சோம. அழகு
என்னவனின் அலைபேசி ஒரு சாதாரண நாளின் முன்னிரவில் கொடூரமான அழைப்பு மணியுடன் அலறியது.
“கண்றாவி! அந்தக் கருமம் பிடிச்ச பாட்டைத்தான் மாத்தித் தொலைங்களேன். ச்சை!” என்று நான் அங்கலாய்த்துக் கொள்ள “ஏன்? இந்தப் பாட்டுக்கு என்ன கொறச்சல்?” என்றவாறே அழைப்புக்குச் செவி மடுத்தார். படு சுமாரான பாடல் வரிகளுடன் ஒரே மாதிரியான சத்தத்தில் (அதை இசை என்று கூற இயலாது! எனக்கும் மனசாட்சி இருக்கிறது)வரும் பாடல்கள்தானே இப்போது பிரபலமாக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் ரசிக்கவில்லை எனில் தம்மை வயதானவராகக் கருதிவிடுவார்களோ என்ற பயத்தில்தான் இந்த அபஸ்வரத்தையெல்லாம் ரசித்துத் தொலைக்கிறார் போலும் 80களில் பிறந்த என் பிராண நாதர்! அல்லது இசையில் ரசனையே இவ்வளவுதானா என்றும் தெரியவில்லை. அதை நான் தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை. அது கெடக்கு…. விஷயத்துக்கு வாரேன்.
அழைப்பின் எதிர் முனையில் என்னவனின் நண்பர் அருள். என்னவனை விட இரண்டு வயது கூட என்று கூறியதாக நினைவு. இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒண்டிக்கட்டையாக இருக்கிறார் என்று சமூகத்தின் சராசரி மொழியில் கூறலாம். அல்லது, திருமணம் என்னும் மூடத்தனமான கட்டமைப்பு தமக்கு ஒத்துவராது என உணர்ந்து (இந்த உணர்தலுக்கே ஒரு தனி பக்குவமும் ஞானமும் வாய்க்கப் பெற்றிருக்க வேண்டும்!) சுதந்திரமாக இன்புற்றிருக்கும் வாழ்வு முறையைத் தைரியமாகத் தேர்வு செய்தவர் என்று என் மொழியிலும் கூறலாம்.
என்னவன் : ஹலோ…!
அலைபேசியில் ஒலிப்பெருக்கி பொத்தானை(speaker mode) அழுத்தி மேசையில் வைத்தவாறே என்னவனின் உரையாடல் தொடங்கியது.
அருள் : ஹலோ… எப்பிடி இருக்க? ஆமா… இப்ப எங்க அங்கிள் இருக்கீங்க? (திருமணம் ஆன பிறகிலிருந்து என்னவனுக்கு இந்நாமகரணம் சூட்டப்பட்டதாகக் கேள்வி!) கிரீன்ஸ்பொரொ தானா?
என்னவன் : இல்லடா. ஒரு வருஷம் ஆச்சு புது இடத்துக்கு வந்து. இப்போ இருக்குறது லாங் ஐலேண்ட், நியூ யார்க். நீ எங்கடா இருக்க?
அருள் : இப்பதாண்டா கலிஃபோர்னியாலருந்து அலெக்ஸாண்ட்ரியா மாத்தலாகி வந்துருக்கேன்
வீடு, பணியிடம், தொலைவு, பணிச்சூழல், பணிச்சுமை போன்ற உபய குசலோபரிகள் முடிந்த பின்,
அருள் : என்னடா பண்ணிட்டு இருக்க?
என்னவன் : சாப்பிட்டுட்டு இருக்கேன்டா… நீ சாப்டியா?
அருள் : இல்ல அங்கிள், இனிமேல்தான். இப்போதான் சமையல் சாமான் தட்டு முட்டெல்லாம் புது வீட்டுல அடுக்கி முடிச்சேன். கோதுமை மாவு தோசை சுடலாம்னு கரைச்சு வச்சுருக்கேன். எப்படி வரப் போகுதோ? கல்லு வேற ஒரு தினுசா இருக்கு. அங்க என்ன சாப்பாடு?
என்னவன் : தோசை, தக்காளி சட்னி, மதியம் செஞ்ச சாம்பார்
அருள் : சரி சரி… நீ வேலையப் பாரு. அப்புறம் கூப்பிடவா?
என்னவன் : இல்லை இல்ல… நான் ஜாலியா சாப்பிடுட்டேதான் பேசுறேன். அனு தான் தோசை சுடுறா. ஒண்ணும் பிரச்சனை இல்ல…. பேசு பேசு… உன் தோசை ஒழுங்கா வருதா?
அருள் : இல்ல… எதிர்பார்த்த மாதிரியே பிஞ்சு பிஞ்சு வருது. திருப்பி போடவும் முடியல
“அண்ணா! மாவு இன்னும் கொஞ்சம் தண்ணியா கரைச்சுக்கோங்க. இல்லனா கொஞ்சம் ரவையும் அரிசி மாவும் சேர்த்துடுங்க” என தோசை சுட்டுக் கொண்டே யோசனை கூறியது, அனுவாகிய நான்.
அருள் : கல்லு இருக்க இருப்புக்கு…. சரிங்க! முயற்சி பண்றேன்
என்னவன் : இது இல்லேனா வேற என்ன சாப்பிடுவ? பக்கத்துல வேற நம்ம ஊரு கடை ஒண்ணும் இருக்காதே. அந்த ஊரு சரியான பட்டிக்காடுன்னு கேள்விப்பட்டுருக்கேன்
அருள் : வேற வழி இல்ல. இன்னிக்கு இதுதான். இங்க கடையில வாங்கிச் சாப்பிடுறதுக்கு இந்த மாவையே குடிச்சிட்டுப் போயிரலாம்
என்னவன் : ஒரு நிமிஷம் டா… இரு. கை கழுவிட்டு வரேன்
அருள் : வேலைய பார்ரா… அப்புறம் கூட பேசலாம்
என்னவன் : சாப்பிட்டு முடிச்சுட்டேன். இனிமே என்ன? ஒரு வேலையும் இல்ல. சொல்லு…
அருள் : எதே? அடுத்து நீ தோசை சுட போக வேணாமா?
என்னவன் : ங்கே…
அருள் : வூட்டம்மாவுக்கு சுட்டுக் குடுக்கப் போகலியா?
என்னவன் : அது… அவளே சுட்டுக்குவா
அருள் : நீ குடுத்துவச்சவந்தான். அப்போ நீ செஞ்சு குடுக்க மாட்டியா?
என்னவன் : அவ சாப்பிடுறது ரெண்டே ரெண்டு தோசை. அதையும் நான் சாப்பிட்டு முடிக்குறதுக்குள்ள அவளே சுட்டுட்டு வந்துருவா
அருள் : என்ன அங்கிள் நீங்க? சுட்டுக் குடுங்க அங்கிள்… அவங்களும் சூடா சாப்பிடட்டும்.
நான் : அய்யோ அண்ணா! அதெல்லாம் கூட வேண்டாம். அரை கல்லு உப்பு கூடிருச்சு; முக்கா மொளகா கூட போட்டுருக்கலாம்; கூட்டு கொழஞ்சு போச்சு; அரிசி அவிஞ்சு போச்சுன்னு சும்மா ஏதாவது சொல்லாம இருந்தாலே போதும்.
அருள் : ஓஹோ… இதெல்லாம் வேற சொல்வானா? ஏன்டா டேய்! ஒருத்தங்க செஞ்சு தர்றதே பெருசு. ஒனக்கு லொள்ளு வேறயா?
என்னவன் : நல்லா இருக்கும் போது நல்லா இருக்குன்னு சொல்லிடுவேன்டா. இவ சும்மா exaggerate பண்றா. ஹே! நான் உங்கிட்ட நல்லா இருக்குன்னு சொன்னதே இல்லையா? (– இக்கேள்வி என்னைப் பார்த்து)
ஆனால் எனக்குப் பதிலளிக்கும் வேலையே இல்லை.
அருள் : எப்படி இருந்தாலும் நல்லாருக்குன்னு சாப்பிடணும் அங்கிள்.
இதன் பிறகு அலுவலகம் குறித்துத் திரும்பியது அவர்களது பேச்சு.
************************************
மிகச் சாதாரணமான உரையாடல்தான். ஆனால் நான் வெகு காலத்திற்கு முன்பு வாசித்த அம்பை அவர்களின் ‘வெளிப்பாடு’ சிறுகதையை நினைவிற்குக் கொண்டு வந்தது அருளின் “அவங்களும் சூடா சாப்பிடட்டும்”. அன்றுதான் தோன்றியது – எவ்வளவு சின்ன விஷயம்? கடைசியாக எப்போது நான் சூடாக தோசை சாப்பிட்டேன் என்று நினைவேயில்லை. மனதை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தியதன் விளைவாகப் பதிலைக் கண்டடைந்தேன் – அம்மா வீட்டில்.
இப்போது எல்லா குடும்ப இஸ்திரிகளையும் போல குழந்தைக்கு முதலில் சுட்டுத் தந்து என்னவனுக்குச் சுட்டுக் கொடுத்து என்னவன் உண்டு முடிக்கவும் மிகச் சரியாக ‘சுடச்சுட’க் காப்பிக் கோப்பையை அவனது கையில் ஒப்படைத்த பிறகு, பாலைச் சுட வைத்தவாறே எனக்குத் தோசை சுடுவேன். தோசை இரண்டும் தட்டுக்கு வந்தவுடன் சூடான பாலில் எனக்குப் பிடித்த Cocoa powder இட்டுக் கலந்து தோசையையும் பாலையும் மேசைக்குக் கொண்டு வந்து அமரும் போது காலுக்கு அவ்வளவு சுகமாய் இருக்கும். அப்பொழுதுக்கான சமையல் வேலைகள் முடிந்துவிட்டதால் வரும் ஆசுவாசம்தான் கால்களிலிருந்து மனதிற்குக் கடத்தப்படுகிறதோ என்னவோ?
முதல் தோசை மட்டுமே மிதமான சூட்டில் இருக்கும். அடுத்தது ஆறிப் போயிருக்கும். உண்டு முடிப்பதற்குள் பாலும் ஆறி விடும். சாப்பிடணும்; பால் குடிக்கணும் – கடமைக்கென நடக்கும். பெரிதாக இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ஆய்வுப் படிப்பின் போது பல்கலை செல்லும் வழியில் – விஞ்சை விலாஸில் ஆவி பறக்கும் இட்லி, பச்சை மிளகாயின் நெடி தூக்கலாக அம்மியில் அரைக்கப்பட்ட கெட்டிச் சட்னி, தக்காளி மிளகுப் பொடி ஊத்தப்பம் ஆகியவற்றைச் சாப்பிட்டு முடிக்கப்போகும் போது நன்னாரி பால் ஒன்று சொல்லி விடுவேன். கைகழுவி விட்டு வந்து அமர்ந்ததும் பாலைச் சுடச் சுட ரசித்து ரசித்துக் குடிப்பேன். வீட்டில் என்றால் என் கடைசி வாய் உள் செல்கையில் அம்மா பக்குவமான சூட்டில் போர்ன்விட்டா கலந்து பால் கொண்டு வருவாள்.
எனக்கு‘ம்’ அப்படிச் சாப்பிடப் பிடிக்கும் என்பதையே அந்த அலைபேசி அழைப்புதான் உணர்த்தியது. அல்லது நினைவு கூர வைத்தது.
‘சாப்புடுவோமா?’ – வீட்டில் உணவு உட்கொள்ளும் நேரம் வந்துவிட்டதைக் குறிக்கும் இந்த ஒற்றைக் கேள்விக்கு ‘நாம் சாப்பிடுவோமா?’ என்பதுதானே பொருள்? ஆனால் அக்கேள்வி எவ்வளவு சாம்ர்த்தியமாக வீட்டுப் ‘பெண்களை’ மட்டும் சமையலறைக்குள் அனுப்பிவிடுகிறது. ‘தோசை சுட்டுத் தாங்கன்னு நீங்களும் கேட்பதுதானே?’ என்றெல்லாம் பெண்களிடம் எதிர்வாதம் வைக்கப்பிடாது. என்னத்தப் போட்டு ஒவ்வொரு தடவையும் நாங்க கேட்டுக்கிட்டு? எங்ககிட்ட என்ன ஒவ்வொரு தடவையும் கேட்டுட்டா இருக்காங்க? அப்படியே கேட்டாலும் கேட்டதற்காக என்றோ ஒரு நாள் வேண்டுமானால் கிட்டலாம். தினமும்? தெரியல. மேலும் ‘நான் ஒனக்குச் செஞ்சு குடுத்தேன்ல? நீயும் பதிலுக்கு செஞ்சுதான் ஆகணும்’ என்றெல்லாம் வீட்டினுள்ளேயே எப்போதும் தராசைத் தூக்கிக் கொண்டே திரிய முடியாதல்லவா?
இவ்வளவிற்கும் என்னவனோ என் அப்பாவோ நாங்கள் கேட்டால் அகமகிழ்வோடு சுட்டுத் தரக் கூடியவர்கள்தாம். எவ்விதச் சங்கோஜமுமின்றி அனைத்து உதவிகளும் செய்யக்கூடியவர்கள்தாம். ஆனால் இந்த Y chromosomeகளுக்குத் தானாக இது தோன்றவே தோன்றாது போலும். அதற்கு அவர்கள் வளர்ந்த சூழலும் கூடக் காரணியாக இருக்கலாம். They were just surrounded by patriarchists and enablers of the same. எனவே வீட்டு வேலைகளில் ‘ஆஆஆண்; நெடில்…ஹ்ம்ம்ம்’ என்று மீசையை முறுக்காமல் தற்போது அவர்கள் பங்கெடுக்கிறார்கள் என்பதையே கடப்பாரையைக் கொண்டு patriarchal கட்டமைப்பில் அவர்கள் இறக்கும் அடியாகக் கொள்ள வேண்டும் போலும்.
******************************************
இவ்வெண்ணங்கள் என் மனதை ஆக்கிரமித்த அடுத்த நொடியே அனிச்சையாக அம்மா என் அகக்கண்ணில் வந்து அவளுக்கே உரிய மெல்லிய குறுநகை பூத்தாள். இரவு வேளைக்கு என்ன உணவு என்று நாங்கள் கேட்கும் போதெல்லாம் “தோசை மாவு இருக்கு; மதியம் உள்ள சோறு கொஞ்சம் இருக்கு; ரெண்டு சப்பாத்திக்கு மாவு கெடக்கு; காலைல செஞ்ச இட்லிய வச்சு இட்லி உப்மா செஞ்சுருக்கேன். யாருக்கு எது வேணுமோ சொல்லுங்க” என்பாள். அதாகப்பட்டது ஒரு நாளும் அவளுக்கென்று ஒரு தெரிவும் இருக்காது. அப்படி எப்படி ஒரு மனுஷி இருக்க முடியும்?
இவ்வளவு எழுதி முடித்தவுடன் அலைபேசியில் அம்மாவை அழைத்துக் கேட்டே விட்டேன்.
சிரித்தாள்.
“என்ன திடீர்னு?” என்று கேட்டாள்.
“ஒண்ணுமில்ல மா… திடீர்னுதான் தோணுச்சு. அது எப்பிடி மா அப்பிடி இருக்க முடியுது உன்னால? ஒரு நாளைக்காவது உனக்கு ராத்திரி தயிர்ச் சோறு சாப்பிடணும் போல இருந்திருக்கும். இன்னொரு நாள் சூடா தோசை சாப்பிடப் பிடிச்சுருக்கலாம். உனக்கும் ரொம்பப் பிடிச்ச இட்லி உப்மாவை ஒரு நாளும் நீ சாப்பிட்டதா எனக்கு ஞாபகமே இல்ல. ஏன் நீ எதையுமே சொன்னதில்ல?”.
“அப்படியெல்லாம் எனக்குப் பெருசா தோணுனதே இல்லடா. எது இருக்கோ அதச் சாப்பிட்டுக்கலாம்னு விட்டுருப்பேன்” – அம்மா.
“அதான் ஏன்?” என்று விடாப்பிடியாகக் கேட்டேன்.
“தெரியலையே” – என்று சிரித்தாள்.
“தெரியலையா? சொல்லத் தெரியலையா?” என்று கேட்டதற்கு,
“அதுவும் தெரியலையே” என்று பெரிதாகச் சிரித்து வைத்தாள்.
ஸ்ஸ்ஸ்! ஏ பனிமய மாதாவேஏஏஏ! இதற்கெல்லாம் என்றோ ஒரு நாள் இச்சமூகம் எலும்புத் துண்டெனத் தூக்கிப் போடும் சல்லிக் காசு பெறாத ‘தியாகி’ பட்டத்தை வைத்து நாக்கைக் கூடச் சுத்தம் செய்ய இயலாது என்பதை எடுத்துச் சொன்னாலும் புரியும் பக்குவம் வாய்க்கப் பெற்றிருக்கிறாளா என்று ‘தெரியலை’.
திருமணம் முடிந்த துவக்க காலத்தில் அம்மாவிடம் ஒரு நாள் மூச்சு விடாமல் இவ்வாறாகக் கொட்டிக் கொண்டிருந்தேன் – “ம்மா! என்னம்மா இது? இந்த சமையல் வேலை முடியவே மாட்டேங்குது? லீவு நாள் அன்னைக்குக் காலைல ஒரு பொங்கல், சட்னி, சாம்பார், வடைன்னு செய்ய ஆரம்பிச்சா ஒரு மணி நேரம் ஆகீருது. செஞ்சு முடிஞ்சு அக்கடான்னு உக்காந்தா சாப்பிட்டு முடிக்க பத்து இல்ல பதினஞ்சு நிமிஷம்தான். அப்புறம் பிள்ளைக்கு ஊட்டி முடிச்சு கைய கழுவும் போது பாத்தா திரும்பவும் ஒரு கூடை பாத்திரம் கழுவ சேர்ந்துருது. மறுபடியும் ஒரு மணி நேரம் அடுக்களையைத் துடைச்சுட்டு வந்தா மத்தியானம் வந்துருது…. ரிப்பீட் மோட்ல சமைக்க பாத்திரம் கழுவன்னு லீவு நாள் ஓடிப் போயிருது. பொங்கல்ன்னு இல்ல, வார நாட்களிலும் ஒரு சோறு, காய், குழம்புன்னு சமையல் ஒரு மணி நேரம், சுத்தம் செய்ய திரும்பவும் ஒரு மணி நேரம். சாப்பிடணும். அவ்வளவுதானே? அதுக்கு ஏன் இவ்வளவு களேபரம் ஒவ்வொரு நாளும்? சக்கரத்துல மாட்டுன எலி மாறி இருக்கு. அப்பப்போ தோணும் – காலைல எந்திரிச்சா ‘சூ.. மந்திரக்காளி’ போட்ட மாதிரி உண்மேசைல சாப்பாடு தன்னால தயாரா இருக்காதான்னு. என்னன்னுதான் இத்தனை வருஷம் இந்த வேலைய பாத்துட்டு இருக்கியோ?”. இதற்கு மட்டும் என்ன பெரிய பதில் வைத்திருக்கப் போகிறாள் என எதிர்பார்க்கிறீர்கள்.
அம்மா, பணிக்கும் சென்று சமையல் வேலையும் பார்த்து…. எழுதும் போதே மூச்சு அடைக்கிறது. கொஞ்சம் வளர்ந்த பிறகு நானும் தங்கையும் கொஞ்சம் உதவுவோம்தான். ஆனால் ‘உதவி’ என்ற அப்பதமே எவ்வளவு அபத்தமானது என்று எனக்கு இப்போதுதான் புரிகிறது. அம்மாவுக்கு ‘உதவுகிறேன்’ என்றால் ஏதோ எல்லாம் அம்மாவின் வேலை என்பது போலவும் நான் அவளுக்கு ஒத்தாசையாக இருக்கிறேன் என்பதாகவும் பொருள் வருகிறது. வீடு என்றால் எல்லாமே எல்லோரின் வேலைதானே? அப்புறம் ஏன் மொத்த ungratifying workம் ஒருவருக்கானது என நிரந்தரமாக நேர்ந்து விடப்படுகிறது? பெண்களுக்கானது என வரையறுத்து வைத்திருக்கும் வீட்டு வேலைகள் எல்லாமே ungratifyingதான். அவற்றில் ஏதேனும் ஆதாயமோ நன்மையோ இருப்பின் எப்போதோ அவை ஆண்களுக்குரியதாக அடாவடியாகக் கைமாறியிருக்கும்!
*************************************
இதில் என்னவனின் அலப்பறைகள் சொல்லி மாளாது. “தினமும் ராத்திரி பாத்திரம் நான்தான் கழுவுகிறேன், அத்தை. அப்புறம் இன்றைக்குக்(அபூர்வமாக என்றோ இதுவும் நிகழும்!) கூட நாந்தான் vaccum போட்டேன் வீட்டுக்கு” என்று என் அம்மாவிடம் சிறு குழந்தையைப் போல் அவ்வப்போது பெருமை பீற்றுவதே வேலை. அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சியாய் இருந்தாலும் மருமகனை விட்டுத் தரக் கூடாது என்பதற்காக “ஏன் அவங்களைப் போய் செய்ய விடுற?” என்று என்னிடம் என்னவன் முன்னிலையில் சம்பிரதாயமாகக் கேட்டு வைப்பாள்.
[முக்கியமான உபகதை : தினமும் மாலை உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பும் என்னவனுக்கு இதுநாள் வரை காத்திருந்து சூடாக உணவு செய்து பரிமாறிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு பாத்திரம் கழுவி, அடுக்களையைச் சுத்தம் செய்து உறங்கச் சென்று குழந்தையைப் பள்ளிக்குக் கிளப்ப அதிகாலையில் துயில் எழுவது கடினமாக இருந்தததால் சமீபமாக உணவைத் தயார் செய்து வைத்து விட்டு எல்லாவற்றையும் சுத்தம் செய்து முடித்து உறங்கச் சென்று விடுவேன். தாமதமாக வரும் என்னவனுக்கு உணவை நுண்ணலை அடுப்பில்(microwave oven) வைத்துச் சூடு செய்து உண்டு விட்டு உண்ட பாத்திரத்தைக் கழுவுவது மட்டும்தான் வேலை. அந்த இரண்டு பாத்திரத்திற்கு இரண்டு பக்கத்திற்குப் பாராட்டுப் பத்திரம் என் அம்மாவிடம் எதிர்பார்த்து ஒரு சமர்த்தான அப்பாவியான முகத்தை வேறு வைத்துக் கொள்(ல்)வார்கள்]
எதிர்தரப்பு உறவினர்கள் (இவ்வார்த்தைப் பயன்பாட்டின் courtesy : பேயோன்) வரும் போது மட்டும் “உன்னால இன்னைக்கு பாத்திரம் கழுவிட முடியுமா? நாளைக்கு நீயே வீடு துடைச்சுருவியா?” என்று என் காதருகினில் கொசுவாக மாறிப் பம்முவதும், “நிறைய பாத்திரம் கிடக்குமே? அவ தனியாவே எல்லா வேலையும் செய்யணுமே!” என தான் உள்ளுக்குள் மருகுவதை அவ்வப்போது நான் இருக்கும் இடத்திற்கு வந்து என்னை எட்டி எட்டிப் பார்ப்பதுமாக என்னவனின் அவதாரம் நொடிக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருக்கும். என்னை யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்கிற அக்கறை அதில் தொனிப்பது தெரியாமல் இல்லை.
ஆனாலும் அனைவருள்ளும் காலங்காலமாகப் புரையோடிப் போயிருக்கும் அந்த வழமையான சமூகக் கட்டுப்பாடுகளை (social conditioning) மனதளவில் கூட யாராலும் தகர்த்தெறிய முடியவில்லை. உணவில் தனது தெரிவை வெளிப்படுத்துவது முதற்கொண்டு இன்ன பிற அன்றாடங்களில் கூட தனது விருப்பத்தை முன்னிலைப்படுத்துவது ‘தன்னலம்’ எனப் பல யுகமாகப் பெண்களின் மரபணுவில் ஏற்றப்பட்டிருக்கிறது. இவ்வளவிற்கும் வீட்டில் என்னவன் “பழச நான் சாப்பிட்டுக்குறேன். நீ இப்போ புதுசா உள்ளத சாப்பிடு” என்று அவ்வளவு கரிசனத்தைக் கொட்டும் போதும் கூட “ஐயையோ! இல்லப்பா… வேண்டாம். நீங்க சூடா சாப்பிடுங்க” என்று சொல்லச் சொல்லிப் புற மண்டையில் ஓயாமல் அடிக்கும் மணிச்சத்தம் என் வாயினின்று அச்சொற்கள் வெளிவந்த பிறகே நிற்கும்.
எல்லாவற்றையும் மீறி கொண்டவன் கொஞ்சமே கொஞ்சம் கூடுதலாக உதவ முன்வந்தாலோ தன் வேலையைத் தானே செய்து கொண்டிருந்தாலோ உடனே என்னுள் குற்றவுணர்வு தயாராகக் காத்துக் கொண்டிருக்கும் – “அப்பிடியே இதப் பெருசா யோசிச்சுட்டே மனசுல தக்கினியூண்டு இடம் குடுத்தேன்னா நான் டக்குன்னு உள்ள வந்து உக்காந்துக்குவேன்…. பாரு பாரு நல்லா பாரு. இதையெல்லாம் வருச காலமா உன் ஆச்சியும் அம்மாவும்தான செஞ்சாங்க? எப்பிடி ஆத்துக்காரரைச் செய்ய விட்டு வேடிக்கை பாக்குற? ஆத்தாடி”.
ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் அய்யய்யோ என்ன? அம்மம்மா என்ன? இது நிஜமாகவே என் குரலா அல்லது என்னவனின் உதவும் நடவடிக்கைகளை ஒருவேளை காண நேர்ந்தால் எழும் சுற்றத்தின் supposed கூக்குரல்கள்தாம் என் குரலாக என் மண்டையில் ஒலிக்கிறதா? என்ன எழவோ? தூக்கி எறிய முடியவில்லை. அவ்வளவிற்குச் சமூகம் ஒட்டுமொத்தமாக மூளைச் சலவை செய்திருக்கிறது.
**************************
அப்பாவும் அம்மாவும் உண்டு முடித்த பின் அப்பா மிக இயல்பாக அம்மாவின் தட்டையும் கழுவ எடுத்துச் செல்வது குறித்து அம்மா என்னிடம் எக்கச்சக்கமாக நெளிந்தபடியே கூறியது நினைவிற்கு வருகிறது – “ஆச்சி வேற அங்கதான் உக்காந்துருந்தாங்க… ஒங்க அப்பா பாட்டுக்கு என் தட்டையும் தூக்கிட்டுப் போறாங்க. அப்பாவை வேலை வாங்குறேன்னு நெனைச்சுருப்பாங்கள்ல?”. மணமாகி 35 வருடங்கள் ஆகியும் சங்கடப்படுகிறாள்.
“நெனச்சா நெனைச்சிட்டுத்தான் போகட்டுமே. அதுக்கென்ன இப்ப?” என்று யோசிக்கக் கூடத் தயங்கும் தலைமுறைதான் இப்போது மூத்த தலைமுறை. இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆகுமோ இதிலிருந்து முற்றிலும் வெளியே வர? உடனே என் அப்பாவை இதையெல்லாம் அடித்து நொறுக்குவதாக ரொம்ம்ம்ம்ப முற்போக்குவாதியாக எண்ணி விட வேண்டாம். தம் மனைவியையும் மகள்களாகிய எங்களையும் தாங்குவது போன்றே தம் மருமகனாகிய என்னவனையும் தாங்குவார்கள். அது பிரச்சனையில்லை. ஆனால் என்னவனுக்கு வெள்ளித் தட்டில்தான் உணவு பரிமாற வேண்டும்; சாப்பிட்டு முடித்தவுடன் தட்டை என்னவன் எடுக்கக் கூடாது போன்ற வினோத மரியாதையையெல்லாம் கடைபிடிப்பார்கள். In that sense he too is an enabler, unconsciously.
கேட்டால் “வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்குன்னு மரியாதை வேண்டாமா?” என்றார்கள். “எது? அந்த எச்சில் தட்டு எடுக்க விடாமல் இருப்பதில்தான் மரியாதை இருக்கிறதா?” என்று பதிலுக்குக் கேட்டதற்குப் பெண்ணைப் பெற்றவர்களுக்கே உரிய அசடு வழியும் சிரிப்பு. என்னவனை நோக்கி – “அதென்ன உங்களை மட்டும் உங்க பொறந்த வூடு புகுந்த வூடுன்னு எல்லா இடத்துலயும் தாங்குறாங்க? நான் மட்டும் என்ன ரெண்டு வீட்டுக்கும் தண்ணி கேன் போட வந்தேனா?” என்று கேட்டு வைக்கத்தான் முடிந்தது. பதில் சொல்லத் தெரியாமல்(பதில்னு ஒண்ணு இருந்தாத்தானே?!) பெருமிதம் பொங்க அசடு வழியும் அரிய கலவையைத் தம் முகத்தில் அரிதாரமாகப் பூசியிருந்தார் என்னவர்ர்ர்.
இவ்வுலகில் ‘மாப்பிள்ளைகள்’ என்னும் வகையினம் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு அவர்களைச் சதா செல்லங்கொஞ்சிக் கொண்டே இருப்பதற்கான காரணங்களைச் சமூகம் அடுக்கினால் பெண்கள் நாங்கள் நேராகச் சென்று போதி மரத்தின் கீழ் அடைக்கலம் புகுந்து கொள்வோம்.
*******************************
இப்போதெல்லாம் உணவகம் செல்லும் போது எனக்குத் தோசை சாப்பிட வேண்டும் போல இருக்கும். என்னவனோ “வீட்டுலயும் அதத்தான சாப்பிடுற. இங்க ஏதாவது புதுசாதான் சாப்பிடேன்” என்னும் போது அப்படியே காலச்சக்கரத்தில் பின்னோக்கிப் போய் பத்து வருடங்களுக்கு முந்தைய என்னைப் பொடணியில் அடித்தது போன்று இருக்கும் ஒவ்வொரு முறையும். ஏனெனில் முன்பெல்லாம் அம்மாவிடம் நானும் இதையே தான் கூறுவேன். இன்னும் ஒரு படி மேலே சென்று “இவ ஒருத்தி. எப்போ பாரு ரவா தோசை ரவா தோசைன்னுட்டு. வேற எதையும் சொல்லமாட்டா” என்று கிண்டலே செய்திருக்கிறேன் அம்மாவை. அப்போது சத்தியமாக அம்மாவின் மீண்டும் மீண்டுமான அத்தெரிவு எனக்குப் புரிந்ததேயில்லை. இப்போது நானே உணரும் போது புரிகிறது.
திருநெல்வேலியில் இருந்த வரை நூற்றாண்டு மண்டபத்தின் வாசலில் உள்ள தட்டுக்கடை; சென்னையில் வீட்டின் அருகில் இருந்த தட்டுக்கடை – வாரம் ஒரு முறை, அதாவது ஒவ்வொரு வெள்ளி இரவும் தட்டுக்கடையில் உண்பது வாடிக்கையாகிப் போனது எனக்கு. ஒரு முறை என்னவன் “என்ன? ஓயாம வெளிய சாப்பிடுற மாரி இருக்கு?” என்று கேட்டகவும் “என்னது ஓயாம?” என்று புருவங்களை நெறித்தவாறே கேட்டேன். “வாரத்துக்கு ஒரு தடவை வந்துடுறோம்ல? அதச் சொன்னேன்” – என்னவன். “ஒரு வாரத்துக்கு ஒரு தடவை இல்ல. ஏழு நாள், மூணு வேளை – 21 வேளைகளில் ஒரு வேளை. அவ்வளவுதான? என்ன ஹோட்டலுக்கா கூட்டிட்டுப் போகச் சொல்லுதேன்? இங்க மிஞ்சி மிஞ்சிப் போனா ஐம்பது ரூபாய்க்குச் சாப்பிடுவேனா?” என்று கேட்கவும் “இல்ல… அதுக்காகச் சொல்லல…” – இதன் பிறகு என்னவன் கூறிய எதுவும் என் காதில் விழவில்லை.
வழக்கமாகக் கிடைக்காத ஒன்றைத்தான் உணவகத்தில் ருசிக்க வேண்டும் என்னும் வாதப்படி பார்த்தால் கூட இதுவரை நாங்கள் சுட்ட, இனியும் சுடப் போகிற தோசைகளின் எண்ணிக்கையையும் தாண்டி, அம்மாவோ நானோ தோசைக்கு ஆசைப்படுவது நியாயமானதே! நம்மை உட்கார வைத்து யாரோ ஒருவர் சூடாகத் தோசை சுட்டுத் தருகிறார்கள். கூடவே இரண்டு வகை சட்னி, சாம்பார் – THIS IS ROYAL LUXURY, மக்களே!
‘திங்குற ரெண்டு தோசைக்கு இவ்வளவு பெரிய கட்டுரையா?’ என்று நீங்கள் நினைக்கலாம். ‘தினமும் சாப்பிடுறதுதான். ஆனால் ஒரு நாளும் எனக்குப் பிடித்த மாதிரி கிடைப்பதில்லையே’ என்ற பலரது ஆதங்கமே இவ்வெழுத்து.
சூடா மொறு மொறுன்னு ரெண்டு தோசை, ஒரு hot chocolate! அம்புட்டுதேன் வாழ்க்கை!
- சோம. அழகு