This entry is part 3 of 9 in the series 27 செப்டம்பர் 2026

வசந்ததீபன்

வேரோடு பிடுங்கி எறியப்பட்ட

மரம்

குற்றுயிராக… குலையுயிராக…

துடித்துக் கொண்டிருக்கிறது.

இன்னும் சில மணிகளில்

இடம் தூய்மைப்படும்.

மனைவி, குழந்தைகள்

கை கோர்க்க

பிறந்த மண் உதறிச்செல்கிறேன்.

தரித்துச் செழிக்க

இனி எந்த இடம்…?

பூக்கள் கூத்தாடும் நந்தவனம்..

கனிகள் குலுங்கும் சோலை..

நீரோடைகள் புரளும் பூமி..

பறவைகளையும்

வண்டுகளையும்

வரவேற்று உபசரிக்கின்றன.

அந்த நிலத்தில்

விளைந்த நாங்கள்

நீங்குவதை என்னவோ…?

அவைகள்

வேடிக்கை பார்க்கின்றன.

விழிகள் நீர் வடிக்க

இதயங்கள் கனன்று

அகல்கிறோம்.

சொந்தங்கள்…

உறவு படிமங்கள்…

உருகிக் கரைய

பரந்த உலகம் எனும் பிம்பம்

என்னுள் பிரகாசிக்கிறது.

Series Navigationவேட்கைப் பயணம்மழை புராணம் : 49