ரவி அல்லது
துண்டாடிக் கிடக்கும்
மூங்கில்களுக்கு
வனமென்றொரு வரலாறு இருக்கிறது.
அவைகளின் நர்த்தன ரீங்காரமற்றதன்
வெறுமை இயலூக்கிகளுக்கு என்னவோ செய்கிறது.
சிலது இசை எழுப்பும் வாத்தியங்களாக மாறின.
பலது
கூடார, கூடைகளென பயன்படும் பொருள்களாயின.
எதற்கு இருக்கிறோமெனத் தெரியாமலையே கொஞ்சம் கிடந்தன.
பிரித்தலின் நுட்பத்தில்
திசைகளெங்கும் பயணப்பட்டபடி இருந்தன.
கவச முட்களை எரித்து சாம்பலாக்கிய சந்தர்ப்பத்தில் ஆசுவாசங்கள் சிலருக்கு கிடைத்தது.
யாவிற்குமிடையில்
அனல் தகிக்கும்
மேனியில்
அடித்தூர் மூங்கில்கள் குருத்துவிடத் தயாராகிக் கொண்டிருந்தன.
போர்த் தடியானவைகள் புறப்பட்டு வருமெனும் கதைகள் மூங்கில்களின் உரசலில் முனகலாக கேட்டபடியே இருந்தது.
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com