ஜெ. ஜெயகுமார்
பாரதி பூங்காவில் நடைப் பயிற்சி செய்வதற்காக விரைந்தார் எழுபது வயது விஜய்.
இன்று குடியரசு தினம் விடுமுறை நாள் என்பதால் உழைக்கும் வர்க்கமும் தழைக்கும் வர்க்கமும் சோம்பல் முறித்துக் கொண்டு ஸ்லோ மோஷனில் தினசரி அலுவல்களை மேற்கொண்டிருந்தனர்.
அரசியல்வாதிகள் என்றாலே இனம் புரியாத கசப்புணர்வு கொண்டிருந்த விஜய் இன்று ஒரு அரசியல்வாதியால் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கப்படுவார் என்று சற்றும் நினைத்திருக்கவில்லை.
ஒவ்வொரு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் அன்றும் பாரதி பூங்காவில் தேசியக் கோடி ஏற்றப்படும் நிகழ்வு நடைபெறும். வழக்கம்போல் இன்றும் வண்ண வண்ண தேசியக் கொடித் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அனைத்து நடைப் பயிற்சியாளர்களும் மற்றும் பொது மக்களும் முக்கியப் பிரமுகரின் வருகையை எதிர்நோக்கிய வண்ணம் இருந்தனர்.
வி.ஐ.பி வரும்போது அவரை வரவேற்று விஜய் ஓரிரு நிமிடங்கள் மைக் இல்லாமல் பேசுவார். பிரமுகர் கொடியேற்றியவுடன் விஜய் உணர்ச்சிப் பெருக்குடன் கழுத்து நரம்பு புடைக்க தேசிய கீதம் பாட கூட்டமும் ஒத்திசைக்க நிகழ்ச்சி முடியும்.
ஆனால் கொஞ்ச நாட்களாகவே முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து தான் பாடப் படவேண்டும் பிறகுதான் மற்றவையெல்லாம் பாடவேண்டும் என்று அரசியல்வாதிகள் ஆளாளுக்கு கூக்குரல் எழுப்பி ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததை அவதானித்தவண்ணம் இருந்தார் விஜய்.
விஜய் ஒரு தேசியவாதி. அவர் தந்தை நாற்பதுகளில் அந்தக் காலத்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சொத்துக்களையெல்லாம் சிறுகச் சிறுக இழந்து சிறை வாசம் அனுபவித்தவர்.
“முதலில் நாம் இந்தியர்” என்பதால் முதலில் தேசிய கீதம், பிறகு தமிழ்த் தாய் வாழ்த்து. இப்போது “வந்தே மாதரம்” என்று ஒன்று புதிதாக கொண்டுவரப்பட்டாலும் நாம் அதை வரவேற்க வேண்டும் ஒரு இந்தியன் என்கிற முறையில்.
நாளையே ஆட்சி மாறினால் காட்சி மாறும்தானே?
“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்கிறோம். இதில் “தெய்வம்” என்பது கடைசியாக வருகிறது என்பதால் அதன் மதிப்பு குறைந்து விடுகிறதா என்ன?
கையறு நிலையில் முதல் மூன்றும் நான்காவதைத்தானே வேண்டிக் கொள்கின்றனர்?
ஒரு தாய்க்கு மூன்றாவது குழந்தை பிறப்பதினாலேயே அக்குழந்தையின் பெற்றோர் அக்குழந்தையை வேண்டா வெறுப்பாக தரக்குறைவாக நடத்துகின்றார்களா என்ன?
இதையெல்லாம் மறந்து நம் அரசியல்வாதிகள் அனாவசியமாக ஊதிப் பெருக்கி ஒரு மோதல் போக்கை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களே?
மற்ற மாநிலங்கள் எல்லாம் இதை எப்படிக் கையாளுகின்றன என்பதை நம் ஊடகங்கள் தெரிவிப்பதில்லையே? என்று சிந்தனையில் ஆழ்ந்தவண்ணம் இருந்தார் விஜய்.
விஜய் ஒரு இஞ்சீனியர். பல நாடுகளிலும் இந்தியாவில் பல மாநிலங்களிலும் பல வருடங்கள் பணி புரிந்த அனுபவத்தின் காரணமாக பரந்த மனப்பான்மை கொண்ட மனித நேயர். அவரவர்க்கு அவரவர் தாய் மொழிதான் உயர்ந்தது என்பது அவரது அனுபவப் புரிதல்.
அமீரகம், குவைத், கத்தார் சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகளில் அவர் பணி புரிந்தபோது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த உழைக்கும் வர்க்க நேபாளிகள், வங்க தேசத்தவர்கள், பாகிஸ்தானியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் வட இந்தியர்கள், மலையாளிகள் தெலுங்கர்கள்,
கன்னடியர்கள் எல்லாம் பெரும்பாலும் ஹிந்தி மொழியை சுலபமாக சரளமாகப் பேசுவதைப் பார்த்து இந்தி தெரியாத இந்தியனாக இருக்கிறோமே என்று வெட்கம் கலந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார் விஜய்.
விஜய்க்கு ஹிந்தி தெரியாது என்பதாலேயே அவர் நிறுவனத்தில் பணி புரிந்த ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களுடன் மொழிப் பிரச்சனை காரணமாக சரிவர உரையாட முடியவில்லையென்பதால் ஒரு சில பதவி உயர்வுகளையும் இழந்தவர் அவர்.
அறுபதுகளில் அவர் படித்த நல்லசேலம் கிராமத்துப் பள்ளியில் அசோகன் என்று ஒரு ஹிந்தி டீச்சர் இருந்தார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் வேலையை இழந்த அந்தத் தமிழரை பின்னாளில் துறையூரில் சினிமா தியேட்டரில் முப்பது பைசா முதல் வரிசை பெஞ்ச் டிக்கெட்டில் ஒரு கிராமத்தானாகப் பார்த்தபோது மாணவனாகிய விஜய்யை என்னவோ செய்தது.
ரயிலில் சென்னையிலிருந்து வடக்கே பயணம் செய்தால் ரேணிகுண்டா தாண்டியவுடன் பெரும்பாலும் ஹிந்தியில் பேச ஆரம்பித்து விடுகின்றார்கள். நம் அரசியல் ஆளுமைகள் டெல்லியில் என்ன மொழியில் பேசிக் கொள்வார்கள்? திடீரென்று அவர்கள் தங்கும் இடங்களில் தீப்பிடித்துக் கொண்டால் தப்பிப்பதற்கு குறைந்த பட்சம்
“பச்சாவ் பச்சாவ்” தெரிந்திருக்க வேண்டாமா?
ஒரு மொழியின் மீது நமக்கு ஏன் இவ்வளவு வன்மம்?
அரசியவாதிகள் “ஹிந்தியை நாங்கள் எதிர்க்க வில்லை; ஹிந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்” என்று சொல்லும்போது அவர்கள் ஏன் எந்த அளவிற்கு மேல் அது திணிப்பாகிறது என்பதை சொல்லாமல் நழுவுகிறார்கள்?
“வேட்டி கட்டிய தமிழன் நாட்டை ஆளவேண்டும்” என்பதெல்லாம் பகற் கனவுதானா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார் விஜய்.
பார்க் வாசலில் சரமாரியாக ஒலித்த கார் ஹாரன்களின் சத்தம் கவுன்சிலர்
வருகையை அறிவிக்க, கடந்த கால நினைவுகளிலிருந்து மீண்டார் விஜய்.
தொண்டர்கள் புடை சூழ உள்ளே வந்த கவுன்சிலரை வரவேற்றுப் பேசினார் விஜய் வழக்கம் போல.
கவுன்சிலர் புன்னகையுடன் தேசியக் கொடியை ஏற்றினார். விஜய் கம்பீரக் குரலில் தேசிய கீதம் பாட அனைவரும் கூடவே கம்மிய குரலில் பாடினர்.
உடன் விஜய் அனைவரையும் நோக்கி “நண்பர்களே! இப்போது கவுன்சிலர் அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி ஓரிரு நிமிடங்கள் உரையாற்றுவார்” என்று முடித்தார்.
பூங்காவில் அசாத்திய மௌனம் நிலவியது. கவுன்சிலரின் கட்சித் தொண்டர்கள் “எங்கள் தலைவரை பாடச் சொல்ல நீ யார் ?” என்பது போல் விஜய்யை முறைத்த வண்ணம் அவரை நோக்கி நெருங்கி முரட்டுத் தனமாக நெருக்க ஆரம்பித்தனர்.
நிலைமை விபரீத நிலையை அடைவதற்குள், “நீராறும் கடல் உடுத்த” என்று கவுன்சிலர் மேடைப் பேச்சு பேசிப்பேசி மெருகேறிய குரலில் கணீரென்று பாட ஆரம்பிக்க கூட்டம் பணிவன்புடன் கேட்டுக் கொண்டிருந்தது.
பாடல் முடிந்து அவர் பேச ஆரம்பித்தார்.
“அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! இந்த வார்டின் தலைவர் என்ற முறையில் உங்களிடையே தமிழ்த் தாய் வாழ்த்து பாடியது எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கின்றது;
“தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி” என்பதுபோல் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தலைமை தாங்குபவர் தமிழ்த் தாய் வாழ்த்தை தனியே பாடி நிகழ்ச்சியைத் துவங்கினால் மற்றவர்க்கெல்லாம் முன்னுதாரணமாக அமையும்.
குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்கெல்லாம் தேசிய கீதம் புரியாத மொழி என்றாலும் கேட்டு கேட்டு, பாடிப் பாடி மனப்பாடம் ஆகிவிட்டது. அதுபோலவே நீங்களும் தமிழ்த் தாய் வாழ்த்தை மீண்டும் மீண்டும் பாடிப் பழகினால் அதுவும் நமக்கு சரளமாகப் பாட வந்து விடும். அதை விட்டு விட்டு ஒலிபெருக்கியில் பாடலை ஒலிபரப்பச் செய்து விட்டு வெறுமனே நின்று கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
“சித்திரமும் கைப்பழக்கம்” என்பது போல் விடாமுயற்சியாலும் தீவிரப் பயிற்சியாலும் நாம் எதிலும் முனைப்புடன் ஈடுபட்டால் எந்தத் திறனும் நமக்கு கை கூடும் என்பது நிதரிசனம்” என்று பலத்த கைத்தட்டல் ஆரவாரத்திற்கு இடையே பேசி முடித்து நிமிர்வுடன் கிளம்பிச் சென்றார் கவுன்சிலர்.
கூட்டம் விஜய்யை நோக்கி “நீங்க கவுன்சிலரை மாட்டிவிடப் பார்த்தீங்க! அவர் சாமர்த்தியமாக தப்பித்துக் கொண்டு விட்டார் பார்த்தீங்களா? இல்லைன்னா உங்களுக்கு மரண அடி விழுந்திருக்கும்” என்பது போல் விஜய்யை பார்த்துக் கொண்டே கலைந்தது.
அன்றிரவு விஜய் தன் மொபைல் “வாட்ஸ் அப்” தரவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் படித்த கல்லூரி “ஆலும்ணி” என்னும் நண்பர்கள் குழுமத்திடமிருந்து ஒரு செய்தி.
“தமிழ்த் தாய் வாழ்த்தை சரியாகப் பாடினேன்“ என்று நினைக்கின்றேன்; உன் நேற்றைய வேண்டுகோளை இன்று நிறைவேற்றினேன் என்பது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன், வாய்ப்புக்கு நன்றி படவா ராஸ்கல் விஜய்!”
விஜய் “புன்முறுவல் ஈமோஜி”யுடன் “டேய்! உங்க ஆளுங்க என்னை அடிச்சிடுவாங்களோ”ன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்டா! என்று கவுன்சிலருக்கு பதில் தரவு அனுப்பி விட்டு கல்லூரி நாட்களை அசை போட ஆரம்பித்தார்.