எழுதும்
போதெல்லாம்
அமரமுடியாமல்
ஆழிமேல் பறக்கும்
புறாவாகிறது
வலிகளைக்
கண்ணீரில் எழுதி
முற்றுப்புள்ளியில்
புன்னகைக்கிறது
ஊசிநூலாகி
கவிதை தைக்கிறது
நடையறியாக் காட்டில்
பாதை செய்கிறது
கொடுத்தோர்
பறித்தோர்
கீறியோர்
நீவியோர்
சுட்டோர்
சுரண்டியோர்
கல்லெறிந்தோர்
பூவெறிந்தோர் என
மழைமழையாய்
ஞாபகங்கள்
மனசில் விழுந்து
சொற்களாகி
மண்ணில் தவழ்ந்து
ஆறாய் நடந்து
கடலில் முடிகிறதோ?
அது முடிவா?
முகவுரையா?
தென்றலாய்
முகிழாய்
இருளாய்
ஒளியாய்
இடியாய்
மின்னலாய்
புயலாய்
பூகம்பமாய்
ஓயாப் பயணத்தில்
எழுத்து
அமீதாம்மாள்