This entry is part 10 of 13 in the series 9 ஆகஸ்ட் 2026

“ஹலோ சார், இது வினோத் சாருங்களா?”

“ஆமாம், சொல்லுங்க. நீங்க?”

“சார், நாங்க ஐ.ஐ.பி. வங்கியின் கடன் பிரிவிலிருந்து பேசுறோம்.”

“சொல்லுங்க. நேத்துதானே பேசுனீங்க? இப்ப என்ன மறுபடியும்?”

“சார், இது நினைவூட்டல் கால் சார். உங்க மாதிரி வங்கியில் கடன் வாங்கிய நபர்கள் அனைவருக்கும் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து ஐந்தாம் தேதி வரை இப்படித்தான் போன் பண்ணி நினைவூட்டிக்கிட்டே இருப்போம்.”

“ஏம்மா, அதான் ஒண்ணு உங்கிட்ட கேட்கிறேன். கடன் வாங்கினவங்களுக்கு இத்தனாம் தேதிக்குள்ள பணத்தோட பிரீமியம் செலுத்தணும்ங்கறது தெரியாதா? சொல்லுங்க.”

அதையும் தாண்டி இப்படி தொடர்ந்து தொந்தரவு செய்தால் எப்படி?

இங்குள்ள எல்லாருக்கும் மனசாட்சி இருக்கா இல்லையானு தெரியலையே! எப்படி மனசு வருது, விடாமல் போன்ல தொறத்துறாங்களே.

இவுங்களுக்கு இதுதான் வேலை. ஆனா, மறுமுனையில் இருப்பவர்கள் எந்த நிலைமையில் இருக்காங்கன்னு ஒரு கணமேனும் சிந்திக்கிறாங்களா இவர்கள்?

மாதம் ஒன்றுக்கு ஒரு முறை என்றால் பரவாயில்லை. மாதம் முதல் தேதியிலிருந்து ஐந்தாம் தேதி வரை காலை எட்டு மணி முதல் மாலை எட்டு மணி வரை விடாமல் போனைப் போட்டு, ஐந்தாம் தேதி பணம் எடுக்கப்படும் அக்கவுண்டில் பணம் உள்ளதா என்று மாதம் முதல் தேதியில் கேட்ட அதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டால், ரிசீவரை எடுத்து பதில் சொல்பவனுக்கு எவ்வளவு கோபம் வரும். அதை ஏன் புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்க?

அவனவன் வாங்கிய கடனை எப்படி அடைப்பது, இந்த மாதம் எதைச் சேமிக்கலாம், எந்தக் கடன்காரனுக்கு எவ்வளவு தரணும் என்கிறதை மொபைலில் ரிமைண்டராகப் போட்டு வைத்துக்கொண்டு, மாதம் முதல் தேதியிலிருந்து ஐந்தாம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மொபைல் ஸ்கிரீனில் அது ஒரு முறை காலையிலும், ஒரு முறை சாயந்திரமும் வந்து மறையும்.

இதையும் மீறி ஒருவனுக்கு அவனுடைய வேலையைப் பார்க்க முடியாமல் இப்படி இவங்க இடையூறு செய்தால் என்னன்னு சொல்வது? பல நேரங்களில் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கிறது. ஏன்டா நாம கடன் வாங்கிட்டோமுன்னு நினைக்க வச்சுடுறாங்க இவுங்க.

அப்படித்தான் பாருங்க, வினோத்தும் அவனுடைய மொபைல் பழசானதால் புது மொபைல் வாங்கலாம், கடைக்குப் போகலாம்னு எண்ணியிருந்தான். அச்சமயம் பார்த்து அவனுடைய மகளும்,

“அப்பா, எனக்கு கண்டிப்பா என்னோட மொபைலை மாத்தணும்னு,”

ஒத்தைக் காலில் நின்றாள். அவள் வேற இப்ப வேலைக்குச் சேர்ந்த புதிது. அவளிடம் சொல்லியிருக்கலாம்…

“ஏம்மா, அதான் நீ வேலையில் சேர்ந்துட்டியே. நீயே பணம் சேர்த்தி மொபைல் வாங்கிக்கலாமில்ல?” என்று.

ஆனா, இத்தனை வருடமா “அப்பா, எனக்கு இது வேணும், அது வேணும்”ன்னு அவள் சொல்றப்ப, அதை மறுக்காமல் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இப்ப போய் எப்படி அவளிடம், “நீயே சம்பாதித்து வாங்கிக்கோ” என்று சொல்வது? ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது. அதனால, அவளிடம்…

“சரிம்மா, உன்னோட பட்ஜெட் என்ன?”ன்னு கேட்டான்.

“அப்பா, அந்த ஆபீஸுல அனைவரும் ஐபோன்தான் வைத்திருக்கிறார்கள். அதனால எனக்கும் புதிய மாடல் ஐபோன் வேணும்,” என்றாள்.

வினோத் ஒரு முறை அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தான்.

“ஐபோனேதான் வேண்டுமா? வேற போன் வேண்டாமா?”

“என்னப்பா நீ? ஒரு முறை வாங்கப் போறோம். அப்புறம் குறைந்தது ஐந்து வருஷமோ இல்ல ஆறு வருஷமோ வைத்திருக்கப் போறோம். சும்மா சும்மாவா ஐபோன் அவ்வளவு பேர் வாங்குறாங்க?”

“ஏம்மா கவிதா, ஐபோன் விலை எவ்வளவுன்னு தெரியுமா?”

“அப்பா, இப்ப இருக்கிற மாடல் சுமார் எழுபது ஆயிரம் ரூபாய்.”

“ஏம்மா கவிதா, இரண்டு ஐபோனையும் சேர்த்துத்தானே சொல்றே?”

“ஏம்பா, வம்பாப்போச்சு! ஒரு ஐபோனோட விலையே எழுபது ஆயிரம் ரூபாய்,” என்றாள் கவிதா.

“எத்தனை காலத்துக்கு நீ இப்படி ஓட்ட மொபைல் வைச்சுக்கிட்டு இருப்ப? நீயும் இனி ஐபோன் வாங்கிக்கோப்பா!”

“ஏம்மா, எனக்கு இந்த ஓட்ட மொபைலே போதுமுன்னு தோணுது. ஆனா, நீயும் உன் அம்மாவும் தான் இந்த மொபைலோட லைஃப் முடிஞ்சுடுச்சு, வேற மொபைல் வாங்குங்கோன்னு சொன்னதால இங்க வந்தேன். ஆனா, நீ சொல்லறதை வைத்துப் பார்த்தா, இப்ப இரண்டு மொபைல் வாங்கணும்னா லட்சத்து ஐம்பதாயிரம் வரும் போல இருக்கே.

நம்மகிட்ட அவ்வளவு பணமில்லையே. ஏற்கனவே வீட்டோட கடனும், மாசாமாசம் வீட்டுக்குன்னு ஆகுற செலவுமே கன்னாபின்னான்னு வருது. இதுல இது வேற சேர்ந்தியாச்சுன்னா, உன் அப்பாவால இழுத்துக்கட்ட முடியுமான்னுதான் ஒரு கணம் யோசிக்கிறேன்.”

“ஏம்பா, பெரிசா ஒண்ணும் யோசிக்காதப்பா. இந்த உலகத்துல இருக்கிறவங்களில் முக்கால் வாசி பேர் கடன்லதான் தங்களோட வாழ்க்கையை நகர்த்திட்டு வருகிறார்கள். இப்பெல்லாம் கடன் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலா மாறிக்கிட்டு வருதுப்பா. இப்ப போயி நீ இப்படி யோசிக்கிறியே!”

மகள் இப்படிச் சொல்லிட்டாளே என்று எண்ணிய வினோத், மொபைல் ஷோரூமில் இருக்கிற கடன் பிரிவுக்குச் சென்று, என்ன ஃபார்மாலிட்டீஸ்ன்னு விசாரிக்கப் போதுதான் தெளிவாக விளங்கியது. நம்முடைய அனைத்து விவரங்களையும் அவர்களிடம் அடமானம் கொடுக்கிற மாதிரிதான், எல்லா ஆதாரங்களையும் கேட்டு வாங்குறாங்க.

ஆதார் அட்டையில் இருக்கும் சுய விவரங்கள், வீட்டு முகவரி, அப்புறம் பான் கார்டு டீட்டெயில்ஸ். இதுல வேற அவுங்க சொல்லுறது,

“முதல்ல உங்க பான் கார்டைக் கொடுங்க. உங்களுக்கு எலிஜிபிலிட்டி இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கிட்ட பிறகுதான் நாங்க உங்களுக்கு கடன் கொடுக்க முன்வருவோம்,” என்றனர்.

வேறு வழி தெரியாமல், பையில் பணமும் இல்லாமல் இருந்ததால், அவர்கள் கேட்ட எல்லா விவரங்களையும் தரவிறக்கம் செய்து கொடுத்த பிறகு…

“சார், உங்களுக்கு மொத்தமாக ஒரு லட்சத்து அறுபதாயிரம் வரைக்கும் தர எலிஜிபிலிட்டி இருக்கு. ஆனா, நாங்க ஒரு மொபைல் போனுக்கு மட்டும் தான் கடன் கொடுக்க முடியும். ஏன்னா, நீங்க எங்கள்கிட்ட முதல் முறையா கடன் வாங்குறீங்க. அதனால இதுதான் ரூல்ஸ்.”

“ஏம்மா, என்னம்மா ரூல்ஸ்? அதான் எலிஜிபிலிட்டி இருக்குள்ள, இரண்டு மொபைல் போனுக்கும் கொடுத்தா என்ன? ஏன்தான் மனுஷனை இப்படி அலைய விடுறீங்களோ!”

பேசிக்கொண்டிருக்கும்போது இன்னொரு குரல் கேட்டது.

“சார், நாங்க வேணும்னா உங்களுக்கு இன்னுமொரு போனுக்கும் கடன் தருகிறோம்.”

“ஏம்பா, இரண்டு போனுக்கு ஏன்பா வேற வேற வங்கிக்குப் போகணும்? சரி, இதுதான் ரூல்ஸ்ன்னு சொல்லுவீங்க. சரி, நாங்க இப்ப என்ன பண்ணணும்? மீண்டும் இதே ஃபார்மாலிட்டீஸா?”

“ஆமாம் சார்.”

“சார், உங்க மொபைலுக்கு ஒரு ஓ.டி.பி. வந்திருக்கும்.”

“ஆமாம், வந்திருக்கு. எனது வங்கியிலிருந்து.”

“சார், மீண்டும் ஒரு ஓ.டி.பி. வந்திருக்கும். பாருங்க.”

“ஏம்பா, இது எதுக்கு? அதான் ஏற்கெனவே எந்த வங்கியிலிருந்து பிரீமியம் செலுத்தப் போறாங்களோ, அந்த வங்கியிலிருந்து வந்த ஓ.டி.பி.யைச் சொல்லியாச்சே!”

“இல்ல சார். இன்னும் உங்களுக்கு எங்க வங்கியில எலிஜிபிலிட்டி உள்ளதான்னு பார்க்கிறோம். உங்களுக்கு பத்து வங்கியில அக்கவுண்ட் இருக்கு. பத்து வங்கியோட ஓ.டி.பியும் சொன்னாத்தான் உங்க எலிஜிபிலிட்டி தெரியும்.”

“அட போங்கப்பா. உங்க ஃபார்மாலிட்டீஸும் நீங்களும். பத்துல வச்சிருப்பேன், இல்ல இருபது வங்கில அக்கவுண்ட் வச்சிருப்பேன். இதையெல்லாம் உங்களுக்கு ஏன் சொல்லணும்?

வேண்டாம்ப்பா இந்தக் கடனுன்னு நினைக்கத் தோணுது. அம்மாடி, நீ மட்டும் வாங்கிக்கோ. எனக்கு வேண்டாம்.”

என்று சொல்ல, ஷோரூம் மேனேஜர்,

“சார், என்ன பிரச்சனை?” என்றார்.

“என்னப்பா இங்க பிரச்சனை? ஏம்பா, அவருக்கு பத்து வங்கில அக்கவுண்ட் இருக்கலாம். அதையெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லையே.”

“சார், எங்க வங்கியில இதுதான் ரூல்ஸ்.”

“என்ன ரூல்ஸோ போப்பா. ஏம்மா, உங்க வங்கியில என்னம்மா ரூல்ஸ்?”

“சார், எங்க வங்கியில வாங்கலாமே. ஒரு வங்கியோட டீட்டெயில்ஸ் இருந்தாலே போதும்,” என்றாள் அந்தப் பெண்மணி.

ஒருவழியாக ஒரு முழுநாள் அங்கே அந்த ஷோரூமிலேயே செலவானது. சுமார் மாலை ஐந்து மணிக்கெல்லாம் வேலை முடிந்தது. பின்னர் கவுண்டரில் பணம் செலுத்திய பிறகு, கவிதா கையில் இரண்டு ஐபோன்கள் வந்தன.

அவளது முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம். எதையோ சாதித்த மாதிரி அவளுக்கு ஒரு நினைப்பு. பணம் கட்டுபவனுக்குத்தான் அதன் வலியும் வேதனையும் தெரியும் என்று வினோத் தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டான். தன்  பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு வண்டியின் சாவியைத் தேடி எடுத்தான்.

“அம்மா, கவிதா… வாம்மா, போகலாம்.”

என்று சொல்லி, அவளையும் அங்கிருந்து அழைத்து வந்தான்

வீட்டிற்கு.

இதெல்லாம் முடிந்து ஒரு மாதம் முடிந்தது. இரண்டாம் மாதம் ஒன்றாம் தேதி வந்தது. அப்போதுதான் வினோத்துக்குப் போன் மேல் போன் வந்தவண்ணமாக இருந்தது.

ஆபீஸில் வேலையாக இருக்கும் போதும் சரி, எங்காவது வண்டியில் போய்க்கொண்டிருக்கும் போதும் சரி, மொபைல் ஒலித்தவண்ணமாக இருக்கும். சில நேரங்களில் எடுத்து பதில் கூற முடியும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் பதில் ஏதும் கூறாமல் அப்படியே விட்டுவிடுவது வழக்கமாகப் போய்விட்டது.

அவர்களிடம், “ஏன் இப்படி தொந்தரவு செய்கிறீங்க?” என்றால்,

“நீங்க ஒழுங்கா கட்டுவீங்க சார். ஆனா ஊர்ல உள்ள அனைவரும் இப்படி இருக்க மாட்டாங்க. அவர்களுக்கு நாம்தான் நினைவூட்ட வேண்டும்.”

“அதுக்குன்னு இப்படியா நேரம் காலம் தெரியாம போன் பண்ணி தொந்தரவு செய்வீங்க? இப்பக்கூட தொடர்ந்து போன் ஒலிச்சதால, வண்டிய நிறுத்தி ஓரம் கட்டுன பிறகுதான் போன் கால் ரிசீவ் பண்ணிருக்குறேன். இது உங்களுக்கு நியாயமா படுதா?”

“சார், மன்னிச்சுக்கோங்க. எங்க வேலை நினைவூட்டுறது அவ்வளவுதான்.”

ஒருசில வினாடிகள் இருபுறமும் அமைதி நிலவியது. பின் வங்கி ஊழியர் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

“நீங்க பார்க்கிறதும் வேலைதான்; நாங்க பார்க்கிறதும் வேலைதான்.

ஏனோ தெரியல சார், எங்க போன் கால் வந்தாலே பலர் எடுத்துத் திட்டிவிடுறாங்க. உங்க மாதிரி சிலர்தான் திட்டாம அழைப்பையே எடுக்க மாட்டேங்கிறீங்க.

சார், நாங்க என்ன குத்தம் செஞ்சோம்?”

என்று கேட்ட கேள்விக்கு வினோத்திடம் பதில் இல்லை.

சில வினாடிகள் அமைதியாக இருந்த வினோத், சிறிய தயக்கத்துடன்,

“எங்க வேலை உயர்ந்தது, நீங்க பார்க்கிற வேலை மோசமானதுன்னு சொல்ல வரல. நீங்க உங்க ஆட்டிட்யூட்டை சற்று மாற்றிக்கிட்டாலே போதுமே.

இப்போ நீங்க கடன் வாங்கினவங்களுக்கு நினைவூட்ட வேண்டும்னா, யோசிங்க… ஏன் போன் போட்டுத்தான் பேசணுமா? மாதம் ஒன்று முதல் ஐந்து வரை தினமும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாலே போதுமே. இதை ஏன் செய்ய மாட்டேங்கிறீங்க?

செய்துதான் பாருங்களேன். ஏங்க… மாற்றம் ஒன்றே மாறாதது.” — பாலமுருகன்.லோ

Series Navigationபயம்குடைத்துணி பற்றி யாருக்கு கவலை?