This entry is part 5 of 9 in the series 27 செப்டம்பர் 2026

             மீனாட்சி சுந்தரமூர்த்தி

                                     

      அந்த அதிகாலை வேளையில் நகரத்தின் மிகப்பெரிய மண்டபம் வண்ண விளக்குகளின் ஒளியில் களைகட்டியிருந்தது.வாயிலில் குலைவாழைமரங்களும், பாக்கு மரங்களும் கட்டியிருக்க, அரங்கம் வரை தொடரும் நீண்ட பாதையில் இருபுறமும் பழுப்புநிற டிஷ்யூத் துணிகளால் அடைத்து, வண்ண விளக்குகளை மலர்,மரம், தேவதை என வகைபிரித்து அலங்கரித்திருந்தனர். அரங்க முகப்பில் வெள்ளைப் பளிங்கு விநாயகர்  செந்தாமரை மலர்மாலை சூடித் தரிசனம் தந்துகொண்டிருந்தார். 

ரோஜா நிறச் சேலைகள் உடுத்திய நங்கையர் மூவர் மஞ்சள்,குங்குமம், , மல்லிகைச் சரத் துண்டுகளைத்  தட்டுகளில்  ஏந்தி வருவோரைப் பன்னீர் தெளித்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

        ஆறு மணிக்கு முகூர்த்தம் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.பெரிய ஹாலின் மணமேடை வண்ணப் பூக்களாலும், பட்டுத் துணி, சரிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க,  பாரம்பரிய செம்பு பூச்சாடிகள்,  உயரமான விளக்குகள், ஆலய கோபுதரம் மற்றும் பிரதான வாயில் ,இருபுறமும் பாவைகள் என அடுக்கப்பட்டிருந்தன..  இங்கு ஹோம குண்டங்கள் வைத்து வேள்வி துவங்கியிருந்த  வேதியர்களின் வேதமந்திரங்களை ஒலிபெருக்கிகள் நாற்புறமும் கடத்திக்  கொண்டிருந்தன. மேடையின் இருபுறமும் உயரமான திரைகள் நிகழ்வை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.  .எதிரில் வெள்ளைச் சிலுக்குத் துணியால் சுற்றியிருந்த இருக்கைகளில் உறவினர்களும், நண்பர்களும் அமர்ந்திருந்தனர்.   காபியும்,தேனீரும் வெள்ளைச் சீருடைப் பணியாளர்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர்.தலைமைக் குருக்கள்,

 ”மாப்பிள்ளை, பெண்ணை அழைச்சிண்டு வாங்கோ.”

என்று குரல் கொடுத்தார், மணமேடையின் ஒரு புறமிருந்த மணமகன் அறையிலிருந்து புண்யகோடியை அழைத்து வந்தனர், ,இன்னொரு புறமிருந்த மணமகள் அறையிலிருந்து  ருக்மிணியை அழைத்து வந்தனர்.இருவரிடமும் சரிகைகளால் அலங்காரமாகத் தொடுத்திருந்த மல்லிகை மலர்மாலைகளைத் தந்த குருக்கள் மாலை மாற்றிக்கொள்ளச் சொன்னார்.அதன்பின்னர் இருவரும் இருக்கைகளில் அமர்ந்தனர்.

         இந்த நேரத்தில்தான் கனகா ஆட்டோவில் வந்து இறங்கினாள்.. சிவப்பு நிறப் பட்டுச் சேலையும், பச்சை நிற இரவிக்கையும் , வைரக் கம்மலும், வைரமூக்குத்தியும், ஒற்றைவடத் தாம்புகயிறுச் செயினும் அவளுக்கு நேர்த்தியாக இருந்தன.நிறமென்னவோ கருப்புதான் ஆனால் களையான முகம். 150 ரூபாயைத் தந்துவிட்டு உள்ளே வந்தாள்.வரவேற்ற  பெண்களுக்கு ஒரு புன்னைகைகயை உதிர்த்துவிட்டு, சந்தனம் குங்குமத்தை  தொட்டுக்கொண்டு மல்லிகைத் துண்டை எடுத்து தலையில் வைத்துக்கொண்டாள். அரங்கம் நிரம்பியிருந்தது.எங்கே உட்காருவது என்று தேடியவேளையில்  இவளை எதிர்பார்த்திருந்த அத்தை மகள்  மங்களம் அலைபேசியில் அழைத்தாள்.

”கனகா இன்னும் புறப்படலையா?”

”இப்பதான் வந்தேன்”

”சரி வலது பக்கத்துல முன்னால இருக்கற மூணாவது வரிசைக்கு வா”

என்று சொல்லிக்கொண்டே எழுந்து வந்தவள் இவளைக் கண்டுவிட்டாள்.

அருகில் வந்து,

”அங்கே உனக்கும் எடம் போட்டு வெச்சிருக்கேன்” என்று சொல்லி அழைத்துச் சென்றாள். அமர்ந்தபின்தான் தெரிந்தது அந்த வரிசையில் இருந்த அத்தனை பேரும் உறவினர்கள். 

சித்தப்பா மகள், பெரியப்பா மகன், மாமன் மக்கள் எல்லோரும் கனகாவை நலம் விசாரித்தனர். மங்களம் காபி வரவழைத்துத் தந்தாள்.

”எங்கே நீ வரமாட்டியோன்னு நெனச்சேன்.”

”சதாபிஷேகம் பாக்கறது பெரிய  புண்ணியமாச்சேடி”

உண்மைதான் எண்பது வயது நிரம்பியவருக்கு பிள்ளைகள் நடத்துவது இது. 

கனகாவின் தாயின்  ஒன்று விட்ட அக்காள் மகள் அதாவது கனகாவின் பெரியம்மாவின் மகள் ருக்மிணி, 75 வயது ஆகிறது.

நெல்லைச் சீமையிலிருந்து  தந்தையார் தந்த சிறிய அளவு தொகையை மூலதனமாக வைத்து வாழ்வில் உயர்ந்திருக்கும்  புண்யகோடி, சிங்கப்பூரில்பெரிய வணிகவளாகம் ஒன்றை நடத்திவருகிறார்,அவருக்கு இரண்டு பிள்ளைகளும்,ஒரு பெண்ணும்  உள்ளனர். மூத்தவன் வணிகவியல் பட்டம் பெற்றவன்,தந்தைக்கு உதவியாக இருக்கிறான். அடுத்தவன் பொறியியல் படித்தவன் மோட்டார் வாகனத்தின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிலகம் வைத்திருக்கிறான். உழைப்பும்,அறிவும், நேரமும் சேர்ந்து செல்வத்தை வாரிவழங்கிக் கொண்டிருக்கிறது. மகளைச் சட்டம் பயில வைத்தார். மூவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர்.

        சொந்த ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை வந்து குலதெய்வத்திற்கு சொந்தபந்தங்களோடு திருவிழா நடத்திச் செல்வார். இப்போது இந்த சதாபிஷேக விழாவிற்கு  பிள்ளைகள் சொந்தங்கள் ஒருவரையும் விட்டுவிடாது நேரில் சென்று அழைப்பு கொடுத்து அழைத்துள்ளனர். சிறப்பாக ஏற்பாடுகளும் செய்துள்ளனர்.

         காலைச் சிற்றுண்டிக்கு அவரவர் சென்று வந்து கொண்டிருந்தனர். கனகாவும்,மங்களமும் இன்னும் சில பெண்களும் சேர்ந்து சென்று உண்டு வந்தனர். இட்டிலி, பொங்கல், தோசை, பூரி வடை, என்று பல வகைகள் இருந்தன. உயர்தர கேட்டரிங் சரவீஸ்  ஒன்று இதற்கான பொறுப்பை ஏற்றிருந்தது. 

            மேடையில்  ஹோமம் முடிந்திருந்தது.இப்போது குருக்கள் மந்திரங்கள் சொல்ல கலசங்களிலிருந்து புனிதநீரானது தம்பதிகள் மீது துளைகள் கொண்ட வெள்ளித்தட்டின் வழியாக கலசதாரை என்று வார்க்கப்பட்டது. அதன்பின்னர் புதிய பட்டாடை மாற்றிக்கொண்டு வந்து மாலை மாற்றிக் கொண்டனர்,  ,புதிய மாங்கல்யத்தை ருக்குமிணியின் கழுத்தில் அணிவித்தார் புண்யகோடி. புண்யகோடியை விடவும் அதிக வயதானோர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். இவர்களை வணங்கி ஆசி பெற்றனர் இருவரும். அதன்பின்னர் மற்றவர்கள் மேடைக்கு வந்து இருவரையும் வணங்கி ஆசிகள் பெற்றனர். கனகாவும்,மங்களமும் சென்று வணங்கி வந்தனர். மதிய உணவும் பலவேறு வகைகளோடு பறிமாறப்பட்டது. 

       பகல் உணவோடு தாம்பூலப்பை வாங்கிக் கொண்டு பலர் சென்று விட்டிருந்தனர். இப்போது உறவுகள் மட்டுமே மண்டபத்தில் இருந்தனர். புண்யகோடிக்கு டவுனில் தந்தையாரின் பெரிய மாளிகை இருந்தது. இரண்டு வேன்களில் உறவுகள் அனைவரையும் அங்கு அழைத்துச் சென்றார்.   மாலை உறவுகள் கூடி அவரவர் குடும்ப நலன்களைப் பறிமாறிக்கொண்டனர். 

அப்போது புண்யகோடி,

”ஏம்மா யாரெல்லாம் நல்லா பாடுவீங்க,”

”மாமா உங்க கல்யாணப்பொண்ணு பாடுவாங்களே”

”ருக்கு நீ ஒரு பாட்டு பாடி ஆரம்பிச்சு வையேன்”

அவள் வெட்கப் பட்டாள் , ஆனாலும் பிள்ளைகள் வற்புறுத்த , 

”மாடு மேய்க்கும் கண்ணே” என்றொரு கண்ணன் பாட்டு பாடினாள்.அதன் பின் சிலர் பாடினர். ருக்மிணி,

”கனகா நீ  நல்லா பாடுவியே பாடு” என்றாள். கனகா ,”செவ்வரளிப் பூ எடுத்து”  என்றொரு பாடல் பாடினாள். அவளது குரல் இனிமைக்காக எல்லோரும் கேட்டுக் கொண்டதால் ஆறேழு பாடல்கள் பாடிவிட்டாள். 

அன்று இரவு விருந்து உண்டபின் பட்டுப்புடவையோடு தாம்பூலம் வைத்துக் கொடுத்தாள் ருக்மிணி அம்மாள்.

மறுநாள் காலை வீடுவந்து சேர்ந்தாள் கனகா.

இது முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் காலை அலைபேசி அழைப்பு  ருக்மிணி,

” கனகா எப்படி இருக்கே?”

”நல்லா இருக்கங்கா , நீங்க எப்படி இருக்கீங்க?”

” நல்லா இருக்கோம்., மாமா உங்கிட்டப் பேசறார்”

”கனகா நல்ல குரல் உனக்கு, அருமையாப் பாடறே, பாட்டு கத்துக்கிட்டியா”

”இல்லீங்க மாமா, நானாப் பாடறேன்அவ்ளோதான்”

”சரிமா, இங்கே வாயேன், மலேசியா,சிங்கப்பூர் பாத்துட்டுப் போகலாம்”

”பாக்கலாம் மாமா,”

”பாஸ்போர்ட், விசா ஏற்பாடு பண்ணிட்டு எப்போ வரேன்னு சொல்லு”

என்று அலைபேசியை வைத்தார் அவர்.

சிங்கப்பூருக்கு அழைப்பு, சின்ன சந்தோஷமும், கலக்கமும் ஏறியது மனதில். மங்களாவிடம் பேசினாள்,

”என்ன கனகா, திடீர்னு இப்பிடிச் சொல்றே!”

”ஆமாம் வரச் சொல்றாங்கடி”

”பணம் அனுப்பறேன்னு சொல்லலையா”

”இல்லையே”

”உன்னப் பத்தி எல்லாம்  தெரியுமே”

”நல்லாப் பாத்துக்குவாங்கன்னு தோணுதுடி”

”சரி, யோசி” என்று முடித்தாள் மங்களம்.

           கனகாவின் கணவன் மருந்துக்கடை வைத்திருந்தவன் அங்கு வேலை செய்த பெண்ணோடு சென்று ஆண்டுகள் 30 ஆகிவிட்டது. இவள் இருக்கும் வீடு  இவளுடைய  நகைகளை விற்றுக் கட்டியது.அவன் பெயரில்தான் உள்ளது.  ஏனோ அதை மட்டும் விட்டு வைத்திருக்கிறான். அண்ணனும்,தம்பியும்  அழைத்தும் இவள் போகவில்லை. கண்ணியமாக அக்கம்பக்கத்தவரும் மதிக்கும் வகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

                     பிள்ளைகளும் இல்லை. வாழ்க்கை வெறுமையாக ஓடுகிறது. சரி சென்றுதான் பார்க்கலாம் என்று  ஒரு ஆசை தோன்றியது.    நான்கு வளையல்களில் இரண்டையும் ,வைரக் கம்மலையும் விற்க ஏற்பாடு செய்தாள். சிறியதாக ஒரு தோடு வாங்கிக் கொண்டாள். சென்னைக்குச் சென்று அண்ணன் மகனிடம் சொன்னாள்.

              பாஸ்போர்ட் , விசா வாங்கி, டிக்கெட்டும் போட்டுத் தந்துவிட்டான் அண்ணன் மகன். தள்ளாமையிலிருந்த அண்ணன் கனகாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி  ருக்மிணியிடம் பேசினார்.  கனகா புறப்படும் நாள்,நேரம், விமானம், இறங்கும் நேரம் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது, சென்னை விமான நிலையத்தில் காலை 6. மணிக்கு வந்து உதவியாளரையும் ஏற்பாடு செய்து விட்டுச் சென்றான். அண்ணன்மகன் , விமானத்தில் . சன்னலோர இருக்கை கிடைத்தது, மேலிருந்து பார்க்க சின்னப் பெட்டிகள் போல் ஊர்களும், இன்னும் உயரேப் போக வரைபடம் போலவும் தெரிந்தது ஆச்சரியம். நாலரை  மணி நேரப் பயணம். பகல் 12,30 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினாள். பளபளவென்றிருக்கும், பிரம்மாண்டமான விமானதளம்  சொர்கம்தான்

                ருக்மிணியும்,புண்யகோடியும் வந்து அழைத்துச் சென்றனர்

எத்தனை பெரிய வீடு , வாசலில் வாட்ச்மேன்,வேலைக்காரர்கள் கொடுத்து வைத்தவள்தான் ருக்மிணி என்று வியந்தாள். இவளுக்கு முதல்தளத்தில் ஓர் அறை  ஒதுக்கியிருந்தார்கள். பெரியது, கண்ணாடி சன்னல்கள், வெள்ளைத் திரைச் சீலைகள், சுவரில் அழகான ஓவியங்கள். ஒற்றைக் கட்டில் ,தலைப்புறம் சிறிய மேசையில் நைட்லேம்ப். நவீன வசதிகளோடு குளியலறை. சந்தோஷத்தில் மிதந்தாள்.,சிங்கப்பூரில் பல இடங்களைச் சுற்றிக் காட்டினார்கள் கணவரும்,மனைவியும் நன்றாக உபசரித்தார்கள். 

     ஒரு வாரம் போனதே தெரியவில்லை,  அன்று காலையில் எழுந்து வரும்போதே ருக்மிணி சோபாவில்  தலையைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள்.

”அக்கா என்னாச்சு ஒடம்பு சரியில்லையா?’

”இல்ல கனகா, இந்த சமையல்கார அம்மா ஒரு வாரம் திடீர்னு லீவு போட்டுட்டா”

”அதனால என்ன, நான் சும்மாதானே  இருக்கேன் ”

” உனக்கெதுக்குமா சிரமம், ஹோட்டல்ல இருந்து வாங்கிக்கலாம்”

”எனக்கு ஒரு சிரமமும் இல்ல”  என்று அந்த நவீன சமையலறை புகுந்தாள், இரண்டே நாட்களில் மைக்ரோ ஓவன், காபி டிகாஷன் மெஷின்,எலெக்ட்ரிக் அடுப்பு எல்லாம் பழகிவிட்டாள். இவளுடைய சமையல் எல்லோருக்கும் பிடித்துப்போனது. ஒரே பாராட்டு மழைதான் ,கனகாவிற்கு  சந்தோஷமாக இருந்தது.

              ஒரு வாரம் , மறு வாரம் போனதே தவிர சமையல்கார அம்மாள் வரவே இல்லை., பெரிய குடும்பம். அவரவருக்குப் பிடித்தவை தினமும்  மாறும்.இரவு படுக்கப் போவதற்கு பத்துமணி ஆகிவிடும். காலயில்  மீண்டும் வேலை  ஆறு மணிக்குத் துவங்கும் .ருக்மிணி முதலில் போல இவளோடு உட்கார்ந்து பேசுவது இல்லை, புண்யகோடி பாடச் சொல்வது இல்லை. ஆனால் நான்கு விலை உயர்ந்த புதுச் சேலைகள் எடுத்துக் கொடுத்தாள். ஆறுமாதங்கள் ஓடிவிட்டன. ஒரு நாள் ருக்மிணியிடம்,

”அக்கா வந்து இவ்ளோ நாளாச்சு , ஊருக்குப் போறேன்”

”உன்ன என் சொந்த தங்கச்சியா பார்த்துக்கறேன், ஊருல யாரு இருக்கா?”

என்று கடுகடுத்தாள். 

வருடம் ஒன்று வேகமாக ஓடிவிட்டது,  இங்கு வந்து இறங்கியபோது தெரிந்த சொர்கம் இப்போது  காணாமல் போய்விட்டது. அன்று இரவு பத்துமணிக்கு அறைக்கு வந்த கனகா திரைச் சீலையை விலக்கி அந்தப் பெரிய கண்ணாடி சன்னலில் தூரத்தில் மினுக்கும் மின்மினிகள் போல் தெரிந்த நகரத்தைப் பார்க்கிறாள். இவற்றைத் தாண்டி எங்கோ இருக்கும் தன் ஊரை நினைத்துக் கொண்டாள். விழிநீரில் மின்மினிகள் மறைந்தன.

Series Navigationமழை புராணம் : 49ஐந்து சதவீதம்