This entry is part 5 of 11 in the series 5 ஏப்ரல் 2026

அமர்நாத்

1968 

திரு எம். ஜி. ராமசந்திரன் நடித்த நூறாவது திரைப்படம் ஒளிவிளக்கு வெளியானது. அதில் சாந்தி (சௌகார் ஜானகி) பாத்திரத்திற்காக பி. சுசீலா பாடிய, ‘இறைவா! உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு!’ என்ற உருக்கமான பாடல் எம்ஜிஆர் இறுதிக்காலத்தில் பலமுறை ஒலித்து ரசிகர்கள் நெஞ்சில் நிறைந்தது.  

அக்டோபர் மாதத்தில் சூரியன் சாய்ந்தாலும் சூடு தணியாத மாலை. பேருந்தின் வரவுக்குக் காத்திருந்த குமரநாதனின் மனதில் அசாதாரணத் தெளிவு. சுற்றுச்சூழலை அவன் உடலின் அங்கங்கள் முழுவதுமாக அனுபவித்தன. காரணம், அரை மணிக்கு முன் தொலைவில் தெரிந்த யு.எஸ். தூதரகத்தில் முடிந்த ஜிஆர்ஈ. பள்ளிக்கூட இறுதித்தேர்வுகள், ஐஐடி நுழைவுப் போட்டி, அதில் நுழைந்ததும் மாதாந்திர பரீட்சைகள்- எதுவும் அவனை அச்சுறுத்தியது இல்லை. இன்றைய தினம் அவனுக்கு ஒரு சவால். உலகெங்கும் பல இடங்களில் பங்கெடுத்தவர்களைக் காட்டிலும் அவன் புத்திசாலி என்று காட்டிக்கொள்ள ஒரு வெறி. சில வாரங்களில் தேர்வின் முடிவுகள் யு.எஸ்.ஸின் மூன்று உச்ச பல்கலைகளுக்கு அனுப்பப்படும். அவற்றின் அழைப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவனுக்கு அடுத்த ஆண்டின் பெரிய பிரச்சினை. 

பெண் பார்க்கும் படலத்தில் தனியாக சந்திப்பு. 

“வெட்கப்படும் காரியம் செஞ்சிருந்தா இப்பவே சொல்லலாம்” என்கிறாள் அவள்.    

“எனக்கு… எனக்கு… தேர்வுகள் – எழுத்து, நேர்முகம் – எதுவானாலும் ரொம்பப் பிடிக்கும். அனுபவிச்சு ஆனந்தமா செய்வேன்.” 

“அடப்பாவி!… சாரி!” 

நேரக்கட்டுப்பாடு போட்டித்தேர்வின் முக்கிய அங்கம். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அவன் மூளையைப் பிழிந்து சிறு தவறு கூட நேராமல் முடித்தபோது உடலில் களைப்பு. ஆனால் மூளையில் தனி விழிப்பு. அவனுடன் தேர்வுக்கு வந்த சக-மாணவர்கள் தேர்வின் கனமான நினைவுகளைக் கரைக்க திரைப்படத்துக்குத் திட்டமிட்டபோது அவன் விலகிக்கொண்டான். சாதனையின் சந்தோஷம் தணிவதற்குமுன் வீட்டிற்குப்போய் கொண்டாடிவிட்டு மறுநாள் விடுதிக்குத் திரும்பிவிடலாம். 

நிறுத்துமிடம் வந்தபோது அங்கே ஒருத்தி. அவன் வந்து நின்றதை ஒரு கணம் கவனித்துவிட்டுப் பார்வையைத் தொலைவில் நிறுத்தினாள். அந்த முகத்தின் வருத்தம் அவன் மகிழ்ச்சியை மட்டுப்படுத்தியது. இலேசான வெள்ளைக்கோடுகள் இழைத்த இளம் பழுப்பு டெரி-காட் சேலை, அலங்காரத்துக்காக அல்லாமல் அவசியமான பொருட்களுக்கான கைப்பை. அவனுடைய விதவை அத்தையின் பெண்கள் போல அவளும் ஒரு அலுவலகப் பெண். கீழ் இருபதுகளில் இருந்த சௌந்தரமும் சங்கரியும் சம்பளத்தைத் தங்கள் திருமணச் செலவுகளுக்குச் சேர்க்கிறார்கள். இவள் வயதை முப்பதுக்குமேல் சொல்லலாம். 

இதுவரை அவன் வாழ்க்கை ஒரு பேருந்துப்பயணம். இனி வாழ்க்கை விமானத்தின் வேகத்தில். அதற்கான ஓடுதளத்தை ஆரவாரமாக அன்று கட்டிவிட்டான். இந்த நிச்சயத்தின் விதை… 

முந்தைய பத்தாண்டில் ஒரு வாரம் மிச்சம். 

மூன்றாம் படிவத்தின் (இன்றைய எட்டாம் வகுப்பு) கடைசி அரைப் பரீட்சை முடிந்த சந்தோஷம். ஒவ்வொரு தடவையும்,

“அடுத்த வருஷம் தான் திரும்பி வரப்போறேன்” என்று உயரத்துக்கும் பெயரின் நீளத்துக்கும் பொருந்தாத அனந்தசுப்ரமணியன் சொல்வது வழக்கம். அன்று, “நாம மறுபடி இங்கே கால் வைக்கறப்ப ஆறாவது பத்தாண்டு ஆரம்பிச்சிருக்கும்” என்று கண்களை விரித்தான். எல்லாமே அவனுக்கு ஆச்சரியம். 

குமரநாதனுக்கு அது பெரிதாகப் படவில்லை. என்ன பிரமாதமாக நடந்துவிடப் போகிறது? ஐம்பத்தெட்டுக்குப் பிறகு ஐம்பத்தொன்பது போல அறுபதும். அவ்வளவுதான். இதென்ன அறுபதாம் கல்யாணமா? வீட்டில் நுழைந்தபோது,  

“எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு.” 

“குருக்கள் வந்ததும் பெருமாளுக்கு ஸ்பெஷல் அர்ச்சனை பண்ணணும்.” 

“ஆனா, இனிமே வேலை கரூர் ஸ்டேஷன்ல இல்ல, மெட்றாஸ் சென்ட்ரல் பக்கத்தில.” 

ஒரு வாரத்துக்கு முன் அவன் தந்தை மூன்று நாள் சென்னை போய்வந்தார். ஒன்றுவிட்ட மாமாவைப் பார்க்க என குமரநாதன் நினைத்திருந்தான். திருச்சியில் பிறந்து வளர்ந்த அவன் அம்மாவுக்கு பெரிய ஊர் போக வேண்டும் என்கிற ஆசை. அதை மறைத்து,  

“போகணும்னா போய்த்தான் ஆகணும்.” 

“தாம்பரம் ரயில்வே காலனில வீடு. நாம இப்பவே கிளம்பிப் போயிடுவோம். அத்தையும் பெண்களும் ஏப்ரல் வரைக்கும் இங்கே.” 

குமரநாதனின் படிப்பு?   

“சூப்ரெண்ட், ‘உமக்கு ஒரு பையன்தானே. பேசாம அவனை கமலா பத்ரிக்கு அனுப்பும்’னு சொன்னார். அவர் பையனும் அங்கே வாசிக்கறானாம். காலேஜ் போறதுக்கு ஸ்பெஷல்லா பாடம் நடத்துவாளாம்.” 

“எங்கே இருக்கு?” 

“மாம்பலம் பக்கத்தில. ஆத்திலேர்ந்து போயிட்டுவர ரயில் பாஸ். பள்ளிக்கூட சம்பளம் மட்டும் தான் நம்ம செலவு.”   

கரூரில் குமரநாதனின் வகுப்பில் கிராமத்துப்பையன்கள், ஒரே ஒரு சட்டை-கால்சட்டை ஏழைகள், சம்பளம் கட்டும் நாலைந்து பேர். புதிய இடத்தில் எல்லாருமே சம்பளம் கட்டும் பசையான குடும்பங்களில் இருந்து. அங்கே அனைவரும் நண்பர்கள், இங்கே நட்பில் பிரிவுகள். ஏதோவொரு சட்டை ட்ராயருக்கு பதில் சீருடை, பள்ளிக்கு நடந்துபோகாமல் ரயில், தேர்வுகளில் தீவிரப்போட்டி என புது வாழ்வும் அதன் எதிர்பார்ப்புகளும் குமரநாதனுக்குப் பழகிவிட்டன. மேலதிகாரி சொன்னது போல விரும்பிய கல்லூரி மற்றும் ஐஐடி கதவுகள் அவன் வருவதைப் பார்த்துத் திறந்தன. இப்போது பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால்…

டொக்… டொக்…  

தடியை ஊன்றி நடந்த ஒரு நடுவயதினர். அவருடன் சிவப்பு சட்டையும் சிவப்புக்கறை வேட்டியும் அணிந்த இன்னொருவர். அவர்கள் பேசிக்கொண்டே வந்த சத்தத்தில் அவள் பார்வையைத் திருப்பினாள். இரண்டு கன்னங்களிலும் ஈரத்தின் நீண்ட சுவடுகள். வேலையின் பிரச்சினையோ? இல்லை, வேலையையே இழந்திருக்கலாம். வருமானம் ஜீவனத்துக்கே அவசியமாக இருந்தால்? காரணம் கேட்டு அவளுக்கு ஆறுதல் சொல்லாமல் தடுக்கும் சமுதாயக் கட்டுப்பாடுகள் மேல் கோபம் வந்தது.  

பஸ் வந்து நின்றதும் அவளுக்கு வழிவிட்டார்கள். பிறகு தடி ஊன்றியவரும் அவர் நண்பரும் ஏற அவன் காத்திருந்தான். 

“நீ முன்னாடி போ!” 

முன் பக்கத்தில் ஒரு காலி இடம். 

நிதானமாக வந்தவர் பக்கம் திரும்பி, 

“நீங்க உக்காருங்க! நான் ஏழு மணி ஒரே இடத்தில உட்கார்ந்துட்டு வந்திருக்கேன்” என்றான்.   

“தாங்க்ஸ் தம்பி! கையில என்ன புஸ்த்தகம்?”  

கையை நீட்டிக் காட்டினான்

“எ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் த யுனைடெட் ஸ்டேட்ஸ். ம்ம்.. இருநூறு வருஷ சரித்திரத்தை இருநூறு பக்கங்களிலே சுருக்கி இருக்காங்க. பலே!”  

தேர்வு முடித்து வந்தபோது கான்ஸுலர் அலுவலகத்தில் கொடுத்த பரிசு. அவனுடைய அடுத்த பயணத்துக்கு முன்னுரை. டிசம்பர் விடுமுறையில் அதற்கு இரண்டு நாட்கள். 

சில நிறுத்தங்கள் கடந்ததும், கும்பல் குறைந்து சிவப்புச் சட்டை நண்பருக்கும் அவனுக்கும் உட்கார இடம் கிடைத்தது. பஸ்ஸின் பின் பக்கம் பார்த்தபோது அவள் இல்லை. 

‘இறைவா! இன்று என் எதிர்காலத்தைத் தீர்மானித்த நீ அவள் பிரச்சினையையும் தீர்த்தால் உனக்கு என்ன குறைந்துவிடும்?’

“அந்தப் பையன் காட்டின புஸ்தகத்தை நீ படிச்சிருக்கியா?” என்கிறார் சிவப்புச் சட்டை. 

“ஊகும்.” 

“நான் அதைப் படிச்சு கட்சி மாறிடுவேன்னு ஒருத்தர் ரொம்ப நம்பிக்கையோடு கொடுத்தார். ஒரு அரைகுறை ப்ராபகண்டா. சின்னதா இருந்தாலும் ஒரு நல்ல சரித்திரம்னா மக்கள் இயக்கம், கொள்கைகளின் மாற்றம், அறிவு வளர்ச்சி எல்லாத்தையும் கச்சிதமா விவரிக்கணும். இதில அப்படி ஒண்ணும் கிடையாது. நாட்டுக்கு ஒரு பிரச்சினை, அதை அப்போதைய ஜனாதிபதி எப்படி சமாளிச்சார்னு அவர் புகழ். அப்புறம் அடுத்த பிரச்சினை, அவ்வளவுதான். ப்ளேர் மௌன்ட்டன் தெரியும், இல்ல?” 

“ம்ம்.. 1921ல வெஸ்ட் வர்ஜீனியா சுரங்கத் தொழிலாளிகளுக்கும் அவங்களை அந்த நிலக்கரி மாதிரி  அற்பமா நடத்திய சொந்தக்காரங்களுக்கும் நடந்த போர். குறைஞ்சது நாற்பது தொழிலாளிகள் இறந்தாங்க. ஆயிரம் பேரை ஜெயில்ல போட்டாங்க. யுனியனை அடக்கி ஒடுக்கிக் கொன்ற கூலிப்படைக்கு எந்த தண்டனையும் கிடையாது.” 

“சரி, அதைப்பத்தி ஒரு குறிப்பும் இல்ல. அதுக்கு முன்னாடி ராக்கஃபெல்லரோட கொலராடோ சுரங்கத்தில நடந்தது இன்னும் மோசம். ஸ்ட்ரைக்கை முறிக்க இருபத்தியோரு பேர் – அதில பதினோரு குழந்தைகள் – இருந்த கூடாரத்தையே எரிச்சிட்டாங்க. அதையும் குறிப்பிடல. இந்த ரெண்டு சம்பவங்களும் தொழிலாளர்களின் நலனைக் காப்பாற்றும் சட்டங்களுக்கு ஆரம்பம்னு சரித்திரத்தில தனி இடம். இதை எழுதின பெரிய ப்ரொஃபசருக்கு அது தெரியல. தெரிந்திருந்தாலும் எடுத்துச்சொல்ல தைரியம் இல்ல.”   

நவராத்ரிக்கும் தீபாவளிக்கும் இடைப்பட்ட காலம் என்பதால் பாண்டி பஸார் கடைகளில் நுழைந்து வெளிப்பட்ட மனிதர்கள். பஸ் பயணம் முடிந்து ரங்கனாதன் தெருவின் மனித கும்பலில் ஒன்றினான். பட்டுச் சேலைகள், இரட்டைப்பின்னல்கள். பாவாடை சட்டைகள், பஞ்சக்கச்சம், தலைப்பாகை, முண்டாசுகள். சந்தடியின் இரைச்சல், பொரி பட்டாணிக் கடையின் மணலில் வேர்க்கடலை வறுபடும் வாசனை. இந்த அனுபவம் இன்னும் சில ஆண்டுகளுக்குக் கிடைக்காது என்ற எண்ணத்தில் எதையோ இழந்த தவிப்பு. 

மாம்பலம் மின்சார ரயில் நிலையத்தில் இரண்டு கால்களும் இழந்து தரையில் தவழ்ந்து வந்த பிச்சைக்காரியின் கையில் சில காசுகளை வைத்தான். நாலைந்து ஆண்டுகளாகவே அவளை அவன் அங்கே பார்க்கிறான். மனிதர்களின் இரக்க குணத்தைக் காட்டுகிறதோ? 

கிட்டத்தட்ட மாலை முடிந்துவிட்டது. 

தொலைவில் வண்டியின் முன்விளக்கு தெரிந்தபோது டொக்… டொக்… பரிச்சயமான பஸ் பயணிகள் வருவதைப் பார்த்து வழிவிட்டு நின்றான். இருவரும் ஏறியபிறகே வண்டியின் உள்ளே கால்வைத்தான்.  

கிண்டியில் கூட்டம் குறைந்து மூவரும் உட்கார இடம்.

“போன வாரம் கமலா பத்ரிக்குப் போனியே. எப்படி போச்சு?” என்று கம்பின் மேல் முகவாயைப் பதித்து அவர் கேட்கிறார். 

சிவப்பு சட்டைக்காரர், “ஓ! அதுவா? ‘சரித்திரத்தில மார்க்ஸின் இடம்’ என்கிற தலைப்புல பேசறதுக்கு முன்னாடி, ‘காந்தி நேருவைத் தவிர சுதந்திரப் போராட்டத்தில ஈடுபட்டவங்க பேரைச் சொல்லுங்க’ன்னு கேட்டேன். ஒண்ணு ரெண்டு பேர் ராஜாஜி காமராஜ்னு சொன்னாங்க. இன்னும் நாலு வருஷத்தில சுதந்திர இந்தியாவின் வெள்ளிவிழா. அதுக்கு முந்தியே ஒரு வேள்விக்காக தங்களோட வாழ்க்கையை, ஏன் உயிரையே அர்ப்பணித்த தியாகிகளை, சுதந்திர காற்றைச் சுவாசிச்சிகிட்டு பிறந்தவங்க மறந்துட்டாங்க.” 

பசுபதீஸ்வரவர் முனிசிபல் மேனிலைப்பள்ளியில் குமரநாதனின் முதல் தினம். குடியரசு ஆண்டில் ஆரம்பித்த அப்பள்ளிக்கூடத்தின் வகுப்புகளுக்கு சுதந்திரப்போராட்ட வீரர்களின் பெயர்கள். அவற்றைப் புதுக்கருக்கு அழியாத கரும்பலகையில் ஆசிரியர் சொல்லச்சொல்ல எழுதுகிறான்.  

VI-A  பாரதியார் V-A  சுபாஷ்சந்திர போஸ் 

VI-B  மகாத்மா காந்தி V-B  ஜவஹர்லால் நேரு 

V-C  வல்லப்பாய் படேல் 

………………..

II-A  ராஜேந்திர பிரசாத் I-A  ஜான்ஸி ராணி 

II-B  வ. உ. சி. I-B  கட்டபொம்மன் 

II-C  பகத்சிங் I-C  திலகர் 

I-D  —– 

“நம்முடைய I-D வகுப்பு இந்த வருஷம் தான் புதுசா வந்தது. இனிமேலதான் இதுக்கு பெயர் வைக்கணும். அது நம்ம முதல் வேலை. இதில் இல்லாத பெயரா சொல்லுங்க, பார்க்கலாம்!” 

இப்படிப்பட்ட கேள்வியை எதிர்பார்க்காத மாணவர்களுக்கு யோசிக்கும் மௌனம். ஆசிரியர் அவன் பக்கம் திரும்பி, 

“உன் பெயரை இன்னொருவாட்டி சொல்!”  

“குமரநாதன். இரண்டு தேசபக்தர்களின் பெயர்களைச் சேர்த்து வச்சாங்க…” என்கிறான் பெருமையுடன். 

நாட்டின் விடுதலைக்கு உயிர்த்தியாகம் செய்த அந்த இருவர்… ஒருவரின் பெயர் வகுப்புக்கு சூட்டப்பட்டது. அத்துடன் அவன் வகுப்பின் மானிட்டர். காலை கொடி வணக்கத்தின் முடிவில், பாரதியாரில் தொடங்கி ஒவ்வொரு மானிட்டரும் ஒரு தப்படி முன்னால்வைத்து வகுப்பின் பெயரை அறிவித்து தேசியக்கொடிக்கு சல்யுட் வைப்பது வழக்கம். மறுநாள் தன் முறை வந்ததும், “ஃபர்ஸ்ட் ஃபாரம் டி திருப்பூர் குமரன்” என்று குமரநாதன் விறைப்பாகச் சொல்லி வணக்கம் செலுத்தினான். கையை உடனே இறக்காமல் கொடி பிடிப்பது போல நீட்டி உயர்த்தினான். மாணவர்களின் ஆரவாரம். 

தாம்பரத்தில் மின்வண்டி நின்று காலியான பிறகுதான் உணர்வு வந்து குமரநாதன் எழுந்தான். முகத்தின் வேர்வையைத் துடைத்துக்கொண்டு வெறுங்கையுடன் இறங்கி நடந்தான். நீண்ட மேம்பாலத்தைக் கடந்து ரயில் ஊழியர்களின் குடியிருப்பில் இரண்டாம் வரிசை. 

அவன் வீட்டில் நுழைந்த சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து அத்தை எட்டிப் பார்த்தாள். அங்கிருந்து வெளிப்பட்ட அம்மாவுக்கு, வரப்போவதாக அவன் முன்பே தெரிவிக்காததால், ஆச்சரியம். உடனே ஞாபகம் வந்து, 

“பரீட்சை எப்படிடா போச்சு?” 

“பிச்சு உதறிட்டேன்.” 

“சுவாமி படங்களுக்கு முன்னாடி விளக்கேத்திருக்கேன். போய் நமஸ்காரம் பண்ணு.” 

அதைச் செய்தான். அம்மா நினைத்த காரணத்துக்காக அல்ல. உள் அறையின் மேஜை மேல் பாஸ்போர்ட் விண்ணப்பமும், ஒரு பழுப்பு காகித உறையும். அடுத்த ஜுன் வரை எதற்குக் காத்திருக்க வேண்டும். அவன் யு.எஸ். பயணம் என்னவோ நிச்சயம். இப்போதே அதற்கான ஏற்பாடுகள். விண்ணப்பம் அன்டர் செக்ரடரியின் கையெழுத்துக்குக் காத்திருந்தது. உறையைப் பிரித்து படங்களை எடுத்தான். இப்போதைய முகம். ஆனால் கழுத்தின் ட்டையில் எதிர்காலம் தெரிந்தது. 

“வெளி நாட்டுக்கெல்லாம் போறீங்க. அங்கேயே தங்கினாலும் தங்கிடுவீங்க. ட்டை இல்லாட்டி எப்படி?” 

ஸ்டூடியோ புகைப்படக்காரரிடம் இரவல் வாங்கி… 

படங்களை மறுபடி உறையில் வைத்தான். விண்ணப்பத்தாளை இரண்டாக, பிறகு நான்காக… 

இந்திய சுதந்திர தினத்துக்கு முன் பிறந்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்காத என் நண்பனுக்கு.

Series Navigationமழை புராணம்: 26 – இரும்பு வாழ்வுஈரான் போரும் உலக ஒழுங்கு மாற்றங்களும்