- தமிழ் வாழும்

நாங்கள் தமிழ் இலக்கியத் தாளாளர்கள்
என்றனர் சிலர்
நாங்கள் தமிழ் இலக்கியத் தூதுவர்கள்
என்றனர் சிலர்
நாங்கள் தமிழ் இலக்கிய துலாக்கோல்கள்
என்றனர் சிலர்
நாங்கள் தமிழ் இலக்கிய துவாரபாலகர்கள்
என்றனர் சிலர்
நாங்கள் தமிழ் இலக்கியச் சொல்லேருழவர்கள் என்றனர் சிலர்
நாங்கள் தமிழ் இலக்கிய வில்லாதி மல்லர்கள்
என்றனர் சிலர்
நாங்கள் நம்பிக்கை நட்சத்திரங்கள்
என்றனர் சிலர்
நாங்கள் தும்பிக்கையில்லா மத யானைகள்
என்றனர் சிலர்
நாங்கள் எம்பிக்குதித்துப் பறிப்போம் நிலவை
என்றனர் சிலர்
நாங்கள் தம்புச்செட்டித்தெருவில் புகுந்துபுறப்பட்டவர்கள்
என்றனர் சிலர்
ஆங்காரப்பேச்சில் அவர்கள் நழுவவிட்ட
தமிழ்
வம்பெதற்கு என்று தப்பியோடி
இலக்கியத்தில் இரண்டறக் கலந்து
வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறது
எப்போதும்போல்.
*
2.சொல் என்பது சொரணை

‘சுனாமிபோல் சிரிக்கிறாய்’
‘சுனாமிபோல் ஓடுகிறாய்’
‘சுனாமிபோல் சுழல்கிறாய்’
‘சுனாமிபோல் முழங்குகிறாய்’
“சுனாமிபோல்”….. “சுனாமிபோல்”….. “சுனாமிபோல்……”
என்று சர்வாலங்கார மேடையிலிருந்தவர்
சொல்லிக்கொண்டேபோக
சகித்துக்கொள்ள முடியாமல்
சுள்ளென்று கோபம்கொண்டு
சடாரென எழுந்துநின்று
“ஷ்…போதும் நிறுத்துங்கள்”
என்று சுட்டெரிப்பதைப் போல் பார்த்து
அவள் சத்தமிட்டதைக் கேட்டு
தோளைத்தட்டி அமரச்சொன்னார்கள் சிலர்
சபைநாகரீகமறியாதவள் என்றார்கள் சிலர்
தொட்டாற்சுருங்கி யென்றார்கள் சிலர்
சற்றும் நகைச்சுவையுணர்வற்றவள்
என்று திட்டித்தீர்த்தார்கள் சிலர்
அருகில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி மட்டும்
ஆதரவா யவள் கரம் பற்றிச் சொன்னார்:
சுனாமியில் இறந்த என் மகளின் சடலத்தை
பிணவறையில் கிடத்தப்பட்ட பலப்பல உடல்களினிடையே
நடந்து சென்று தேடிக் கண்டுபிடித்த
அனுபவம் எனக்குண்டு.
என்னால் சுனாமிபோல் சிரிப்பதாய்
என்றுமே சிலாகித்துச் சொல்ல முடியாது…
*
- எழுத்தின் புத்துயிர்ப்பு

கவிதைக்கடைப்பரப்பிகளால்
காணாப்பொணமாக்கப்பட்ட
நல்லதமிழ்க்கவியொருவரின்
நல்ல நல்ல கவிதைகள்
காலவெள்ள அலைகளில்
உருண்டு
புரண்டு
அடிதட்டி
மேலெழும்பி
வலையில் மாட்டி
வெளியே தூக்கியெறியப்பட்டு
சுறா திமிங்கல வாய்களுக்குள்
சிக்கி
யவற்றைத் திக்குமுக்காட
வைத்துத்
தந்திர சூறாவளிகளிலிருந்து
தப்பிப் பிழைத்து
அழையாத விருந்தாளியாகவும்
யாத்ரிகர்களை அன்போடு வரவேற்று
உபசரிப்பார் அழைப்பை ஏற்றும்
சில பல விழி மன
வாசல்களுக்குட்புகுந்து
வெளிப்பட
விர்ந்தோம்பல் யாரால் யாருக்
கென்ற
பெருவியப்பில்
மறுபடியும் தத்தமது
இல் உள் சென்றவர்கள்
அள்ளிக்கொண்டனர்
பொன்மயமா யாங்கே
மின்னிக்கிடந்த
இன்கவிதைகளை!.
*
- வரம்

பட்டியல்களில் இடம்பெறாத பல
நல்ல படைப்பாளிகளை
யெண்ணியெண்ணி
சொல்லொணாத் துயரத்தில்
இருகைவிரல்கள் சோர்ந்த
தேர்ந்த வாசக ரொருவர் மனதில்
தேன்குரல் அசரீரியொன்று பாட
காரிருளிலும் துல்லியமாய்ப் பார்க்கும்
ஞானக்கண் கைகூட
மளமளவென்று வாசிக்கத் தொடங்கினார்
வரலாற்றின் போக்கில்
வாகாய் கருந்துளைகளில் புதைக்கப்பட்டிருக்கும்
ஆகாயமளாவ அரும்படைப்புகளை.
*
- வித்தகக் கட்டமைவுகள்

பத்து ராகங்களின் பெயர்களையும்
அவை பாடப்படலாகும் மனநிலைகளையும்
கூகுளில் தேடியெடுத்து மனப்பாடம் செய்தபின்
அத்துவானக்காட்டிலிருந்து கொண்டுவந்ததாய்
அடுத்தவீட்டு வெளி மதிற்சுவரைத்தாண்டி
நீண்டிருந்த மரத்தின் தாழ்கிளை
யொன்றிலிருந்து பறித்த
சில பசிய இலைகளைக் காட்டிய கையோடு
மேடையேறி முழங்குமவரையும்
இசை விற்பன்னராகப் புகழ்ந்தேத்தவும்
இங்கிருப்பார்கள்
இசையறியாப் பலரும்
இசையறிந்த பலரும்.
*
6.இப்படியொருவர்…..

தன் கழுத்தைத் தாண்டி
எழுத்தைத் தாண்டி
உயரப் பார்க்குமவர்
கண்களுக்குத்
தன்னைப் பொருட்படுத்தாமல்
தம் போக்கில் இயங்கிக்கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள்,
நிலவு, சூரியன் பால்வெளி
கோள்கள்,
காற்று, கனவு, கார்பன் துகள் என்று
எதைப் பார்த்தாலும் கடுப்பாயிருக்கிறது.
நிலவை
கிழிந்த ரப்பர் மஞ்சள் பந்து என்பார்
சூரியனை
பொசுங்கிய பழந்துணிச்சுருள் என்பார்.
காற்றை கண்ணில்படாதொளியும்
பயந்தாங்கொள்ளி என்பார்.
கோள்களைத் தன் ஆள்காட்டிவிரலால்
சுட்டி எள்ளுமவர்
காலால் எட்டித்தள்ளுவதாய் அபிநயித்துப்
பரவசப்பட்டுக்கொள்வார்.
ஒரேயொரு கவிதையின் ஒரேயொரு வரியை
எழுதமாட்டாதவர்
அமரகவியொருவர்மீது அவ்வப்போது
எச்சில் துப்பி யதை
சில பல சமூக ஊடகங்களில்
பதிவேற்றிக் கிளுகிளுப்படைவார்.
கனவைக் கணவு என்று சொல்பவரைக்
கேவலம் செய்தவாறே
கோலத்தைக் கோளம் என்றே
சொல்லிக்கொண்டேயிருப்பார்.
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு என்று
எழுதுபவர்களைப் பக்கநிரப்பிகள் என்று
பட்டம் கட்டுபவர்
ஆறு ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒன்று என்று
எழுதுவதைத் தன் தனியடையாளமாய்
கட்டம்கட்டிக்காட்டுவார்.
அக்கம்பக்கத்தில் யாரிருந்தாலென்ன –
கெட்ட வார்த்தைகளை உரக்கச்சொல்லி
தன்னை உண்மைவிளம்பியாக வஸ்தாதாகக்
கட்டமைத்துக்காட்டுமவர்
தன்னைவிட அதிகக் கெட்டவார்த்தைகள்
தெரிந்தவரை
தட்டுக்கெட்டவராகத் திட்டிக்கொண்டிருப்பார்.
சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா
என்றிவரைக் கேட்பவரை
மட்டம்தட்ட முற்படுவார்
வினாவில் வேல் மின்னக் கண்டாலோ
சட்டென்று மௌனமாகிவிடுவார்.
*
- அந்த சிலர்…..

சில அநீதிகளின்போது
சீறிப்பாய்வார்
சில அநீதிகளின் போது
சிந்தனையிலாழ்வார்
சில அநீதிகளின்போது
சுற்றுலாத்தலங்களில் ஸெல்ஃபி எடுத்து
சுற்றுக்கு விடுவார்
சில அநீதிகளின்போது
தத்துவம் பேசுவார்
சில அநீதிகளின்போது
(குறிப்பிட்ட மதக்) கடவுளை நிந்திப்பார்
சில அநீதிகளின்போது
மேடையேறிச் சாடுவார்
சில அநீதிகளின்போது
பாடைப்பிணமாகிடுவார்
சில அநீதிகளின்போது
ஆறாயிரங்காலத்துக்கு முந்தைய
சமூகநியமங்களுக்கெதிராய்
கொதித்தெழுவார்
சில அநீதிகளின்போது
சம கால அடாவடி நியமங்களில்
சௌகரியமுணர்வார்
சில அநீதிகளின்போது
செக்கச்சிவந்து கனலும்
அவர் கண்கள்
சில அநீதிகளின் போது
பக்கவாட்டில் திரும்பிக்கொள்ளும்
சில அநீதிகளின்போது
சகட்டுமேனிக்கு வசைபாடும்
அவர் நாவு
சில அநீதிகளின்போது
ஏதேனும் சுவையான பதார்த்தத்தை
சப்புக்கொட்டி ருசித்துக்கொண்டிருக்கும்.
சில அநீதிகளின்போது அரவமாய்ச்
சீறும் அவர்
சில அநீதிகளின்போது அரவமின்றி
உறங்கிக்கொண்டிருப்பார்
சில அநீதிகளின்போது அணையுடைந்து
பொங்குமவர்
சில அநீதிகளின்போது
நீர்வரண்ட நதிப்படுகையாவார்
சில அநீதிகளினூடாகத் தெரியுமவர்
சுயரூபம்
என்றாலும்
சமூகப்போராளி யென்ற பட்டம்
அவருக்கே எஞ்ஞான்றும்!.