ரிஷி’ [லதா ராமகிருஷ்ணன்] யின் கவிதைகள்
1. மண்ணோடு மண்ணாய்…..
ஒவ்வொரு உறவிலும்
ஒருவருக்கொருவர் சாயமடித்துக்கொண்டே
யிருக்கிறார்கள் _
இரண்டு வண்ணங்களின் சேர்க்கையில்
தாம் நினைக்கும் மூன்றாவது நிறம்
அத்தனை துல்லியமாக வந்துவிடும்
என்ற நினைப்பில்..
பெரும்பாலும் மண்ணே விழுந்தபோதும்
’அவர்களிருவரின் உறவில் விழுந்தது
அழுக்குப் பிடித்த உலர்மண் –
எங்கள் விஷயத்தில் விழுந்தது ஈரமண் ’
என்று
பெருமைபீற்றிக்கொள்கிறார்கள்.
விழுந்த மண் விழுந்தபடியிருக்க
விளையாட்டாக ஒருவர் மீதொருவர்
அவரவர் கையகப்பட்ட மண்ணை
எறிகிறார்கள்.
இவர் எறியும் மண் அவர் சட்டையை
அழுக்காக்கிவிட
அவர் எறிவது இவர் கண்ணுக்குள்
விழுந்துவிட
நெருங்கியிருந்தவர்கள் தொலைவாகி
வேகவேகமாய் வீசத் தொடங்குகிறார்கள்
புழுதிமணலை.
மணற்கொள்ளையையெல்லாம் மீறி
இருபுற மண்குவியல் வளர்ந்துகொண்டே
யிருக்கிறது –
அவ்விருவரையும் அள்ளியுள்
ளிழுத்தவாறு.
2.முகமும் பிரதிபிம்பமும்
தன்னைத்தான் உருட்டிப்பிசைந்து
மனிதனின் முன்னோடிக் குரங்கை
வனைய
முனைப்பாய் மிக மிக முனைப்பாய்
இயங்கிக்கொண்டிருந்தவர்
வலிக்கும் இடுப்பையும் கைகால்களையும்
சற்றே இளைப்பாறச் செய்யும்பொருட்டு
எழுந்துநின்று
இருந்தாற்பொலிருந்து இடப்பக்கம் திரும்ப
அங்கே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த
ஆடியில் கண்டது
மனிதன் பாதி மனிதக்குரங்கு பாதி
கலந்துசெய்ததாய்……
*
நிலைக்கண்ணாடியின் முன் நிற்கவைத்து
சின்ன மகளுக்குத் தலைவாரத் தொடங்கினார் தந்தை.
‘சரியாக இருக்கிறதா பார்’ என்றவரிடம்
அப்பா, கண்ணாடியில் நான் சிட்டுக்குருவியாய்த்
தெரிகிறேன்!” என்று ஆச்சரியத்தில் கூவினாள் சிறுமி.
’அப்பா, அவளுக்கு நட்டு கழண்டுவிட்டது’ என்று
பரிகசித்த மகன் தலையில் செல்லமாய் குட்டியவர்
‘இல்லை, கண்ணாடியில் தன்னைக் காண இயலாதவள்
கட்டாயம் நல்ல படைப்பாளியாய் வருவாள்!’
என்றார் கனிவோடு.
அவர் சொல்வது புரிந்ததாய் தம்பி
ஆடிக்குள் துருவினான் கண்களால்
அவன் முகத்தின் குட்டிமுயலை!
*
’உன் நிஜ முகத்தைக் காட்டு;
’உனக்கு ‘தில்’லிருந்தால் உன் நிஜ முகத்தைக் காட்டு’
’ஊருக்கு உன் நிஜ முகத்தைக் காட்டு”
என்று
சகமனிதர்களை சவாலுக்கழைத்தவாறு
ஆடி முன் நின்று உரக்கக்
கூவிக்கொண்டிருந்தவரை
நின்று கவனிக்கவும் நேரமில்லாமல்
கடந்துகொண்டிருந்த காலம்
தனக்குள் முணுமுணுத்துக்கொண்டது –
’முகம் என்பது முகம் மட்டுமல்ல;
நிஜம் என்பது நிஜம் மட்டுமல்ல.’
3.பாவனை
நெகிழ்நொடியை உறைநிலைச் சட்டகத்தில்
திணித்துவிட்ட புகைப்படத்தில்
மகிழ்ந்துசிரித்துக்கொண்டிருக்கு
மவர்கள்
நகரும் காலத்தே நகர்ந்துகொண்டே
காலம் நகராது என்று தம்மையும்
பிறரையும்
நம்பவைக்க முயன்றவாறே
4.பின்குறிப்பு
’வாழ்வாய் நீ’ என்று உரக்கச் சொன்னவரின்
குரலலைகளை படம்பிடிக்க
பெருந்திரளானஊடகவியலாளர்கள்
முண்டியடிக்க
அது ஆசிர்வாதமா
ஆரூடமா
ஆன்ற பிரகடனமா
ஆணையா
என்றெதுவும் புரியாமல்
நின்றது நின்றபடி
நகர்ந்துகொண்டிருக்கிறது புவிக்கோளம்.
- சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதை உலகம்
- காக்கைகளே ஜாக்கிரதை
- மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்: 6
- ‘ரிஷி’ [லதாராமகிருஷ்ணன்] யின் கவிதைகள்
- வல்லாதிக்கங்கள்.. நேற்று, இன்று, நாளை..
- கொலுசு
- மழை புராணம்: 27
- ஆண் பால் அத்தியாயம் ஆறு
- வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், ராம் தங்கம் எழுதிய “திருகார்த்தியல்”