வளவ. துரையன்
தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான். தலைவி அவன் நினைவாகவே ஆற்றி இருக்கிறாள். கார்காலத்தில் வந்து விடுவேன் எனக் கூறிச் சென்றவன் இன்னும் வரவில்லையே என அவள் வருந்துகிறாள். அப்போது அருகிலேயே எப்போதும் இருக்கும் அவளுடைய தோழி அவளை ஆற்றுப்படுத்த சில சொற்களைப் பேசுகிறாள். துன்பத்தின் மிகுதியால் தலைவி உறுப்பு நலன் இழந்தாள். அவள்தோள்கள் மெலிந்தன. அதனால்தான் தோழி தலைவியைத் “தொடி இட ஆற்றா தொலைந்த தோள்” என்று காட்டுகிறாள்.
“தொடியொடு தோள் நெகிழ” என்று திருக்குறளும் [1266], “தொடிநிலை கலங்க வாடிய தோளும்” என்று ஐங்குறுநூறும் [475] காட்டும். மேலும் தோழி தலைவியின் கண்ணழகுக்கும் உவமை கூறுகிறாள். “வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்” என்கிறாள். மாவடுவின் நடுவே பிளந்தாற்போல அகன்ற கண்களை உடையவளே என்பது இதன் பொருளாகும். ”இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினாள் என்பது கலித்தொகை. [107] கார்காலத்தில் மழைவருமுன் மேகங்கள் இடிக்கும் என்பது ஓர் அறிகுறியாகும். அதன்மீது தற்குறிப்பேற்ற அணியாகத் தோழி கூறுகிறாள். நீண்ட இடைவெளியாகப் பிரிந்திருக்கும் உன் தலைவரிடம், ”இனியும் காலத்தை நீட்டிக்காமல் திரும்பிச் செல்லுங்கள்” என்று இடி முழங்குகிறது” என்று தோழி மொழிகிறாள்.
தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி,
வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்! வருந்தல்
கடிது இடி வானம் உரறும், நெடு இடைச்
சென்றாரை, “நீடல்மின்” என்று.
பாடலின் திரண்ட பொருள்: ”மா வடுவில் நடுவே பிளந்தாற்போல, அகன்ற கண்களை உடையாய்! கடுமையாய் இடிக்கும் மேகம், நெடிய வழியில் சென்ற தலைவனை, காலந் தாழ்த்தாது போகச் சொல்லி முழங்கும். ஆதலால் வருந்தாதே”
7. பொருள் வேண்டுமன்றோ?
தோழி இப்பாடலில் தலைவிக்குப் பொருளின் இன்றியமையாமையைப் பற்றி கூறுகிறாள். நம்மை விரும்பி வருபவர்களுக்குப் பொருள் தரவேண்டுமன்றோ? விரும்பாத பகைவர்களும் இருப்பார்கள்; அவர்களை அழிப்பதற்கும் பொருள் வேண்டும்தானே! இதைப் பாலிக் கலி, “அரிதாய அறனெய்தி அருளியோர்க்களித்தலும், பெரிதாய பகை வென்று பேணாரைத் தெருதலும்” என்று கூறும். அப்படிப்பட்ட பொருளைத் தேடிக் கொண்டுவரவே தலைவர் சென்றிருக்கிறார். அவர் வந்துவிடுவார்.
கார்காலம் வந்துவிட்டது என்று கூறும் தோழி மழை பொழிவதற்கு இரு உவமைகளைக் கூறுகிறாள். மழை பொழியும்போது மின்னல் மின்னுகிறது. அம்மின்னல் பொறாமை இல்லாத புகழ் போல விளங்குகிறது. புகழ் ஒருவருக்கு இருந்தால் அப்புகழைக் கண்டு பிறர் பொறாமைப் படக் கூடாது. அதுவே நல்ல புகழ்.
மேலும் நல்லனவற்றையே செய்ய விரும்பும் வேள்வித்தீ போல அம்மின்னல் மின்னுகிறது என்று கூறுகிறாள். தளரியலாய் என்பதை மாந்தளிரைத் தலைவியின் மேனிக்கு உவமையாகக் கூறுவதாகவும் கொள்ளலாம். தளரியலாய் தளர்ந்த இயல்பை உடையவளே என்றும் பொருள் கூறியிருக்கிறார்கள். அதாவது தலைவனின் பிரிவை எண்ணி உடலும் உள்ளமும் தளர்ந்து விடடனவாம்.
நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும்,
தற் செய்வான் சென்றார்த் தரூஉம், தளரியலாய்!
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப்போல
எச்சாரும் மின்னும் மழை
பாடலின் திரண்ட பொருள்: [மாந்தளிர் போன்ற மேனிநலம் உடையவளே!} தளர்ந்த இயல்பினை உடையாய்! தம்மை விரும்பி வருபவர்களுக்குக் கொடை அளிப்பதற்கும், விரும்பாத பகைவரை அழிப்பதற்கும் பொருட்டுப் பொருள் ஈட்டி வரச் சென்றுள்ளார் நம் தலைவர். பொறமை இல்லாத புகழ் போலவும், வேள்வித் தீ போலவும் மின்னி மழைபொழிகிறது. அவர் வந்துவிடுவார்.
- அம்மாவின் கைகளுக்கு மூப்பில்லை.
- தீபாவளியில் இன்று
- 2025 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள்
- 80களில் “தீபாவளி”எப்படி தான் இருந்தது….
- விடை பெற்று விட்டாயா, நண்பனே?
- பச்சாதாபம்
- உம்மாச்சி
- கணபலி -திருவையாற்று வேள்வியில் பிறந்த அகப்பெருங்கவிதை
- புருஷலட்சணம்.
- விளையும் பயிர் முளையிலே
- எண்ணம் மாறுபட என்ன காரணம்?
- வெற்றிடம்
- கடைசி மணியும் முதல் வரியும்
- 6.மாவடு கண்ணல்லவோ