This entry is part 8 of 10 in the series 4 அக்டோபர் 2026

​ஜமீல்.

_________

​மூதூர் தாண்டி வரும் வெள்ளமணல் கிராமத்தை அண்டி அமைந்திருக்கும் கிண்ணியா நகரின் ஒரு சிற்றூர்தான் குறிஞ்சாக்கேணி. இயற்கையின் பசுமையும் மனிதர்களின் எளிமையான வாழ்க்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடக்கும் அந்த மண்ணுக்கு தனக்கென்று ஒரு பழைய வரலாறு இருக்கிறது. ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் குறிஞ்சா மரங்கள் அடர்ந்து வளர்ந்து நின்றதாகவும் அவற்றின் நிழலிலும் மணத்திலும் அந்த நிலம் மூழ்கிக் கிடந்ததாகவும் மூதாதையர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இந்தக் குறிஞ்சா மரங்களின் நினைவாகவே அந்த இடத்திற்கு குறிஞ்சாக்கேணி என்ற பெயர் வந்ததாக ஊரின் பெரியவர்கள் கூறுவார்கள்.

​மகாவலி கங்கையின் கிளை நதிகளும் உப்பங்கழிகளும் சிறு நீரோடைகளும் சூழ்ந்த அந்த நிலம் இயற்கையின் பச்சை அழகை எப்போதும் தன் மடியில் ஏந்தி நிற்கும். மழைக்காலங்களில் நீரால் நிரம்பி வழியும் வயல்வெளிகள் கோடைக்காலங்களில் வெயிலால் வறண்டு போனாலும் அவற்றின் அழகு மட்டும் குறைந்து போவதில்லை. ஆற்றங்கரைகளில் வளரும் புல்லும் புதர்களும் தென்னை மரங்களும் புளிய மரங்களும் அந்த நிலத்தின் இயற்கை ஓவியத்தை இன்னும் அழகுபடுத்திக் கொண்டே இருக்கும்.

​அதிகாலைப் பொழுதில் தம்பலகாமம் குடாவிலிருந்து வீசும் ஈரக்காற்று குறிஞ்சாக்கேணியின் தென்னந்தோப்புகளையும் புளியமரங்களையும் உரசிச் செல்லும் போது அந்தக் காற்றில் ஒரு விசித்திரமான அமைதி பிறக்கும். இரவின் இருளை மெதுவாக விலக்கிக் கொண்டு கிழக்கே வெளிச்சம் பரவும் நேரத்தில் பள்ளிவாசல்களின் பாங்கு ஓசை வீதிகளைக் கடந்து வீடுகளின் முற்றங்களுக்குள் நுழையும். இறை துதியின் ஓசையும் பறவைகளின் கீச்சொலியும் ஒன்றோடொன்று கலந்து அந்த ஊரின் காலையை எழுப்பும்.

​பெருந்தெருக்களின் ஓரங்களில் அமைந்திருக்கும் ஓட்டு வீடுகளின் முற்றங்களில் சில பெண்கள் அதிகாலையிலேயே தங்கள் அன்றாட வேலைகளைத் தொடங்கிவிடுவார்கள். மஞ்சள் தெளித்து கோலமிடும் வழக்கம் அங்கு அதிகமாக இல்லாவிட்டாலும் வீடுகளுக்குள் கொதிக்கும் சுலைமானி தேநீரின் மணம் வீதியெங்கும் பரவி நிற்கும். பெருஞ்சீரகமும் ஏலக்காயும் கலந்து தயாரிக்கப்படும் அந்த தேநீரின் மணம் அந்த ஊரின் காலைப்பொழுதுக்கு தனியான அடையாளமாக இருந்தது.

​அந்த கிராமத்தின் எல்லையில் அமைந்திருந்த மேய்ச்சல் நிலத்தை நோக்கி தினமும் ஆடுகளை ஓட்டிச் செல்பவள் ஆமினா உம்மா. அவளுக்கு அறுபது வயதைத் தாண்டியிருக்கும். வயது எவ்வளவு என்று அவளிடம் கேட்டால் அவளே சரியாகச் சொல்ல முடியாது. காலம் அவளது வயதை எண்ணிக் கொண்டிருக்கவில்லை, வறுமைதான் அவளது வயதை எண்ணிக் கொண்டிருந்தது. முகத்தில் விழுந்திருந்த ஒவ்வொரு சுருக்கத்திலும் ஒரு கதை இருந்தது, ஒவ்வொரு கோட்டிலும் ஒரு துயரம் இருந்தது, ஒவ்வொரு வெடிப்பிலும் வாழ்க்கையோடு அவள் போராடிய தடயம் இருந்தது.

​ஆமினா உம்மா அணிந்திருந்த பழைய புடவை பல இடங்களில் நிறம் மங்கிப் போயிருந்தது. அதன் முந்தானையைத் தலையில் போர்த்தி தோள்களில் தொங்கவிட்டபடி அவள் நடப்பாள். சுட்டெரிக்கும் மணல் சூட்டில் பல ஆண்டுகளாக நடந்த பழக்கத்தால் அவளது பாதங்கள் விறைத்துப் போயிருந்தன. வெயிலின் கொடுமையையும் மழையின் ஈரத்தையும் காற்றின் குளிரையும் பொருட்படுத்தாமல் அவள் தினமும் அதே பாதையில் நடந்து கொண்டிருந்தாள்.

​சுபஹ் தொழுகையை முடித்ததும் ஆமினா உம்மா தன் வீட்டின் பின்னால் இருக்கும் தொழுவத்தைத் திறப்பாள். கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டவுடன் தொழுவத்திற்குள் இருந்த ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வரத் தொடங்கும். வெள்ளாடுகளும் செம்மறியாடுகளுமாக பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் அவளைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவற்றின் கத்தும் ஓசை அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு காலையின் முதல் அழைப்பு மணியாக இருக்கும்.

​அந்த ஆடுகள் அனைத்தும் ஆமினா உம்மாவின் சொந்த ஆடுகளா என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியாது. சில ஆடுகள் ஊரில் வசிக்கும் போடிமாரான அமீர் அலி ஹாஜியாருடையவை என்று சிலர் சொல்வார்கள். வேறு சில ஆடுகள் சின்ன மரைக்கார் முதலாளியிடம் கூலிக்கு வாங்கி மேய்க்கப்படுவதாக சிலர் கூறுவார்கள். ஆனால் இந்த விஷயத்தை ஆமினா உம்மாவிடம் நேரடியாகக் கேட்பதற்கு யாருக்கும் மனம் வராது. வழியில் செல்லும் ஊர் மக்கள் சில சமயம் அவளிடம் கேட்க நினைப்பார்கள், அவளது சோர்வான முகத்தையும் தளர்ந்த நடையையும் பார்த்தவுடன் அந்தக் கேள்வியை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு அமைதியாகச் சென்று விடுவார்கள்.

​குறிஞ்சாக்கேணியில் கத்தரி வெயிலும் கச்சான் காற்றும் தங்கள் கொடுமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. தோட்டம் திரவுகளும் வயல்வெளிகளும் ஆற்றங்கரைகளும் வெயிலின் தாக்கத்தில் வறண்டு கொண்டிருந்தன. மதிய நேரங்களில் நிலம் பிளந்து கிடக்கும். புல்லின் நுனிகள் கூட வெயிலில் சோர்ந்து தலைகுனிந்து நிற்கும். ஆற்றங்கரையின் பசுமை மட்டும் சில இடங்களில் இன்னும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும்.

​அந்தக் கடும் வெயிலில் ஆமினா உம்மா தன் கையில் ஒரு சிறிய தடியைப் பிடித்தபடி ஆடுகளின் பின்னால் மெதுவாக நடப்பாள். உண்மையில் அவள் ஆடுகளை மேய்த்துச் செல்கிறாளா அல்லது அந்த ஆடுகள்தான் அவளை வழிநடத்திச் செல்கின்றனவா என்று பார்ப்பவர்களுக்கு ஒரு மயக்கம் ஏற்படும். அவளது நடையில் முன்பிருந்த தெம்பு இல்லை. வறுபட்ட இலையைப் போல அவளது உடல் தளர்ந்து போயிருந்தது. வெயிலில் நீண்ட நேரம் நடந்ததால் அவளது முகம் காய்ந்து போயிருந்தது, அவளது உதடுகள் வறண்டு வெடித்திருந்தன.

​ஆனால் ஆடுகளின் பசியைத் தீர்ப்பதில் மட்டும் ஆமினா உம்மா ஒருபோதும் சோர்வதில்லை. தன்னால் முடிந்தவரை கிண்ணியாவின் பசுமையான புல்வெளிகளைத் தேடிப் பிடிப்பாள். ஆற்றோரங்களில் முளைத்திருக்கும் பச்சைத் தளிர்களை ஆடுகளுக்குக் காட்டுவாள். அவளது குரலைக் கேட்டவுடன் ஆடுகள் அந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்று புல் மேயத் தொடங்கும். அவை வயிறார மேய்ந்து மகிழும் போது ஆமினா உம்மா ஒரு மரத்தின் நிழலில் சற்றே அமர்ந்து அவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

​ஆனால் அந்த நேரத்தில் அவளது சொந்த உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறிய மாட்டார்கள். ஆடுகளின் பசியைத் தீர்க்க அவள் பச்சைத் தளிர்களைத் தேடிக் கொண்டிருந்தாள், ஆனால் தன் சொந்த விடாயைத் தீர்த்துக் கொள்ள அவளிடம் ஒரு சொட்டு நீர்கூட இருக்கவில்லை. கடும் விடாய் ஏற்பட்டால் அவளது தொண்டை வறண்டு போகும், கண்கள் இருட்டிக் கொண்டு வரும். சில நேரங்களில் காலடியில் இருக்கும் நிலமே அசைவது போல அவளுக்கு தோன்றும்.

​அவ்வளவு துன்பத்திலும் அவள் தன் வேதனையை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டாள். தடியை ஊன்றி மெதுவாக எழுந்து மீண்டும் ஆடுகளின் பின்னால் நடப்பாள். அவளுக்கு ஆடுகளின் பசி முதலில், தன் பசி பின்னர், ஆடுகளின் தாகம் முதலில், தன் தாகம் பின்னர். அவளுடைய வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் கழிந்திருக்கலாம். தன்னை மறந்து பிற உயிர்களுக்காக வாழ்வது அவளுடைய பழக்கமாகி விட்டது.

​ஆமினா உம்மாவுடன் தினமும் பயணிக்கும் அந்த ஆடுகளுக்கு அவளது பசியும் விடாயும் புரியாமல் இருக்குமா? சிறிய வயது முதலே அவளது கைகளால் புல் தின்று வளர்ந்த விலங்குகள் அவை. அவளது குரலில் இருக்கும் அன்பையும் அவளது கைகளில் இருக்கும் கருணையையும் அவை அறிந்திருந்தன. அவள் சோர்ந்து நிற்கும் போது அவை அருகில் வந்து நிற்கும், அவள் நடக்கத் தொடங்கினால் அவையும் நடக்கும்.

​ஆமினா உம்மாவின் வறண்ட முகத்தையும் தள்ளாடும் நடையையும் பார்த்து சில ஆடுகள் தங்கள் தலையை மேலும் கீழுமாக ஆட்டும். மனிதர்களின் பார்வையில் அது ஒரு சாதாரண விலங்கியல் அசைவாக மட்டுமே தோன்றலாம், ஆனால் அந்த அசைவுக்குள் ஒரு மொழி இருந்தது. அந்த மொழியை மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. அது கவலைக்கான மொழி, அது நன்றிக்கான மொழி, அது தங்களுக்காக வாழ்ந்த ஒரு வயதான பெண்ணின் வேதனையை உணர்ந்த உயிர்களின் மௌன மொழி.

​மதிய வேளையில் குறிஞ்சாக்கேணி அல் அக்ஸா மகளிர் பாடசாலையின் மணி ஒலித்தது. வகுப்பறைகளில் இருந்த சிறுமிகள் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்கள். வெள்ளை நிறக் காற்சட்டையும் வெள்ளைச் சட்டையும் அணிந்து தலையில் பர்தா சுற்றியபடி அவர்கள் கலகலவெனப் பேசிக் கொண்டே வீடு நோக்கி நடந்தார்கள். சிலர் தோழிகளுடன் விளையாட்டாகப் பேசினர், சிலர் அன்று ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பாடங்களைப் பற்றி விவாதித்தனர், இன்னும் சிலர் வீட்டில் தங்களுக்கு என்ன உணவு கிடைக்கும் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

​அவர்களுக்கிடையில் சிறுமி பாத்திமாவும் நடந்துவந்தாள். அவளது கையில் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் குடுவை தொங்கிக் கொண்டிருந்தது. பாடசாலை முடிந்ததால் அவளது முகத்தில் வீடு செல்வதற்கான மகிழ்ச்சி இருந்தது. வழியெங்கும் தென்னை மரங்களின் நிழல்கள் குறுக்கும் மறுக்குமாக விழுந்து கிடந்தன. காற்றில் கடும் வெப்பம் இருந்தாலும் மரங்களின் நிழல் சிறிதளவு ஆறுதலை அளித்தது.

​அந்த நேரத்தில்தான் பாத்திமாவின் பார்வை ஆமினா உம்மாவின் மீது விழுந்தது. மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆடுகளோடு ஆடாகத் தொழுவம் நோக்கித் திரும்பி வந்து கொண்டிருந்தாள் ஆமினா உம்மா. ஆனால் இன்று அவளது நடையில் வழக்கத்தைவிட அதிகமான சோர்வு இருந்தது. அவளது கையில் இருந்த தடி தரையில் ஒவ்வொரு முறையும் படும்போது அவள் உடல் சற்றே நடுங்கியது.

​பாத்திமா சில அடிகள் நடந்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். ஆமினா உம்மாவின் முகத்தை அவள் உற்றுப் பார்த்தாள். அந்த முகத்தில் ஒளி இல்லை. நீண்ட நேரம் வெயிலில் காய்ந்த நிலத்தைப் போல அந்த முகம் வறண்டு கிடந்தது. அவளது உதடுகள் வெடித்து இருந்தன, கண்கள் தூர்ந்து போயிருந்தன. அந்தக் கண்களுக்குள் பசியின் கோடுகளையும் விடாயின் தவிப்பையும் பாத்திமா தெளிவாகக் கண்டாள்.

​பாத்திமா ஒரு கணம் நிதானித்தாள். தன் கையில் இருந்த குடுவையைப் பார்த்தாள். அதில் இன்னும் சில சொட்டுகள் தண்ணீர் இருந்தன. அந்தத் தண்ணீர் அவளுக்காகத்தான், வீட்டுக்குச் செல்லும் வழியில் குடிப்பதற்காக அவளது தாய் கொடுத்திருந்த தண்ணீர் அது. ஆனால் அந்த நொடியில் அவளுக்கு அந்தத் தண்ணீர் தன்னுடையது என்று தோன்றவில்லை.

​அவள் ஓடிச் சென்று ஆமினா உம்மாவின் முன்னால் நின்றாள். ஆமினா உம்மா சற்றே வியப்புடன் அந்தச் சிறுமியைப் பார்த்தாள். பாத்திமா எந்த வார்த்தையும் பேசாமல் தன் கையில் இருந்த குடுவையை நீட்டினாள். ஆமினா உம்மா முதலில் தயங்கினாள், பின்னர் நடுங்கும் கைகளால் அந்தக் குடுவையை வாங்கிக் கொண்டாள்.

​குடுவையைத் தன் வறண்ட உதடுகளில் வைத்துக் கொண்டாள். முதல் துளி தொண்டைக்குள் இறங்கியபோது அவளது கண்கள் தானாகவே மூடியன. அந்தச் சிறிய தண்ணீர்த்துளிகள் அவளது தொண்டையை மட்டுமல்ல அவளது உள்ளத்தையும் நனைத்தன. நீண்ட நேரம் வெயிலில் கருகிக் கிடந்த நிலத்தின் மீது மழைத்துளி விழுந்தது போல அவளது உடலுக்குள் ஒரு குளிர்ச்சி பரவியது.

​ஆமினா உம்மா மெதுவாக அந்தத் தண்ணீரை முழுவதும் குடித்தாள். குடுவை காலியாகிவிட்டது, ஆனால் அவளது மனம் நிறைந்து விட்டது. அவளது கண்களில் நீர் திரண்டது. அந்த நீர் விடாயால் வந்ததா அல்லது நன்றியால் வந்ததா என்பதை பாத்திமாவால் அறிய முடியவில்லை.

​பாத்திமா அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆமினா உம்மா அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பிடித்துக் கொண்டாள். அந்தக் கைகளில் வயதின் நடுக்கம் இருந்தது, ஆனால் அந்த நடுக்கத்திற்குள் அளவில்லாத அன்பு இருந்தது. அவள் பாத்திமாவின் தலையை வருடினாள், அவளது உதடுகள் மெதுவாக துஆவை உச்சரித்தன.

​அந்த நொடியில் வயதுகளும் உறவுகளும் தலைகீழாக மாறின. வயதில் பெரியவளான ஆமினா உம்மா ஒரு சிறுமியின் கையில் தண்ணீர் பெற்றுக் கொண்டாள். பெற்ற தாயைப் போல வாழ்ந்த அந்தப் பெண்ணுக்கு அந்தச் சிறுமி ஒரு தாயைப் போல மாறினாள். உறவுகளை உருவாக்குவது வயது அல்ல என்பதையும் இரத்தத் தொடர்பு மட்டுமே அன்பின் அளவுகோல் அல்ல என்பதையும் அந்த மாலை நேரம் அமைதியாகச் சொல்லிக் கொண்டிருந்தது.

​ஆமினா உம்மாவைச் சுற்றி நின்றிருந்த ஆடுகளும் அந்தக் காட்சியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவற்றில் சில ஆமினா உம்மாவை நோக்கின, பின்னர் பாத்திமாவை நோக்கின. அவற்றின் கண்களில் ஏதோ சொல்ல முடியாத உணர்வு இருந்தது.

​சிறிது நேரத்தில் ஆமினா உம்மா தன் தடியை எடுத்துக் கொண்டு தொழுவம் நோக்கி நடக்கத் தொடங்கினாள். ஆடுகளும் அவளைப் பின்தொடர்ந்தன. ஆனால் அவை வழக்கம்போல் நேராக நடந்து செல்லவில்லை. ஒவ்வொரு சில அடிகளுக்கும் ஒரு ஆடு தன் தலையைத் திருப்பிப் பார்த்தது. பாத்திமாவை நோக்கி சில நொடிகள் பார்த்துவிட்டு மீண்டும் முன்னோக்கி நடந்தது.

​பாத்திமா அங்கேயே நின்று அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆடுகளின் அந்தத் தலை அசைவு அவளுக்குப் புரிந்தது போல இருந்தது. அவை மனிதர்களின் மொழியில் பேச முடியவில்லை, நன்றி என்று சொல்ல முடியவில்லை, துஆ செய்ய முடியவில்லை. ஆனால் அவற்றின் கண்களும் தலை அசைவுகளும் எங்கள் உம்மாவின் விடாயைத் தீர்த்ததற்கு நன்றி என்ற ஒரு செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தன.

​அந்தச் சிறிய சிறுமி அந்த மௌன மொழியைப் புரிந்து கொண்டாள். அவளது முகத்தில் மெதுவாக ஒரு புன்னகை மலர்ந்தது. அவள் தன் குடுவையைப் பார்த்தாள். அதில் இனி தண்ணீர் இல்லை, ஆனால் அவளது உள்ளம் நிறைந்திருந்தது.

​குறிஞ்சாக்கேணியின் மாலை மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. மேற்கு வானம் மங்கலான நிறத்தில் மூழ்கிக் கொண்டிருந்தது. தென்னை மரங்களின் இலைகளுக்கிடையே வீசிய தென்றல் காற்று பகலின் வெப்பத்தை மெதுவாக அகற்றிக் கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் பறவைகள் தங்கள் கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. தூரத்தில் பள்ளிவாசலிலிருந்து மாலை நேர பாங்கு ஓசை எழத் தொடங்கியது.

​ஆமினா உம்மாவும் அவளது ஆடுகளும் தொழுவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். பாத்திமா வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ஆனால் இருவரும் தங்கள் வழியில் தனித்தனியாகப் போகவில்லை. அந்த நாளில் அவர்கள் இருவரின் உள்ளங்களிலும் ஒரு குடுவை தண்ணீர், ஒரு தாகம், ஒரு சிறுமியின் கருணை, ஒரு வயதான பெண்ணின் நன்றி, அதையும் தாண்டி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் வார்த்தைகளின்றி பகிரப்பட்ட ஒரு அன்பு என ஒரே நினைவு பயணித்துக் கொண்டிருந்தது.

​அந்த மாலை குறிஞ்சாக்கேணி கண்ட காட்சி ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. வெயிலால் வறண்ட நிலத்தில் ஒரு சிறிய நீர்த்துளி விழுந்தது போல ஒரு மனித உள்ளத்தின் மீது இன்னொரு மனித உள்ளம் கருணையைப் பொழிந்த தருணம் அது. ஆமினா உம்மாவின் உடல் விடாயைத் தீர்த்தது அந்தச் சிறிய குடுவைத் தண்ணீர், ஆனால் அவளது மனத்தின் நீண்ட கால விடாயைத் தீர்த்தது பாத்திமாவின் அன்பு.

​அன்று ஆமினா உம்மா தன் வீட்டிற்குள் சென்றபோது அவளிடம் செல்வம் எதுவும் இல்லை, கையில் பணம் இல்லை, வீட்டில் பொருள் இல்லை, வாழ்க்கையை மாற்றும் வசதிகள் எதுவும் இல்லை. ஆனால் அந்த நாளின் முடிவில் அவள் மனத்தில் ஒரு பெரும் செல்வம் இருந்தது. தன்னை நினைத்துக் கொள்ளும் ஒரு சிறுமியின் அன்பு அவளுக்கு கிடைத்திருந்தது.

​பாத்திமாவும் அன்று வீட்டிற்குத் திரும்பியபோது அவளது குடுவை காலியாக இருந்தது, ஆனால் அவளது உள்ளம் நிறைந்திருந்தது. ஒரு மனிதனின் தாகத்தைத் தீர்க்கும் அளவுக்கு தண்ணீர் கொடுத்தால் அது உடலை மட்டுமே குளிர்விக்கும், ஆனால் அன்போடு கொடுக்கப்படும் தண்ணீர் ஒரு மனிதனின் உள்ளத்தையும் குளிர்விக்கும் என்பதை அவள் அந்த நாளில் அறிந்துகொண்டாள்.

​குறிஞ்சாக்கேணியின் மாலை காற்று இன்னும் வீசியது. ஆடுகள் தொழுவத்திற்குள் சென்றன. அவற்றில் சில மீண்டும் மீண்டும் வெளியே பார்த்தன. பாத்திமா சென்ற பாதையை நோக்கி அவற்றின் பார்வை நீண்டது. அவற்றின் தலையசைவுகள் மெதுவாக நின்றன.

​அந்த நாளுக்குப் பிறகும் ஆமினா உம்மா தினமும் ஆடுகளை மேய்க்கச் சென்றாள். வெயில் வந்தது, மழை வந்தது, காற்று வீசியது. வயல்வெளிகள் பசுமையாகின, மீண்டும் வறண்டன. ஆனால் அந்தச் சிறிய குடுவைத் தண்ணீரின் நினைவு அவளது மனத்தில் என்றும் வற்றாத ஊற்றாக இருந்து கொண்டே இருந்தது.

​பாத்திமாவும் வளர்ந்து கொண்டே சென்றாள். வாழ்க்கை அவளை எந்தப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் ஒரு நாள் ஒரு வயதான பெண்ணின் வறண்ட உதடுகளுக்கு அவள் கொடுத்த சில தண்ணீர்த்துளிகள் அவளுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய பாடமாக மாறியிருந்தன.

​மனித வாழ்க்கையில் சில தருணங்கள் மிகச் சிறியதாகத் தோன்றினாலும் அவை காலத்தைத் தாண்டி நிற்கும் அளவுக்கு பெரிய அர்த்தத்தைப் பெற்றிருக்கும். ஆமினா உம்மாவின் விடாயைத் தீர்த்த அந்தச் சிறிய தருணமும் அப்படித்தான். அன்புக்கு வயது இல்லை, கருணைக்கு மதம் இல்லை, நன்றிக்கு மொழி இல்லை. தாகத்தைத் தீர்க்கும் ஒரு துளி தண்ணீருக்கு சாதாரணம் என்ற பெயர் இல்லை, அது ஒரு உயிரைத் தாங்கும் அருள்.

​அன்று குறிஞ்சாக்கேணி அந்த உண்மைக்குச் சாட்சியாக நின்றது. ஆமினா உம்மாவும் பாத்திமாவும் இரு வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த ஒரு குடுவைத் தண்ணீர் அவர்களின் உள்ளங்களை ஒரே இடத்தில் இணைத்தது.

​மாலைத் தென்றல் இன்னும் மெதுவாக வீசியது. தென்னை இலைகள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டன. தூரத்தில் ஆற்றின் நீர் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீரைப் போலவே மனித அன்பும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவரின் விடாயைத் தீர்க்க இன்னொருவர் தன் கையில் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போது உலகம் இன்னும் கொஞ்சம் அழகாகும்.

​குறிஞ்சாக்கேணியின் அந்த மாலைப் பொழுதில் ஆமினா உம்மாவும் பாத்திமாவும் ஆடுகளும் ஒரே அன்பின் புள்ளியில் இணைந்து நின்றார்கள். அந்த அன்பின் மொழியை மனிதர்கள் மட்டும் அல்ல, அந்த ஆடுகளும் புரிந்திருந்தன.

​ஜமீல்.

Series Navigationமழைபுராணம் – 50‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்