This entry is part 2 of 12 in the series 8 நவம்பர் 2026

மனவெளி திறக்கட்டும் 

மனத்தராசு உயரட்டும்

சுயநலம் தாழட்டும் 

பொதுநலம் உயரட்டும்

புன்னகைத் தென்றலில் 

பூச்சொற்கள் மலரட்டும் 

முறுக்குப் பிழியலாய்

உறவுகள் கூடட்டும் 

நட்புகள் இணையட்டும்

கூலத்தை வீடாக்கும்

குருவிநெறி தழைக்கட்டும்

குருடனுக்குக் கோலாய்

வாழும்கலை அமையட்டும் 

எண்ணெய்க் குளியல்

‘நான்’ அழுக்கைக் கழுவட்டும் 

தீபஒளி தேனொளி

நாம் நமதென ஒளிரட்டும்

சரவெடிக்  கோபங்கள்

சங்குச்சக்கரமாகட்டும்

பந்திவைத்துப் பசியாறும 

காக மனம் சிறக்கட்டும்

மழைக்கரங்கள் நம் கரங்கள் 

ஊரையே கழுவட்டும்

நாணயம நேர்மையே

உறுதுணை ஆகட்டும் 

தேன்சிட்டு நமக்காக

பூக்கூட்டம் மலரட்டும் 

வளர்ந்தாலும் தேய்ந்தாலும்

நிலவே வாழ்க்கை ஆகட்டும்

சக்கரவர்த்திகள் நாமென்றே

சரித்திரம் பேசட்டும்

சொத்துசுகம் நமக்கு

தானதர்ம மாகட்டும்

யுத்தங்களை முத்தங்கள்

முறியடியடித்து வெல்லட்டும் 

‘உலகத்தார் அனைவரும் 

உடன்பிறப்பே’ என்று

சூளுரைக்கும் நாளாய் 

இத்தீபாவளி அமையட்டும் 

அமீதாம்மாள் 

Series Navigationஅம்மாவின் கைகளுக்கு மூப்பில்லை.2025 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள்