This entry is part 8 of 11 in the series 20 செப்டம்பர் 2026

சுப்ரபாரதிமணியன்

0

அசரீரி  ஆசிரமத்துக்குள் நுழைய அமிர்தனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது

“பாஸ் இருக்கா “

“இல்லியே “

“ பாஸ்   இருக்குறவங்க தான் இப்ப போக முடியும் “ என்று அந்த நாற்பது  வயது மனிதர் சொன்னார். அவரின் முகம் ஒரு பிரஞ்சுக்காரர்  முகம் போல் இருந்தது. வெளுப்பாக இருந்தார்..

எதற்கு அங்கு நிற்பது என்பது போல் அவன் கொஞ்ச தூரம் நகர்ந்தான்.

 அவர் பக்கத்தில் இருந்த தாடிக்காரர்  சிரித்தபடி  “ இப்போ பாஸ் இருக்கிறவனுக்கு மட்டும்தான் உள்ள போக முடியும் மத்தவங்க எட்டு மணிக்கு அப்புறம்தான் “ என்றார்.

“ நான் வெளியூரில் இருந்து வர்றன்.  பாத்துட்டுப் போலாம்னு பார்க்கிறேன் “          

 ” இதென்ன கண்காட்சியா. தியானத்துக்குரிய இடம். எட்டு மணிக்குப் பிறகு வாங்க “

பலமுறை அமிர்தன் அந்த அசரீரி ஆசிரமத்திற்கு வந்திருக்கிறான் ஆனால் எப்போதும் வந்தாலும் உள்ளே நுழைந்து போய் மகானின் கல்லறையில் முன் நின்று கொஞ்சம் ஆசுவாசம் பண்ணிக் கொண்டு ஐந்து நிமிடம் எங்காவது மூலையில் உட்கார்ந்த பின்னால் வருவான். ஏதோ ஒரு வகையில் அமைதி கிடைப்பதாக நினைப்பான். அவ்வப்போது வந்து போகிற இடம் தான். ஆனால் முதல் முறையாக இப்போது ஏனோ அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

 தாடிக்காரர் வெள்ளைச் சிரிப்புடன் ”  எட்டு மணிக்கு பிறகு வாங்க இப்ப பாஸ் உள்ள உங்களுக்கு மட்டும் தான் “ என்றார் ” ”அதுக்கப்புறம் ஒன்னும் கட்டுப்பாடு இல்லை”

 இது புதிதாக இருந்தது. அங்கு  புதிதாக வருபவர்கள் பிரெஞ்சுக்கார முகங்களுடன் இருந்தார்கள். அல்லது வெளுப்பாக இருந்தார்கள் அவர்கள் எந்த அனுமதிச்சீட்டையும்  காட்டாமல் உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள்

 எதிரில் செருப்பு வைத்த இடத்த இடத்திற்கு அவன் திரும்பி வந்தான். அவன் மனைவியும் கூட அவன் பின்னாலே வந்தாள் ஏமாற்றத்தை அவள் முகம் காட்டியது.

“ என்ன மாமா தெரியலயா “

“ புதுசா இருக்கு.  எட்டு மணிக்கு பிறகு தான்னு சொல்றாங்க இப்ப நேரம் என்ன “ அவன் கைபேசியை அணைத்து வைத்திருந்தான். அந்த ஆசிரமத்திற்குள் போவதற்கு முன்னால் கைபேசி அணைக்கப்பட  வேண்டும் என்பது  எப்போதைக்குமானப்  பழைய விதியாக இருந்தது. அதை எப்போதைக்குமான விதி என்று நினைத்திருந்தான்.

 செருப்பைத் தேடி எடுத்த போது செருப்பை பார்த்துக் கொள்ள இருக்கும் ஒரு நபர் அணிந்திருந்த தொப்பி பாண்டிச்சேரி காவல் துறையின் விசேஷத் தொப்பியை போல இருந்தது. ஆனால்  அது கருப்பும் சிவப்புமாக இருக்கும் இது கருப்பும் நீலமுமாக இருந்தது அவர் உட்கார்ந்திருந்த  நாற்காலியைப் பக்கம் இருந்த மேசைக் காலுடன் இணைத்து ஒரு சங்கிலியால் கட்டுப்போட்டு இருந்தார்கள். அந்த வீதியில் நடமாட்டம் குறைவாகத்தான் இருந்தது இந்த நடமாட்டத்தை மீறிக் கொண்டு இந்த நாற்காலியை எடுத்துக் கொண்டு போய் விடுவார்களா என்ன…  இரவில் இந்த நாற்காலிக்கு பாதுகாப்பு இருக்காது என்று நினைத்தான்

 கைபேசியை முடுக்கினான்.   அது பல வர்ண ஒளிகளைக் காட்டியப் பின்னால் நேரம் காட்டியது. எட்டு  மணிக்கு இன்னும் ஐம்பது  நிமிடங்கள் இருந்தன. எதிரில் இருந்த எட்டு மணிக்கு பிறகு வரச்சொன்ன மனிதரைப் பார்த்தான். அவரின் தாடி விசேஷமாக இருந்தது. அழுத்தமாக இல்லை. ஆனால் தாடையில் இருந்து கீழ் இறங்கி மார்பு வரைக்குமாக இருந்தது,

 அப்படி ஒரு தாடிக்காரரைத்தான் அவன் அப்பாவும் இந்த ஆசிரமத்தை பற்றி அறிமுகப்படுத்தும்போது ஏதோ ஒரு காலத்தில் சொன்னார்.. மிஷின் தெருவில் ட்ரிபிள் எக்ஸ் வீதி அருகில் ஒரு  ஓட்டு வீடு. மிஷின் தெருவிலிருந்து கிழக்கே உள்ள அந்தக் காலத்து சாராயக்கடை வீதி வரை  அதன் பரப்பு.. முன் வாசல் கதவு மிஷன் தெருவில், பின் வாசல் கதவு சாராயக் கடை வீதியில்,இன்னொருகதவு முதலியார் தெரு  என்று அந்த வீட்டுக்கு மூன்று முக்குகளிலும் கதவுகள். ஒவ்வொரு திசைகளிலும் நான்கு தாழ்வாரங்கள் என்பதைக் கூட அவர் சொன்னதை இப்போது கூட நினைத்தான். அந்த வீதியை கடந்து வருகிற போது அவன் மாறிப்போயிருந்த அந்த வீட்டைப் பார்த்தான். அங்கு தான் அந்த ஆசிரமச் சாமியாரை பார்த்ததாக அவன் அப்பா சொல்லி இருக்கிறார்.

 முன் வாசலை விட்டு உள் வாசலில் வெகுவாக ஒதுங்கி சில கட்டில்கள் இருக்குமாம்.  அங்கு இருக்கிற கட்டிலைச் சுற்றி நடப்பது அந்த சாமியாரின் வழக்கமாம். சாமியாருடைய முதுகில் விழுந்த தொங்கும் நீண்ட கேசம்,  நன்கு சுத்திகரிக்கப்பட்டு இருந்த பாதங்களும் பற்றி அவன் அப்பா  சொல்வார். அந்தப் பாதத்தைப் பார்த்தாலே பரவசம் வந்து விடும் என்பார்,காலில் விழத்தோன்றும் என்பார்.

 அவன் அப்பா பல ஆண்டுகள் அங்கிருந்தவர்தான் உள்ளூரில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பின்னால் விரோதம் அதிகமாகிவிட திருப்பூருக்கு வந்து விட்டார். கலப்பு மணம் என்பதால் அந்த விரோதம்.. ..வெளியூர் சுற்றுலாப். பயணிகளை மையமாகக் கொண்டு ஏதாவது தொழில் அமைய அங்கு முயன்று பெரிய வெற்றி கிட்டவில்லை  என்பது கூட காரணம. . .

 கைபேசியில்  இணையதளத்திற்கு சென்று அசிரீரி  ஆசிரமம் என்று டைப் செய்தான். அப்போதுதான் அதில் பொதுமக்கள் பார்வை நேரம் என்று எட்டு மணி முதல் என்றுப் போட்டு இருந்ததை கவனித்தான். இது புதிய அறிவிப்பா அல்லது இதுவரைக்கும் தான் வந்தபோது எல்லாம் அனுமதி கிடைத்ததால் இதை கவனிக்கவில்லையா..  அப்படி எதுவும் அந்த ஆசிரம முகப்பில் அறிவிப்பாய் இல்லை. ஆகவே இந்தக் கட்டுப்பாடு  புதியதாகத் தான் இருந்தது. இப்போது விசேசமான தியான நேரம் என்று இருக்கலாமா..  மனைவி ஏதோ ஒரு வகையில் ஏளன புன்னகையுடன் பார்க்க அவனுக்கு எரிச்சலானது.

“ எத்தனையோ தடவை வந்திருக்கேன் இப்பதான் உள்ள போக முடியாமல் வெளியே போறேன் என்ன பண்ணலாம். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.”

“ பக்கத்துல இருக்கற சமாதிக்கு போலாம்  :”

“ இந்த சமாதியில் இல்லீனா  அந்த சமாதியா.  சரி ஒரு மணி நேரம் அதுல பொழுது போய்விடும் . அதுக்கும் போற திட்டம் தானே நம்ம திட்டம் “

   ருக்மணி அதை ஏன் சமாதி என்று சொன்னாள் என்று புரியவில்லை மணக்குள விநாயகர் கோவில்  தொள்ளக்காது சித்தர் சமாதி மேல் தான் இருப்பதாக அவனும் தெரிந்து கொண்டிருந்தான். காதுகளில் பெரிய துளைகள் இருந்ததால் அந்தப் பெயர் வந்த்தாம். . விநாயகருக்கு பூஜை செய்தார் நோய் நொடிகளுக்கு மருத்துவம் சொன்னார் பின்னால் அவர் பெயர்  தொள்ளக்காது சித்தர்  என்று ஆனது. அவர் சமாதி அங்கு தான் இருக்கிறது. ஒர்லியன்  தெரு, ஜவஹர்லால் நேரு தெரு., லாட் டி லூரிஸ்தான் தெரு, வடக்கு பக்கம் கால்வாய் என்று இருக்கும் பகுதி அது

இடது புறம் திரும்பி போனால் மணக்குள விநாயகர் கோயில் வந்துவிடும் விநாயகர் எப்போதும் சித்தி புத்தி என்ற இரு  பெண்களுடன் மனக்கோலத்தில்  இருப்பது அவனுக்கு ஆச்சரியப்படுத்தும் . முரட்டாண்டி அம்மன் கோவில் பக்கம் இருந்த அந்த சித்தருக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் ஆனால் அவர் வேண்டாம் என்று அவர் மனம் விநாயகர்  இடம் சரணடைந்திருக்கிறார். முரட்டு ஆண்டி என்ற பெயரும் இருந்திருக்கிறது. ஒரு காலத்தில் முரட்டாண்டி சாவடி என்றுதான் அதற்கு பெயர். பிரெஞ்சு அதிகாரி துய்ப்ளேக்ஸ்  அப்படி இருக்க வேண்டுமா என்று அந்தப் பகுதிப் பெயரை துய்ப்ளேக்ஸ்   பேட்டை என்று மாற்றி விட்டார். பழைய பெயரை பயன்படுத்துபவர்கள் மீது அபராதம் போட்டார். அந்த பெயர் மெல்ல மெல்ல விடுபட்டு போனது முரட்டு ஆண்டி தன்னை பிறரிடம் இருந்து விலக்கிக் கரைத்துக் கொள்வது போல் விநாயகருடன்  சங்கமித்து விட்டார். அதிகம் பேசாதவர். அந்த  காரணத்தினால் வாய் பேசாத ஊமையன் ஆனார். செத்து போன பிறகு அந்த இடத்தில் சமாதி உருவாக்கப்பட்டது மணக்குள விநாயகர் கோயில். முன்பெல்லாம் லட்சுமி என்ற பெரிய யானையின் நடமாட்டத்தோடு அந்த தெரு இருந்தது. இப்போது அது இறந்து விட்டது.

0

 அவன் கோவிலின் பக்கவாட்டில்  இருந்த வெளிநாட்டு விநாயகர்களின் பெயர்களை கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தான்

ருக்மணி பயபக்தியுடன் விநாயகர் முன்னாள் நின்றிருந்தாள் அவன் வழக்கமாக சுற்றி இருக்கிற கோவில் சிற்பங்களையும் பார்க்க ஆரம்பித்தான். ஒவ்வொரு ஊரிலும்,,  ஒவ்வொரு நாட்டிலும் விநாயகருக்கு வெவ்வேறு பெயர்கள் அதெல்லாம் அவனுக்கு ஆச்சர்யமூட்டின. விநாயகரின் திருமண கோலத்தை பல சித்திரங்கள் சொல்லின. சித்தி புத்தி என்று இரண்டு பெண்களுடன் இருக்கிற விநாயகர் அங்கங்கே தென்பட்டார்

விநாயகரை அனுமன் போல பிரம்மச்சாரியாகத் தான் அமிர்தன் நினைத்திருந்தான் ஆனால் அது தவறு என்று ருக்மணியும் சில சமயங்களில் சொன்னாள். பத்து ரூபாய்க்கு ஒரு பெரிய தாமரை பூ கிடைத்தது என்று மகிழ்ச்சியுடன்  அவள் கைகளில் ஏந்தியபடி சன்னதி முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

அவன் கண்ணில் தென்பட்ட இரண்டு பிரஞ்சு தேசத்தை சேர்ந்த பெண்கள் வழக்கமாக மற்றவர்களைப் போல கைகளை குவிக்காமல் கைகளை உள்ளடங்கி வைத்துக் கொண்டிருந்தார்கள் .அது விசேஷமாகத்தான் தோன்றியது அவனுக்கு.

 அவன் தலையைச் சுற்றி தேங்காயை விசிறடித்தாள் ருக்மணி. அது சிதறி துண்டுத் துண்டானது மகிழ்ச்சி தந்தது போல் மெல்லப் புன்னகைத்தாள்.

“  சரி ஒரு பிரெஞ்சு ரெஸ்டாரன்ட் போலாமா “

“ பிரஞ்சு  பொம்பளைகளை பார்த்ததினால் அப்படி ஞாபகமா”

“ அப்படியே வச்சுக்கலாம் “  ருக்மணி குறிப்பிட்ட அந்த இரண்டு பெண்கள் பிரெஞ்சுக்காரர்கள் போல் இருந்தார்கள் அல்லது இங்கு வந்து தங்கி இந்திய பெண்களுக்கு தன் வாரிசுகளைக் கொடுத்துவிட்டு போனவர்களின் வாரிசுகளா என்றச்  சந்தேகமும் அவனுக்கு வந்தது

 இட்லி பொங்கல் வடை இல்லாம ஏதாவது பிரஞ்சு அயிட்டம்  பார்க்கலாமா  என்று அந்தக் கட்டடத்தின் முன்பு நின்றபோது ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலுமாக அந்த விடுதியின்  பெயர் இருந்தது. உள்ளே சில நாற்காலிகளுடன் மேசைகள்  காலியாக கிடந்தன. வலதுபுறம் இருந்த திறந்த கதவின் வழியாகப் பார்த்தபோது  அங்கு அந்த வீட்டின் உரிமையாளர்களின் புகைப்படங்கள் இருந்தன அல்லது அந்த வீட்டின் மூதாதையர்களா…. உள்ளே நுழைந்து அங்குமிங்கு பார்த்தாலும் யாரும் தென்படவில்லை. தரையில் இலைகள் உதிர்ந்து கிடக்க  நாற்காலி ஒன்றில் பூனையொன்று எழுந்துப் பார்த்து விட்டு  மீண்டும் அது அப்படியே படுத்துக் கொண்டது. இடதுபுறம் திரும்பிய போது ஒரு மேசைக்கு முன்னாள் உள்ளடங்கியபடி ஒருவர் அமர்ந்திருப்பது தெரிந்தது

”  ப்ரேக்பாஸ்ட் கிடைக்குமா “

“ இல்லை இது ஸ்டேஹவுஸ் மட்டும் தான். சாப்பாடு எதுவும் இல்லை “

 எதிர் விடுதியைக் காட்டினாள் ருக்மணி.

 வழக்கம் போல் இட்லி பொங்கல் வடை என்றுதான் சாப்பிட்டார்கள்.பலூன்கள் மீது வரைந்த ஓவியங்கள். அவற்றினுள் விளக்குகள் ஆச்சர்யப்படுத்துவது  போல் பார்த்தான்.

 நேரத்தை பார்க்க போவது எட்டு மணி ஆகிவிட்டது. மது பாட்டில்கள் போல் தண்ணீர் பாட்டில்கள் இருந்தது அவனுக்குப் பிடித்திருந்தது.போன முறை வந்திருந்த போது இரண்டு பாட்டில் ஒயினும் சில குட்டி பாட்டில்களாய் பிராண்டியும் வாங்கிப் பையில் போட்டிருந்தான். விழுப்புரத்தில் சோதனையின் போது அவற்றை எடுத்துக் கொண்டார்கள் காவல்துறையினர் . அது அவனுக்கு ஏமாற்றம் தருவதாகவேயிருந்தது. ஒருவர் ஒரு லிட்டர் அளவு பாட்டில் கொண்டு போகலாம என்றார்கள். சலுகைகள் இருப்பதாகச் சொன்னார்கள். அவற்றை அவர்கள் பறிமுதல் செய்கிற போது வேறு எந்தக் கேள்வியும் எழுப்பத் தோன்றவில்லை அவனுக்கு அப்போது.

 அந்த உணவு விடுதிகளின் முன்பிருந்து விரட்டப்பட்ட பிச்சைக்காரர்கள் போன்ற பாவனை கொண்டவர்கள் தெருக்களின் முனைகளில் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டார்கள்

 ” மறுபடியும் ஆசிரமத்திற்கு காலியான வயிறு இல்லாமல் போறது கூட நல்லதுதா.. நிதானமாகப் பார்க்கலாம் “

“  பார்க்க என்ன இருக்கு ”

“ ஒரு சமாதி இருக்கு தொள்ளக்காது . அந்தச் சித்தர்  சமாதியை பார்க்காமல் வந்துவிட்டோம் அது அந்த கோயிலுக்கு  பின்னால இருக்கும். அக்கா சாமி சித்தர் உடைய சமாதி உள்ள பக்கத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன்”

“ : வேண்டாம் வேண்டாம் சமாதிகளா பாக்குறது வேண்டாம்”

 நமக்கு இருக்கிற நேரத்துல ஒரு ரவுண்டு அடிச்சுட்டு மத்த வேலைக்கு பார்க்கலாம்.. ராத்திரி ஊருக்குப் போகணுமே. ஆரோவில் போனா அரை நாள் ஆகிரும் “

“ அங்கெல்லா வேண்டா . மெயின் ரோட்லே இருந்து ஆட்டோ புடிக்கணும். முந்நூறு ரூபா கேப்பானுக. அவ்வள்வு செலவு பண்ணிப்பாக்க என்ன இருக்கு. சாமியார்க உலகம் அது “

 அவன் அப்பாவின் ஊர் என்ற காரணம் சொன்னால் அவன் அவ்வப்போது அங்கு வந்து போவான். இந்த முறை மனைவி அழைத்து வந்திருந்தான். ஒரு சாதாரண விடுதியில் தான் தங்கி இருந்தான். பையன்களை ஊரில் விட்டு வந்திருந்தார்கள் . அவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள். உள்ளூரில் உறவினர்கள் எவரும் இல்லாதபடி ஆகிப்போனதை அவளிடம் சங்கடங்களுடன் சொல்லி இருக்கிறான்.

0

 ஆசிரம வாசலை மறுபடியும் அடைந்தபோது அங்கிருந்த காவலாளி அவனின்  கைபேசியை கேட்டார்.. இப்போது அந்த பிரெஞ்சுக்காரரை காணவில்லை தாடி வைத்தவரையும் காணவில்லை. இவர்  புது ஆளாக இருந்தார்

” மொபைல் மொபைல் “

” சுவிட்ச் ஆப் பண்ணிட்டோம் “

” இல்ல.. காட்டுங்க “

 ” நம்பிக்கை இல்லையா “

” நம்பிக்கையை இருக்கோ இல்லையோ காட்டுங்க. செக் பண்ணிட்டு தான் உள்ள விட முடியும் “

 அவன்  பேண்ட் பாக்கெட்டில் இருந்து கைபேசி எடுத்து அந்த காவலாளியிடம் கொடுத்தான். அவர் அதை முடுக்கிப் பார்த்துவிட்டு அது எந்த வெளிச்சத்தையும் தராத போது திருப்பிக் கொடுத்தா.ர் ருக்மணியிஎன் கைபேசியையும் அப்படித்தான் வாங்கிப் பார்த்தார்.

“ என்ன நம்பிக்கை இல்லாம .. இதெல்லாம்  “

“ஆமாம் அப்படித்தான் “ அமிர்தன் முகம் கலவரம் அடைந்தது போல் இருந்தது

“ டென்ஷன் ஆகாதீங்க. பல பேர்  வர்ர இடம்தான். இது டென்ஷன் இல்லாம இருக்குறதுக்கு வர்ற இடம் தான் இது. டென்சன் ஆகாதீங்க”

உள்ளே நுழைந்தபோது வலிமையான வகை வகையான பெண்களின் கைப்பைகள் அங்கிருந்த ஒரு மர ஸ்டாண்டில் மாட்டப்பட்டதைக் கவனித்தான்.  ருக்மணியும் அவள் கையில் இருந்ததை அங்கே மாட்டினாள். சின்ன தடுப்பு அந்த பாதையை வருபவர்கள் போவர்களுக்களைப்  பிரித்திருந்தது நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தவர் அந்த தேர்ந்தத் தடுப்பை தாண்டி போகிற வழி இது, வரும் வழி இது என்று சைகைகள் காட்டினார் அவனுக்கு அந்த சைகை என்னமோ எரிச்சல் ஊட்டியது. வழக்கமாய்  வார்த்தைகளில் சொல்பவர்களை அவனுக்கு பிடிக்கும். இப்படி சைகை செய்வது, கண் புருவங்களை உயர்த்தி காட்டுவது என்பதெல்லாம் அமிர்தனுக்குப்  பிடிப்பதில்லை அப்படித்தான் அவர்  செய்கை கூட அவனுக்கு எரிச்சல் தருவதாக இருந்தது

பரவலாக  மலர்களின் அணிவகுப்பையும் தொட்டி செடிகளின் ஒழுங்கையும்  பார்த்துக் கொண்டே சென்றான். இவையெல்லாம் காட்சிகளாக கைபேசியில் பிடிக்கப்பட வேண்டியவை. தவற விடுவதாகச் சொல்லிக்கொண்டான். அவன் அங்கு வந்து சென்றதற்கானச் சாட்சியங்களாக நினைப்பான்.

 பத்தடிக்கு பிறகு நின்று இருந்த இன்னொரு முதியவர் மறுபடியும் செய்கை செய்து மகானின் சமாதியைக் காட்டினார் இன்னும் பத்தடிக்கு  பின்னால் இருந்த ஒருவர் பெண் போக வேண்டிய பாதை இது என்பது போல் ஒரு இடத்தை காட்டினார். ஆண் போகும் பாதை இது என்பது போல் ஒரு இடத்தை காட்டினார்

ருக்மணி  முன்னாள் நகர்ந்து  அலங்கரிக்கப்பட்ட சமாதியின் முனையில் முகத்தை வைத்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயற்சித்தாள். சமாதியை சுற்றி வைக்கப்பட்டிருந்த பூக்களோடு அங்கு சிலரின் தலைகளும் சாகவாசமாக சாய்ந்திருந்தன அவன் இரும்பு தடுப்பைக் கையில் பிடித்துக் கொண்டு சமாதியைப்  பார்த்துக் கொண்டிருந்தான். மீண்டும் ஒருவர் சைகை  செய்து மற்றவர்கள் உட்கார்ந்து இருந்த இடத்தை காட்டினார்

 இந்த செய்கைதான் எரிச்சல் ஊட்டுவதாக அவர் சொல்லிக் கொண்டான். ஒரு பெட்டி ஒன்றும் அதன் பக்கத்தில் சில தாள்களும் பேனாவும் இருப்பதை கவனித்தான். ஏதாவது குறை இருந்தால் எழுதி போடலாமா. இப்படி சைகை செய்வது பிடிக்கவில்லை, காலையில்  திருப்பி அனுப்பியது,  கைபேசி அணைக்கப்பட்டிருக்கிறதா என்று கட்டாயப்படுத்தி சோதனை செய்தது,  இதெல்லாம் எரிச்சல் ஊட்டிய விஷயங்கள் என்பதை அந்த தாளில் எழுதி போட்டு விட வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அந்த தாளை எடுத்த போது அது நன்கொடைக்கான விவரங்களை கேட்பதாக இருந்தது. கைபேசி எண்களும் வங்கி விவரங்களும் இருந்தால் நல்லது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 ருக்மணி சமாதியின் மீது தரையை சாய்த்து கொண்டு அப்படியே ரொம்ப நேரம் இருந்தாள். பிறகு பெண்கள் உட்கார்ந்து இருந்த பகுதிக்கு சென்று உட்கார்ந்தாள். அவனுக்கு அப்படி கீழே உட்கார முடியாது. தொடை வலிக்கும். மூச்சு இரைக்கும்.  வயது ஆகிவிட்டதை அது ஞாபகப்படுத்தும்.

தூரத்தில் இருந்த திண்ணை பார்வையில் பட்டது. அதில் யாரும் உட்கார காணோம்.

 அவன் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டான் கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவன் கண்களை திறந்ததும் பெண்களுக்கான பாதையில் ருக்மணி வெளியேறிக் கொண்டிருப்பது தெரிந்தது

பக்கத்து அறை விசாலமாகத் தென்பட்டது. அதன் முகப்பில் இருந்த அறிவிப்பு பலகைகளில் இசைக்கச்சேரிகள். ஓவிய கண்காட்சிகள் நகரத்தில் சமீபத்தில் எங்கு இருக்கின்றன என்று அடையாளம் காட்டும் அறிவிப்புகள் இருந்தன. எதிர்ப்பகுதியில் ஒரு விற்பனையாகம் என்று இருந்த இடத்தில் புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.. ஆங்கிலம், சமஸ்கிருதம் என்று இருந்த பகுதிக்கு சென்று சமஸ்கிருத எழுத்து என்னவாக இருக்கும் என்று பார்த்தான். அது ஆங்கில எழுத்து தான் .சமஸ்கிருத மொழிக்கு என்று வரிவடிவம் இருக்கிறதா என்று யோசிக்க ஆரம்பித்தான். தமிழில் புத்தகங்கள் இருந்த அலமாரி ஒரு மூலையில் இருந்தது

” என் பக்கத்தில் இருப்பவன் புறத்தியான் அல்ல, . அவன் பள்ளியானுலுஞ்சரி, பறையனாலுஞ் சரி அவனும் என்னை போன்றவன்., மனிதன், சகோதரன் என்னும் உணர்ச்சி சிறுக சிறுக என்னுள் ஊறவும்,  என் உணர்வு, அதற்கேற்ற நடைமுறையில் மாறவும் தொடங்கியது “ என்று அவன் எடுத்த  புத்தகத்தின் ஏழாம் பக்கத்தில் அப்ப்டிச்  சில குறிப்புகள் இருந்தன. பாண்டிச்சேரி நினைவுகள் என்ற அந்த புத்தகத்தை புரட்டிக் கொண்டே இருந்தான். ஒரு பக்கத்தை புரட்டிய போது மடுக்கரை ஏரிக்கரை முதலிய இடங்களிலோ பந்தி போஜனம் நடக்கும்போது எவ்வித வித்தியாசம் இல்லாது பறையன்,  பள்ளி,  பார்ப்பனன் என்று சொல்லப்படும் அனைவரும் ஒன்றாக  உட்கார்ந்து சாப்பிடுகிற அனுபவத்தை ஒரு பக்கம் சொன்னது. ” பலர் இப்படி நடந்ததை வீட்டில் கூட சொல்ல மாட்டோம் எங்களுக்கு இந்த மாதிரியான காரியம் நடக்கும்போது  உள்ளுக்குள் யாராவது வீட்டில் பார்த்து விட்டால் என்ன செய்வது எனும் திகில்.  ஜாதி வித்தியாசம் இல்லை என்று கோஷம் போடும்போது இருந்த தீயில் ஏதோ ஒன்று எங்கள் ஒவ்வொரு உள்ளத்திலும் அசைக்க முடியாத அளவுக்கு எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்ச்சியைத் தந்தது “. என்ற பகுதியைத் தாண்டி அவன் வந்தான்

 இது என்ன புதிதாக இருக்கிறது ஆட்டோமேட்டிக் ரைட்டிங். அதன் பத்தாம் பக்கத்தில் அவன் கூர்ந்து படிக்க ஆரம்பித்தான் ஆட்டோமேட்டிக் ரைட்டிங் என்றால் என்ன. இது இரவில் தான் நடைபெறுமாம்.  இரவில் மங்கிய விளக்கு வெளிச்சத்தில் தகுதி உள்ள ஒருவர் பென்சிலும் காகிதமுமாக மேஜைக்கு முன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அமைதியில் ஆழ்ந்து காலம் சென்றவர்களின் ஆவியை வரவழைக்கும் போது அழைத்த ஆவி உட்கார்ந்து அமைதியாய் காத்திருப்பவர் மீது ஆவாகனமாகி அவர் கைகொண்டு கூட இருப்பவர்களின் கேள்விகளுக்கு பதிலையோ அல்லது விரும்பியதற்கு உகந்த முறையோ எழுதி செல்லுமாம். அந்த ஆசிரமத்தில் சாமியார் அதில்  நம்பிக்கை வைத்திருந்ததாக அந்த குறிப்புகள் சொல்லின. அவனுக்கும் இப்படி ஆவியோடு பேச ஆசையிருந்திருக்கிறது.

அப்பாவும் தன்னுடைய கடைசி காலத்தில் பாண்டிச்சேரி உறவினர்களுக்குக்  கடிதம் எழுதுவதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு வகை தபால் நிலையங்கள் இருந்திருக்கிறது. ஒன்று பிரெஞ்சு ஆபீஸ் மற்றொன்று பிரிட்டிஷ்  ஆபீஸ். அங்கிருந்து கட்டு வெளிவரும் போது ஒரு சிறு கை வண்டியில் புறப்படும். கூட ஒரு பிரெஞ்சு அரசாங்க போலீஸ் சேவகன் உடன் தபால் கட்டுகளுக்கு  அரக்குச் சீல்  வைத்து முத்தரையிட்டதை வைத்திருப்பான். இந்த தபால் கட்டு புதுச்சேரியில் உள்ள பிரிட்டிஷ் அரசாங்க தலைமை தபால் ஆபீஸிடம் ஒப்படைக்கப்படும் இந்த தபால் கட்டு சந்தன நகர் பிரெஞ்சு தபால் ஆபீசில்  ஒப்படைக்கும் வரை எவரும் கைவைக்க முடியாது. அதன் காரணமாக ஆசிரமத்திற்கு கூட தபால் போக்குவரத்தெல்லாம் பிரெஞ்சு தபால் ஆபீஸ் மூலமாக நடந்து வந்ததாம். அது  பற்றி அவர் அப்பா தபால் எழுதும் போது சொல்லி இருக்கிறார். ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு மூன்று முறை ஏதாவது பாண்டிச்சேரிக்கு அனுப்புவார். அந்த வகைத் தொடர்பை தொடர்ச்சியாக வைத்துக் கொண்டிருந்தார்.

 இப்போது அப்படியெல்லாம் கடிதம் போடுவதற்காக இந்த ஊரில் யாரும் இல்லை எல்லோரும் வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள்என்படு அவனுக்கு வருத்தமே தந்தது.

உறவுகள் அற்ற ஊரில் தினித்திருப்பதாகப்பட்டது.

0

   பார்வைக்கு பழைய கட்டிடமாக தோன்றினாலும் அவனின் கிழக்கு புறத்தின் மாடியில் விசாலமான அறைகள் தென்பட்டன விசாலமான தாழ்வாரம் மேற்கிலும் கிழக்கிலும்  திறந்த மெத்தைகள் காணப்பட்டது .மேற்குப் பக்கத்தில் ஒரு பெரிய அறையும் அதை ஒட்டி முன்னறயும் திறந்த மெத்தைகளும் இருந்தன. மெத்தையின் மேற்கிலும் கிழக்கிலும் கைப்பிடி சுவரை சேர்ந்தால் போல திண்ணைகள். பெரிய அறை முன்னறை திறந்தவெளி மெத்தை ஆகிய மூன்றும் யாரோ முக்கியவருக்காக காத்திருப்பது போல் தென்பட்டது. மாடிக்கு ஒருவர் வந்து போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. அங்கு போய் பார்க்க வேண்டும் என்று நினைத்தான். அப்பா நீண்ட காலமாக ஒரு சாமியார்  தன்மையுடன் இருந்து இறந்து போனது ஞாபகம் வந்தது. மரத்தின் பழுத்த இலை உதிர்வது போல அவர் அப்படிப்பட்டவராக மாறிவிட்டதை கூட அவன் நினைத்தான். நான் மெய்ப்பொருளுக்கு ஒரு புகுந்த கருவியாக வேண்டும் என்னும் இன்னிசை உள்ளத்தில் இடைவிடாது வந்தது என்ற வார்த்தை அந்த புத்தக வரிகளோடு அவனைக் கடந்து சென்றன.

” எது நேர்ந்த போதிலும் சம்பவத்தை விட்டு விலகி சாட்சி தூதராக இருந்து பார்க்க கற்றுக்கொள் .நிகழ்ச்சியோடு கலந்து கொண்டு குழப்பாதே “  என்ற வாசகங்கள் கண்களில் பட்டன. இந்த வாசகங்களை தான் வேறு வார்த்தைகளில் இன்னும் சுலபமாக அவன் இருக்கும் பகுதியில் இருக்கும் விஸ்வநாதய்யர் சமாதியிலும் பார்த்திருக்கிறான். அவர் ஒரு கேரளத்துக்காரர் வைத்தியராக இருந்திருக்கிறார். கடைசி காலத்தில் தன்னுடைய போதனைகளை எல்லாம் சிலேட்டில் எழுதிப் போட அவரின் சீடர்கள் அதை எழுதி புத்தக வடிவமாக ஆக்கியிருக்கிறார்கள் அவர்களின் சீடர்களாக பல தொலைபேசி ஊழியர்கள் இருந்தார்கள் என்பது பொது தகவலாக அவனுக்குத் தெரிந்தது காரணம் விஸ்வநாதர் முன்பு தொலைபேசி நிலையம்  அருகில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையை வைத்திருந்தார் என்பதுதான்  அந்த ஊழியர்கள் நடமாட்டம் அங்கு இருந்து பின்னால் அவர்கள் அவரின் சிஷ்யர்களாக மாறிவிட்டார்கள். இந்த வாசகத்தைத் தான் விஸ்வநாத ஐயர் சமாதியில் கூட அவன் பார்த்திருக்கிறான். இது ஒன்றும் புதிது அல்ல. ஓசோ அவருடைய வாசகம் இது என்றுதான் அவருடைய நண்பர் பாலகிருஷ்ணன் சொல்வார், உன்னை விலங்குகள் இறுக்கப் பிடித்துக் கொண்டுள்ளன என்பதைத்தான்  திரும்பத் திரும்ப சொல்லுவார் பாலகிருஷ்ணன். ..நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நீ கேவலம் சாட்சி போதனாக இருக்க பழகு என்பதுதான் அப்போது அவன் மனதில் வந்தது. யோகம் தியானம்… இதெல்லாம் அப்பாவிற்கு கடைசி காலத்தில் பெரிய நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. ஆனால் மவுனமாக இருக்கச் சொன்னார்.  

” யோகத்தால் காற்றில் பறக்கலாம் நீர்மேல் நடக்கலாம் சாராதியாக  இருக்கலாம் . நான் கையாளப்படும் கருவியே என்பதை உணர்கிறேன் நான் நிமித்த மாத்திரம் “ என்பதாய்  எழுபதாம்   பக்கம் இருந்தது,அப்பா அப்படித்தான் இருந்தாரா என்ற கேள்வி மனதில் வந்தது. அந்தப் புத்தகத்தை வாங்கி விடலாம் என்று நினைத்தான்

 அது நூறு ரூபாய்க்குள் வரும் என்பது தான் அவனுக்கு ஆறுதலாக இருந்தது .வடக்குப்பக்கம்  மகானின் பிரதான சீடர்களும் பிரதான சாமியார்களும் இருந்த புகைப்படங்கள் அந்த புத்தகத்தின் விலை விட குறைவாக இருந்தன. ஆனால் வீட்டில் புகைப்படங்கள் வைத்தால் அதற்கு அடிமையாகி விடுவது போல ஏதாவது சொல் வரும்.  இந்த புத்தகம் போதும். படித்துவிட்டு ஏதாவது அலமாரியில் தூங்கச் செய்யலாம். யாரையும் தொந்தரவு செய்யாது என நினைத்தான்..யாருக்காவது தரலாம்

 .

 பணம் செலுத்தும் இடம் என்று தெரிகிற இடத்திற்கு சென்ற போது  நீளமான நாற்காலிக்கு பின்னால் இருந்த இருவரும் தலை குனிந்தபடி இருந்தார்கள். அவன் எட்டிப் பார்த்தபோது அவர்கள் கைபேசி செய்திகளில் மும்முரமாக இருப்பது தெரிந்த்து. அவன் கையில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டைப் பார்த்துவிட்டு சில்லறை இல்லை என்று ஒருவர் ஆங்கிலத்தில் சொன்னார். இன்னொருவர் முகம் பிரெஞ்சுக்காரரின் முகமாக இருந்தது. அவரும் ஆங்கிலத்தில் சொன்னதையே பிரெஞ்சில் சொல்வதாக நினைத்தான்.

 ஸ்கேன் மூலம் பணத்தை செலுத்த பிரஞ்சுக்காரர் ஒரு இடத்தைக் காட்டினார். இந்த ஆசிரமத்திற்கு நுழைகிற போது கைபேசி அணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு உள்ளே அனுப்பினார்கள் என்பது ஞாபகம் வந்தது இப்போது அதை எடுத்து இயக்கி பணத்தை ஸ்கேன் மூலம் அனுப்பிவிட்டு அந்த புத்தகத்தை ஒரு சிறு பையில் வாங்கிக் கொண்டு நகர்ந்தான்.

. இப்போது கைபேசி இயக்கத்தில் இருக்கிறது. இதை யாரும் அறீய மாட்டார்களே

 முன்பகுதியில் இருந்த மலர்களின் போட்டிகளும் விதவிதமான வளர்ந்த செடிகளும் அதன் வண்ணங்களும் அவனுக்கு அதை மீண்டும் மீண்டும் பார்க்கச் செய்தன. இதுபோன்ற இடங்களில் அவன் கைபேசியில் படம்பிடித்துக்கொண்டு அவன் மனைவிக்கு அனுப்புவான். அவளும் ஆச்சர்யத்துடன் பாராட்டுவாள்.

 அப்படித்தான் நேற்று கூட பாண்டிச்சேரி கடற்கரையில் இரவில் அவ்வப்போது நிறம் மாறும் கலங்கரை விளக்கத்தையும் படம் பிடித்திருந்தான். வானத்தில் இருக்கும் சந்திரனைப் பார்க்க அவன் மனைவி விரும்பிய போது ஐம்பது  ரூபாய் கொடுத்து தொலைநோக்கி மூலம் அவளைப் பார்க்கச் செய்தான்.காந்தி சிலை  உட்பட பல இடங்களைப் படம் பிடித்துக் கொண்டான் கதை சொல்லி விடுதி என்று ஒன்று இருந்தது. அதில் அந்த வாரம் இருக்கும் நிகழ்வுகளில்  கதை சொல்லிகளின் பெயர்கள் மற்றும் பாடகர்களின் பெயர்கள் இருந்ததைக் கவனமாக படம் பிடித்தான்.

இப்போது தனக்கு முன்னால் இருக்கும் மலர்களை படம் பிடிக்க ஆசைப்பட்டான்.முன்பு  கைபேசி அணைக்கப்பட்டிருந்தது. இப்போது அது செயல்பாட்டில் தான் இருக்கிறது

இந்தப் பூக்களும் அதன் புகைப்பட பதிவுகளும் அவசியம் என்று நினைத்தான். காட்சிரூபமாய் அவை கைபேசியில் அகப்பட வேண்டியவை. அவன் இங்கு வந்துச் சென்றதன் அடையாளமாக சாட்சி ரூபமாக இருக்க வேண்டியவை .

    பூக்களின் குவியலையும் தொட்டிச் செடிகளையும்  பார்த்து இரண்டு மூன்று முறை கூர்மையான கோணத்தில்  படமாக்கி கொண்டான். அவன் படம்பிடிப்பதைக் கவனித்த சமாதி பக்கம் இருந்த  ஆப் ட்ராயர் போட்டிருந்த ஒருவர் அவனை நெருங்கினார். முகப்பு கேட்டுப் பகுதியில் இருந்து இன்னொருவர் ஓடுவது போல் விரைந்து  வந்தார். அவனுக்கு முன்னால் இருந்த மலர்களைக் கண்டிப்பாக படம் பிடித்து விட வேண்டும் என்ற அவசர கதி அவனுக்கிருந்தது. அவன் தொடர்ந்து படங்களை எடுத்துக் கொண்டே இருந்தான். அவனை  நெருங்கியிருந்த சிலர்களின் முகங்களில் இருந்த பதட்டத்தை அவன் கவனிக்கவில்லை.. ருக்மணியும் பதட்டமான முகத்துடன் அவனை நெருங்கியிருந்தாள்.

( பாண்டிச்சேரி பற்றியக்குறிப்புகள் நன்றி. அமிர்தாவின் அமுதன் நினைவு அஞ்சலி நூல் )

Series Navigationகால மாற்றம்விட்டுச் சென்ற வாழ்க்கை