This entry is part 1 of 10 in the series 20 செப்டம்பர் 2026

இரா. ஜெயானந்தன்

கட்டை விரலில் 

ஒட்டிக்கொண்டிருந்த 

துளி சுண்ணாம்பையும்

கடைசி வெத்திலையில்

தடவி 

வேட்டியில் மடித்து வைத்த 

சீவல் பொட்டலத்தில் 

ஒரு சிட்டிகை போட்டபின் 

நீடாமங்கல டைலர் மாமாவின் 

கடைசி மகன் ஜாதகத்தை 

காண்பித்தார்

சோனா மானா. 

அடுப்பில் 

பொங்கி எழுந்த 

காபி ஆவியுடன் 

அவர் கையில் கொடுத்தாள்

கல்யாணி அக்கா. 

வறட்டு இருமலுடன்

திண்ணையில் அமர்ந்திருந்த 

தத்தோஜி அப்பா 

கடைசி மகளாவது 

தாலிக்கட்டி 

ஜாதி ஜமாத்துக்களோடு 

வாழ மாட்டாளா என

எண்ணி

கண் கலங்கினார்.

ஓடிப்போய் 

நாற்பது வயதில்

கலப்பு திருமணம்

செய்து கொண்ட

மூத்தவளை திட்டினார் 

திண்ணையில் அமர்ந்துக்கொண்டு. 

முப்பத்தாறை நெருங்கிவிட்ட

அவரது 

மூணாவது மகள் 

நேற்றிரவே 

செந்தூர் எக்ஸ்பிரஷ் 

ஏறி 

பவளக்கார தெரு 

பாண்டியுடன் ஓடியதை 

சீனா மானா சொல்லவில்லை.

தரகர் காசு 

நூறு ரூபாய் 

அவரை பார்த்து 

அல்பமாய் சிரித்தது.

Series Navigationமழை புராணம் : 48