சுந்தர மணிவண்ணன்.
“டாக்டர் வந்துட்டாரா?”
கேட்டுக்கொண்டே கிளினிக்கிற்குள் நுழைந்தேன். வரவேற்பறையில் ரண்டு பேர் காத்திருந்தனர்.
“வந்து அரை மணி நேரம் ஆச்சு சார். நீங்க புது பேஷண்டா?” அங்கிருந்த பணிப் பெண் கேட்டாள்.
“இல்லம்மா, ஏற்கனவே ரெண்டு தரம் வந்திருக்கேன். ஆனா ரொம்ப நாளாச்சு. அடிக்கடி வர்ற அளவுக்கு உடம்புல எந்தக் கோளாறும் இருந்ததில்ல” ஒருவிதப் பெருமிதத்தோடு சொன்னேன்.
“சரி சார், பேர் சொல்லுங்க. பி.பி பாத்துடலாம்.”
பி.பி அளந்து குறித்துக் கொண்டவளிடம், “லெவல் எப்படி இருக்கு?” என்றேன்.
“நார்மல் தான் சார்.”
“அப்போ டாக்டரைப் பார்க்கலாமா?”
“இல்ல சார், முன்னாடி ரெண்டு பேர் இருக்காங்க.”
“வயசானவன்மா… கொஞ்சம் சீக்கிரம் அனுப்பேன்.”
சொல்லிவிட்டு மனசுக்குள் ஒரு சுளீர். ’வயசானவன்’ என்று என்னை நானே தாழ்த்திக் கொண்டிருக்கக் கூடாது.
எண்பதை நெருங்கினாலும் இன்னமும் தெம்பாகத்தான் இருக்கிறேன் என்ற கர்வம் எனக்குள் இன்னும் குறையலை.
மூன்றாவது முறை மணி அடித்ததும் உள்ளே போனேன். மொபைலில் மூழ்கியிருந்த இருந்த டாக்டர் அதை ஒதுக்கி வைத்துவிட்டு,
“சொல்லுங்க, என்ன பிரச்சனை?” என்றார்.
“உடம்பெல்லாம் ஒரே அரிப்பு டாக்டர். சொரிஞ்ச இடத்துல தடிச்சுப் போச்சு” என்று கை, கால்களைக் காட்டினேன்.
“எத்தனை நாளா இருக்கு? சுகர் இருக்கா?”
“ஒரு வாரமா இருக்கு. சுகர்லாம் இல்லை, சமீபத்துலதான் டெஸ்ட் எடுத்தேன்.”
“பனிக் காலம் இல்லையா… வேர்வை அடைச்சுக்கூட வரலாம்” என்றார்.
“சார், வெளிய பனி வாட்டி எடுக்குது. தும்மலும் ஜலதோஷமுமா இருக்கு. இதுல வேர்வைக்கு எங்க சார் சான்ஸ்?”
“உங்க ஏஜ் என்ன?”
“எண்பதை எட்டப் போறேன்.”
“ம்… ஏஜ் ரிலேட்டடாவும் இருக்கலாம். வயசாக ஆக இம்யூனிட்டி (நோயெதிர்ப்பு சக்தி) குறையுமில்லை…” என்றபடி இரண்டு மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.
“ இதை இருபது நாள் தவறாம சாப்பிடுங்க, சரியாயிடும்.”
வாழ்க்கையிலேயே தொடர்ந்து இரண்டு நாள் மாத்திரை சாப்பிட்டு பழக்கமில்லாத எனக்கு, டாக்டரின் அந்த ஒரு வார்த்தை அதிர்ச்சியளித்தது — “இம்யூனிட்டி குறைஞ்சிருக்கும்.”
வீட்டுக்கு வந்ததும் ஈசி சேரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன்.
‘பத்து கிலோ பளுவை அசால்ட்டா தூக்குவேன். அஞ்சு கிலோமீட்டர் அலுப்பில்லாம நடப்பேன். என்னை பார்த்து இம்யூனிட்டி கம்மிங்கறாரா?’ மனசு கொதித்தது.
என் ஈகோ என்னைச் சுற்றியிருப்பவர்களை வரிசையாக நினைத்துப் பார்த்தது.
எதிர் வீட்டு ராமானுஜம்—தினமும் உடற்பயிற்சி செய்வான், இப்போ சுகர், பி.பி மாத்திரையோட வீட்ல முடங்கிக் கிடக்கான்.
பீச்சில் நாலு கிலோமீட்டர் நடப்பேன் என்று பெருமை பேசிய முகுந்தன்—இப்போ முட்டி வலியால் நாலடி நடக்க முடியல.
ஹெல்த் டிப்ஸ் படிக்கும் நடராஜன்—ஹார்ட் அட்டாக் வந்து ஸ்டென்ட் வச்சிருக்கான்.
ரோட்டோரக் கடையில் கண்டதையும் தின்னும் அமுது—கிட்னி ஃபெயிலியர் ஆகி டையாலிசிஸ் பண்றான்.
‘அவங்களை மாதிரி கண்டதையும் தின்னாம, உடம்பை கம்பீரமா வச்சிருக்கேனே! எனக்கா இம்யூனிட்டி குறைஞ்சு போச்சு?’
மனசுக்குள் புதிதாக ஒரு பயம் விஷம்போல் பரவியது. இதுவரை எனக்குள் இருந்த ‘தான் என்ற தைரியம்’ தான் நோய்களை அண்டவிடாமல் தடுத்ததோ? இப்போது அந்த தைரியமே உடைந்துபோனதே!
“ஏங்க… டாக்டர் என்ன சொன்னார்?” காபியோடு வந்தாள் பங்கஜம்.
“ஒன்னும் சொல்லல.”
“பின்ன ஏன் இவ்வளவு சோர்வா இருக்கீங்க? சாப்பாட்டுல ஏதும் ஒவ்வாமையா? பி.பி, சுகர் ஏதும் செக் பண்ண சொன்னாரா?”—கேள்விகளால் துளைத்தாள்.
“இல்லை… வயசாயிடுச்சுல்ல, இம்யூனிட்டி குறைஞ்சிருக்கும்னு சொல்றார்.”
“அவர் சொல்றதுல என்ன தப்பு? வயசேற ஏற உடம்பு நாம சொல்றபடி கேட்குமா என்ன? இனிமே ரெகுலரா ஹெல்த் செக்-அப் பண்ணிக்கிறதுதான் நல்லது” என்றாள் பங்கஜம் அழுத்தமாக.
அவள் சொன்னது நிஜம்தான் என்றாலும், ‘அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு அலைவது, டோக்கன் வாங்கி காத்துக் கிடப்பது, தேவை இல்லாத டெஸ்ட் எடுத்து பணத்தைக் கரைப்பது…’ நினைக்க நினைக்க தலை சுற்றியது.
மாத்திரையைப் போட்டுவிட்டுப் படுத்தேன். பயமும் குழப்பமும் சேர்ந்து இரவெல்லாம் தூங்கவிடவில்லை.
மறுநாள் காலையில் எழுந்தபோதும் தலைசுற்றல் நிற்கவில்லை. தனியாகப் போகப் பயந்து பங்கஜத்தையும் கூட்டிக்கொண்டு கிளினிக் சென்றேன்.
முதல் டோக்கனே நான் தான். டாக்டர் என்னைச் பரிசோதித்தார்.
“டாக்டர், காலையில இருந்து இவருக்கு ஒரே தலைசுற்றல். இப்படி வந்ததே இல்லை” என்று பதறினாள் பங்கஜம்.
பி.பி செக் பண்ணிய டாக்டர், “பி.பி கொஞ்சம் அதிகமா இருக்கு. பயப்பட தேவையில்லை, மாத்திரை தர்றேன். ஆனா தவறாம சாப்பிடணும். இல்லைனா பி.பி இன்னும் ஷூட்-அப் ஆகிடும்” என்றார்.
“நேத்து வரை நல்லாதானே இருந்தாரு… அதுக்குள்ள எப்படி பி.பி ஏறும் டாக்டர்?” என்று கேட்டாள் பங்கஜம்.
டாக்டர் என்னை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு,
“நேத்துல இருந்து ஏதும் மனசுல டென்ஷனா இருக்கீங்களா? இந்த வயசுல மனசை லேசா வச்சுக்கிறதுதான் ரொம்ப முக்கியம். அது தான் இதுக்கு மருந்து” என்றார்.
எனக்கு எல்லாம் புரிந்தது. நோய் என்னை தாக்கவில்லை; டாக்டரின் வார்த்தையை பிடித்துக்கொண்டு என் மனசுதான் என்னை வீழ்த்தியிருக்கிறது.
ஒன்றும் பேசாமல் மெௌனமானேன். மெல்ல பங்கஜத்தின் கரங்களைப் பற்றிக் கொண்டு, அவள் தோளில் சாய்ந்து கொண்டேன்