This entry is part 7 of 11 in the series 20 செப்டம்பர் 2026

பாலமுருகன்.லோ

“வள்ளி, வள்ளி”ன்னு வீட்டுக்குள் நுழைந்தான் பரந்தாமன்.

“ஏங்க, வீட்டுக்குள்ள வரும்போதே ஏளம் விடுறீங்க? கொஞ்சம் மெதுவாதான் கூப்பிட்டா என்ன?”

“ஏண்டி, என் பொண்டாட்டியை நான் கூப்பிடுறேன். யாரு கேட்கிறா?”

“சரிச் சொல்லுங்க, என்ன விஷயம்?”

“அடியே, தலைல்லாம் நோவுது. ஸ்டிராங்கா ஒரு கப் காபி குடிச்சா நல்லா இருக்கும். காபி கிடைக்குமா?”

“அச்சச்சோ… பில்டர் காபிப் பொடித் தீர்ந்துடுச்சு, இன்ஸ்டண்ட் காபித்தூளும் இல்ல.”

“சரிம்மா, நானே போயி பக்கத்துல மளிகைக் கடையில வாங்கியாறேன்.”

“இல்ல, வேண்டாமுங்க. இப்ப நான் பத்து நிமிட டெலிவரி இருக்கே, அதுல போடுறேன்” என்றாள் வள்ளி.

“ஏம்மா, இதோ இருக்கு கடை. போயே வாங்கியாந்திருவேன். நீ என்னடானா ஆடர் செய்றேன்னு சொல்லுற.”

“சரி, ரொம்பவே தலையில் யாரோ ஓங்கி அடிக்கிறாப்புலவே இருக்கு. நான் என்ன பண்றேன், நீ காபி போடறதுக்குள்ள போயி குளிச்சுட்டு வந்திடுறேன்” என்று கூறிவிட்டு குளியலறைக்குச் சென்றான்.

சொன்ன மாதிரி குறித்த நேரத்தில் காபிப் பொடி வந்து சேர்ந்தது. வள்ளியும் மணக்க மணக்க பில்டர் காபியைத் தயாரித்தாள். குளிக்கப் போனவன் குளித்துவிட்டு வேறு உடை அணிந்துகொண்டு வந்து வள்ளியிடம்,

“என்னம்மா, காபி ரெடியா?” என்றான்.

“எல்லாம் ரெடிங்க. இந்தாங்க, சுடச்சுட இருக்கு. நல்லா ஆத்திக்கங்க. இல்ல, நான் ஆத்தித் தரவா?”

“இல்லம்மா, கொடு. நானே ஆத்திக்கிறேன். சும்மா இரண்டு ஆத்து ஆத்தினா போதும். காபின்னா சூடாத்தான் குடிக்கணும். அப்பத்தான் குடிச்ச மாதிரி இருக்கும்.”

“சரி, விமல் எங்கே?”

“அவனா, நாளைக்கு ஏதோ செமினாராம். அதற்கு அவனைத் தயார்படுத்திக்கிட்டு இருக்கான்.”

“அம்மா, அப்பா வந்தாச்சா?” என்று மேலிருந்து குரல் வந்தது விமலிடமிருந்து.

“வந்துட்டாருடா அப்பா. காபி குடிச்சுட்டு இருக்காரு” என்றாள் வள்ளி.

சிறிது நேரம் கழித்து விமல் கீழே வந்தான். வந்தவன் தன் கையில் இருந்த மொபைலில் எதையோ நோண்டிக்கிட்டு இருந்தான். இதைப் பார்த்த பரந்தாமன்,

“ஏண்டா விமல், என்ன பண்ணுற? நாளைக்கு செமினாரை வச்சுக்கிட்டு இப்படி மொபைல் நோண்டிக்கிட்டே இருந்தா எப்படி?”

“இல்லப்பா, அது சம்பந்தமாத்தான் இதுல வேலையா இருக்கேன். கொஞ்சம் பிரிண்ட்அவுட் எடுக்கணும். ஆனா, இப்ப போயி எடுக்கிற நிலையில இல்ல. அதான், மொபைலில் மூலமாவே ஆடர் செய்தால் பிரிண்ட்அவுட் வந்துடும்.”

“ஏண்டா விமலு, பிரிண்ட்அவுட்டு கூட உடனே கொண்டு வந்து கொடுக்கிறாங்களா?”

“என்னப்பா, நீங்க ஒண்ணுமே தெரியாம இருக்கீங்க. எல்லாமே இப்ப நம்ம கை நுனியில் இருக்குதுப்பா. ஒரு செயலியைத் தட்டினா போதும். குறைந்தது பத்து நிமிஷத்துல நம்ம வீடு தேடி வந்துடும்.”

“ஏண்டா, எவ்வளவு ஆகும்? எத்தன பிரிண்ட்அவுட்டு எடுக்கணும்?”

“அதுவா, சுமார் 30 பிரிண்ட்அவுட்டு எடுக்கணும்.”

“அப்படின்னா, சுமார் முப்பது ரூபாய் ஆயிடும். நீ வீட்டிலிருந்து ஆடர் செய்தீனா, எவ்வளவு ஆகும்?”

“அதுவாப்பா, டெலிவரி சார்ஜு எல்லாம் சேர்த்தா எழுபது ரூபாய் ஆகும்.”

“ஏண்டா விமலு, இது உனக்கு அடுக்குமாடா? முப்பது ரூபாய் செலவு ஆக வேண்டிய இடத்துல எழுபது ரூபா செலவாகுது.”

“ஏண்டா, யாருக்காவது பைசாவோட மதிப்பு தெரியுதாடா? அவ என்னடானா காபித்தூள் ஆடர் செய்யறா, நீ என்னடானா பிரிண்ட்அவுட்டுக்கு செலவு செய்யற.”

“ஒரு சின்ன கணக்கு போடலாமா?”

“ஏங்க, என்ன கணக்கு?”

“வாம்மா இப்படி. விமலு, நீயும் வாடா” என பரந்தாமன் சொன்ன உடன் இருவரும் பரந்தாமன் பக்கத்தில் வந்தனர்.

“பில்டர் காபித்தூள் 200 ரூபா, டெலிவரி ஐம்பது ரூபா, உன்னோட பிரிண்ட்அவுட் முப்பது, டெலிவரி நாற்பது. இப்பப் பாருங்க, அநாமத்தா நூறு ரூபா கிட்ட நம்ம கையை விட்டு போகுது. சரியாச் சொல்லனுமுன்னா தொண்ணூறு ரூபா கையை விட்டு அநாமத்தா போகுது சரிதானே!”

“ஏன், நாம் போயி கடையில வாங்க முடியாதா? எல்லாம் முடியும் தானே. பின் ஏன் நாம அதை செய்யமாட்டேங்கிறோம்? யாருக்காவது ஏதாவது புரியுதா? இதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு. அதை உங்களுக்குப் புரிஞ்சுடுச்சுன்னா, நீங்க அதை செய்ய மாட்டீங்க.”

“என்னப்பா சொல்லுறீங்க? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்” என்றான் விமல்.

“சரி, நான் உங்க ரெண்டு பேரையும் கேட்கிறேன். ஒரு பதினைந்து வருசம் முன்னாடி இது மாதிரி இருந்துச்சா?”

“இல்ல, அப்ப இல்ல. ஆனா, இப்ப இருக்கு” என்றனர் விமலும் வள்ளியும்.

“அப்ப இல்லேல! என்ன பண்ணுனீங்க?”

“ஏங்க, இது என்ன கேள்வி? கடையில போயித்தான் வாங்கினோம்.”

“இப்ப பாரு, நீயே சொல்லுற, கடையில போயி வாங்கினோமுன்னு. பின் ஏன் இப்ப அதேப் போல் வாங்க மாட்டேங்கிறீங்க?”

“சோம்பேறித்தனம் தலைக்கு ஏறிப் போச்சு. பத்து நிமிஷம் ஒரு கடைக்கு போயி எந்தப் பொருட்களையும் வாங்க மாட்டேங்கிறீங்க.”

“ஆரம்பத்தில் டெலிவரி இலவசம், இலவசமுன்னு சொல்லி பொருட்களை விநியோகம் செய்தாங்க. இதெல்லாம் ஒரு மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி. இது புரியாம நீங்களும் நிறையவே ஆடர் செஞ்சீங்க. இப்ப எது ஆடர் செய்தாலும் அதற்கு டெலிவரி சார்ஜுன்னு சொல்லுறாங்க.”

“உங்க பழக்கத்தை மாத்த மாட்டேங்கிறீங்க. அதை அவங்க பயன்படுத்திக்கிறாங்க. இதுதான் நிதர்சனம்.”

“ஏங்க, சும்மா தர்க்கம் செஞ்சுகிட்டு, நீங்க சரியான நேரத்துக்கு வந்தீங்கன்னா நீங்க போயி வாங்கியாரலாமுல்ல. இப்பப் பாருங்க, நேரம் கழிச்சு வந்ததால என்னாலையும் வெளியில போக முடியல, உங்களாலையும் போக முடியல. அதான் ஆடர் செஞ்சுட்டேன்.”

“ஏங்க, காசு இன்னைக்கு வரும், நாளைக்கு போயிடும்.”

“அதையேதான்டி நானும் சொல்லுறேன். காசு இன்னைக்கு வரும், நாளைக்கு போயிரும். நாமதான் சூதானமா இருக்கணுமுன்னு சொல்லுறேன்.”

“இன்னைக்கு இருக்கு வாங்குற, நாளைக்கு இல்லையின்னா என்ன பண்ணுவ? வீட்டை விட்டு வெளியே போயி வாங்குவேல? அதை ஏன் இப்பச் செய்ய மாட்டேங்கிறீங்க?”

“சரி, வாங்க. ரெண்டு பேரும் சாப்பிடலாம். பிறகு பேசிக்கலாம்” என்று வள்ளி சொன்ன பிறகு, பரந்தாமனும் விமலும் சாப்பிடத் தயாரானார்கள்.

அன்றைய இரவுப் பொழுது இனிதே கடந்தது.

அடுத்த நாள் காலை, விமல் அவசர அவசரமாக செமினாருக்கு ஸ்கூலுக்குப் போகணுமுன்னு கிளம்பி, சைக்கிளை எடுத்துக்கிட்டு தன் நண்பன் வீட்டிற்குச் சென்று அவனையும் அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்குப் போகலாம் என்று வந்தடைந்தான்.

சரியாக இன்னும் இருபது நிமிடம்தான் இருந்தது. அதற்குள் அவனும் அவனது நண்பனும் ஸ்கூலுக்குப் போக வேண்டும். ஆனால், நண்பனின் அம்மா அப்போதுதான் தன் மொபைலில் ஏதோ தேடிக்கிட்டு இருந்தாங்க.

விமல் உடனே, “அம்மா, விநோத் எங்கம்மா?” என்றான்.

“இதோ, இன்னும் அஞ்சு நிமிஷத்துல கீழே வந்துடுவான். ஏதோ சில ஸ்டேஷனரி பொருட்களை வாங்கச் சொன்னான். அதான் தேடிக்கிட்டு இருக்கிறேன்.”

“என்னம்மா, கிளிட்டர் பேனா, மார்க்கர், இங்க் ரிமூவர், பைலட் பேனா அது இல்லாம ஒரு பௌச்சு. எதில் ஆடர் செய்யப் போறீங்க? இப்ப நீங்க ஆடர் செய்தீங்கன்னா லேட்டாயிடும். அது வேற அவங்க டெலிவரி சார்ஜ் போடுவாங்க. விடுங்க, நாங்க போற வழியில நிறுத்தி வாங்குறோம்” என்றான்.

நண்பனின் அம்மா, “புள்ள நல்லா சிந்திக்கிறானே! காசோட அருமையை அவங்க வீட்ல சொல்லி வளர்த்திருக்காங்க போல” என்று எண்ணி,

“இந்தாப்பா, நான் அவன் கிட்டச் சொல்லுறேன். உன்னிடம் பணம் இருக்குன்னு. நீங்க போயி போற வழியில வாங்கிக்கோங்கப்பா” என்றார்.

Series Navigationஇரண்டாவது நிழல்சாட்சியாக இரு