This entry is part 2 of 8 in the series 25 அக்டோபர் 2026

வசந்ததீபன்

நதியின் பாதையை

படகால் தெரியலாம்

காலம் சொல்லும் கவிதையை

அறிந்துணர ஏதுண்டு சாதனம்

வானம் நீலம் ஆழி நீலம்

நிலத்தில் வர்ண பேதம்

நிறமற்ற வாழ்வு

கனவுகளாக நிதம்…நிதம்…

பலூன்களாக உயிர் பெற்று

விடுபட துடித்துத் துடித்து

இனியும் பொறுப்பதில்லையென்று

விசும்பிக் கட்டறுத்துத் துள்ளி

பறந்து பறந்து மேலெழும்பி

போயே போனது. 

🦀

மனசுக்குள் ஆயிரம் பயங்கள்

மதம் கொண்ட யானை போல் பிளிறித் திரிகின்றன

நடுங்கும் மறு நிமிடம் சாந்தம் வெளியேறுகிறது

மிகுந்த பாரம்

நெடுந்தூரம்

களைத்தாலும்… போகிறேன்

மனது விரும்பத்தான் செய்கிறது

வாழ்வதற்கு…

பறவையின் சிறகுகளில் கனவுகள் உறங்குகின்றன

நீரின் மேல் மிதக்கும் சருகாய் காற்றில் நீந்துகின்றன

நெஞ்சுக் கூட்டுக்குள் கதகதப்புடன் சுகம் காண்கின்றன.

🦀

வாடிக் குலைந்து

இதழ் இதழாக

உதிர்கிறது

அழகாய் இருந்த பூ

பூக்கள் பூக்க கனிகள் தோன்ற

சருகுகளை உதிர்க்கும்

வாழ்வின் உருவத்தை

கண்டவர் விண்டிலர்

நைந்த வார்த்தைகளில் பரிதவிக்கும் மனசு பீறிட்டிக்கிறது

இயலாமையின் கண்ணீர்… 

கூண்டு வாழ்க்கையின் ரணம் விசும்பல்களாக வெளிப்படுகிறது

ஆல்கஹால் நாறும் வாயால்

நிக்கொடின் விஷம் பூசப்பட்ட உதடுகளால்

முத்தமிடப்படும் பெண்

சபிக்கப்பட்டவள் ஏவாளை விட பன்மடங்கு.

Series Navigationதள்ளாமையின் நகர்வு.தேர்