This entry is part 4 of 10 in the series 23 ஆகஸ்ட் 2026

பாலமுருகன்.லோ

இல்ல, இந்தப் பாலாப்போன மனசு கடந்து அடுச்சுக்கிது. புத்திக்குத் தெரியுது, நாமதான் சற்று விலகி இருக்கணுமுன்னு. ஆனா, மனசு புத்தி சொல்றதைக் கேட்டுக்குதா என்ன? இல்லை. இதனாலத்தானே மனத்தாங்கல் ஏற்படுகிறது.

இந்தக் கம்பெனியில சுமார் பத்து வருஷமா வேலை செய்துட்டு இருக்கோம்..ஏன், முதலாளியுடன் நெருங்கிய நட்பு வேற. அதாவது, நண்பர்கள். ஆனா, அவன் முதல்ல தொழிலைத் தொடங்கிட்டான். பின்னாடி என்னையும் வரச்சொல்லி சேர்த்துக்கிட்டான்.

என்னதான் நண்பனாக இருந்தாலும், நம்ம அளவாத்தான் உரிமை எடுத்துக்கிடணுமுன்னு இந்த வீணாப்போன மனசுக்கு லேட்டாத்தான் புரிஞ்சுது. தனிப்பட்ட முறையில் எனக்கும் அவனுக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்ல. ஆனா, இதுவே எங்க ரெண்டு பேர் இடையில் யாராவது வந்துட்டா போதும், மனஸ்தாபம் உண்டாகுது.

இதையெல்லாம் எண்ணியவண்ணம், மணீஷ் தன் மதிய உணவைச் சாப்பிடாமல் அவனது நாற்காலியில் அமர்ந்தபடியிருந்தான். மணீஷும் நித்தினும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் தில்லியில் உள்ள இருசக்கர உதிரி பாகங்களை மல்கோத்ரா என்பவரிடம் மொத்தக் கொள்முதல் செய்து, ரீடைல் மார்க்கெட்டில் எப்படி விற்பது என்ற தொழிலைக் கற்றுக்கொண்டனர்.

இருப்பினும், காலத்தின் பிடியில் யாராலும் தப்ப முடியாது. முதலில் மணீஷ் மல்கோத்ராவிடமிருந்து வெளியே வந்து கிடைத்த வேலையைச் செய்துகொண்டிருந்தான். ஆனால், நித்தினோ மல்கோத்ராவுடனே வேலை பார்த்துக்கொண்டுவந்திருந்தான்.

நித்தின் ஒரு கட்டத்தில், “நான் தனியாக ரீடைல் மார்க்கெட்டில் நடைபோடப் போறேன்” என்றதற்கு, மல்கோத்ரா அவனை ஒரு எதிரி மாதிரிப் பார்த்தார்.

நித்தினிடம் மல்கோத்ரா…

“நீ எப்படி முன்னுக்கு வந்துடுவன்னு நானும் பார்க்கிறேன்.” என்றார்.. 

“தனியா ஆரம்பிச்சுட்டா எல்லாம் ஆச்சா! என்கிட்ட இருந்துகிட்டு எல்லாத்தையும் கத்துக்கிட்டு, இப்போ எனக்கு எதிராகச் செயல்பட உனக்கு எப்படி மனசு வந்துச்சு?”

“சார், நீங்க சொல்லும் ஒருவன் ஒருத்தரிடம் வேலைக்கு இருக்கிறான் என்றால், காலம் காலமாக அவரிடத்தில்தான் வேலை செய்யணுமுன்னு எழுதி வச்சிருக்கா?”

“நீங்க அப்படித்தான் இருந்தீங்களா? இல்லையே!”

“அப்போ உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?”

“இந்த உலகத்துல வாழ்றதே பெருசு. அதிலும் என் வயித்துல அடிச்சுட்டு தனியா உன்பாட்டுக்கு ஆரம்பிக்கிறது எல்லாம் சரியில்ல.”

இப்படியெல்லாம் எதிர்ப்பையும் மீறி, நித்தின் தனது தொழிலை ஆரம்பித்தான். அவனிடம் இருக்கும் தன்னம்பிக்கையே அவனை ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டுவந்தது. குறிப்பாக, எக்காரணத்திற்கும் பொய்யான வாக்கு சொல்லமாட்டான். முடியும் என்றால் முடியும், இல்லையென்றால் முடியாது என்று மூஞ்சிப்படச் சொல்லிடுவான்.

அவனது தொழில் விரிவாக்கம் அடையும் நேரம் வந்தது. தொலைபேசியில்…

“ஏண்டா மணீஷு, என்ன பண்ணீட்டு இருக்கிற? பேசாம என்னோட வந்துடுடா. நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்தத் தொழிலை செய்யலாமுன்னு…” என்று கூப்பிட்டதால், மணீஷும் சரின்னு நித்தின்கூட சேர்ந்தான்.

நித்தினுடன் சேர்ந்து இப்ப பத்து வருடம் ஆச்சு. மேலும், தொழிலுக்கு ஆட்கள் தேவை என்பதால், ஒரு ஐந்து நபர்களைத் தேர்வு செய்து வேலைக்கு அமர்த்தியாச்சு.

ஆனா, ஒண்ணு மட்டும் இப்பத்தான் புரியுது. ரெண்டு பேரா இருந்தப்ப எந்த வித மனஸ்தாபம் இல்லாமத்தான் இருந்தோம். ஆனா, ஆட்கள் உள்ள வர வர, கொஞ்சம் கொஞ்சமா இருவருக்கிடையில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.

முதலையே சொன்ன மாதிரித்தான், புத்திக்குக் கட்டுப்படுது. ஆனா, மனசு கேட்க மாட்டேங்குது. இதுக்கு நித்தின் மேல இருக்குற உரிமைதான் புத்தி சொல்லுது. ஆனா, அதிலிருந்து வெளிய வர மறுக்குது மனசு.

என்னதான் நண்பனா இருந்தாலும், இப்ப நாலு பேருக்கு முதலாளியாயிட்டான். நாம முதல்ல பேசிக்கிட்ட மாதிரி இப்ப எல்லா இடத்திலும் பேச முடியாது. இடம், பொருள், ஏவல் பார்த்துத்தான் பேச வேண்டியதா இருக்கு.

ரொம்ப புதுசா இருக்கு, நித்தினை “வாங்க, போங்க” என்று அழைப்பதெல்லாம். ஒண்ணா தொழில் கத்துக்கிட்டோம். இப்ப அவன் முதலாளிங்கிற நாற்காலியில அமர்ந்த பிறகு, அவனுக்கு நாம மரியாதை கொடுக்கணுமுன்னு புத்தி சொல்லுது. ஆனா, மனசு சில சமயம் நேர் எதிர்மறையா சொல்ல வச்சிடுது மத்தவங்க முன்னாடி. பேசிய பிறகு தான் இந்த மனசுக்குப் புரியுது, நாம நித்தினுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்திருக்கணுமுன்னு.

இது ஒரு பக்கம் இருக்கட்டும், புதிதாக நபர்கள் வந்தவுடன் தான் இந்த மண்டையில உரைக்குது. நாமும் இங்கு வேலையாள்தான் என்று.

எப்படின்னு கேட்டா, புதுசா வரவங்களுக்கு தொழிலைப் பத்தி கத்துக்கொடுப்பது என்னவோ இருவரும் தான். ஆனா, போகப்போக ஒரு வித்தியாசத்தை உணர முடிகிறது. நித்தின் சொன்ன காரியங்களை மட்டும் முடிக்கும் வேலைக்குச் சேர்ந்தவர்கள் என்கின்ற புரிதல் இந்த மரமண்டைக்குத் தெரிய வரவே தாமதம் ஆச்சு.

வேலைச் செய்பவர்களிடம் வேண்டாத வேலையை எப்போதும் சொல்லுறது இல்ல. இருந்தாலும், நித்தின் சொன்ன உடனே அந்தக் காரியமானது உடனடியாக நடந்துவிடும்.

இதப்போய் எப்படி அவனிடத்தில் கேட்பது? கேட்டால் மட்டும் அவன் என்ன சொல்லப் போறான்? அதெல்லாம் ஒண்ணுமில்லடா என்ற பதில்தான் வரும்.

ஆனா, ஒண்ணு மட்டும் இப்ப விளங்குது. முதலாளிங்கற வட்டத்துக்குள்ள ஒருத்தன் வந்துட்டா, அவனும் கொஞ்சம் கொஞ்சமா மாறித்தான் போறான் போல. அந்த நாற்காலி படுத்துற பாடு! எப்படி அரசியலுல அந்த நாற்காலியைப் பிடித்த பின் அவரது கம்பீரம் மேலுமேலும் கூடுகிறது என்பது நிதர்சனமோ அப்படி அவனது மாற்றமும் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது. .

எப்படி இந்த முரண்பாடு தெரிஞ்சதுன்னா, ஒருதடவை, ரெண்டு தடவை சொல்லல. பல தடவை, “கஸ்டமருக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பணும், அனுப்பீடுங்க” என்று சொல்லிட்டு வேற வேலையா இருந்தா, கடைசியில அந்த வேலை நடந்திருக்காது.

சில சமயம் கேட்டா, “சார், அதை இப்ப அனுப்ப வேண்டாமுன்னு சொல்லிட்டாருங்க” என்கிற பதில்தான் வருகிறது.

ஒண்ணு மட்டும் புரிய மாட்டேங்குது. இதே மின்னஞ்சலை வேலையில் உள்ள நபர் அனுப்பாமல், இப்ப நானே அனுப்பியிருந்தேனா? நித்தின் ஒண்ணும் கேட்க மாட்டான். அப்படி இருக்க, ஏன் தேவையில்லாம மூன்றாம் நபரிடம் வேண்டாம்னு சொல்லுவது?

சில சமயம் நினைக்கத் தோணுது, ஏன் இந்தக் கம்பெனியில இருக்கிறோம் என்று. மனசுல பெரிய ஆசையெல்லாம் ஒண்ணும் இல்ல. இருக்கப்போறது கொஞ்ச காலம். இதுல எனக்கு உன்னைவிட எல்லாம் தெரியும் என்று ஏன் காட்டிக்கொள்ள வேண்டும்?

அவன் செய்யிறான்னு சொன்னானுன்னா, சரின்னு சொல்லி தள்ளி நின்னு வேடிக்கை பார்த்துப் பழகிப்போச்சு. சில சமயம் அவனே, “அப்பா மணீஷு, நீயே இந்த வேலையை முடிச்சுடுப்பா” என்பான். அப்ப அந்த வேலையை முடிச்சுடுவது வழக்கம்.

கொஞ்ச காலமாகவே இடைவெளி அதிகமாகிக்கொண்டே போகிறது. பொறுப்புணர்வு அதிகம் முதலாளிக்கே இல்லேன்னு சொல்லல. ஆனா, எல்லாத்தையும் தலையில போட்டுக்கிட்டு இப்பெல்லாம் தினம் தினம் புலம்பினா சரியாகிடுமா?

எப்பப்பார்த்தாலும் ஒருத்தன் புலம்புறான் என்றால், பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்? எல்லா வேலையும் அவனே செய்ய வேண்டிய சூழல் இருக்குப்போல என்று எண்ண மாட்டார்கள். பல வருஷம் இதுவரை செய்த வேலையெல்லாமே நித்தினே செய்த மாதிரி ஆகிடுமில்ல.

ஒப்புக்கு சப்பாணி மாதிரியான நிலைதான் போல.. நல்லா பல நாட்கள் யோசித்த பிறகே இப்ப இந்த முடிவுக்கு வர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, வேற வழி இல்ல.

அதை இப்படியே தொடர்ந்தா, இத்தனை நாள் நீடித்த நட்புகூட முறிந்துவிடும் போல. பேசாம நித்தினிடமிருந்து தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பதே சிறந்தது என்று எண்ணியவுடன், கம்பெனியில உள்ள பொருட்களை ஒரு முறை பார்த்தான். ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்தான். இனி நாம் இதையெல்லாம் எப்போ மறுபடியும் தொடப்போறோம் என்ற எண்ணம் மனசுக்குள் வந்ததும், அவனுக்குள் ஏதோ ஒன்று கனத்தது.

சாயங்காலம் எப்போதும் போல அங்கிருந்து நடந்து வெளியே வந்தான். ஆனால், அன்று யாரிடமும் அதிகமாகப் பேசவில்லை. கம்பெனியை விட்டு வெளியே வருவது இதுவே கடைசியாக இருக்குமென்று ஆழ்மனம் சொல்லியது.

-பாலமுருகன்.லோ✍️

Series Navigationநன்றி நவிலல்இலக்கியப்பூக்கள் இதழ் 399 வானொலி சஞ்சிகை நிகழ்வு