This entry is part 2 of 8 in the series 19 ஏப்ரல் 2026

   என்றும் இதே நிலைகள்

   யாரோ விட்ட பட்டம்

   அறுந்து இங்கே பறந்து வந்து

   மின்கம்பியில் மாட்டிக் கொண்டு

   என் மனத்தைப் போலத்

   தத்தளிக்கிறது;

   ஒடிந்து விழுவேன் என்று

   பயமுறுத்திக் கொண்டே

   இன்னும் ஒடியாமல்

   முருங்கை ஆடுகிறது;

   உச்சிக் கிளைகளில்

   கட்டிய தன் கூடு

   விழுந்து விடுமோவென்று

   காகம் பதைபதைக்கிறது;

   இழுக்க முடியாமல்

   இழுத்து வரும் காளைகள்

   எப்பொழுது தொழுவம்

   வருமென ஏங்குகின்றன;

   வேண்டுதலுக்காகக்

   கோயிலில் ஏற்றி வைத்த

   அம்பாளின் அகல்விளக்கு

   அணைந்துவிடக் கூடாதென்று

   இரு கைகளின் விரல்களாலும்

   அணைகட்டிப் பாதுகாக்கிறாள்

   முதிர்கன்னி ஒருத்தி.

Series Navigationமழை புராணம்: 28 உயிர்மையின் நாடி