This entry is part 3 of 13 in the series 9 ஆகஸ்ட் 2026

இரா  ஜெயானந்தன். 

நடுத்தர வாசிகளின் அன்றாட வாழ்வின் நகர்தலை உணர்வு பூர்வமாக உணர்ந்தவர் தி.ஜா.

சமீபத்துல அவரத், “கோதாவரிக் குண்டு” சிறுகதை படித்தேன். ரத்தமும் சதையுமாக வாழும் மனிதர்களின் உணர்ச்சிகளை , அவர்கள் பேசும் மொழியின் வழியாக அந்த வாழ்வின் உன்னதங்களை காட்டிவிடுகிறார். 

ஒரு ஆறுமாச பழைய பேப்பரை விற்பதற்கு அன்றைய கால தஞ்சாவூர் நடுத்தர வாசி கண்ணில் 

விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு தராசின் முட்களைப்பார்க்கும் பரோலக வாசிகளின் கதைகளை தத்ரூபமாக எழுதியவர் தி.ஜா.

நகரத்தில்தான், மனிதர்கள் ஒருவரை ஒருவர் அணுகாமல் தாங்களாகவே அந்நியப்பட்டு தங்களது அக-மன உளச்சல்களை உள்ளேயே வைத்து புழுங்கிப்போகும் சுரங்க வாழ்க்கை. 

அன்றைய தஞ்சை போன்ற ஊர்களின் மனிதர்கள் கைவீசி நடந்துக்கொண்டு அக்கம்பக்கத்தினரிடம் பேசி,பழகி,மகிழ்ந்து வாழும் வாழ்க்கையின் மேடுபள்ளங்களை பார்த்தவர் தி.ஜா.

கோதாவரிக்குண்டு சிறுகதையில் வரும் கங்கா பாய், தத்தோஜி ராவ், 

பாட்டுக்கார சுப்பிரமணிய அய்யர், கெளரி, கெளரியின் கணவர் (கதா நாயகன்), மேல வீதி கொங்கணேஸ்வரன் கோயில், தஞ்சாவூர் மணிகூண்டு, தியேட்டர், சினிமா, கோயில், சாமி எல்லாமே இந்த வாழ்க்கையின் உயிர்நாடி. 

இதனை சுற்றியே தி.ஜா.இந்த கதையை கதம்ப மாலையாக வாசகனின் கழுத்து மாலையாக மாற்றிவிடும் ரஸவாதம் தெரிந்தவர். 

மனிதர்கள் சகமனிதனை அணைத்து வாழ்வதும், சுகதுக்கங்களில் பங்கு

 கொள்வதும்தான் மனித தன்மை. அந்த மனித தன்மைதான் அதிகமாக கிடைக்கும் தி.ஜா.கதைகளில். 

மாத சம்பள குமாஸ்தாவின் வாழ்வில் ஆறாரை ரூபாய் பெரிய வருமானம் பழைய பேப்பர் விற்றதில் கிடைத்தது. இந்த ஆறாரை ரூபாய்க்கு ஆயிரம் பிடுங்கல்கள் அவனுக்கு. மின்சார பில், மகள் கான்வெண்ட் ஸ்கூல் சம்பளம், சாமியாருக்கு தட்சணை, இதன் நடுவே கங்கா பாய் தூக்கிக்கொண்டு வந்த கோதாவரி குண்டு வெங்கல சொம்பு அடகு பிடித்துதர ரெண்டு ரூபாய். 

குமாஸ்தாவிற்கு முழி பிதுங்கியது. 

அடுகு பிடித்து அந்த கோதவரி குண்டு சொம்பில், பொங்கல் வைக்க அலையும் கெளரி. கணவனை பிடுங்கி எடுத்து அந்த கோதாவரி சொம்பை அடகு பிடித்துவிட்டாள். 

கையில் ஒரு ரூபாய் கிடைத்தவுடன், கங்கா பாய் மாயமாய் மறைந்துவிட்டாள். 

அந்த காலததில், வெண்கல பித்தளை பாத்திரங்களை அடகு பிடிப்பர். கொஞ்சம் கையில் பணப்பசை இருந்தால் அக்கம் பக்கம் அன்றாடம் காய்ச்சிகள் கடைசியாக உள்ள பாத்திரம் வரை அடகு வைப்பர். 1950,60 களில் இது பல ஊர்களில் காணலாம். அப்போதெல்லாம் இந்த கிரிடிட் கார்ட் அல்லோகோலங்கள் கிடையாது. EMI பற்றி அரிச்சுவடி கிடையாது. ராஜஸ்தான் சேட்டுகள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன், பணம் படைத்த செட்டியார்களும்,முதலியார்களும், வாண்டையார்களும், மூப்பனார்களும் இந்த அடகு லேவாதேவி வியாபாரம் செய்தனர். 

ஆனால் இந்த கதை தி.ஜா.எழுதிய காலத்தில் சேட்டுமார்கள் தமிழக மண்ணில் கடையை விரித்துவிட்டனர். அந்த காட்சியும் கதையில் வருகின்றது. 

இந்த கதை தஞ்சாவூரை மையமாக வைத்து எழுதப்படுகின்றது. தி.ஜா.படித்த கல்யாண சுந்தரம் படித்த பள்ளி அருகேதான் மேல வீதி. அங்குதான் கொங்கணேஸ்வரர் கோயில். தஞ்சை மராட்டியர்கள் ஆட்சி காலத்திலும்,அதற்கு பிறகும் ஏகப்பட்ட மராட்டியர்கள் வாழ்ந்த பகுதி. இந்த கதையில் வருகின்ற கங்கா பாயும், தத்தோஜி ராவும் மராட்டியர்கள். தமிழக மக்களும், மராட்டியர்களும் ஒட்டி உறவாடி வாழ்ந்த நாள்களில் தான் தி.ஜா.வும் அங்கு படிக்கின்றார். 

தத்தோஷி ராவ் பழைய பீஷ்வாக்கள் பரம்பரையில் வந்தவர். உடல் அமைப்பும் பெரிய மீசையும் அவரது முன்னோர்களை ஞாபகப்படுத்தியது. ஆனால் இன்று அவர் வறுமையில் வாடும் புரோகிதர். சும்மா எடுப்பாளாக போகும் எடுபுடி. 

தி ஜா.வின் சங்கீத ஞானத்தின் சுவடு

இந்த கதையில் வருகின்றது. தத்து மிருதங்கத்தை அணைத்துக்கொண்டு போவார். “திம்திம் தரு திம்திம் தரு “, ஒரு சொல்லை வைத்தே எல்லாத்தாளங்களும் வாசித்துவிடுவார். கடைசியில் தகஜூனுதொம் என மூன்று முறை திருப்பி மோரா வைத்து முடித்துவிடுவார் தத்தோஜி. கோயில் பிரசாதம் இரவை ஓட்டிவிடும். 

இப்படிப்பட்ட மக்கள் சந்தோஷமாக வாழ்ந்ததாகதான் தி.ஜா.எழுதுகின்றார். இந்த வரிகளில் மிருதங்க வாசிப்பு பழக்கமுள்ளவர்கள் எவ்வளவு பெரிய சங்கீத குறியீட்டை இப்படி சர்வசாதாரணமாக அள்ளி தெளிக்கின்றார் தி.ஜா.என வியப்பர். 

ஒரு சொல், ஒரு தாளம், ஒரு வியப்பு. 

கங்கா பாயின் புடவையில் கண்ணுக்கு தெரிந்து பதினைந்து ஒட்டுக்களாவது இருக்கும்.தத்தோஜியின் பஞ்ச கச்சத்தில் அதற்குமேல். இப்படிப்பட்ட மக்கள் அந்த காலத்தில் வாழ்ந்துள்ளனர். குடும்பத்தில் சண்டைசச்சரவுகள் கிடையாது. டைவர்ஸ், நீயா….நானா..ஆணா..பெண்ணா..

அந்த ஆகிருதிகள் வளராத காலம். 

அடிவண்டல் சோற்றுக்கு காத்திருக்கும் கங்கா பாய் , புரோகித எடுபுடி வேலைக்கு ததாதோஜி ராவ். 

தத்தோஜி ராவின் முப்பாட்டன்கள், தஞ்சை மரா‌ட்டிய சரபோஜி சபையில் புரோகிதம் செய்தவர்கள். செழுமையான வாழ்க்கை, நிலம், பெரிய வீடு, தோட்டம் என வசதியாக வாழ்ந்த பரம்பரை. ஆங்கிலயர்கள் ஆக்கிரமிக்க தொடங்கியவுடன் பரம்பரை சொத்துக்களை விற்றுத் தின்ன ஆரம்பித்தனர் தத்தோஜி யின் முன்னோர்கள். இன்றைய நிலையில் தத்தோஜி அன்னக்காவடி. 

ஒரு ரூபாய் சில்லறைக்காசுக்காக அலையும் தத்தோஜி. ஆனால் கணவன்-மனைவி உறவில் விரிசல் இல்லாத லெளகீக வாழ்க்கை. அடகு வைத்து கிடைத்த பணத்தில் மல்லிகைப்பூவையும், மேட்னி ஷோவையும் பார்க்க சென்ற மனைவியை, தஞ்சாவூர் மணிகூண்டுக்கு எதிரில் நின்று அழைத்துப்போக காத்திருக்கும் தத்தோஜி. இதனைக்கண்ட தி.ஜா.வுக்கு அவர்களை புகழ வார்த்தை கிடைக்கவில்லை. காசுபணத்தால் அன்பை அளவிட முடியாது என சொல்லும் தி.ஜா.வாழ்வின் உன்னதமான பேரன்பை புகட்டும் ஆசான். 

   சமீபத்தில் தி.ஜா.குறிப்பிடும் தஞ்சாவூர் மேல வீதியில் நடந்தேன்,அங்குள்ள கொங்கணேஸ்வரர் கோயில், தத்தோஜி அமர்ந்திருந்த திண்ணை வீடு (அதுதானா என்று தெரியவில்லை) என

எல்லாவற்றையும் பார்க்கும் போது, 

தி.ஜா.வின் எழுத்தில் உண்மையும், நடுத்தரவாசிகளின் வாழ்க்கையும் தான், தி.ஜா.வின்  சிகரங்களைத்தொட்ட சிறுகதைகளாக உலா வருகின்றன. 

(சிறுகதை-கோதாவரிக்குண்டு).

இரா ஜெயானந்தன். 

Series Navigationஅடாத   ஆணியம்!துக்கம்