மா. அன்பரசு

மாலை 3.30 மணிக்குத் தொடங்க வேண்டிய கூட்டம், வழக்கம்போல 4.45 மணிக்குத்தான் தொடங்கியது.
ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து, அவரவர்களுக்கான இடங்களில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். நான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகில் Physics துறையைச் சேர்ந்த ஒரு Assistant Professor வந்து அமர்ந்தார்.
அவரை எனக்கு ஏற்கெனவே தெரியும்.
பார்த்தால் பேசுவோம். பேசினால் சிரிப்போம். அவ்வளவுதான்.
அதற்கு மேல் எங்களுக்குள் எந்த நெருக்கமும் இல்லை.
அன்றும் எதையோ பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று கேட்டார்.
“உங்களுக்கு எத்தனை குழந்தைகள் சார்?”
“ஒரு பொண்ணு… ஒரு பையன்.”
“சார்… உங்களுக்கு?”
அவர் சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
“எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல சார்.”
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
அவர் சிரித்தார்.
“ஆனா… எனக்கும் ஒரு பொண்ணு, ஒரு பையன் இருக்காங்க.”
நான் அவரைப் பார்த்தேன்.
“என்ன சார் சொல்றீங்க?”
அவர் குரல் மெதுவானது.
“அவங்க ரெண்டு பேரும் என்னை அப்பான்னுதான் கூப்பிடுவாங்க.”
அந்த ஒரு வார்த்தைக்குப் பிறகு அவர் சொன்னது எல்லாம் என் காதில் விழவில்லை.
என் மனதுக்குள் விழுந்துகொண்டிருந்தது.
“அவங்க என் தங்கச்சி பிள்ளைங்க சார்.”
நாங்கள் வீட்டில் மூன்று பேர்.
இரண்டு அண்ணன்கள்.
ஒரு தங்கை.
தங்கைக்குத் திருமணம் செய்து வைத்தோம்.
அவள் சந்தோஷமாகத்தான் வாழ்கிறாள் என்று நினைத்தோம்.
முதலில் ஒரு பையன் பிறந்தான்.
பிறகு ஒரு பெண்.
அவர்களுக்கு வேண்டியதை எங்களால் முடிந்த அளவுக்குச் செய்துகொடுத்தோம்.
அப்போது நான் Ph.D. படித்துக்கொண்டிருந்தேன்.
மூன்று வருடத்தில் முடிக்க வேண்டிய படிப்பு ஏழு வருடங்கள் இழுத்தது.
ஏழாவது வருடத்தில் Ph.D. முடிந்ததும், இரண்டாவது வருடத்தில் Japan-ல் இரண்டு வருட Post-Doctoral Fellowship கிடைத்தது.
Passport எடுத்துவிட்டேன்.
பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தேன்.
ஒருநாள் தங்கையிடம் சொன்னேன்.
“நான் Japan போறேன்.”
அவள் மகிழ்ச்சியாகச் சொன்னாள்.
“போயிட்டு வாடா.”
சிறிது நேரம் கழித்து,
“உன்னால முடிஞ்சா எனக்கு ஒரு Phone வாங்கித் தர முடியுமா?” என்றாள்.
அவளுக்காக ஒரு Nokia Phone வாங்கினேன்.
ஆனால் அவளிடம் கொடுக்கவில்லை.
வீட்டில் TV இருந்த அலமாரியில் வைத்தேன்.
“அம்மா… தங்கச்சி Phone கேட்டிருந்தா. இங்க வச்சிருக்கேன். அவ வந்து எடுத்துக்குவா.”
அம்மாவிடம் சொல்லிவிட்டு என் வேலையைப் பார்க்கச் சென்றேன்.
முதல் நாள் அவள் வரவில்லை.
இரண்டாம் நாளும் வரவில்லை.
மூன்றாம் நாள்…
அம்மாவும் அப்பாவும் Hospital-க்குச் சென்றிருந்தார்கள்.
அம்மாவுக்கு முதுகுத்தண்டில் பெரிய Operation.
“நாளைக்கு நானே போய் Phone-ஐ கொடுத்துட்டு வரலாம்.”
என்று நினைத்தேன்.
அன்று மாலை மூன்று மணிக்கு ஒரு Phone Call.
“உங்க தங்கச்சி இறந்துட்டா.”
அந்த நொடி…
என் கையில் இருந்த உலகமே கீழே விழுந்தது.
அப்போது நானும் ஒரு College-ல் Assistant Professor-ஆக இருந்தேன். அன்று எனக்கு Send-off நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்காகக் காத்திருந்தபோதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது.
என்னுடன் பணியாற்றிய ஆசிரியர்கள் உடனே Car-ஐ ஏற்பாடு செய்து என்னை அழைத்துச் சென்றார்கள்.
“எங்கே இருக்காங்க?”
“கீழ்ப்பாக்கம் Hospital.”அங்கு சென்றேன்.
காலையில் வழக்கம்போல குளித்திருந்தாள்.
நெற்றியில் குங்குமம்.
திருநீறு.
முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
தூங்கிக்கொண்டிருப்பது போலவே இருந்தாள்.
ஆனால்…
கழுத்தில் மட்டும் கருமையான காயத்தடங்கள்.
“எப்படி?”
என்று கதறினேன்.
“தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. தூக்குப் போட்டுக்கிட்டாங்க.”
அந்த பதிலை என் மனம் ஏற்கவில்லை.
தங்கை அப்படிச் செய்யமாட்டாள்.
அழுகைக்கும் சந்தேகத்துக்கும் நடுவில் நான் நின்றுகொண்டிருந்தேன்.
தங்கையின் கணவனைப் பார்த்ததும் கோபம் வெடித்தது.
அவனை அடிக்கச் சென்றேன்.
அவன் என்னைத் தடுத்து,
“என்னை அடிச்சா உன் தங்கச்சி பிள்ளைகள் இருக்க மாட்டாங்க. பார்த்துக்கோ.”
என்றான்.
அந்த ஒரு மிரட்டல்…
என் கையை நிறுத்தியது.
கீழ்ப்பாக்கம் Police Station-க்குச் சென்றேன்.
“வில்லிவாக்கத்துலதான வீடு. அங்கே போய் Complaint கொடுங்க.”
அங்கு சென்றபோது அவனுடைய அப்பாவும் அண்ணனும் ஏற்கெனவே Police Station-ல் இருந்தார்கள்.
அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.
என்னைப் பார்த்த பார்வையில் மட்டும் மிரட்டல் இருந்தது.
என்னுடன் வந்த ஆசிரியர்கள் என்னைச் சுற்றி நின்றார்கள்.
“சார்… FIR போடணும்.”
பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகுதான் FIR பதிவு செய்யப்பட்டது.
மீண்டும் Hospital-க்குச் சென்றேன்.
அவன் சொன்னான்:
“உன் தங்கச்சிய இங்கேயே எரிச்சிடவா? இல்ல ஏதாவது சடங்கு செய்யணும்னா நீங்களே எடுத்துட்டுப் போங்க.”
நாங்களே எடுத்துச் சென்றோம்.
இரண்டு அண்ணன்களும் நானும் அப்பாவும் சேர்ந்து தங்கைக்குச் செய்ய வேண்டிய அத்தனை சடங்குகளையும் செய்தோம்.
அம்மா மட்டும் வர முடியவில்லை.
முதுகுத்தண்டின் Operation-க்குப் பிறகு Hospital-ல் படுத்திருந்தாள்.
சில நாட்களுக்குப் பிறகு Police Station-ல் ஒரு சமரசம்.
“பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும்.”
அவன் ஒரு பத்திரம் எழுதிக் கொடுத்தான்.
“பிள்ளைகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன். ஆனால் இதற்கு மேல் எந்த Case-உம் வேண்டாம். நான் பிள்ளைகளைப் பார்க்க வரும்போது அவர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும்.”
என்று கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள்.
நாங்கள் இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து வந்தோம்.
பெண்ணை First Standard-ல் சேர்த்தேன்.
பையனை Fourth Standard-ல் சேர்த்தேன்.
அன்றிலிருந்து…
அவர்கள் என் தங்கை பிள்ளைகள் இல்லை.
என் பிள்ளைகள்.
அவர்கள் என்னை மாமா என்று அழைக்கவில்லை.
அப்பா என்றுதான் அழைத்தார்கள்.
அவர்களின் அப்பா எப்போதாவது குழந்தைகளைப் பார்க்க வருவான். வீட்டிற்கு வெளியிலேயே நின்றுகொண்டு, குழந்தைகளை அழைப்பான். ஆனால் அவர்களைப் பார்க்க குழந்தைகளுக்கே விருப்பமில்லை. அதை நேராகச் சொல்லிவிட்டு என்னிடமே வந்து நின்றுவிடுவார்கள். இப்படியாக இரண்டு, மூன்று முறை மட்டுமே நடந்தது. அதற்குப் பிறகு அவன் வரவே இல்லை. குழந்தைகளும் அவனைப் பற்றி ஒருபோதும் கேட்கவில்லை.
கூட்டிவந்து ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள்…
பையன் என்னை அழைத்தான்.
“மாமா…”
“என்ன?”
அவன் சுற்றிலும் பார்த்தான்.
பிறகு மெதுவாகச் சொன்னான்.
“அம்மாவை அப்பாதான் கொன்னாரு.”
என் உடம்பு முழுவதும் உறைந்தது.
“என்ன சொல்ற?”
அவன் அழுதுகொண்டே சொன்னான்.
“எங்களை ரெண்டு பேரையும் வெளியே தள்ளிட்டு கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டாரு.”
“அப்புறம்?”
“அம்மாவை அடிச்சாரு.”
“அப்புறம்?”
“கழுத்துல Shawl போட்டு இழுத்தாரு…”
அவன் குரல் நடுங்கியது.
“அம்மா கீழே விழுந்துட்டாங்க.”
நான் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“அப்புறம்?”
“அம்மா எழவே இல்ல.”
சில நொடிகள் அமைதி.
பிறகு அவன் சொன்னான்.
“அந்த Shawl-ஐ அம்மா கழுத்துல மாட்டி… மேல கட்டிட்டாரு.”
என் கண்களுக்கு முன்னால் தங்கையின் முகம் வந்தது.
குங்குமம்.
திருநீறு.
அமைதியான முகம்.
கழுத்தில் காயம்.
அப்போது எல்லாம் ஒன்றாக இணைந்தது.
“இதைக் கொஞ்சம் கூட எங்கியாவது வெளியே சொன்னே உங்களை கொன்னுடுவேன்…”
என்று அந்தக் குழந்தைகளை மிரட்டியிருந்தான்.
ஆறு மாதங்கள்…
இரண்டு குழந்தைகள் தங்கள் தாயின் கொலைக்கான உண்மையைத் தங்கள் நெஞ்சுக்குள் பூட்டி வைத்திருந்தார்கள்.
“எதுக்காக சார் கொன்னான்?”
என்று கேட்டேன்.
சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
“ஒன்னுமே இல்ல சார்…”
“அவனுக்கு தலையில முடி கொட்ட ஆரம்பிச்சிருச்சு.” கொஞ்ச நாள்ல முழுசா கொட்டிற்ச்சி
“என் தங்கச்சி விளையாட்டா ‘மொட்டை’, ‘சொட்டை’ன்னு சொல்வா.”
அவனோ அதை மனதுக்குள் பெரிய பிரச்சனையாக வளர்த்துக்கொண்டான்.
பிறகு Hair Transplantation செய்துகொண்டான்.
அதற்குப் பிறகு தலைவலி.
தலைவலி வந்தால் குடிப்பான்.
குடித்தால் தங்கையை அடிப்பான்.
அடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்தது.
அவள் அவ்வப்போது எங்களிடம் சொல்லியிருக்கிறாள்.
நாங்களும் கேட்டிருக்கிறோம்.
ஆனால்…
“சரியாயிடும்.”
என்று கடந்து சென்றுவிட்டோம்.
ஒருநாள் அவன் அவளை கொன்றுவிடுவான் என்று யாருக்குத் தெரியும்?
ஒரு பெண் விளையாட்டாகச் சொன்ன இரண்டு வார்த்தைகள்…
ஒரு ஆணின் மனதில் விஷமாக வளர்ந்து…
ஒரு உயிரை எடுத்துவிட்டன.
அவனுடைய அப்பாவுக்கும் அதே வழுக்கை.
அவனுடைய தாத்தாவுக்கும் அதே வழுக்கை.
ஒரு மனிதனின் தலையில் உதிர்ந்த சில முடிகள், இன்னொரு பெண்ணின் உயிரை எடுத்ததோடு, அவளுடைய அண்ணனின் வாழ்க்கையையும் மாற்றிவிட்டன.
“அதுக்கப்புறம் சார்?”
என்று கேட்டேன்.
“அப்பா Covid-ல போயிட்டாரு.”
அவர் தொடர்ந்தார்.
“என் அண்ணனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. அவருக்கு ஒரு பொண்ணு.”
“அண்ணன் மனைவி?”
அவர் சிரிக்க முயன்றார்.
அது சிரிப்பாக இல்லை.
“எங்க வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் ஒன்றரை கிலோமீட்டர்தான் சார்.”
“ஆனா வரமாட்டாங்க.”
“பொங்கல், தீபாவளி நாட்களில் மட்டும் மாலை நாலரை மணிக்கு வருவாங்க. ஐந்தரை மணிக்கே கிளம்பிடுவாங்க.”
“காலையில வந்தா சாப்பிடச் சொல்லிடுவாங்களோன்னு நினைச்சுக்கிட்டு வரமாட்டாங்க.”
அவருடைய அண்ணன் மகள் அடிக்கடி கேட்பாளாம்:
“சித்தப்பா… அவங்க ஏன் நம்ம வீட்டுக்கு வரவே மாட்டாங்க?”
அதற்கு அவரிடம் பதில் இல்லை.
அவருடைய வாழ்க்கையில் பதில்களைவிட கேள்விகள்தான் அதிகம்.
அத்தனைக்கும்…
அவள் அவருக்கு அண்ணி மட்டுமல்ல.
நெருங்கிய சொந்தம்.
ஆனால் சில உறவுகளுக்கு இரத்தம் மட்டும் போதாது.
இதயமும் வேண்டும்.
ஒருநாள் அம்மா சமையல் செய்துகொண்டிருந்தபோது ஒரு கனமான பாத்திரத்தைத் தூக்க முயன்றார். கைப்பிடியைப் பிடித்து ஊன்றினார்.
கால் தவறியது.
விழுந்தார்.
தொடை எலும்பு முறிந்தது.
அதற்குப் பிறகு படுக்கையிலேயே.
“இப்போ அம்மாவைப் பார்த்துக்கறது என் பொண்ணுதான் சார்.”
“குளிக்க வைக்கிறது…”
“துடைக்கிறது…”
“சாப்பாடு கொடுக்கிறது…”
“எல்லாமே அவள்தான்.”
“பையன் சாப்பாடு செய்றான். பாத்திரம் கழுவி வைக்கிறான்.”
அவர் தலையைக் குனிந்தார்.
“அவங்க என் பிள்ளைகள்தான் சார்.”
அந்த வார்த்தை மட்டும் போதும்.
“நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல?”
என்று கேட்டேன்.
அவர் நீண்ட நேரம் அமைதியாக இருந்தார்.
“பொண்ணு கிடைக்கல சார்.”
“நான் Japan போறேன்னு சொன்னப்போ ஒரு பொண்ணு என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டா. நானும் ஒத்துக்கிட்டேன்.”
“ஆனா…”
அவர் நின்றார்.
“விதி வேற மாதிரி இருந்துச்சு.”
தங்கை இறந்தபோது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
அந்தப் பெண்ணின் வீட்டார் வந்தார்கள்.
“இனிமேல் இந்தக் குழந்தைகள் இங்கேதான் இருப்பாங்களா?”
“ஆமாம்.” என்றேன்.
அவர்கள் எழுந்து சென்றார்கள்.
அதற்குப் பிறகு பத்து வருடங்கள்.
நான் தேடாத இடமில்லை.
ஆனால் ஒரு பெண்ணும் அமையவில்லை.
“ஜாதகம் சரியில்ல.”
“சொந்த வீடு இல்ல.”
“குழந்தைகள் உங்களோடதான் இருப்பாங்களா?”
“Private-ல வேலை பார்க்கிறீங்களா?”
நான்கு காரணங்கள்.
எது உண்மை?
எது பொய்?
இன்றுவரை அவருக்கே தெரியவில்லை.
அவர் மெதுவாகச் சொன்னார்:
“மனிதர்கள் நிஜத்தை ஏத்துக்கறதில்ல சார்.”
சிறிது நேரம் கழித்து,
“நிலையாமையையும் புரிஞ்சுக்கறதில்ல.”
“இப்போ கல்யாணம் ஆசை இருக்கா சார்?”
என்று கேட்டேன்.
அவர் என்னைப் பார்த்தார்.
“ஆசை இருந்துச்சு.”
“இப்போ?”
“கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிடுச்சு.”
சிறிய சிரிப்பு.
“குழந்தைகள் வளந்துட்டாங்க.”
“அம்மாவை இனிமேல் யார் பாத்துக்குவாங்க?”
“நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா… வரவங்க அம்மாவைப் பார்க்காம விட்டுட்டா?”
அவர் சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
“எனக்கு இப்போ 39 வயசு சார்.”
பிறகு மெதுவாகச் சொன்னார்:
“இனிமேல் கல்யாணம் ஆகுமாண்னும் தெரியல சார்.”
அந்தச் சொல்லில் ஒரு மனிதனின் இளமை முழுவதும் புதைக்கப்பட்டிருந்தது.
அப்போதுதான் கூட்டம் தொடங்கியது.
பல்கலைக்கழகத்தின் வேந்தர்கள் வந்தார்கள்.
பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் பேசப்பட்டன.
புதிய கல்வியாண்டு எப்படி இருக்க வேண்டும் என்று பேசப்பட்டது.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
எல்லாமே என் காதில் விழுந்தது.
ஆனால் ஒன்றும் என் மனதில் விழவில்லை.
என் அருகில் அமர்ந்திருந்தவரின் வாழ்க்கை…
என் மனதுக்குள் முழுவதுமாக நிரம்பியிருந்தது.
ஒரு மனிதன் கல்யாணம் செய்யாததற்குப் பின்னால் பல காரணம் இருக்கலாம்.
ஆனால்…
ஒரு மனிதன் கல்யாணம் செய்ய முடியாமல் போனதற்குப் பின்னால், சில நேரங்களில் மரணமும் இருக்கும்… மயிரும் இருக்கும்.
ஒரு தங்கையின் கழுத்தில் இருந்த காயம் இருக்கும்.
இரண்டு குழந்தைகளின் பயம் இருக்கும்.
ஒரு வயதான அம்மாவின் படுக்கை இருக்கும்.
ஒரு மனிதன் விட்டுக்கொடுத்த இளமை இருக்கும்.
கூட்டம் முடிந்தது.
என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.
“வர்றேன் சார்… பாக்கலாம்.”
என்றேன்.
அவர் ஒரு சிறிய சிரிப்பைக் கொடுத்தார்.
அந்தச் சிரிப்பு…
இப்போதுவரை எனக்கு ஒரு விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.
வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டேன்.
வழக்கம்போல சிவன் கோயில் வந்ததும் வண்டியை மெதுவாக்குவேன்.
எப்போதும் அங்கே ஒரு வேண்டுதல் வைப்பேன்.
“எல்லோரும் நல்லா இருக்கணும்…”
“நானும் நல்லா இருக்கணும்…”
“எனக்கு ஒரு Government Job கிடைக்கணும்…”
என்று சொல்லிவிட்டு உதட்டில் விரல்களைக் குவித்து ஒரு முத்தம் கொடுப்பேன்.
அன்று வண்டியை நிறுத்தினேன்.
கோயிலைப் பார்த்தேன்.
என் வேண்டுதல் மட்டும் மாறிவிட்டது.
“அவர் நல்லா இருக்கணும்…”
“அவருக்குக் கல்யாணம் நடக்கணும்…”
“அந்தப் பிள்ளைகள் அவரை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது…”
“அவருடைய அம்மாவுக்கு உடம்பு சீக்கிரம் குணமாகணும்…”
என்று சொல்லிவிட்டு உதட்டில் கையை வைத்து ஒரு முத்தம் கொடுத்தேன்.
வண்டியைத் தொடங்கினேன்.
வண்டி நகர்ந்தது.
ஆனால் என் மனம் நகரவில்லை.
வீட்டிற்கு வந்தும் அந்த மனிதனின் குரல் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.
“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல சார்…”
அந்த ஒரு வாக்கியத்திற்குள்…
ஒரு தங்கையின் மரணம் இருந்தது.
இரண்டு குழந்தைகளின் குழந்தைப் பருவம் இருந்தது.
ஒரு அம்மாவின் முதுமை இருந்தது.
ஒரு மனிதனின் இளமை இருந்தது.
அவன் விட்டுக்கொடுத்த காதல் இருந்தது.
அவன் தொலைத்த வாழ்க்கை இருந்தது.
அவன் சொல்லாமல் விழுங்கிய கண்ணீர் இருந்தது.
அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. மனது பாரமாய் இருந்தது.
சில மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்வதில்லை.
யாரோ ஒருவர் பாதியில் விட்டுச் சென்ற வாழ்க்கையைச் சுமந்துகொண்டு வாழ்கிறார்கள்.
அப்படி ஒரு வாழ்க்கையைச் சுமந்துகொண்டிருந்தார் – ஞானம்.