-பாலமுருகன்.லோ
சங்கர், உன் படத்தை நாலு மொழியில் டப் செய்யப் போறாங்களாம்.
நாலு மொழியிலும் நீதான் ஹீரோவாம். நியூஸ் இப்பத்தான் கேள்விப்பட்டேன்.
“புரொடியூசர் இப்பத்தான் சொன்னாரு.”
“என்ன சொல்லுற ராஜா? உண்மையாவா?”
“அட, ஆமாம்பா. உண்மைதான் சொல்லுறேன். புரொடியூசர் கீழ ஹாலில்தான் உட்கார்ந்திருக்காரு.”
“என்னப்பா சொல்லுற? நம்ம வீட்டு ஹாலுலையா?”
“அட, வேறெங்க உட்காருவாங்க? நம்ம வீட்டு ஹாலில்தான் உட்கார்ந்திருக்காரு. உன்னைப் பார்க்கணுமுன்னு சொன்னாரு. நான், ‘என்ன விஷயம்?’ன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்ட பிறகு உன்கிட்ட சொல்லி, கூட்டிட்டுப் போலாம்னு வந்தேன்.”
“சரி, வாப்பா போலாம். ரொம்ப நேரம் புரொடியூசரை காக்க வைக்கக் கூடாது” என்றான் ராஜா.
இருவரும் ஹாலில் உட்கார்ந்திருந்த புரொடியூசரைப் பார்ப்பதற்கு வேகவேகமாக வந்தனர்.
“சார், வாங்க வாங்க. வணக்கம். எப்படி இருக்கீங்க?” என்றான் சங்கர்.
“என்ன முதலாளி, எப்படி இருக்கீங்க?” என்றார் புரொடியூசர்.
“என்ன சார், முதலாளின்னு கூப்பிடுறீங்க?”
“பின்ன, உங்களால் நான் புரொடியூஸ் பண்ணுன படம் பட்டிதொட்டியெல்லாம் பிச்சுக்கிட்டுப் போயிடுச்சு.”
“அப்போ நகரப்புறத்துல ஒழுங்கா போகலையா சார்?”
“அப்படி இல்ல முதலாளி. இப்ப நீங்கதான் டாக் ஆஃப் தி டவுன். மூலை முடுக்குல, சந்து பொந்துல எங்கு திரும்பினாலும் உங்களைப் பற்றித்தான் பேச்சு. எங்க பார்த்தாலும் உங்க போஸ்டர்தான் ஒட்டப்பட்டிருக்கிறது. இதிலிருந்து தெரியலையா? A, B, C சென்டரில் உங்க படத்தைப் பற்றித்தான் பேச்சு.”
“அப்படியா சார்? உண்மையாவா?”
“பின்ன, நான் ஏன் பொய் சொல்லணும் முதலாளி? நான் பணம் போடுறேன், நீங்க நடிக்கிறீங்க. ஆனா, உங்க திறமையால படம் நல்லா ஓடுச்சுன்னா, ப்ராஃபிட் பார்க்கலாமுல்ல. அதுதான் நடந்துருக்கு. இந்த சமீபத்திய பாராட்டு, ரிலீஸ்… இதை நான் நாலு மொழியில் மீண்டும் ரிலீஸ் செய்யப்போறேன். அனைத்து மொழியிலேயும் நீங்கதான் ஹீரோ. சரியா?”
“சார், என்ன சொல்லுறதுன்னு தெரியல. மற்ற மொழியில் போய் நடிச்சா மக்கள் ஏத்துப்பாங்களா சார்? பிளாப் எல்லாம் ஆயிடாதே. சார், நான் ஏதோ ஒரு மொழியில் எனக்குத் தெரிஞ்ச நடிப்பை வச்சுக்கிட்டுக் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன். இப்ப நீங்க சொல்லுறீங்கன்னு மத்த மொழியில் நடிச்சு, அது சரியா போகலைன்னா உள்ள மார்க்கெட்டும் போயிடுமே சார்.”
“நீ என்னப்பா சங்கர், இப்படி யோசிக்கிற?” என்றான் ராஜா. “மேலும், புரொடியூசரே உன் மேலே இருக்கிற கான்பிடென்ஸை வச்சுத்தான் அந்த முடிவை எடுத்திருக்காரு. நீ என்னடானா இப்படியெல்லாம் யோசிக்கிற?”
“இல்லடா ராஜா, நாலையும் யோசிக்கணுமுல்ல. சும்மா ஏனோதானோன்னு ஒரு செயலில் இறங்கக் கூடாது இல்ல. அதான்” என்றான் சங்கர். “ஊருல என்னைப் பற்றிப் பேசுறாங்கன்னா ரொம்பவே சந்தோஷமா இருக்கு. எனக்கு வரும் வாசகர் லெட்டரும் அதைத்தான் சொல்லுது. மனசுக்கு இதமாத்தான் இருக்கு, இந்தப் பாராட்டு மழையில் நனைவதற்கு. டேய் ராஜா, உனக்கு ஒண்ணு தெரியுமாடா? ஒரு கலைஞனுக்கும் எது முக்கியமுன்னு?”
“அட, நீயே சொல்லப்பா சங்கர், என்னன்னு.”
“அது வேற ஒண்ணும் இல்லடா, நம்மைப் பத்தி வர பாராட்டுத்தான். பாராட்டப் பாராட்டத்தான் மேலும் மேலும் உத்வேகம் வரும். பல நல்ல முயற்சிகளைச் செய்யலாம். சார், நான் சொன்னது சரிதானே?” என்றான் சங்கர்.
“முதலாளி, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். பின் என்ன, பலத்த சிந்தனை? உடனே சரின்னு சொல்லுங்க. ரீமேக்குக்கான வேலையைத் தொடங்கிரலாம்.”
“சரி சார், நீங்க இவ்வளவு சொல்லுறீங்க, தொடங்கிரலாம். எங்க, எப்ப வரணுமுன்னு சொல்லிருங்க.”
“ராஜா, டேய், நீ குறிச்சு வச்சுக்கோடா. நான் ஒரு வேலையா வெளியில போக வேண்டியிருக்கு” என்று சொல்லிவிட்டு சங்கர் வீட்டை விட்டு வெளியேறினான்.
பட வேலைகள் தொடங்கின. நான்கு மொழி என்பதால் பல நாடுகள் சுற்ற வேண்டிய நிலை. ஒரு வருடத்திற்கும் மேலாகப் படப்பிடிப்பு சென்றுகொண்டிருந்தது. இதோ முடித்துவிடலாம், அதோ முடித்துவிடலாமுன்னு நினைச்சுக்கிட்டிருந்த புரொடியூசர், போற போக்கைப் பார்த்து அதிர்ந்து போனார். பட்ஜெட் அவர் நினைச்சிருந்தது ஒன்று. ஆனால், நடைமுறையில் வேறு விதமாக மாறியது. பட்ஜெட் தாறுமாறாக எகிறிவிட்டது. புரொடியூசர் பல இடங்களில் பணம் கடனாக வாங்கித்தான் இதில் முதலீடு செய்திருக்கிறார்.
இப்போ உள்ளுக்குள் ஒரு சிறிய பயம் தென்பட்டது அவரது மனதில். இவ்வளவு பணத்தைப் போட்டிருக்கிறோமே… ஒருவேளை இந்த ரீமேக் ஒழுங்கா செல்லலேன்னா? என்ற எண்ணமானது மனதைக் குடைந்தது. வெளியில் அவர் வேறு யாரிடமும் சொல்லவில்லை.
“எங்க, நம்ம யாருக்கிட்டயாவது சொல்லி, அவங்க ‘நான்தான் அப்பவே சொன்னேனப்பா, இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு’ சொல்லிட்டா என்ன பண்ணுறது? சினிமா துறையில் சகுனம், நல்ல விதமா பேசுறது, தன்னம்பிக்கையோட செயல்படறதுதான் முக்கியம். யாராவது இதில் மாறுபட்டு இருந்தாலே போதும், வைப் கிடைக்காமல் களை இழந்து போயிடும் செட்டே.”
இதை எல்லாத்தையும் யோசிச்சு, தான் மனதில் நினைத்ததை யாரிடமும் சொல்லவில்லை புரொடியூசர். ஏதோ புரொடியூசருக்குத் தோணிக்கிட்டே இருந்தது, ஏதோ ஒண்ணு சரியில்லேன்னு. இவரு, அதான் சங்கர். அவர் நடிப்பில் ஏதோ ஒண்ணு குறையுதே. கேட்கலாமா? இல்ல, அவரு ஏதாவது நினைச்சுப்பாரா? நாமத்தான் காசு போடுறவங்களாச்சே, கேட்டுத்தான் ஆகணும். சில பல லட்சங்கள் இல்ல, பல கோடிகள் முதலீடு செய்திருக்கிறோம். நாம மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டே இருக்கக் கூடாது. இன்னிக்கு சங்கர் கிட்ட கேட்டிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து, சூட்டிங் முடிவதற்காகக் காத்திருந்தார் புரொடியூசர்.
சூட்டிங் முடிந்து சங்கர் கிட்ட மெதுவாகக் கேட்டார் புரொடியூசர்.
“என்ன முதலாளி, எப்படி போயிட்டு இருக்கு படப்பிடிப்பெல்லாம்?” என்றார் பொதுவாக.
“சார், அதெல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு. இப்ப கடைசிக் கட்டத்துக்கு வந்திருக்கோம்” என்று சங்கர் சொல்ல,
“ஆமாம் முதலாளி. நம்ம டைரக்டர் ஒரு ரஷ் போட்டு காண்பிச்சாரு. முதலாளி, நான் ஒண்ணு சொல்லவா?”
“தாராளமாகக் கேட்கலாம் சார். நீங்கள்தான் இந்தப் படத்தில் முதலீடு செய்திருக்கிறீங்களே. என்ன, எதைப் பத்தி கேட்கப்போறீங்க?”
“அது ஒண்ணும் இல்ல முதலாளி. ஏதோ ஒண்ணு கம்மியா தெரியுது உங்க நடிப்பில்.”
“அப்படியா? என்ன வித்தியாசமுன்னு சரியா சொல்ல முடியுமா?”
“சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும் குத்துமதிப்பாகச் சொல்லுறேன். உங்க ஒரிஜினல் அளவு இல்ல. ஏதோ ஒரு சோர்வு தெரியுது. உங்க முகத்தில் ஒரு பொலிவு இல்லேங்குறது எனது கருத்து.”
“சார், எப்படி சரியா கண்டுபிடிச்சீங்க? கொஞ்ச நாளாவே நான் மனச் சங்கடத்துல இருக்கேன்.”
“ஏன்?”
“இதே துறையில் நம்ம கிரி இருக்கான்ல? அவனைப் பத்தித்தான் ஒரே பேச்சா இருக்கு. நான் வருடத்துக்கு ஒண்ணுதான் நடிக்கிறேன். ஆனா, அவனோ வருடத்துக்கு ஏழு எட்டு நடிக்கிறான். அதுவும் எல்லாம் செம சூப்பர் டூப்பர் ஹிட். ஊரே இப்ப அவனைப் பத்தித்தான் பேச்சு. வானொலி கேட்டாலும், டிவியைத் திறந்தாலும் கிரி கிரின்னுத்தான் பேச்சு. ஒரு காலத்துல என்னைத் தலையில தூக்கி வச்சுக் கொண்டாடினாங்க. ஆனா, இப்போ வேறு யாரோ. அதை என் மனசு ஏத்துக்க மாட்டேங்கிறது.”
“சங்கர், நான் ஏதோ அட்வைஸ் சொல்லுறேன்னு நினைச்சுக்க வேண்டாம். பதவி, புகழ், பணம், பாராட்டு எல்லாம் வரும், போகும். அதை நாம எப்படி கடக்கிறோம்ங்கிறதுலதான் நம்ம வாழ்க்கை அடங்கியிருக்கு.”
“அப்ப என்ன பண்ணச் சொல்லுறீங்க? எதைப் பத்தி கவலை கொள்ளணுமுன்னு சொல்லுறீங்களா?”
“கவலைப்படுங்க சங்கர். அதிலிருந்து எப்படி வெளியே வரலாமுன்னு யோசிங்க. ஆனா, தலைக்கு மட்டும் ஏத்திக்காதீங்க. விளைவு மோசமா இருக்கும்.”
“அப்ப நீங்க சொல்றதை வச்சுப் பார்த்தா, எனக்கு ஒண்ணு தோணுது. சொல்லவா?”
“சொல்லுங்க சங்கர்.”
“கிரியும் என்போல ஒரு ஆளுதான். நான் எப்படி வளர்ந்தேனோ, அதைப்போல அவனும் இந்தத் துறையில் வளர்ந்திருக்கிறான். அதைப் பார்த்து சங்கடப்படறதை விடுத்து, ஏன் நாம் ஒரு பாராட்டு லெட்டர் எழுதி கிரிக்குப் போடக்கூடாது?” என்று கூறிப் புரொடியூசரைப் பார்த்தான் சங்கர்.
புரொடியூசர் முகத்தில் அப்படியொரு பொலிவு. முகம் சந்தோஷத்தில் சிவந்தது. இனி கவலை இல்லை. நாம் எப்படியாவது சிறிது கட்டிங், ஒட்டிங் செய்து, ஒரு புதிய ரஷ் பார்க்கலாம் என்ற நம்பிக்கை மேலோங்கியிருந்தது அவரது மனதில்.
-பாலமுருகன்.லோ✍️