This entry is part 6 of 9 in the series 27 செப்டம்பர் 2026

வை கோபி சுவாமிநாதன்

ராகவனுக்கு கணக்குப் பிடிக்கும். அவர் கணக்கும் சுத்தமாக இருக்கும்.

அதனால்தான் கோவையில் உள்ள ஒரு auto-components நிறுவனத்தில் இருபது வருடங்களாக accounts section-ல் வேலை பார்த்து வந்தார்.

சம்பளம் பெரியதாக இல்லை.

ஆனால் மாதம் முதல் தேதி வரும் பணத்துக்கும் முப்பதாம் தேதி மீதமிருக்கும் பணத்துக்கும் நடுவே குடும்பத்தை நடத்துவதை பழகிக்கொண்டார். 

மனைவி மீனா.

மகன் கார்த்திக் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு.

அந்த மாதம் மட்டும் கணக்கு கொஞ்சம் முரண்டுபிடித்தது.

College fee.

Coaching fee.

EB bill.

Bike insurance.

“இந்த மாதம் மட்டும் எப்படியாவது  பண்ணிடலாம்,” என்றார் ராகவன்.

மீனா சிரித்தாள்.

“ஒவ்வொரு மாதமும் இதே dialogue தான்.”

ஞாயிற்றுக்கிழமை மதியம்.

சாப்பிட்டுவிட்டு mobile-ல் WhatsApp பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு message வந்தது.

WORK FROM HOME

Monthly additional income ₹10,000–₹15,000

Government Registered Financial Service

No Investment. No Risk.

ராகவன் இரண்டு முறை படித்தார்.

அவருடைய கண்களில் முதலில் பட்டது—

No Investment.

பின்னர்—

₹10,000–₹15,000.

Kitchen-லிருந்து மீனா குரல்.

“சாயந்திரம்  market போகணும். மறந்துடாதீங்க.”

“சரி.”

ஆனால் அவரது விரல் ஏற்கெனவே Interested என்பதைத் தொட்டிருந்தது.

சில நிமிடங்களில் WhatsApp call.

“வணக்கம் சார். நான் ராஜேஷ். Safe Loan Support.”

குரல் மரியாதையாக இருந்தது.

“நாங்க small-loan customers-க்கு repayment support பண்ணுறோம் சார். சில customers direct-ஆ company account-க்கு payment பண்ண முடியாது. Verified account holders மூலமா collect பண்ணி main account-க்கு transfer பண்ணுவோம்.”

“என் account-க்கா?”

“ஆமாம் சார். உங்கள் பணம் ஒன்றும் போட வேண்டியதில்லை.”

அடுத்த வாக்கியம் மெதுவாக வந்தது.

“ஒவ்வொரு transfer-க்கும் உங்களுக்கு ஐந்து சதவீதம் commission.”

ராகவனின் மூளை உடனே கணக்கு போட்டது.

₹20,000 என்றால் ₹1,000.

₹40,000 என்றால் ₹2,000.

Accounts section-ல் வேலை பார்க்கிறவர் calculator தேட வேண்டியதில்லை.

“இதுல ஏதாவது problem வராதா?”

மறுமுனையில் சிரிப்பு.

“சார், problem இருந்தா நாங்க இப்படி WhatsApp-ல openஆ  பேசுவோமா?”

அந்த logic அப்போது சரியாகவே பட்டது.

அடுத்த நாள் ₹3,500 வந்தது.

ராஜேஷ் கொடுத்த UPI number-க்கு அனுப்பினார்.

பிறகு ₹4,200.

₹6,000.

₹2,750.

ஒவ்வொரு முறையும் உடனே message.

Thank you sir 🙂

ஒரு வார முடிவில் ராகவனின் account-க்கு ₹1,850 commission வந்தது.

அதைப் பார்த்தபோது ஒரு சின்ன வெற்றி உணர்வு.

மீனாவிடம் சொல்லவில்லை.

இந்த மாத EB bill-ஐ கட்டிவிட்டு surprise கொடுக்கலாம் என்று நினைத்தார்.

மறுநாள் இன்னொரு surprise வந்தது.

அறிமுகமில்லாத number.

“எங்க பணம் உங்க account-க்கு போயிருக்கு. Refund எப்போ?”

ராகவன் குழம்பினார்.

“என்ன பணம்?”

Call துண்டிக்கப்பட்டது.

அடுத்த நாள் இன்னொரு call.

“Loan amount எதுக்கு உங்கள் account-க்கு வந்தது?”

ராகவன் உடனே ராஜேஷை அழைத்தார்.

“சார், customer confusion. Small system issue. நீங்கள் கவலைப்படாதீங்க.”

₹1,850 commission ஏற்கெனவே வந்திருந்ததால், “system issue” நம்பத்தகுந்ததாகத் தோன்றியது.

செவ்வாய்க்கிழமை காலை.

Office computer-ல் voucher entry செய்து கொண்டிருந்தபோது mobile ஒலித்தது.

“நீங்க ராகவன் தானே?”

“ஆமாம்.”

“Cyber Crime Police Station-லிருந்து பேசுறோம்.”

Keyboard மேல் இருந்த கை அப்படியே நின்றது.

“உங்கள் bank account வழியாக சில disputed transactions போயிருக்கு. சில விவரங்கள் தேவை.”

“Fraud-ஆ?”  ராகவன் நடுங்கிய குரலில்.

பக்கத்தில் இருந்த colleague திரும்பிப் பார்த்தார்.

ராகவன் உடனே வெளியே வந்தார்.

“சார்… நான் எந்த fraud-மும் செய்யல.”

“அதைப் பற்றித்தான் விசாரிக்கிறோம். உங்கள் account-ஐ தற்போது bank restrict பண்ணியிருக்கிறது.”

அவர் தொண்டை வறண்டது.

Mobile banking திறந்தார்.

Debit transactions temporarily restricted.

மாலை வீட்டுக்கு வந்ததும் மீனா கேட்டாள்.

“EB bill கட்டிட்டீங்களா?”

ராகவன் பதில் சொல்லவில்லை.

“என்னாச்சு?”

Mobile-ஐ அவளிடம் கொடுத்தார்.

அவள் message-ஐப் பார்த்தாள்.

“Account ஏன் block?”

சில விநாடிகள் கழித்து—

“நான் ஒரு side income…”

மீனா மெதுவாக உட்கார்ந்தாள்.

கார்த்திக் laptop-ஐ மூடிவிட்டான்.

அன்று இரவு dining table-ல் மூன்று பேரும் இருந்தார்கள்.

பேச்சு மட்டும் இல்லை.

அப்போது mobile-ல் ‘டிங்’.

ராஜேஷ்.

Sir don’t worry. Small technical problem. Police call வந்தால் எதுவும் சொல்லாதீர்கள். Everything under control.

ராகவன் அதை நீண்ட நேரம் பார்த்தார்.

முதல் முறையாக அந்த Everything under control என்ற வார்த்தை அவருக்கு பயமாக இருந்தது.

கார்த்திக் அருகே வந்தான்.

“அப்பா, இந்த ராஜேஷை நேர்ல பார்த்திருக்கீங்களா?”

“இல்ல.”

“Company office?”

“இல்ல.”

“Agreement?”

ராகவன் மௌனம்.

கார்த்திக் phone-ஐ மேசையில் வைத்தான்.

“அப்பா… முன்பின் தெரியாத ஒருத்தருடைய பணம் நம்ம account-க்கு ஏன் வரணும்?”

அந்தக் கேள்வி ராகவனுக்கு போலீஸ் கேட்ட எந்தக் கேள்வியைவிடக் கடினமாக இருந்தது. நியாயமாகவும் பட்டது.

மறுநாள் அவர்கள் cybercrime office சென்றார்கள்.

அதிகாரி WhatsApp messages, bank entries, phone numbers எல்லாவற்றையும் பார்த்தார்.

“உங்களுக்கு வந்த சில பணம் online fraud complaints-லிருந்து trace ஆகி இருக்கு.”

ராகவனின் முகம் மாறியது.

“சார், நான் யாரையும் ஏமாத்தல.”

“அதைத்தான் நாங்க verify பண்ணிக்கிட்டு இருக்கோம்.”

 அதிகாரி நிதானமாகத் தொடர்ந்தார்.

“Fraud பணத்தை நேரடியாக ஒரு criminal account-க்கு அனுப்ப மாட்டாங்க. நடுவில் சாதாரண மனிதர்களோட accounts பயன்படுத்துவாங்க.”

ராகவன் மெதுவாகக் கேட்டார்.

“என்னோட account…?”

“ஒரு வழித்தடம்.”

அந்த ஒரு வார்த்தை போதுமானது.

ராகவன் தனது account-ஐ இதுவரை சேமிப்பதற்கான இடமாகத்தான் பார்த்திருந்தார்.

யாரோ அதை செல்வதற்கான வழியாக பார்த்திருந்தார்கள்.

“அந்த ஐந்து சதவீதம்?”

Officer அவரைப் பார்த்தார்.

“உங்கள் account பயன்படுத்தினதற்கான வாடகைன்னு வைத்துக்கலாம்.”

ராகவன் தலை குனிந்தார்.

வெளியே வந்ததும் கார்த்திக் ஒன்றும் பேசவில்லை.

Parking வரை சென்றபின் கேட்டான்.

“எவ்வளவு commission கிடைச்சது?”

“ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது.”

“அதுக்காக இவ்வளவு?”

அவன் குரலில் கோபம் இல்லை.

அதுதான் ராகவனுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது.

அடுத்த சில நாட்கள்  statements, screenshots, calls, explanations என்று சென்றன.

ராகவன் எல்லாவற்றையும் கொடுத்தார்.

எந்த message-யும் delete செய்யவில்லை.

Bank-க்கும் police-க்கும் தேவையான தகவல்களைத் தொடர்ந்து அளித்தார்.

சில வாரங்கள் கழித்து cybercrime office-லிருந்து மீண்டும் அழைப்பு வந்தது.

“ராகவன் சார், நீங்கள் கொடுத்த ‘ராஜேஷ்’ number-ஐ trace பண்ணினோம். அந்த SIM ராஜேஷ் பெயரில் இல்லை. வேறொருவருடைய ஆவணத்தை பயன்படுத்தி வாங்கியிருக்காங்க. Complaint ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே number switch off ஆயிருக்கு.”

“அப்படின்னா அவனை கண்டுபிடிக்க முடியாதா சார்?”

அதிகாரி சிரித்தார்.

“Number off ஆனா investigation off ஆகாது.”

“இந்த number மட்டும் இல்ல. இதே மாதிரி complaint-களில் வந்த இன்னும் சில numbers, accounts-ஓட pattern match ஆகுது.”

“அப்படின்னா?”

“ஒரே குழு பல பெயர்ல வேலை செய்திருக்க வாய்ப்பு இருக்கு.”

பல நகரங்களில் வேறு பெயர்களில் இதே முறையில் செயல்பட்ட ஒரு குழுவின் பகுதியாக ‘ராஜேஷ்’ இருப்பது தெரிய வந்தது.

“ராஜேஷ் ஒருத்தன் இல்லை. அது ஒரு பெயர். அந்தப் பெயரை பல பேர் பயன்படுத்தியிருக்காங்க.”

“அப்ப என் account?”

“அவர்களுக்கு அது இன்னொரு வழித்தடம்.”

அவர் திட்டமிட்டு இந்த மோசடியில் சேர்ந்ததற்கான ஆதாரம் இதுவரை இல்லை என்று போலீஸ் தெரிவித்தது. ஆனால் தெரியாத நபர்களுக்காக தனது account-ஐ பயன்படுத்த அனுமதித்தது பெரிய தவறு என்றும் எச்சரித்தது.

சில நாட்களில் bank restriction நீக்கப்பட்டது. Network குறித்த விசாரணை மட்டும் தொடர்ந்தது.

ஒரு மாலை வீட்டுக்கு வந்தபோது மீனா EB bill-ஐ அவரிடம் நீட்டினாள்.

“இன்னும் கட்டல.”

ராகவன் bill-ஐ வாங்கினார்.

“இப்பவே கட்டிடறேன்.”

மீனா சிரித்தாள்.

“இந்த முறை எந்த scheme?”

ராகவன் மெலிதாகச் சிரித்தார்.

“என் salary scheme.”

“அதுதான் நம்பகமானது.”

சில மாதங்கள் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை.

ராகவனின் mobile மீண்டும் ஒலித்தது.

Earn ₹20,000 every month from home.

No investment. Easy commission.

அதைப் பார்த்தார்.

இந்த முறை கணக்கு போடவில்லை.

Screenshot எடுத்தார்.

Report Spam.

Block.

Mobile-ஐ கீழே வைத்தார்.

மீனா கேட்டாள்.

“என்னங்க?”

“Part-time வேலை.”

அவள் உடனே திரும்பிப் பார்த்தாள்.

ராகவன் சிரித்தார்.

“Interview-க்கே போகாம reject பண்ணிட்டேன்.”

மீனா மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

மேசையில் EB bill paid என்ற message வந்தது.

₹1,850 சம்பாதித்த நாள் ராகவனுக்கு இன்னும் நினைவில் இருந்தது.

ஆனால் இப்போது அந்த எண்ணைப் பார்த்தால் அவருக்கு லாபம் நினைவுக்கு வரவில்லை.

விலைதான் நினைவுக்கு வந்தது.

  • எழுதியவர் : வை கோபி சுவாமிநாதன் , 73, “ஸ்ரீ ஐங்கரன்” , 3வது குறுக்கு வீதி, வெங்கட்டா நகர் , பாண்டிச்சேரி 605011
  • gopiswaminathan@gmail.com
  • 9442067615 , 9500366628

Series Navigationமினுக்கும் மின்மினிகள்கலைஞனின் மறுபக்கம்