This entry is part 11 of 13 in the series 9 ஆகஸ்ட் 2026

 பா.சத்தியமோகன்
**************************************


நனைந்த குடைத் துணியை
ஈரம் காய யார் நினைக்கிறார்கள்?
யாருக்கும் குடும்பத்தில் பொருட்டில்லை!

யாருக்காவது சொட்ட சொட்ட நனைந்த
குடைத்துணியின் குளிர் நடுக்க உதறல்கள் தெரியுமா?
யாருக்கும் தெரிவதில்லை!

குடை விரித்து உலர்த்தும் நோக்கம் கூட
மறுபடி பயனாக்கவே தவிர வேறில்லை.
குடை தைப்போர் பற்றி தேடுவதுமில்லை.

சொட்டு சொட்டாய் மழைத்துளியோ
சடசடமழையோ தாக்கிவிடும் சமயம்
குடையை குடைதான் காப்பாற்றிக்கொள்கிறது.

கையிலே கொண்டு செல்லலாம்
மழைவந்தால் ஆர்வமாய்த் தேடுவாய்
மற்றபடி –  
குளிர்ந்தும் காய்ந்தும் தன் போக்கில்
குரலற்று வாழ்கிறது
ஒவ்வொரு வீட்டின் அறை மூலையிலும்
கருப்புத் துணி போர்த்திய குடைத்துணி ஏனோ
அம்மா அணிந்த கருப்பு பூ போட்ட
 புடவைத் துணி நினைவுபடுத்தியது
***    

Series Navigationமுடிவில்லா நினைவூட்டல்கள்ஒப்பனையரங்க ஒத்திகை