பாலமுருகன்.லோ

இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது. சில ஆண்டுகளுக்கு முன்னாடி, “ஒருவன் எப்படி இப்படியெல்லாம் இருக்க முடியும்?” என்பதற்கு நானே ஒரு மிகச் சிறந்த உதாரணமாக இருந்தேன் என்றால், என்னாலேயே நம்ப முடியல.
எதற்கெடுத்தாலும் பயம்; கூட்டத்தைக் கண்டால் பயம் கலந்த தயக்கம்; முகம் தெரியாத நபரிடம் பேசக் கூச்சம்; தனியாகச் செல்ல வேண்டுமென்றால் “முடியாது” என்று கூறிவிடுவது. இதையெல்லாம் விடுங்க, பசிக்குதுன்னா ஹோட்டலுக்குத் தனியாகப் போகக்கூட மனம் ஒப்புறது இல்லை. எதற்கெடுத்தாலும் மனசுக்குள்ள ஒரு தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டதன் காரணத்தால், எனது அன்றாட வேலையைக்கூட அது பாதித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
காலையில ஒழுங்கா எழுந்திருக்கவே முடியாது. அப்படியே எழுந்தாலும், போர்த்தியிருந்த போர்வையைக்கூட மடிக்காமல் அப்படியே எழுந்து வந்துவிடுவேன். வந்த பிறகு சோபாவில் அப்படியே உட்கார்ந்திருப்பது—அதுதான் என் அன்றாட வேலை. சோம்பேறித்தனம் தலைக்கேறி இருந்தது.
தினமும் அம்மாக்கிட்ட திட்டு வாங்கவில்லை என்றால், அந்த நாள் இனிய நாளாக இருக்காது என்பதுதான் என் எண்ணமாக மாறியிருந்தது.
எல்லாருடைய வீடுகளிலும் காலையில் சுப்ரபாதம் ஓடும். ஆனா எங்க வீட்டுல…
“எரும, எந்திரி எரும மாடே! மணி எவ்ளவு ஆகுது தெரியுமா? இன்னும் படுக்கையில உருண்டுகிட்டு இருக்கிற. கொஞ்சம் கண்ண முழி. ஊருல உள்ள புள்ளைங்களைப் பார்த்தாவது உனக்குப் புத்தி வருமான்னு பார்த்தா, வராது போல!” என்பாள் அம்மா ரேவதி.
ஒரு வழியா அம்மாவோட செல்ல வசவைக் கேட்டுக்கிட்டே எழும்புவதுல அவ்வளவு ஒரு சுகம். எனக்குள்ளேயே பல நாள் நினைச்சதுண்டு. இப்பத்தான் ஏதோ ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள்ள இருக்கிற மாதிரி ஒரு நிம்மதி.
மெதுவா, எனக்காகவே இந்த உலகம் சுத்துற மாதிரியான ஒரு நினைப்புலேயே இருந்திருக்கிறேன் என்று இப்ப எண்ணும்போது, என்னை நினைத்தாலே எனக்குச் சிரிப்பு வருது. முகம் பார்க்கிற கண்ணாடியில கூட என் முகத்தைப் பார்த்தா எனக்கு ஆச்சரியமா இருக்கும். எப்படி இருந்த நான், இப்படி மாறிட்டேன்! என்னாலேயே என்னை நம்ப முடியலேங்கிறதுதான் நிதர்சனம்.
பள்ளியில் தமிழ் ஐயா, “ஒரு சொற்பொழிவுப் போட்டி இருக்கு, நீ கலந்துகொள்ளலாமே?” என்றார்.
அவர் அதைச் சொன்னவுடன், அங்கிருந்து ஓடிடலாமா என்றுதான் முதலில் மனதில் நினைத்தேன். பின், என் மௌனத்தைப் பார்த்த தமிழ் ஐயா…
“ஏண்டா மௌனமா இருக்க? போட்டியில கலந்துகொள்ள வேண்டியதுதானே! இப்படி எல்லாத்துக்கும் தயங்கித் தயங்கி இருந்தா, நாளைக்கு பெரியவனா ஆன பிறகு உன்னால எந்தக் காரியத்தையும் எளிதில் செய்ய முடியாது. முயற்சி பண்ணித்தான் பாரேன்!” என்றார்.
ஆனால், நான் என்னவோ அந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தைக் கண்டாலே பயமாச்சே! அதனாலேயே அந்த வாய்ப்பு கையைவிட்டுப் போனது.
ஆனால் எனக்குள் ஒரு உந்துதலைக் கொண்டுவந்தவள் லீலாதான். அம்மா சொன்னதை அலட்சியப்படுத்திய நான், அவ சொன்னதைக் கேட்டு எனது நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்கத் தொடங்கினேன்.
“என்னடா இவன்? அம்மா சொல்லிக் கேட்காதவன், யாரோ ஒரு பொண்ணு சொல்லிக் கேட்கிறானே!”ன்னு தானே யோசிக்கிறீங்க?
சரி, அவ அப்படி என்ன சொல்லிட்டான்னு தானே கேட்கிறீங்க? அவ ஒண்ணும் புதுசா சொல்லல. அம்மா என்ன சொன்னாங்களோ, அதேத்தான் அவளும் சொன்னா.
ஒரு நாள் லீலா என்னைத் தேநீர் குடிக்கக் கடைக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டிருந்தாள். சரி, கூப்பிடுறாளே என்று போனால், அங்கே அவளுடைய ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள் என ஒரு பெரிய பட்டாளமே இருந்தது.
சரி, என்ன பேசுகிறார்கள் என்று அவளிடம் கேட்கலாமென்று, “என்ன லீலா, என்னை வரச் சொல்லிட்டு, இங்கே இவ்வளவு நண்பர்களுடன் என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க? யாரைப் பற்றிப் பேசுறீங்க?” என்றேன்.
“அதுவா? நான் போன வாரம் படித்த நாவலைப் பற்றி அலசிக்கிட்டு இருந்தோம். நான் படிச்சுப் புரிஞ்சுகிட்ட மாதிரிதான் அவங்களும் புரிஞ்சுகிட்டாங்களான்னு தெரிஞ்சுக்கத்தான் இங்கே கூடியிருக்கோம். உனக்கு இது உதவியா இருக்கும்னுதான் வரச் சொன்னேன்” என்றாள் லீலா.
நான் வந்தவுடன் தன் நண்பர்களிடம், “எப்பா, தோழர் வாசிப்பு இயக்கத்துல சேர உள்ளார். சில விஷயங்களை அவருக்கு விளக்கலாம்னுதான் கூப்பிட்டிருந்தேன்” என்று சொல்லிவிட்டு, என்னிடம் பேச ஆரம்பித்தாள்.
“சந்தோஷமா இருந்தாலும் சரி, வருத்தமா இருந்தாலும் சரி, ஒவ்வொருத்தரும் அதைச் சமாளிக்கிற விதம் வேற வேறயா இருக்கும். சிலர் நல்லா சாப்பிடுவாங்க; இன்னும் சிலர் ஹெட்ஃபோன் மாட்டிக்கிட்டு பாட்டுக் கேட்பாங்க. சிலர் தங்களுக்குப் பிடிச்ச சமையலைச் செய்வாங்க.
அதே மாதிரி, சிலர் வாசிப்பில் ஈடுபடுவாங்க. சிலருக்குச் சயின்ஸ் ஃபிக்ஷன் பிடிக்கும்; இன்னும் சிலருக்குக் கிரைம் ஸ்டோரி பிடிக்கும். சிலர் குடும்பம், வாழ்க்கை பற்றிய புரிதலைத் தேடி வாசிப்பாங்க.
நீயும் நிறைய படி. படிக்கப் படிக்க உனக்குள்ள ஒரு மாற்றம் வரும். உன்னாலையும் நிறைய புது விஷயத்தை மத்தவங்களுக்குச் சொல்ல முடியும். உன்னை ஏளனமா பார்த்தவங்கள் கூட ஒரு நாள் உன்னைத் தலைநிமிர்ந்து பார்க்கலாம். நீயும் படிச்சுப் பாரேன். படிப்பதன் அவசியத்தை நீயே உணரப்போற, கூடிய விரைவில்!” என்று லீலா போறப்போக்கில் சொன்ன வார்த்தைகள், எனது மனதில் விருட்சமா வளர்ந்து நிற்கின்றன.
வாசிக்கத் தொடங்கியதும், கொஞ்சம் கொஞ்சமாக நாலு பேரோட பேச ஆரம்பித்தேன். வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் கூட்டங்களுக்குச் சென்று முதலில் மற்றவர்கள் பேசுவதைக் கவனித்தேன். பின்னர், படித்த அனுபவங்களை நானும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். அப்படித் தொடங்கிய பயணம், இன்று என்னைப் பெரிய மேடைப் பேச்சாளனாக மாற்றியிருக்கிறது. எனக்குள் அவள் போட்ட சின்ன விதை, இன்று ஆலமரமாக வளர்ந்து வேரூன்றி நிற்கிறது.
அப்படித்தான் பாருங்க! எந்தப் பள்ளியில் நான் பேசவே தயங்கினேனோ, அதே பள்ளியிலிருந்து தமிழ் ஐயா மீண்டும் என்னைக் கூப்பிட்டிருக்கிறார். எனது மேடைப் பேச்சை அவர் காணொளியில் பார்த்ததால், என்னை அடையாளம் கண்டுகொண்டு, எனது அலைப்பேசி எண்ணை எப்படியோ தேடி என்னைத் தொடர்புகொண்டார்.
எப்படி அவரது அழைப்பைத் தட்டிக்கழிப்பது? ஐயாவிடம் நானும் கட்டாயம் கலந்துகொள்கிறேன் என்று சொன்னேன். “ஐயா, ஒரு முறை நீங்க கூப்பிட்டப்போ என்னால் பங்குகொள்ள முடியவில்லை. ஆனால், இந்த முறை உங்களது அழைப்பை நான் கண்டிப்பாக ஏற்பேன்” என்று சொல்லிவிட்டு, நான் படித்த அதே பள்ளிக்குச் சென்று, சுமார் முன்னூறு மாணவர்கள் மத்தியில் மேடையில் பேச ஆரம்பித்தேன்.
பிள்ளைகளுக்கு எளிதில் சொன்னால்தான் புரியும் என்று, என் வாழ்வில் நடந்ததையே ஒரு குறிப்பாகச் சொன்னேன். உடனே அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தது மட்டுமல்லாமல், உரையை முடிக்கும் முன்னர் சிறிது சிந்திக்கவும் செய்தார்கள்.
அவர்களது மனதில், ‘நம்மாலும் முடியும்’ என்ற நம்பிக்கையை என் பேச்சால் ஆழ்மனதில் எங்கேயோ ஒரு மூலையில் விதைத்துவிட்டேன் என்ற மனஆறுதலுடன் உரையை நிறைவு செய்தேன். — பாலமுருகன்.லோ
- தள்ளாமையின் நகர்வு.
- கவிதைகள்
- தேர்
- ஒரு பறவையும் புத்தனும்…
- ஒருவிதை… ஒருவிருட்சம்!
- போர் முடியா மனிதன்
- நண்ப
- மகளிரும் மயில்களும்