This entry is part 4 of 10 in the series 4 அக்டோபர் 2026

சுந்தர மணிவண்ணன்

  அரை நூற்றாண்டு காலம், அவசரமாய் கரைந்து போனது..

திரும்பிப் பார்த்தேன்.நாட்கள் நகரும் வேகம்.

நம் கைக்குள் இல்லையே..

“படிச்சாதான் எதிர் காலம் பிரகாசமாய் இருக்கும்”

பாட்டியும், அம்மாவும் மாறி மாறிப் பாடத் தொடங்கினர்.

என் படிப்பே மிக முக்கியம். என் அப்பாவும் அப்படித்தான் முடிவெடுத்தார். 

எங்கள் சிற்றூரிலிருந்து , சென்னையை நோக்கினோம்..

என் கால்கள் கல்லூரிக்குள் பதிந்தன.

மேல் படிப்பு,அமெரிக்க பிரஜை என, வாழ்க்கை வெவ்வேறு திசைகளில் இறக்கைக் கட்டிப் பறந்தன, 

 சொந்த ஊரின் மீது எப்போதும் ஒரு  பாசம். அது நெஞ்சின்  ஓரத்தில் இன்னும் ஈரமாய் இருக்கு..   அங்கு சென்று வரும் வாய்ப்பு.  அது மட்டும்…இன்னும் கிட்டவே இல்லை..

 சென்னைக்கு வரும்போதெல்லாம், அலுவல் நெருக்கடி அழுத்திக் கொண்டே இருக்கும். 

ஊரைப் பார்க்கும் ஆசையை, தள்ளிப் போட்டு வந்தேன்.

பிறந்த மண்ணை எட்டிப் பார்க்க வேண்டும். அந்த  உத்வேகம்  என்னை விரட்டத் தொடங்கியது.  என் மண்ணைத்  தொட்டு, முத்தமிட  முடிவு செய்தேன்.

நான் விட்டுச் சென்ற ஊர்,, வளர்ச்சி கண்டிருக்கா,இல்லை வரட்சியில் இருக்கா?

என் மனம் எழுப்பும் கேள்விகளும்,விடை அறியும் வேகமும், என்னுள் எழ,

தாலூகாவின் தலை நகரிலிருந்து பிரியும் அந்தச் சாலையில், என் கார் திரும்பியது. முன்பு  கரடு முரடான கச்சா ரோட், தற்போது தார் சாலையாக மாறி, தடங்கலற்ற பயணத்துக்குத்  துணை வந்தது.

ஊரின் எல்லையைத் தொட்டேன். எல்லையின்  தொடக்கத்தை “இரட்டைக் கால் வாய்” என்றழைப்போம்..

ஏரியின் பெரிய கால்வாய்.அது இரண்டாய் பிரியும் இடம். கெண்டை மீன்கள் துள்ளி வர,சல சல வென சங்கீதம் பாடி, தண்ணீர் சந்தோஷமாய் ஓடிக் கொண்டிருந்தது. , ஏரி ஜீவித்திருப்பதை அறிந்து பூரித்தேன்., 

நான்கு தெருக்கள் சந்திக்கும் ஊரின் மையத்தில், என் காரை நிறுத்தினேன்.என் கால்கள் மண்ணில் பதிந்ததும், தரையைத் தொட்டு வணங்கி, ஒரு துளி மண் எடுத்து வாயிலிட்டேன். இனம் தெரியாத இன்பம் என் இதயத்தைத் தொட்டது.

இரண்டொரு இளவட்டம் ஓடி வந்து, என்னைச் சூழ்ந்து கொண்டனர்,

” சாமிக்கு எந்த ஊரு ! யாரை பார்க்க வந்தீங்க?”  கேள்விகள் சரம் சரம் ஆயின.

“இந்த ஊரைத்தான் பா பார்க்க வந்தேன்”.

இனிதான குரலில் மெலிதாய் பதில் சொன்னேன்.

“அப்படீன்னா… நீங்க இந்த ஊர்க்காரரா”.

“ஆமாம் பா.அம்பது வருஷத்துக்கு முன்னாடி  அப்படித்தான் சொல்லுவாங்க”.

“எந்த தெருவுல இருந்தீங்க சாமி”

“அக்ரஹாரம்”

“இப்ப அங்க யாருமில்லையே சாமி”.

அவர்கள் சொன்னது நிஜம் தான்.

அக்ரஹாரத்துக்குள் நுழைந்தேன்.

இரண்டொரு வீடுகளைத் தவிர, எல்லாமே இடிந்து போயிருந்தது.முட் புதர்கள் முளைத்து அவற்றை மூடியிருந்தன.

என்னைப் போல் எல்லோரும் இடம் பெயர்ந்து விட்டனர்.

எங்கள் குல தெய்வக் கோயில் மட்டும் புனரமைக்கப்பட்டு,  பொலிவுடன் காட்சி தந்தது. அர்ச்சகரை அழைத்துச் சென்று ஆண்டவனை தரிசித்தேன்

பின் பக்கம் உள்ள ஏரியில், தண்ணீர் ததும்பி நின்றது. என் நீச்சலுக்கு தளம் தந்த ஏரி. ததும்பி நிற்கும் நீருடன், சற்று நேரம் மெளனமாய் பேசி நின்றேன்.

அருகிலிருந்த புளியந்தோப்பில், கிட்டிப்புள் விளையாடும் இடத்தைத் தேடினேன். மரங்களும் இல்லை.மைதானமும் இல்லை,  சில வீடுகள் முளைத்திருந்தன. ஜனத் தொகையின் வீக்கம் தெரிந்தது.

குடி நீர் குளம். தண்ணீர் எடுக்க வரும் பெண்களின் சஞ்சாரம் எதுவும் இல்லை.குளம் தனித்திருந்தது.  அதன் கரை மேல் பெரிய ஓவர் ஹெட் டாங்க் ஒன்று எழும்பி நிற்கிறது. அன்று குடங்களில் ததும்பிய நீர், இன்று குழாய்க்குள் புகுந்து  வீட்டு வாசலுக்கு வருகிறது.

குளக் கரையைச் சுற்றி அதே ஆலமரம்.விழுதினை பரப்பி வம்ச விருத்தி செய்து,குரங்குகளுக்கும்,வெளவால்களுக்கும்  அடைக்கலம்  தந்து அசைந்து கொண்டிருந்தது.

எதிரே இருந்த எலிமெண்டரி ஸ்கூல். என் படிப்புக்கு அஸ்திவாரம் இட்ட இடம்.கூரை வேய்ந்த பள்ளி. இன்று நவீனமானது.குனிந்து வணங்கினேன்

 பராமரிப்புக்கு ஏங்கும் பஞ்சாயத் போர்ட் ஆஃபீஸ். அன்று பொது ரேடியோ ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.செய்திகள் கேட்க அங்கு கூட்டமாய் கூடி நின்றது  நினைவுக்கு வந்தது.

 “கிழக்கு மூலையில் கம்பம் நட்டுட்டான்.இன்னும் இரண்டு மாசத்துல நம்ப ஊருக்கு கரண்ட் சப்ளை வந்துடும்”

இப்படித்தான் ஒருவருக்கு ஒருவர் அன்று ஓடிவந்து செல்லிக் கொள்வோம்..

எல்லோர் வீட்டிலும் டீவி, கிரைண்டர், மிக்சி என எல்லாம் இருக்கு. விலை இல்லாமல் அவைகள் வீட்டிற்குள் நுழைந்தவை.  சில  உழைத்து ஓய்வெடுத்தன. சில உழைக்காமலே ஓரம் போயின.

வயல் வெளியை ஒரு ரவுண்ட் அடித்தேன்.அன்று பார்த்த அடர் பசுமை இல்லை.இங்கொன்றும் அங்கொன்றும் ஏதோ  பயிர் வைத்திருந்தார்கள்.

இரண்டொரு பஸ்கள், இரு சிறு நகரங்களை இணைக்க இந்த ஊர்வழியே வந்து போகின்றன. . மாட்டு வண்டி ட்ரான்ஸ்போர்ட் அடியோடு மாறிப்போச்சு.

மீண்டும் ஊரின் மையப் பகுதிக்கு வந்தேன்.

 என்னோடு படித்த இரண்டு மூன்று நபர்களின் பெயர்களைச் சொல்லி, அங்கிருந்தவரிடம் கேட்டேன்.

“அவர்கள் எல்லாம் காலமாகிட்டாங்க சார்”

“ஏன் பா ?

“எல்லாம் ஓவர் குடி தான் சார்.இளம் வயசுலேயே போயிட்டாங்க.”

 குற்ற உணர்வற்ற குடிப்பழக்கம். 

மனதுக்கு நெருடலாய் இருந்தது.

“ஏரியில்  தண்ணீர் இருந்தும், பயிர் வைக்கலையே.   ஏன் பா?

“நீங்க இருந்த நாள்ள மூணு போகம் பயிர் வைப்பாங்க.இப்பெல்லாம் ஒரு போகத்துக்கே

உண்டு இல்லேன்னு ஆயிடுதுங்க”.

“எதனால அப்படி ஆச்சு”

கூலிக்கு ஆள் வரமாட்டேங்கிறாங்க “.

“ஊர்ல ஜனத் தொகை கூடியிருக்குன்னு சொன்னாங்க” நான் கேட்டதைச் சொன்னேன்

“ஆமாங்க.என்ன பண்றது.

நூறு நாள் வேலை திட்டம்.போதாதற்கு  காண்ட்ராக்ட் வேலைக்கு லாரியில ஆளுங்கள வாரிட்டு, டவுனு பக்கம் போயிடராங்க.

விவசாயத்துக்கு ஆளும் கிடைக்கல. கூலி கொடுத்தும் மாள மாட்டேங்குதுங்க”

இன்னும் கொஞ்ச நாள்ல விவசாயம் என்ன ஆகும்னு தெரியலிங்க.”

ஆதங்கத்தோடு அடுக்கினார்.

எதிரே வந்த என் வயதை ஒத்த ஒரு பெண்மணி,என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.

“சாமிக்கு எந்த ஊரு”.

“இந்த ஊர்தான் மா”. என்றேன்.

“யார் ஊடு”

“நாங்களெல்லாம் ஊரை விட்டு போய் அம்பது  வருஷமாச்சு”

“அப்படிங்களா !    சாமி பேரு”

“என் பேரு கோபாலு”

“நம்ப ஊர்ல ராமன் சாமின்னு ஒரு பெரியவர் இருந்தாரு. அவர் புள்ள பேரும் கோபாலுதான்.அவுங்கள்ளாம் வெளி நாட்டுக்கே போயிட்டாங்களாம்”.

“உன் பேரு என்னம்மா”

“கண்ணம்மானு கூப்பிடுவாங்க சாமி”

அந்த பேர்.என் நினைவுக்கு எட்டியது.

“ஸ்கூலுக்கு போகச்சே ஏரிக்கரை ஓரத்துல இருக்கிற கல்லுக்கு பூஜை பண்ண பூ கொண்டு தருவியே. அந்தக் கண்ணம்மாவா  நீ”  ஒரு யூகத்தில் கேட்டேன்.

“ஆமாம் சாமி. இப்ப ஞாபகத்துக்கு வந்துடுச்சு”

அவள் சந்தோஷத்தில் சிரித்தாள்.

“அந்தக் கல்லு  இன்னும் இருக்கா”.

“ஏரி இறக்கத்துல இன்னும் அப்படியே அசங்காமல்  குந்திக்கிட்டு இருக்கு. சாமி”

“அத  போய் பார்க்கலாமா”.

“வாங்க சாமி”.

 அழைத்துச் சென்றாள்.

“வாவ்” ! 

“சாதாரண மொட்டைக்கல், இன்று சந்தனக் காப்பிடப்பட்டு, வெள்ளி விழிகளோடு, செம்பருத்தி மாலை சூடி கம்பீரமாய் அமர்ந்திருந்தது. அதன் பாதத்தில் உதிர்ந்து கிடந்த தேங்காய் நாரும், கற்பூரப் புகையின் கரியும், அந்தச் சாதாரணக் கல்லைச் சுற்றிலும் ஒரு தெய்வீகப் பெரு வட்டத்தை உருவாக்கியிருந்தன.”

வேப்ப மரம் ஒன்று,அதன் பின் புறம் குடையாய் விரிந்து நிற்கிறது.  சாமிக் கல்லோடு,  வேப்ப மரத்தையும் சுற்றி வலம் வருவார்களாம்..

அந்தக் கல்லைச் சுற்றி அந்தச் சாலையும் வளைந்து போனது.

“ரோடு போடச்சே இந்தக் கல்லை  யாரும் எடுத்துப் போடலையா”.

“அதை சாமி கல்லுன்னு ஆக்கிட்டாங்க. அதை யாரும் அங்கிருந்து அசைக்கக் கூடாதுன்னு ஊர் தலைவர் சொல்லிட்டாராம்”.

“ எப்படி அது சாமி கல்லாச்சு”

“ பள்ளிக் கூடம் போகும்போது….  உனக்கு ஞாபகம் இருக்கா? 

மேலும்  தொடர்ந்தாள்

“.பரீட்சை எழுதுவதற்கு முன்னாடி, நீ தானே  அந்தக் கல்லிடம் வேண்டிக்குவ சாமி”.

“நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி,  வெளி நாட்டுக்குப் போய் வேலை பார்க்கணும்னு”.

அந்தக் கல்லுக்கு நீ பூஜை பண்ண, நான் உனக்கு பூ கொண்டாந்து தருவனே.

“நீ ஊரை விட்டுப் போனப்பறமும், நான் மட்டும் ஒரு பூவைக் கொண்டு போட்டு அதுக்கு  அப்பப்ப விளையாட்டா பூஜை பண்ணுவேன்”.

எல்லாரும்  என்னைக் கிண்டல் பண்ணுவாங்க.கொஞ்ச நாள்ள எல்லாரும் சென்டிமெண்ட்டா அந்தக் கல்லையே சாமின்னு  கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க.

கோயில்னு எதுவும் கட்டலைன்னாலும்,  அதை சாமியா ஏத்துக்கிட்டு,  எல்லாரும்  அவங்க அவங்களுக்கு வேண்டியதை வேண்டிப்பாங்க .

“ அந்த சாமி கல்லுக்கு பூஜை  பண்ணி, தாங்கள் வேண்டியது நடக்க, அவுங்க  ஆசைப்படி ஏதாவது படைப்பாங்க”.

“ஆமாம்.. கண்ணம்மா நீயும் எனக்கு பூ கொண்டு வந்து தந்து  பூஜைக்கு உதவியிருக்கே. அந்த நேரத்துல உனக்குனு  நீ எதையும் வேண்டிகலையா”. 

“போங்க சாமி”தன் கைகளைக் கொண்டு கண்களை மூடி வெட்கத்தை மறைத்துக் கொண்டாள்..

“நானும் தான் நினைச்சேன். ஆனால் அது நடக்கிற விஷயமா நினைக்கலை”.

“அதை நடத்தி வைக்கலையேன்னு சாமி மேல எனக்கு கோபமில்லை”.

“தகுதிக்கு மீறி  ஆசைப்பட்டா,சாமி மட்டும்  என்ன செய்யும்”.

கண்ணம்மா தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.

என்ன நினைத்திருப்பாள் ? எனக்குள் பல நினைவலைகள் எழுந்து விழுந்தன.

கல்யாணம் கட்டி,நல்ல பிள்ளை, பேரன்கள் வேண்டும் இப்படித்தானே வேண்டி இருப்பாள்.

பெரிதாக வேண்ட அவளுக்கு பேராசை எதுவும் கிடையாதே. 

“தகுதிக்கு மீறி அப்படி  என்னதான் ஆசைப்பட்டே” நான் விடாமல் கேட்டேன்.

அவள் பதில் சொல்லாமல் அந்த செம்பருத்திச் செடி பக்கம் ஓடிப் போய், ஒரு பூவைப் பறித்துக் கொண்டு  வந்து, 

“சாமி இதை உன் கையால அந்த சாமி மேல போடு என்றாள்.

அதை வாங்கி அந்த சாமியின் மேல் வைத்தேன்.

“கண்ணம்மா ! இப்ப எனக்காக அந்தச் சாமி கிட்ட என்ன வேண்டிக்கிட்ட”.

“இந்த ஏழைப் பொண்ணு பறிச்சுத் தந்த பூவை வச்சு வேண்டிக்கிட்டு, இந்த ஊர்ல பிறந்து, வெளிநாட்டுக்குப் போய், பெரிய படிப்பெல்லாம் படிச்சு இம்மாம் பெரிய ஆளானாப்பறமும்… இந்த ஊரையும் மறக்காம, இந்த மனுஷங்களையும் நெனச்சு,பார்க்க ஓடி வந்து நிக்கிறியே சாமி… நீ எப்பவும் மகராசனா இருக்கணும். நான் மண்ணுக்குள்ள போறதுக்கு முன்னாடி, இதப்போல  எங்கள பார்க்க, மறக்காம அடிக்கடி வந்துட்டுப் போகணும்னு தான் அந்தச் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டேன்” 

அப்போது அருகில் இருந்த  ஒரு ஆடு “மே”.என்று அவளை அழைத்தது.

” என் செல்லம் என்னைக் கூப்பிடுது.நான் போயிட்டு வரேன் சாமி…” அந்த ஆடு இருந்த பக்கம் அவள் நடந்தாள்.

அன்று அவள் இங்கு ஆடு மேய்க்கும் போது 

“கண்ணம்மா ஒரு பூ கொண்டாயேன்”

அந்தக் கல் மீது பூ வைக்க முன் பெல்லாம் அவளை அடிக்கடி உரத்த குரலில் அழைப்பேனே.

கண்ணம்மா!” 

 அன்றைய சிறுவனைப் போல உரக்க அழைக்க நினைத்தேன். ஆனால், என் நெஞ்சுக்குள் எழுந்த அந்த உரத்த குரல், தொண்டைக் குழிக்குள் ஏனோ நடுங்கிக் கரைந்தது.

​அரை நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, என் கிராமம் வளர்ந்திருக்கிறதா இல்லை வாடியிருக்கிறதா என்று வேடிக்கை பார்க்க வந்த ஒரு சராசரி மனிதன் நான். 

ஆனால், உலக உருண்டையின் மறுமுனையில் நான் சேர்த்த சொத்துக்களும், பெற்ற பட்டங்களும், இந்த ஏழைப் பெண்ணின் பேரன்பிற்கு முன்னால் எம்மாத்திரம்? 

கண்ணம்மாவின் அந்த விசால மனசுக்கு முன், எனது ‘வளர்ச்சியும், பெருமிதமும் பஞ்சென பொசுங்கிப் போனது,

​காரில் ஏறி, நான் புறப்பட்டபோது, அந்தச் சாமி கல்லின் மீது கிடந்த செம்பருத்திப் பூவும், கண்ணம்மாவின் உன்னதமான முகமும் என் கண்ணீர்த் திரைக்குப் பின்னால் மங்கலாக மறைந்து கொண்டிருந்தன.

*******************************************

Series Navigationஐந்து சதவீதம்காற்றுவெளி இதழின் காரை.எஸ்.சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்த சிறப்பிதழ்