
தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி தனிமையில் வருத்தமுடன் இருக்கிறாள். கார் காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்றவன் இன்னும் வரவில்லை. தலைமகளுடன் எப்பொழுதும் இருக்கும் தோழி தலைவியின் நிலைகண்டு வருந்தி அவளுக்கு ஆறுதல் மொழிகள் உரைக்கிறாள்.
தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவியைப் பசலை நோய் பீடித்திருக்கிறது. பசலை நோய் என்பது தலைவியின் மனத்தில் ஏற்படும் ஆழ்ந்த சோகத்தால் உடல் அளவில் வெளிப்படும் நோய் ஆகும். உடல் மெலிந்து, அழகிழந்து, வெளிறிய மஞ்சள் [பசப்பு நிறம்] பெறுவதையே சங்கப்பாடல்கள் பசலை நோய் என்று கூறுகின்றன. உடல் சோர்வு, கை வளையல்கள் கழலுதல், அழகு குறைதல் என்பன இந்நோயின் அறிகுறிகளாகும். தற்காலத்தில் இதை சோகை நோய் என்கிறோம்.
தலைவி மிக அழகானவள்; அவள் தோள்கள் மூங்கில் போலப் பருத்துத் திரண்டிருக்கும்; எனவே தோழி அவளைப் ‘பணைத்தோளினாய்’ என்று அழைக்கிறாள்.
“பணைத் தோள் பெற்ற என் தலைவியே! உனக்குப் பசலை நோய் வந்துவிட்டது. அதற்கு மருந்து கார்காலம் வருவதும். தலைவன் வருவதும்தான். கார்காலத்தின் அறிகுறிகள் தெரிகின்றன. அதோ பார், ஆடும் மகளிர் போல [மஞ்ஞை] மயில்கள் ஆடுகின்றன. கடுக்கை [கொன்றை] மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன். மேலும் அதோ பார்! பாடும் வண்டுகள் ஊதும் பருவம் வந்துவிட்டது. அவை ஊதிக்கொண்டே மலர்களில் தேன் உண்ணுகின்றன. கார்காலம் வந்துவிட்டதால் தலைவர் வந்து விடுவார்” என்று தோழி கூறும் பாடல் இதுவாகும்.
“ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள,
காடும் கவின் பெறப் பூத்தன;
பாடு வண்டு ஊதும் பருவம், பணைத் தோளி!
வாடும் பசலை மருந்து…”
5. பொய்யன்று; மெய்யே
இந்திர கோபம் என்பது மழைக்காலத்தின் தொடக்கத்தில் தரையில் காணக்கூடிய ஒரு சிறிய வகைப் பூச்சியாகும். அது சிவப்பு நிறத்தில் இருக்கும். புறவு என்பது முல்லை நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும். தலைவியின் கண்கள் அம்பு போன்று கூர்மையாக இருந்தனவாம். மேலும் மை பூசப்பட்டு விளங்கினவாம். மேலும் இப்பாடலில் தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றுள்ளான் என்னும் குறிப்பும் தெரிகிறது.
தோழி தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவியை ஆற்றுப்படுத்தக் கூறுகிறாள். “அம்பு போலும் கூர்மையான மையுண்ட கண்களை உடையவளே! இதோ பார், இம்முல்லை நிலத்தில், பவழம் போன்று சிவப்பு நிறத்தில் உள்ள இந்திர கோபப் பூச்சிகள் பறக்கின்றன. எனவே கார்காலம் வந்துவிட்டது. நம்மிடம் பொருள் இல்லையெனில் பிறர் பழி கூறுவார்களே என்று அஞ்சித் தலைவர் பொருள் தேடச் சென்றுள்ளார். அவர் இக்காலத்தில் திரும்பி வருதல் பொய்யன்று மெய்யாம்”
தலைவியின் அழகையும், முல்லை நிலத்தின் தன்மையையும் பொருளின் இன்றியமையாமையும் சிரப்புடன் விளக்கும் பாடல் இதுவாகும்.
”இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல்-
பகழிபோல் உண் கண்ணாய்! பொய் அன்மை; ஈண்டைப்
பவழம் சிதறியவை போலக் கோபம்
தவழும் தலைய புறவு”