பெருமழைக்காலம்
****************************
எதைத் தொட்டாலும் ஈரம்
கரை கடந்தால் மழை
மையம் கொண்டால் மழை
பலவீனம் அடைந்தாலும் மழை
சுற்றி எழுப்பிய சுவருக்குள் பிராணியாய்
ஒட்ட வைக்கிறது இம்மழை.
“உஸ்..ஸ்” எனும் ஈரப் பாம்புச் சீறலாய்
சீரான ஒலியோடு விடாமல் பெய்யும் மழை
ஊறிப்போன தவிட்டுக் குருவிகள் நீர் உதிர்க்க
உடம்பு சிலிர்த்து சிலிர்த்து அடங்கும்
காக்கைகளோ இன்னும் பாவம் கருப்புடல் இன்னும் கருப்பாகும்
மரங்கள் கண்ணீரில் மிதப்பவை போலொரு காட்சி
பள்ளிக்கூடச் சுவர்கள், மைதானம்,
உள்ளே கட்ட முடியாத மாடுகள்
அனைத்தையும் நீரால் அறைகிறது மழை
எங்கும் நொத நொதப்பு
காய முடியாது தணலே இல்லை
மனசு ஊறிப் போகும் கொட்டும் மழை இதனில்
என்னால் தற்போது ஒடுங்கிக் கொண்டு இடமளிக்க முடியும்
ஒரு குருவிக்காவது.
**