-சுந்தரிமணியன்
முற்றத்தில் அமரும் சிட்டுக்குருவியின் அழகு கண்களைப் பறிக்க, அம்மா அந்த வைகறைப் பொழுதிலேயே எழுந்து வாசல் தெளிக்கலானாள். என்னையும் அறியாமல் கனவில் வந்த அப்பாவின் உருவம் மனதை உறுத்த எழுந்து அமர்ந்தேன். அப்பாவின் நினைவுகள் தந்த வலி கண்களில் கண்ணீரை வரவழைக்க அவரது நினைவுகளில் முழுகிப்போனேன்.
“டேய் எந்திரிடா” காலையில் எழுப்பும் அப்பாவின் குரலுடனே சிறுவயதில் எழுந்தவள் நான். பெண்பிள்ளைகள் இரண்டு பேரின் மேலும் அளவுகடந்த பிரியமுடையவர் அப்பா. அண்ணனையும் பிடிக்கும் இருந்தாலும் சொல்பேச்சுக் கேட்கமாட்டான் என்ற வருத்தம் இருந்தது. இயல்பிலேயே பெண்குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணமுடையவர்.
“எத்தன வருசத்துக்குத்தான் படிக்கவைப்பீங்க”
என்று அம்மா எரிச்சல் பட்டால்கூட,
“சும்மாயிரு. நாளைக்கு புருசன் சரியில்லேன்னாக்கூட அது பாட்டுக்கு வேலை பார்த்துக்கிடும்” என்று அம்மாவை அடக்குவார்.
அப்பா இயல்பாகவே விலங்குகளின் மேல் அதீதப் பிரியமுடையவர். நாய் ஏதாவது தெருவில் குரைத்தால் கூட,
“சும்மாயிருக்க மாட்ட. வந்தேன் வெழுத்துருவேன்”
என்று மனிதரிடம் பேசுவது போலவே நாய்களிடம் உரையாடுவார். வீட்டிற்கு வரும் நாய்க்கும் பசுமாட்டிற்கும் உணவு போடச்சொல்லி எங்களிடம் இறைஞ்சுவார். அப்பொழுதெல்லாம் ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்ற பாரதியின் பாடல்வரிகள்தான் மனதில் தோன்றும். போடாமல் நாங்கள் அடம்பிடித்தால் “டேய் பாவம்டா” என்பார். உணவு வைத்தபிறகுதான் சும்மாயிருப்பார். அப்பாவுக்கு சமையல் வேலை தெரியாது என்றாலும் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அதிகாலை நான்கு மணிக்கே படிக்க எழுப்பிவிட்டு வரக்காப்பி போட்டுக் கொடுப்பார்.
அப்பாவின் கம்பீரம் எனக்குப் பிடிக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் நேர்த்தியும் முழுமையும் இருக்கும். அப்பா வேலைசெய்யும் அழகை பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபா அம்மா பார்த்து,
“சார் எவ்வளவு நீட்டா வேலை செய்றாரு” என்று அடிக்கடி வியந்துபோவாள். வீட்டிற்கு வரும் சொந்தங்களிடம் தன் உள்ளக்கிடக்கையை அவ்வப்போது வெளிப்படுத்துவார்.
“இந்தப் பிள்ளைங்கள எப்படியாவது படிக்கவச்சி, கட்டிக்கொடுத்து, பேரப்பிள்ளைகளப் பார்த்தாப்போதும். அப்புறம் இருந்தா என்ன, இருக்கலேன்னா என்ன”
அவரது வாழ்க்கையின் தேடல் இதுவாகத்தான் இருந்தது. தீபாவளி அன்று நாங்கள் எல்லோரும் புது டிரெஸ்ஸில் ஜொலிக்கும்போது அப்பா மட்டும் பழைய சட்டையில் இருப்பார். கைலி மட்டும் புதிதாக தீபாவளிக்கொரு முறை எடுத்துக்கொள்வார். திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்தவர். அதனால் தான் பெண்களின் திருமணத்தையும் கட்டுசெட்டாக முடித்தார். அண்ணன் உதவியை நாடாது அவனுக்கும் தன் செலவிலேயே திருமணம் செய்தார். சொந்த பந்தங்களுக்கு இவரைப் பார்த்தால் ஆகாது.
“மனுசன் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசுவார்” என்று பார்த்தாலே பயப்படுவார்கள். எங்கே தாங்கள் செய்யும் தவறு கூட்டத்தில் கட்டுச்சோற்றை அவிழ்த்தது போல் சந்தி சிரித்துவிடுமோ என்று.
பேரப்பிள்ளைகளிடம் செல்லச் சண்டையிட்டுத் தன் அன்பை அவ்வப்போது வெளிப்படுத்துவார். பேரப்பிள்ளைகள் தூங்குவதைப் பார்த்து,
“பூப்போல மயங்கிருச்சு” என்று ரசிப்பவர். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் சுணங்காமல் மெடிக்கல் போய் மருந்துவாங்கி வந்துவிடுவார். அப்பாவின் இறப்பிற்குப் பின் அம்மா உடல்நிலை சரியில்லாமல் போகும்சமயம் அடிக்கடி நினைவுகூறுவாள்.
“அந்த மனுசன் இருந்தா இந்நேரம் ஓடிப்போய் மருந்து வாங்கித் தருவார். உங்ககிட்ட ஓயாம கத்தவேண்டியிருக்கு”
அம்மாவின் ஆதங்கத்தில் அப்பாவின்மேல் அவள் கொண்ட அன்பு வெளிப்படும். எல்லோருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்தவர், தன் உடம்பைப் பார்க்காமல் தவறவிட்டதுதான் வினையாகிப் போனது. ஒரு நாள் அதிகாலையில் எழுந்தவர் நடக்கமுடியாமல், பின்மண்டையில் டேபிளின் நுனிபட்டு இரத்தத்துடன் கீழே விழுந்தார். பேச்சு வரவில்லை. அதிர்ச்சியில் உறைந்துபோனோம்.
அப்பாவின் இறுதிக்காலத்தில் படுக்கையில் விழுவார் என்று கனவிலும் நாங்கள் நினைக்கவில்லை. இந்நிலை எங்களை நிலைதடுமாறச் செய்தது. ஸ்தம்பித்துப் போனோம் என்றுதான் சொல்லவேண்டும். எப்படியாவது அவரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற தீவிரம் எல்லோர் மனதிலும் இருந்தது. அப்பாவை முழு நேரமும் கவனித்துக் கொண்ட அம்மா குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் சோர்ந்து போனாள். ஒரு நாள் அப்பாவைப் பார்க்கச் சென்ற என்னிடம்,
“இப்படி இருக்கறதுக்கு இவர் செத்தே போகலாம்” என்றாள். எனக்குள் இந்த வார்த்தை தூக்கிவாரிப் போடச்செய்ததுடன் கண்ணீரையும் வரவழைத்தது.
“ஏம்மா இப்படிச் சொல்றீங்க. தயவுசெய்து இப்படிப் பேசாதீங்க” என்றேன் நான்.
எனக்கு அம்மாவின் பேச்சு மனதிற்குள் அதிர்ச்சியையும் வேதனையையும் கொடுத்தது. எப்பொழுதும் எனக்கு தைரியம் சொல்லும் அப்பா யாரிடமும் பேசமுடியாமலே இறந்து போனார். மூத்த பேரன் பார்த்திபனைப் பார்த்துக் கண்கலங்கியதுதான் அவர் கடைசியில் நினைவாற்றலோடு இருந்தது. அதன் பின்னர் நினைவுகள் தப்பிப் போனநிலையில்தான் இருந்தார்.
எல்லோருக்கும் உழைப்பைக் கொடுத்த அப்பாவின் இறந்த உடல் எடுக்கப்படும்போது ஓங்கி ஒலித்த எங்களது குரல் அப்பாவின் செவிகளுக்கு எட்டுமா எனத்தெரியவில்லை.
அப்பா இறந்த பிறகு வாசலில் வந்து நின்ற மாட்டின் ம்மா.. என்ற குரலிலும் நாயின் கண்களிலும் தெரிந்த சோகம் நினைவுகளில் நிழலாடுகிறது. மறுநாள் விழிக்கும்போது அப்பாவின் குரல் ஒலிக்காத எங்கள் வீடு பிணவறை போல அமைதியுடன் காத்திருந்தது. அப்பாவின் குரலுக்காய்…