This entry is part 3 of 11 in the series 5 ஏப்ரல் 2026

 

இரா.ஜெயானந்தன். 

அந்த கடையில் பிரியாணி சாப்பிட, வரும் ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருந்தனர் மாலினியும், கேசவனும். சில வாசனைகள் நம்மை துரத்திக்கொண்டே வரும்,சில நினைவுகள் போல. 

நீண்ட க்யூவின் கடைசியில் நின்றாள் மாலினி. இடுப்பில் கைக்குழந்தை. கேசவனும் அவனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த பிரியாணி க்யூவில் நினறான். கொஞ்ச நேரத்தில் அவர்களுக்கு பின்னால் க்யூ, மலைப்பாதையை போல் நீண்டுக்கிடந்தது. 

ஊரில் தீபாவளி சமயத்தில்,வெள்ளாடு அறுத்து பங்கு போட்டு கொடுக்கும் போது,கறியோடு ஒருவித புழுக்கை வாடையும் சேர்ந்து வருமென அய்யா சொன்னது கேசவனுக்கு ஞாபகம் வந்தது. 

அவர்கள் பதிமூனு குடித்தனத்தில் ஒரு குடித்தனமாக வாடகை வீட்டில் வசித்தார்கள். யாருக்கும் குறையில்லாமல் ஈரலையும், குடலையும் சரியாக பங்கு போடுவார் ஆம்பூர் பாய். ஆட்டை உரித்து பங்கு போட்டு கொடுத்துவிட்டு ஒரு பங்கையும்,உரித்த ஆட்டுத்தோலையும் எடுத்துச்செல்வார் .எல்லா இன மக்களின் கூட்டமாகத்தான் அந்த வாடகை வீடுகளில் ஒற்றுமையாக வாழ்ந்தது கேசவனுக்கு நினைவில் வந்ததது. எல்லார் வீட்டிலும் அந்த ஆட்டுக்கறிதான் வேகும். ருசிதான் வீட்டுக்கு வீடு மாறும். பீட்டரும், அப்துல்லாவும் கேசவனின் வீட்டில்தான் ஒன்றாக விளையாடுவர். நிலா காலங்களில், ரத்னா அத்தையின், பஞ்சரத்ன உருண்டைச்கவளம் எங்கள் எல்லோருக்குமான உணவாக, கிணற்றடிக்கு பக்கத்தில் விரிந்த முற்றத்தில் கிடைக்கும். நிலா பார்த்துக்கொண்டேதான் ஊர்ந்து போகும். 

மூனீஸ்வரனுக்கு கடா வெட்டும்போது பிரியாணி செய்ய வரும் குத்தூஸ் பாயும் கூடவே நினைவில் வந்தார். 

அவர் தூரத்தில் வரும்போது கூடவே பிரியாணி வாடையும் வருவது போன்ற உணர்வு வரும். சிலரை பார்த்தால் சில நினைவுகள் அப்பிக்கொள்கின்றது. 

பட்டணத்தில் சமையல் கேஸ் கிடைப்பதில் தாமதம் ஆவதால், பெண்கள், டிரம்ப் சண்டையைப்பற்றி அந்த பிரியாணி வரிசையில் நின்றுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பங்கரைகள் சுருங்கி வருகின்றன. வரிசையில் நிற்கும்போது கூட மெகாசீரியல்களைப்பற்றி பேசிக்கொண்டனர் சிலர். கைப்பேசியை நூண்டிக்கொண்டே வரிசைநகர , வாழ்க்கையில் எல்லாமே எந்திரத்தனமாக போனது. 

அந்த குறிப்பிட்ட ,”ஞாயிற்றுக்கிழமை பிரியாணிக்கடையில்” ,ஒரு மணி நேரத்தில் நூறு கிலோ சிக்கன் பிரியாணி தீர்ந்துவிடும் அதிசயம் அதன் பெருமையாக பேசப்பட்டது. அந்த பகுதியின் ஞாயிற்றுக்கிழமை அடையாளமாக அந்த “தம் கடை” பிரியாணிக்கடை நின்றதே அதன் சுவையும், மணமும் அதன் சிறப்பான குறியீடு. அக்பர் காலத்து நவாப், சுல்தான் கதைகளோடு இந்த பிரியாணி சுவை பேசப்பட்டது. இந்த பிரியாணி தயாரிக்கும் சமையல் கூடத்தில், அக்பர் காலத்த

 தலைமுறையின் பதினெட்டாவது தலைமுறை சமையல்காரர் அந்த கடையில் பிரியாணி மாஸ்டராக இருப்பதாக ஒரு கதை வேறு பரவலாக காற்றில் திரியவிட்டனர். . பேரரசி நூர்ஜஹான் அவர்களே இந்த பிரியாணி உணவின் முன்னோடி என கூட்டத்தில் ஒரு வயதான பாய் பேசிக்கொண்டிருந்தார்.அந்த கதைக்கேட்க ஒரு கூட்டம். 

பாசுமதி அரிசியின் வாசனையும், தயிரில் ஊறவைத்த வறுத்த கோழியும், குங்கும பூ, மராத்தி மொக்கு, இஞ்சிபூண்டு மசாலாவை சேர்த்து தம் பிடிக்க வைத்த, “தம்”பிரியாணி முகலாய-இந்திய பராம்பரிய உணவோடு சேர்ந்துவிட்டது. இன்று அது ஐரோப்பா கண்டம் வரை பரவி, நீண்டுக்கொண்டே செல்கின்றது. 

கலாச்சாரங்களோடு கலந்துவிட்ட நளபாகம். நாளை ஒருநாள் “பிரியாணிக்காரன் தெரு” என்ற ஒன்று தோன்றலாம். ஐம்பது ரூபாயிலிருந்து ஐந்நூறு ரூபாய் வரை விதவிதமான பிரியாணி விளம்பரங்களில் மார்கெட் சூடு பிடித்தது. இந்த பிரியாணி கலாச்சாரத்தை, சந்தைப்படுத்தும் விளம்பரங்கள் ஒரு பக்கம் நகரில் வளரத்தொடங்கியது. 

இன்றைய வியாபார உத்திகளில் இதுவும் ஒன்றாக பேசப்பட்டது. 

பிரியாணிக்கடையின் ஒரு பக்கத்தில் முகலாய அக்பர் படமும், அடுத்த பக்கத்தில் இன்றைய அரசியல் தலைவரின் படமும் வண்ண விளக்குகளால் மின்னின. 

மரத்தடியில் ரோட்டோர நாய்கள் எலும்பு துண்டுகளுக்கு அலைந்தன. சில காக்கைகள் மரக்கிளைகளில் காத்துக்கிடந்தன.

 தெருவின் ஓரத்தில் நின்ற பழைய சைவ சண்முக பவனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் காபி குடித்துக்கொண்டிருந்தனர். கல்லாவில் பழநி விபூதியை பூசிக்கொண்டு அமர்ந்திருக்கும் சண்முகம், எதிரே நின்ற தம் பிரியாணிக்கடையை பார்த்து பெருமூச்சு விட்டார். ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த சண்முகபவன் இன்று காத்தோடியது .

 சாம்பார் சாதமும், கறிவகைகளும் சுவைத்த தலைமுறைகள் கொஞ்ச கொஞ்சமாக மலையேறி கொண்டிருந்தன. வாழை மரம், வாழை இலை சித்திரங்களாக பிள்ளைகள்,அடுக்குமாடி குடியிருப்புகளில் வரைந்துக்கொண்டிருந்தனர்.

பிளாஸ்டிக் டப்பாக்களும், கப்பும் கையேந்தி பவன்களில் கொடுத்தார்கள். 

பிரியாணி இன்றைய இளைய சமுதாயத்தின்,கலாச்சார புரட்சியாக நெளிந்தது. பிறந்த நாளா, உடனே பிரியாணி பார்டி. மஞ்சள் நீராட்டு விழா, பேச்சிலர் பார்டி, தேர்தல் கொண்டாட்டங்கள் எல்லாமே பிரியாணி பொட்டலத்தில் மின்னின.

பட்டணங்களில் இரவு பத்து மணிக்குமேல், இளமை கொண்டாட்டமாக, இளமை கும்பல் ஆண்களும், பெண்களும் பிரியாணியை சுவைப்பது ஒரு கலாச்சாரமாகவே உருவாகி வருகின்றது. ஒவ்வொரு பிரியாணி கடைக்கு பக்கத்தில், கண்டிப்பாக ஒரு ஒயின்கடை இருந்தது. குடியும் கூத்தும் தானே, ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டம் .

மாலினி இடுப்பில் குழந்தை மெல்ல நெளிந்தாள். பக்கத்தில் நின்ற கணவனிடம் குழந்தையை கொடுத்தாள். மொபைலை நோண்டிக்கொண்டிருந்தவன், வேண்டா வெறுப்போடு குழந்தையை வாங்கினான். தூக்கி கொஞ்ச வேண்டிய மழலை, மொபைல் தொடுதலில் தொந்தரவாக மாறிப்போனது. பக்கத்தில் நின்ற பெரியவர் காலத்தின் கோலத்தை எண்ணி கலங்கினார்.எல்லாமே இயந்திர கதியாக போனதை தலைமுறையின் சாபக்கேடு என நினைத்தார். இந்த இயந்திர நுணுக்கங்கள் தெரியாத பெரிசுகள் இருப்பதே வீண் என நினைத்தது இன்றைய இயந்திர இளைய தலைமுறை. 

பெரிய பெரிய பிரயாணி அலுமினிய டபராக்கள் வேனில் வந்திறங்கின. 

கூட்டம் வரிசைக்கட்டியது.அதன் வாசனைதான் இவ்வளவு நீண்ட வரிசையின் தோடி ராகமாக தெரிந்தது பாக்கெட்டில் திணிக்கப்பட்ட பீர் பாட்டிலை சரியாக உள்ளே தள்ளினர் பேச்சிலர்கள். கைப்பேசிகளில் செய்திகள் பறந்தன. மற்ற கூட்டாளிகள் கூடும் இடம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் விடுமுறை கொண்டாட்டம் ஆரம்பிக்க ஆரம்பித்துவிட்டது. சிக்கன், மட்டன் பிரியாணி பொட்டலங்களை லாவகமாக அடுக்கிக்கொண்டு, இருசக்கர வாகனங்கள் பறந்தன. 

வரிசையில் நின்ற ஒரு குடிமகனுக்கு அரைபிளேட் பிரியாணி வாங்க கொஞ்சம் சில்லறை குறைந்தது. 

போதையில் தள்ளாடிக்கொண்டே கூட்டத்தில் கையேந்தினான். மற்ற குடிமகன்கள் கொஞ்சம் தர்மம் செய்தார்கள். அவனும் தெம்பாக வரிசையில் நின்றான். நேரம் சென்றுக்கொண்டே இருந்தது. வரிசை திருவிழா தேர்போல மெல்ல மெல்ல அசைந்தது. 

எதிரே ரோட்ரோ கையேந்தி பவனிலும், பிளாட்பாரங்களில் நின்றுக்கொண்டு சிலர், குஸ்கா சாப்பிட்டனர். பெரிய அலுமினிய டபராக்களில் கறித்துண்டை எடுக்கும் போது கரண்டியால் மாஸ்டர் டக்கு..டக்குன்னு…,தட்டுவது பசியை அதிகமாக தூண்டிவிட்டது மாலினிக்கு.

 அடுப்பில் மனக்கும் கறிக்குழம்பு கொதித்துக்கொண்டிருந்தது. கேஸ் விலை உயர்வாலும், கேஸ் கிடைக்க பலநாள் காத்துக்கிடப்பதாலும், தள்ளுவண்டி பிரியாணிக்கடைகள் கரி அடுப்பிற்கு மாறின. 

ஆம்பூர் பாய் பிரியாணிக்கடையில் கூட்டம் அலைமோதியது. வெளியே சாக்பீஸீல் எழுதிய அட்டையில், 

தலைக்கறி,மூளை, கிட்னி, ஈரல், குடல்கறி, ஸ்பெஷல் அயிட்டமாக ரத்த பொறியல் என எழுதியிருந்தனர். 

ஆட்டோக்களை நிறுத்திவிட்டு இறங்கிய கூட்டம் ஆட்டின் அத்தனை பாகங்களையும் சுவைத்தது. பிளாஸ்டிக் குடத்தில்

 தண்ணீர் கொண்டு வந்து பீப்பாய்களில் கொட்டினர் பெண்கள். 

பள்ளிப்படிப்பை முடிக்காத சிறுவர்கள் சாப்பாட்டு தட்டை கழுவிக்கொண்டிருந்தனர், பிளாட்பார பிரியாணிக் கடைகளில். 

 தீடீரென ஒரு போலீஸ் ஜீப் கடைக்கு பக்கத்தில் நின்றது. மப்டியில் வந்த போலீஸ்காரர் பத்து பாக்கெட் பிரியாணியை வாங்கிச்சென்றார். கல்லாவில் அமர்ந்திருந்த பாண்டி அவர் காதில் ஏதோ ஓதினார். ஜீப் பறந்தது. கல்லா பாண்டி ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டிருந்தான். கடைக்கு பக்கத்தில் எலும்புக்காக சுற்றித்திரியும் நாய்களை கல் எறிந்து துரத்தினான். 

மற்றொரு ரோட்டுக்கடையில் ஒரு கிலோ பிரியாணி வாங்கினால், கால்கிலோ பிரியாணி இலவசம். ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால், கால்கிலோ சிக்கன் 65 இலவசம் என்ற பகட்டான பிரியாணி மந்திரம் பலரையும் இழுத்தது. நாளை நடக்கப் போகும் கட்சி ஊர்வலத்திற்கு , நூறு கிலோ பிரியாணி தயார் செய்துக்கொண்டிருந்தார் ஆம்பூர் பிஸ்மில்லா. தம் அடுப்பில் தம் பிரியாணி நெருப்பின் கதகதப்பில் வாசனையை பரப்பிக்கொண்டிருந்தது. 

அரைமணி நேரத்தில் அந்த “தம் பிரியாணி” தீர்ந்தது என ஞாயிற்றுக்கிழமை தம் பிரியாணிக்கடைக்கு வெளியே எழுதி போட்டனர் . நீண்ட நேரம் நின்ற கூட்டத்தில் பலர் முனுமுனுத்துக்கொண்டே கலைந்தனர். அடுத்த வாரம் சிக்கிரமே வரப்போவதாக சிலர் பேசிக்கொண்டனர். சிலர் ரோட்டுக்கடைகளை நோக்கி பாய்ந்தனர். ஆனால் அங்கும் காலி பிரியாணி டபராக்களை கழுவிக்கொண்டிருந்தது பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. 

மாலினி மிகுந்த ஏமாற்றுத்தோடு, கணவனை திட்டினாள். ஒழுங்கா ஒரு கிலோ கோழிக்கறி வாங்கியிருந்தா இந்த லோல்பட தேவையில்லை என கூச்சலிட்டாள். ஆமாம் வீட்டுல காஸ் குறைச்சல இருக்குன்னு சொன்னீயே என மனைவியிடம் எரிந்து விழுந்தான் கேசவன். 

மதியம் உச்சி வெய்யில் தலைக்கு மேல் அடித்தது. 

மனைவியையும்,குழந்தையையும், பைக்கில் ஏற்றிக்கொண்ட கேசவன், நகூரான் கறிக்கடைக்கு பறந்தான். இவ்வளவு நேரத்துக்கு பிறகு அந்த கடையில் கறி கிடைப்பது கஷ்டம்தான் என தனக்குதானே சொல்லிக்கொண்டான். ஏதேதோ நினைத்துக்கொண்டு பைக்கை வேகமாக ஓட்டினான். 

குழந்தை, பாலுக்காக சினுங்கியது.

பைக்கை சீக்கிரம் வீட்டிற்கு ஓட்டுமாறு கூறினாள். 

நாகூரான் கறிக்கடை வழியாக பைக்கை ஓட்டினான் கேசவன். ஆனால் வியாபாரம் முடிந்து பாய் கடையை மூடிவிட்டு சென்றது, கேசவனுக்கு வருத்தமாக இருந்தது. 

வீட்டை அடைந்தவுடன், மாலினி  அவசரமாக கதவைத்திறந்து சோர்ந்துப்போன குழந்தையை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, பாலை காய்ச்சி பாட்டிலை நிரப்பி, குழந்தையை லாவகமாக தூக்கி முத்தமிட்டாள். 

மெல்ல கண் திறந்து பார்த்தது குழந்தை. மார்போடு அணைத்துக்கொண்டு பால் பாட்டிலின் நுனியை வாயில் வைத்தாள். குழந்தை மடக்மடக்கென்று பாலை உறிஞ்சிக்குடித்தது. குடித்த வேகத்தில் ஆயாசமாகி மீண்டும் தூங்க ஆரம்பித்தது. 

கேசவன் டிவியை திருகி போர் செய்திகளை பார்த்துக் கொண்டே, மாலினியை அழைத்தான். 

பிரிட்ஜை திறந்த மாலினி, நேற்று செய்த வெஜிடபிள் பிரியாணி மிச்சமிருப்பதை பார்த்தாள். அடுப்பில் குண்டானை வைத்து சூடாக்கினாள். பிரியாணி வாசம் கேசவனை இழுத்தது. சாப்பாட்டு தட்டுக்களை கழுவி, இரண்டு பேருக்கும் குடிக்க ஐஸ் வாட்டரை வைத்தான். 

மாலினியும், கேசவனும் ,டிவியில்  “சிறை”படம்  பார்த்துக் கொண்டே பிரியாணியை சுவைத்தனர். 

==========================

Series Navigationமௌனம் பேசும்மழை புராணம்: 26 – இரும்பு வாழ்வு