This entry is part 2 of 6 in the series 31 மே 2026

மனிதனின் அறிவியல் முன்னேற்றமும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் பல ஆயிரம் ஆண்டுகால மதக் கோட்பாடுகளையும் ஆன்மீகச் சடங்குகளையும் ஒரு வேடிக்கைப் பொருளாக மாற்றி இருப்பது விந்தை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோடைஜி பௌத்த ஆலயம். ‘மிண்டார்’ என்கிற இயந்திர மனிதனைப் புத்த மதக் குருவாக அங்கு அறிமுகப்படுத்தி உள்ளனர்.

ஒரு காலத்தில் முனிவர்களும் பிக்குகளும் பல ஆண்டுகள் காடுகளிலும் மலைகளிலும் தவமிருந்து பெற்ற ஞானத்தையும், அதன் மூலம் கிடைத்த அறிவுத் தெளிவையும் இன்று ஒரு சிலிக்கான் சிப்பும் மென்பொருளும் கொண்டு, மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் இயந்திரத்திற்குள் பொருத்தி, அந்த இயந்திரத்தை மனிதர்கள் வணங்கக்கூடிய ஒரு பொருளாக மாற்றுவது விந்தையிலும் விந்தை!

இந்த ரோபோக்கள் புத்தரின் சிந்தனைகளையும் ஆழமான தத்துவங்களையும் மக்களுக்குப் போதிக்கின்றன; ஆனால், உணர்ச்சிகள் எதுவும் இல்லாத இயந்திரத்தனத்துடன்.

மதம் மற்றும் ஆன்மீகத்தின் அடிப்படையே மனிதனின் உணர்வுகளும், கருணையும், ஆன்மத் தேடலும்தான். ஆனால் சிந்திக்க முடியாத, பசி, வலி, மரண பயம் என்று எதுவும் இல்லாத ஓர் இயந்திரம் மனிதனுக்கு “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்று போதிப்பது ஒரு முரண்பட்ட நகைச்சுவை.

ஆன்மீகம் என்பது உள்ளுணர்வு சார்ந்த விஷயம் என்பதைக் கடந்து, அது வெறும் சடங்காக மாறும்போது அதை மனிதனை விட ஓர் இயந்திரம் சிறப்பாகச் செய்துவிடுகிறது. ஜப்பானில் இறுதிச் சடங்குகள் செய்வதற்கு ‘பெப்பர்’ என்ற ரோபோவை மிகக் குறைந்த செலவில் வாடகைக்கு எடுக்கும் நிலை வந்துவிட்டது.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களும், புதிய வீடுகள் கட்டிக் குடியேறுவதற்கு முன்னால் இயந்திரப் பசுக்களை வீட்டிற்குள் வரவழைப்பதும், இயந்திர ரோபோக்கள் பூஜை செய்வதும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

“கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார்” அல்லது “ஆத்மா என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது” போன்ற மதக் கோட்பாடுகள், மனிதன் தனக்கு நிகராக ஒரு ரோபோவைப் படைக்கும் பொழுது கேள்விக்குறியாகின்றன.

இயந்திரங்கள் தியானம் செய்யுமா? ஆனால் தியானத்தைப் பற்றிப் பேசுகின்றன. தொழில்நுட்பம் வளர வளர மதம் என்பது நிஜ மனிதனைத் தேடும் பாதையா அல்லது வெறும் இயந்திரத்தனமான சடங்கா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

மதங்கள் அனைத்தும் ஆத்மா, ஜீவாத்மா, உள்மனம் என்பதைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால் ஒரு சிலிக்கான் சிப்பும், உலோக உடம்பும், ஒரு சில மீட்டர் கேபிளும் கொண்ட ரோபோ எப்படி ஆன்மீகம் பேசும்? இதற்கு ஆத்மா ஏது? பசி என்னவென்றே தெரியாத ரோபோ “பசித்தோர்க்கு உணவிடு” என்று போதிப்பது எவ்வளவு பெரிய முரண்பாடு! மரண பயம் இல்லாத இயந்திரம் மரணத்திற்குப் பின் மோட்சம் பற்றிப் பேசுவது வேடிக்கைதானே!

பெரும்பாலான மதங்களில் சிந்தனைகள் மறைந்து, சடங்குகள் மட்டுமே மிஞ்சியிருக்கிற இந்தக் காலத்தில் இவை அனைத்தும் சாத்தியப்படுகின்றன. இது வரும் காலத்தில் ஆன்மீகத்தைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளைத் தகர்த்தெறியக்கூடும்.

அனைத்து மதங்களும் “கடவுள்தான் மனிதனைப் படைத்தார்” என்கின்றன. ஆனால் இன்று மனிதன் தன் அறிவால் ஓர் இயந்திரக் கடவுளைப் படைத்துவிட்டான்.

பொதுவாகவே துறவிகளின் பணி என்பது சடங்குகளை மட்டும் செய்வது அல்ல. மனித மனம் குழப்பமடையும் பொழுதோ, அவன் பேராசைப்படும் பொழுதோ அல்லது துயரத்தில் விழும் பொழுதோ, அந்தத் துயரங்களில் இருந்து அவனை விடுவித்து, தன்னுடைய வாழ்நாள் அனுபவத்தின் மூலம் நல்வழி காட்டுவதுதான் துறவியின் பணி.

உலகியல் இன்பங்களைத் துறந்து மனிதநேயத்தையும், சுயக்கட்டுப்பாட்டையும், பிரபஞ்ச ரகசியங்களையும் தேடி நாடோடியாகப் பயணிப்பதும் துறவியின் பணி. இந்தப் பணிகளை மனிதன் படைத்த ரோபோக்கள் செய்யுமா? மனிதன் வெறும் இயந்திரமாக மாறிவிடாமல், அவனுக்குள் இருக்கும் கருணை, அன்பு, ஞானம் போன்ற மனிதத் தன்மைகளை அவ்வப்போது நினைவூட்ட ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டிகள்தான் அந்தந்த மதங்களில் இருக்கிற துறவிகள், ஞானிகள் மற்றும் மதகுருமார்கள்.

இந்த மனித இயந்திரங்கள் தர்க்கரீதியாகத் துறவிகளைப் போன்று சிந்தனை செய்ய முடியும். காரணம், அந்த இயந்திரங்களுக்குள் மனிதன் புகுத்தி வைத்திருக்கிற தரவுகள் (Data). சாதாரண மனிதன் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் இந்த இயந்திரங்கள் பதிலளிக்க முடியும். ஆனால், அவை வெறும் வார்த்தைகளின் கோர்வைகள் மட்டுமே. இதயசுத்தியுடன் அதனால் பதிலளிக்க இயலாது. சுதந்திரமாகச் சிந்திக்கும் சுய விழிப்புணர்வு இயந்திரங்களுக்குக் கிடையாது.

அடுத்து வரும் காலங்களில், இந்த இயந்திரங்கள் மதத்தை அவமதிப்பதாகக் கருதி, அதனால் மோதல்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. “கடவுளின் போதனை என்பது புனிதமானது; அதை உயிர் இல்லாத, ஆன்மா இல்லாத ஒரு சிலிக்கான் இயந்திரம் உச்சரிப்பது ஆன்மீகத்தின் புனிதத்தைக் கெடுப்பதாகும்” என்று ஒரு தரப்பினர் கருதக்கூடும். மனிதனைத் தவிரப் பசுக்களையும் தெய்வமாகக் கருதுகிற நம் நாட்டில், ஆன்மீகம் வேடிக்கைப் பொருளாக மாறுவதை மக்கள் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

வெறும் காகிதத்தில் அச்சிடப்பட்ட படங்களையே கடவுளாகக் கருதுகிறவர்கள், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பக்தர்கள். காகிதத்திற்கு உயிர் இல்லை என்று தெரிந்தபோதிலும், அது ஒரு புனிதம் என்று கட்டமைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில் வாழ்கிற மனிதன் இதை ஒத்துக்கொள்ள மாட்டான் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஓர் இயந்திரம் புத்தரைப் போலவோ, இயேசுவைப் போலவோ அல்லது வேறு எந்தக் கடவுளைப் போலவோ பேச முடியும். ஆனால், அது புத்தனாக மாற முடியாது. ஏனெனில் ‘புத்தன்’ என்பது அறிவினால் உருவான நிலை அல்ல; அது பேரன்பினாலும் கருணையினாலும் உருவான நிலை. இயந்திரங்களுக்கு அறிவு உண்டு; அன்பு இல்லை.

ஆன்மீகமும் பேரன்பமும் போதிக்க வேண்டிய புத்த குருமார்கள் இலங்கையில் அரசியல் அதிகாரத்திற்காகவும் இனவெறிக்காகவும் மனிதகுலத்திற்கு எதிரான வன்முறையைத் தூண்டிய போது, அது ஒட்டுமொத்த ஆன்மீகக் கோட்பாட்டையே தலைகீழாக மாற்றிவிட்டது. இலங்கையில் ஓர் இனஅழிப்பை முன்னெடுத்த மதகுருமார்களுக்குப் பதிலாக இந்த ரோபோக்கள் ஒரு மாற்றாகவும் இருக்கக்கூடும். ஏனெனில், இயந்திரங்களுக்கு வெறுப்புணர்ச்சி இல்லை; இனம், மொழி, மதம் என்ற பாகுபாடு கிடையாது.

மனிதர்களைப் போல அதற்குப் பேராசையோ, சுயநலமோ, அரசியல் அதிகார ஆசையோ இல்லை. இந்த ரோபோக்கள் எந்தவிதமான அரசியல் சுயலாபமும் இன்றி, புத்தர் சொன்ன அகிம்சை மற்றும் கருணை போன்ற தூய போதனைகளை அப்படியே மக்களிடம் கொண்டு சேர்க்கும். மதகுருமார்களைப் போலப் போதனைகளைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்து வன்முறையைத் தூண்ட இந்த இயந்திரங்களால் முடியாது. மதத்தின் பெயரால் மக்களைக் கட்டுப்படுத்தும் வன்முறைச் சக்திகளின் கைகளில் இருந்து அதிகாரம் பறிக்கப்பட்டு, மதம் என்பது வெறும் தத்துவார்த்த வழிகாட்டியாக மட்டுமே சுருங்கக்கூடிய வாய்ப்பு உள்ளதால், ஒருசாரார் இதனை ஒரு சிறந்த மாற்று என்று கருதுகிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில், அதற்கு எதிர்க்கருத்துக்களைக் கொண்டவர்கள், ரோபோக்களுக்குச் சுயமாகச் சிந்திக்கத் தெரியாது என்பதாலும், அதற்குள் மனிதன் நுழைக்கிற தரவுகளின் அடிப்படையிலேயே அவை இயங்கும் என்பதாலும், அந்த ரோபோக்களை இன்னும் மோசமான வேலைகளுக்கு மனிதன் பயன்படுத்த முடியும் என்கிறார்கள். சில நேரங்களில் வன்முறையைத் தூண்டும் அளவுக்குக் கூட அந்தச் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களை இயக்க வைக்கக் கூடும். இயந்திரங்களால் எந்தவித வெளிக்கட்டளைகளும் இல்லாமல், தானாக அமைதியை உருவாக்க முடியாது; காரணம், அதற்கு மனமோ, கருணையோ, அன்போ, சுயசிந்தனையோ கிடையாது.

மதகுருமார்கள் தங்கள் ஆன்மீகப் பாதையை மறந்து வன்முறையைக் கையில் எடுக்கும் போது மனிதகுலத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம் அளவிட முடியாதது. அந்த வகையில், வன்முறையைப் போதிக்கும் ஒரு மதவெறி பிடித்த மனித குருவை விட இந்த இயந்திரங்கள் சற்று மேலானவைதான்.

ஏற்கனவே இந்தியாவில் இயந்திர யானைகளும், இயந்திரப் பசுக்களும், இயந்திர ஆரத்திகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. இந்து மதத்தின் பரந்த பார்வையால் இதற்கு இதுவரை எதிரான கருத்துக்கள் எழவில்லை.

இந்து மதத்தில் மந்திர உச்சரிப்புகளில் தூய்மையும் மன அதிர்வும் மிக முக்கியமானது. அதனால்தான் இன்றும் ஒரே ஒரு மொழியில் (சமஸ்கிருதம்) மட்டுமே அந்த இறைத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது. இயந்திரங்கள் மந்திரம் உச்சரிப்பதாலோ, இயந்திரங்கள் பூஜைகள் செய்வதாலோ இந்த இறைத்துவம் அவைகளுக்குக் கிடைக்காது என்பதால், இயந்திரங்கள் இந்து மதத்தில் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது.

“இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்ற தத்துவத்தின்படி, இயந்திரங்களிலும் இருக்கிறான் என்று பொதுவாக இந்து மக்கள் நம்பிக்கை கொண்டுவிடுவார்கள். காகிதப் புத்தகத்திலும், கல்லிலும், செம்பிலும் இறைவனைக் காண்பவர்கள் சிலிக்கான் சிப்பிலும் இறைவனைக் காண்பார்கள்; இதில் தடை இருக்காது. ஆனால், அவை கருவறைக்கு வெளியே மட்டுமே பயன்படுத்தப்படும்.

இந்து ஆகம விதிகளின்படி ஒரு பூசாரி வெறும் சடங்கு செய்யும் இயந்திரம் அல்ல. அவர் ஆன்மீக தீட்சை பெற்றவராக, கடுமையான விரதங்களை மேற்கொண்டு, மனத்தூய்மையோடும் பக்தியோடும் சடங்குகளைச் செய்ய வேண்டும். இயந்திரங்களுக்கு பக்தியும் கிடையாது; தீட்சையும் கிடையாது. அதுபோலவே கோயில்களுக்குள் நுழைவதற்குக் கூட ஆச்சார விதிகள், தூய்மை சார்ந்த நம்பிக்கைகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் அதைச் செய்யாது. ஆகவே, இந்தியாவில் இவை ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்தியாவில் ரோபோக்கள் ஒருபோதும் மதகுருக்களாக மாற முடியாது; அவை வேண்டுமானால் மிகச்சிறந்த உதவியாளர்களாக இருக்கக்கூடும்.

இந்த இயந்திரங்களின் வருகையால் மதப் பீடங்கள் சரிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று கேட்டால், அவை சரியாது; ஆனால் பலவீனமடையக்கூடும்.

பல நூற்றாண்டுகளாக மதப் பீடங்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், “வேதங்களும் அதன் தத்துவங்களும் எங்களுக்கு மட்டுமே தெரியும்; எங்கள் மொழியில் நாங்கள் சொல்வதைத்தான் இறைவன் கேட்பான்” எனும் ஏகபோக உரிமைகளே ஆகும். இன்று ஒரு சாமானிய மனிதன் கேட்கும் எந்தவொரு கடினமான ஆன்மீக தத்துவக் கேள்விக்கும் இந்த ரோபோக்களும் செயற்கை நுண்ணறிவும் மிகத் துல்லியமாக, எந்தவித சுயநலமும் இன்றிப் பதிலளித்துவிடுகின்றன. ஆகவே, மதங்களை எதிர்த்தும் கேள்வி கேட்க முடியும். இதனால் மனிதர்கள் தங்களின் ஆன்மீகத் தேடலுக்கு மதப் பீடங்களை மட்டுமே நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. அறிவு பரவலாகும்போது அதிகார மையங்கள் தானாகவே பலவீனமடையும்.

இன்று பல மதப் பீடங்கள் தங்களின் சுயநலத்திற்காகவும், சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும், அரசியல் அதிகாரங்களுக்காகவும் மதவாதிகளைத் தாங்கிப் பிடிக்கின்றன. மதவாதிகளுக்கு இத்தகைய பீடங்களின் மத அங்கீகாரம் தேவைப்படுகிறது. இயந்திரங்களுக்குப் பயமில்லை; பேராசையும் இல்லை. இயந்திரங்கள் யாரிடமும் லஞ்சம் வாங்காது, சொத்து சேர்க்காது, தேர்தல்களில் வாக்குகள் சேகரிப்பதற்குப் பயன்படாது. இதனால் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு இந்த ரோபோக்கள் பயன்பட மாட்டாது. இது மதவாதிகளைத் தாங்கிப் பிடிக்கும் பீடங்களின் தேவைகளைத் தகர்க்கும்.

மேலும், மதப் பீடங்களின் மிகப்பெரிய பலம் அவற்றின் பொருளாதாரப் பின்னணி. சடங்குகளின் வணிக மையம் இனி வீழ்ச்சியடையும். பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்களுக்குச் செய்யப்படும் சடங்குகள் இன்று ஒரு பெரிய வணிகமாக மாறிவிட்டன. இந்தச் சடங்குகளை இயந்திரங்களே பிழையின்றி, துல்லியமாக, மிகக் குறைந்த செலவில் செய்யத் தொடங்கும்போது, ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு வரும் வருவாய் பெருமளவில் குறையும். பொருளாதாரம் சுருங்கும்போது அவர்களின் அதிகார ஆட்டமும் தானாகவே அடங்கும். ஆனால், இதை அவ்வளவு எளிதாக நடைமுறைப்படுத்த முடியாது.

காரணம், “இயந்திரங்களுக்குப் புனிதத்தன்மை இல்லை” என்கிற பிரச்சாரத்தை மிகப்பெரிய அளவில் அந்த மதப் பீடங்கள் முன்னெடுக்கும். “மனிதக் குருக்களாகிய நாங்கள் செய்தால் மட்டுமே இதற்குப் பலன் கிடைக்கும்” என்று பாமர மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்து அவர்களை நம்ப வைக்கும்.

உண்மை என்னவென்றால், மதம் என்பது மனிதனின் அறியாமையிலும், பயத்திலும், உணர்ச்சிவசப்படும் தன்மையிலும்தான் வாழ்கிறது. இயந்திரங்கள் எவ்வளவு அறிவோடு பேசினாலும் மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தாத வரை மதப் பீடங்கள் வேறு வடிவங்களில் பிழைத்துக்கொண்டேதான் இருக்கும்.

ஆனால், இந்த நவீன சிந்தனைகள் ஒரு விழிப்புணர்வின் தொடக்கம். மனிதநேயமிக்க, வன்முறையற்ற ஒரு சமூகத்திற்கு இந்தத் தொழில்நுட்பப் புரட்சி ஒரு நல்ல சமூக அடித்தளம்தான் என்பதில் சந்தேகமில்லை.

————————————————————-

யுவராஜ் சம்பத் 

திருப்பூர் .

98947 36388

sam@yuvrajenergy.com..

Series Navigationமழை புராணம்: 34கவிஞர் தங்கம்மூர்த்தியின் கூடுதிரும்புதல் எளிதன்று ஹைக்கூ கவிதைகளில் சமுதாயப் பார்வை