துவிடுகிறேன். நீங்கள் சிங்கப்பூர் செல்லுங்கள். கடையை வாடகைக்கு விட்டுவிடாதீர்கள். கைமாற்றி விட்டுவிடாதீர்கள். நீங்களே நடத்துங்கள். நீங்களே நடத்துங்கள்.’
என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். நான் யோசித்தேன். அந்தக் கடைபற்றி எனக்கு எதுவுமே தெரியாதே. எப்படி நடத்துவேன்? திரும்பத் திரும்ப யோசித்தேன். எந்த முடிவும் என்னால் எடுக்கமுடியவில்லை. சிங்கப்பூர் புறப்பட்டுவிட்டேன். இதோ! விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன். ‘வாடகைக்கு விடாதீர்கள். கைமாற்றி விடாதீர்கள். நீங்களே நடத்துங்கள்’ அத்தா அருகிலிருந்து சொல்வதுபோல் செவிகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. முடிவு செய்தேன். சிங்கை வந்து சேர்ந்தேன். அடுத்தநாள் கடையில் கல்லாவில் அமர்ந்தேன். கடையை தங்கையா வக்க்கம்போல் நடத்திக் கொண்டிருக்கிறார். காசை அவர் வாங்குவதற்குப் பதிலாக இப்போது நான் வாங்குகிறேன். அவ்வளவுதான். வேலையில் இருந்து நின்றுகொள்வதாக கடிதம் அனுப்பிவிட்டேன். மனைவியும் ஒப்புக்கொண்டார். அத்தாவின் இடத்தில் இப்போது முழுமையாக நான் இருக்கிறேன்.
இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. கடை பெரிதாக வளர்ந்துவிட்டது. சிங்கப்பூரில் எந்த மூலையில் நின்றுகொண்டு வாடகைக் காரை அழைத்தாலும் என் கடை பெயரைப் பதிந்தால் போதும், முழு முகவரியும் அது சொல்லிவிடும். இப்போது சிங்கப்பூரில் என் கடையைத் தெரியாதவர்களே இல்லை. ஆனாலும் இன்றுவரை பல கேள்விகளுக்கு எனக்கு பதிலே தெரியவில்லை.
அன்று ஊருக்கு உடனே போ என்று விரட்டிய குரல் வெறும் குரல் மட்டும்தானா? ஒரு சின்னக்கடையை வைத்துக்கொண்டு, கடை, வீடு, திருமணம் எல்லாமும் ஒரு வெள்ளிகூட கடன் வாங்காமல் அத்தா கண்ணியமாக வாழ்ந்தாரே. அத்தனைக்கும் இந்தக் கடை மட்டும்தானே ஆதாரமாக இருந்தது. இது வெறும் கடை மட்டும்தானா? என் விருப்பம் என்று எதையுமே சொலலாத அத்தா ‘கடையை நடத்துங்க’ என்றாரே, அது அவர் விருப்பம் மட்டும்தானா? எந்த அனுபவமும் இல்லாத நான் வேலை வேண்டாம் என்று சொல்லி கடையில் உட்கார்ந்தானே அது என் முடிவு மட்டும்தானா? இந்தக் கடை இந்த அளவுக்கு வளர்ந்ததற்குக் காரணம் என் எடுத்த முடிவு மட்டும்தானா? இல்லை. இல்லை. வேறு ஏதோ ஒன்று எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது. அது என்னவென்று புரிகிறது. ஆனால்.. ஆனால்.. சொல்லத்தான் தெரியவில்லை. கண்ணீரோ, மௌனமோ சொல்லலாம். அது யாருக்கும் புரியாதே! ஆனாலும் உங்களுக்கு நான் சொல்லாமலே கூடப் புரியலாம்
யூசுப் ராவுத்தர் ரஜித்