ஜமீல்
அதிகாலை மூன்று முப்பது மணி. ஊரே உறக்கத்தின் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்த நேரத்தில், அக்பர் மையவாடியின் அமைதியைத் தொந்தரவு செய்யாதவாறு, என் வீட்டுக் கூரையின் மீது நின்ற சேவல் தனது முதல் கூவலை எழுப்பும். பல வருடங்களாக அது எனக்கு ஒரு அலாரமாக இருந்தது. அது எழுப்பும் நேரத்தை ஒருபோதும் தவறவிட்டதில்லை. நானும் அதன் குரலைக் கேட்டும் எழாமல் இருந்ததில்லை.
வழக்கம்போல அன்றும் சூரியனின் கரங்கள் கிழக்கு வானத்தைத் தொட்டுப் பார்ப்பதற்கு முன்னரே படுக்கையிலிருந்து எழுந்துவிட்டேன். பாயைச் சுருட்டி ஓரமாக வைத்துவிட்டு, மண் முட்டியில் நிரப்பி வைத்திருந்த தண்ணீரைக் கொண்டு உளூச் செய்தேன். வெளியுலகம் இன்னும் உறக்கத்தின் போர்வைக்குள் கிடந்தது. வீதிகளில் மனித நடமாட்டம் இல்லை. எங்கோ தொலைவில் ஒரு நாய் குரைத்தது. அந்தக் குரலும் சிறிது நேரத்தில் அடங்கி, மீண்டும் அமைதி ஊரைத் தழுவிக் கொண்டது. அந்த அமைதிக்குள் சுபஹ் தொழுகையை நிறைவு செய்தேன்.
தொழுகை முடிந்த கையோடு வீட்டின் கோடிப்புறக் கூண்டில் அடைபட்டுக் கிடந்த கோழிகளுக்குத் தவிடு கலந்த அரிசியை அள்ளிப் போட்டேன். கதவைத் திறந்ததும் அவை ஒன்றையொன்று முண்டியடித்துக்கொண்டு வெளியே வந்து தீனியைத் தின்னத் தொடங்கின. பசியோடு இருக்கும் அவற்றின் அவசரத்தைப் பார்க்கும்போது, சில வேளைகளில் மனிதர்களும் இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றும். என் அன்றாட வாழ்வின் முதல் இயக்கம் இப்படித்தான் தொடங்கும்.
சம்மாந்துறை மஜீத் புறத்தில் இருக்கும் அரசினர் பாடசாலையில்தான் எனக்குக் கடமை. அதிபர் பாடசாலை கையொப்பப் புத்தகத்தில் சிகப்புக் கோடு அடிப்பதற்கு முன் நாம் கையெழுத்திட வேண்டும். காலை ஆறு பத்து மணிக்கு வரும் முதல் பேருந்தைப் பிடித்தால்தான், ஏழு இருபதுக்கெல்லாம் பாடசாலையை அடைந்து அந்தச் சிகப்புக் கோட்டுக்கு முன்னால் என் கையொப்பத்தைப் பதிக்க முடியும். அதனால், நான் வீட்டை விட்டுப் புறப்படும் இந்த அதிகாலை வேளையில் என் பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள்.
வாப்பா வேலைக்குப் புறப்படுவதை என் குழந்தைகள் இதுவரை கண்டதே இல்லை. அதுவே என் மனதின் ஒரு சிறிய ஏக்கமாகவும் நெருடலாகவும் இருந்து வருகிறது. அவர்கள் கண் விழிப்பதற்குள் நான் வீட்டைவிட்டு வெகுதூரம் சென்றிருப்பேன். அவர்கள் மாலை நேர வகுப்புகளுக்கு சென்றிருக்கும் போது நான் வீடு திரும்பியிருப்பேன். ஒரு தந்தையின் வாழ்க்கையில் சில கடமைகள், அவன் பிள்ளைகளின் நினைவுகளில் கூட இடம் பெறாமல் போய்விடுகின்றன.
பேருந்தை விட்டு இறங்கியதும் மஜீத் புறத்துக் கிராமச் சாலை, வண்ணத்துப்பூச்சிகளைப் பறக்கவிட்டவாறு என்னை வரவேற்கும். அங்கிருந்து பாடசாலை வரை நடந்து செல்லும் அந்த ஒன்றரை கிலோமீட்டர் வளைவும் நெளிவுமான பாதை எனக்கென்று ஒரு தனி உலகம். வாய்க்கால் வரப்புகளைக் கடந்து செல்லும் அந்தக் காலை நேரக் காட்சி, எத்தனை வருடங்களாகப் பார்த்தாலும் புதிதாகவே தெரியும்.
பாதையின் இருமருங்கிலும் உயரமான மரங்கள், ஏறுவரிசையிலும் இறங்குவரிசையிலும் ராணுவ வீரர்களைப் போல அணியணியாக நிற்கும். அவற்றின் கிளைகளில் பெயர் தெரியாத வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். சில பூக்களின் வாசனை மூக்கைத் துளைக்கும். சில பூக்களின் நறுமணம் மெல்ல வந்து மனதை வருடும். அந்த மரங்களின் மறைவிலிருந்து சிறகு விரிக்கும் பறவைகளின் விதவிதமான கீச்சொலிகள், இளையராஜாவின் காலத்தால் அழியாத பின்னணி இசையைப் போலக் காதில் தேனாய் பாயும். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இனிமை அது.
வாய்க்காலில் ஓடிச் செல்லும் தெளிந்த நீரில் மஜீத் புறத்து மக்கள் குடும்பம் குடும்பமாகக் குளித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் தத்தமது துணிமணிகளைப் பாறைகளில் அடித்துத் துவைத்துக் கொண்டிருப்பார்கள். சிறுவர்கள் நீரில் மூழ்கி விளையாடுவார்கள். கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்தக் காட்சிகளையெல்லாம் ரசித்தபடியே கால்நடையாகப் பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.
ஆனால், அன்றைய பயணம் வழக்கம்போல அமையவில்லை. வாய்க்கால் ஓரத்தில் அடர்ந்து வளர்ந்து பற்றையாகக் கிடந்த புற்களின் நடுவே ஏதோ ஓர் அசைவு என் கவனத்தைத் திருப்பியது. முதலில் அது காற்றில் அசையும் புல்லாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அந்த அசைவு மீண்டும் தெரிந்தது. நான் பாதையிலிருந்து விலகி அந்த இடத்திற்குச் சென்று கூர்ந்து கவனித்தேன்.
ஒரு பறவை, அது அடிபட்டு, சிறகை அடித்துக்கொண்டு பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. நம்மூர் பறவை போலத் தெரியவில்லை. எங்கிருந்தோ கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்த வெளிநாட்டுப் பறவையாக இருக்கலாம். அதன் அலகு நீளமாகவும் லேசான வளைவுடனும் இருந்தது. உடலின் நிறம் வெள்ளையுமில்லை, சாம்பல் நிறமுமில்லை, மெல்லிய காய்ந்த சருகின் நிறம்.
கிட்டே சென்று பார்த்தபோது என் நெஞ்சு பதறியது. அதன் ஒரு பக்கச் சிறகிலிருந்து ரத்தம் சொட்டுச் சொட்டாகப் புல்லில் வடிந்து கொண்டிருந்தது. அந்தக் கணத்தில் அந்தப் பறவை எனக்குப் பறவையாகத் தெரியவில்லை. அது வலியால் துடிக்கும் ஓர் உயிராகத் தெரிந்தது. அதன் கண்கள் என்னைப் பார்த்தன. அந்தக் கண்களில் இருந்த பயத்தையும் வலியையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அது என்னிடம் ஏதோ சொல்ல முயல்வதுபோல இருந்தது. என்னைக் காப்பாற்று என்ற அந்த வார்த்தைகள் அதன் அலகிலிருந்து வரவில்லை, என் மனதிலிருந்து வந்தன.
ஐயோ பாவமே என்று அதை அள்ளியெடுத்து அருகிலிருக்கும் வீட்டிற்குக் கொண்டு சென்று காயத்திற்கு மருந்து பூசி காப்பாற்ற வேண்டும் என்று என் கைகள் துடித்தன. ஆனால், மனதுக்குள் எழுந்த பயம் என்னைத் தடுத்து நிறுத்தியது. வனஜீவராசிகள் தொடர்பான சட்டங்கள் நினைவுக்கு வந்தன. தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் வந்தது. மனசாட்சி ஒரு புறம் காப்பாற்று என்றும், சுயபாதுகாப்பு மறுபுறம் விலகிச் செல் என்றும் சொன்னது. அந்த இரண்டு குரல்களுக்கு நடுவே நான் நின்றேன். சில விநாடிகள், ஆனால் அந்தச் சில விநாடிகள் ஒரு முழு வாழ்க்கையைவிட நீளமாக இருந்தன.
இறுதியில் என் பயமே வென்றது. அந்தப் பறவையின் பதைபதைக்கும் கண்களை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல், தலையைக் குனிந்தபடி அங்கிருந்து மெதுவாக நகரத் தொடங்கினேன். சில அடிகள் சென்றுவிட்டு மீண்டும் திரும்பிப் பார்த்தேன். அது இன்னும் அங்கேயே இருந்தது. சிறகை அசைத்தது, எழ முயன்றது, ஆனால் முடியவில்லை. நான் மீண்டும் நடக்கத் தொடங்கினேன்.
அன்று பாடசாலையை அடைந்து சிகப்புக் கோட்டுக்கு முன்னால் கையெழுத்திட்டேன். என் விரல்கள் கையொப்பத்தைப் போட்டன, ஆனால் என் மனம் மட்டும் அந்த வாய்க்கால் ஓரத்திலேயே கிடந்தது. அந்தப் பறவையை யாராவது எடுத்துச் சென்றிருப்பார்களா, தெருநாய் ஏதேனும் அதைத் தாக்கியிருக்குமா, அல்லது இயற்கை அதன் மீது இரக்கம் கொண்டு காயத்தை ஆற்றியிருக்குமா என்று பல எண்ணங்கள் தோன்றின. எல்லாவற்றிற்கும் மேலாக, கூட்டில் இரைக்காகக் காத்திருக்கும் அதன் சிறு குஞ்சுகள் அம்மா பறவை தீனியோடு வருவாள் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்குமோ என்ற கேள்வி என்னைத் துளைத்தது. அந்த எண்ணம் என் நெஞ்சில் ஒரு கல்லாக விழுந்தது.
அன்று வகுப்பறைக்குள் இருந்தபோதும் என் மனம் பாடத்தில் இல்லை. கரும்பலகையில் எழுதிய எழுத்துகளுக்கு இடையில் அந்தப் பறவையின் கண்கள் தெரிந்தன. மாணவர்களின் குரல்களுக்கு இடையில் அதன் சிறகடிக்கும் ஓசை கேட்டது. அன்று நான் ஒரு பறவையை மட்டும் விட்டுவிட்டு வந்ததாக உணரவில்லை. என்னுள் இருந்த மனிதநேயத்தின் ஒரு சிறு பகுதியையும் அந்த வாய்க்கால் ஓரத்தில் விட்டுவிட்டு வந்ததாகவே உணர்ந்தேன்.
அடுத்த நாள் மீண்டும் அதே அதிகாலை வேளையில் சேவல் கூவியது, நான் எழுந்தேன். ஆனால் அன்று என் கால்கள் வழக்கம்போல பேருந்தை நோக்கி மட்டும் செல்லவில்லை. அவை நேற்று பார்த்த அந்தப் பறவையை நோக்கியும் இழுத்துச் சென்றன. பேருந்திலிருந்து இறங்கி, வழக்கமான பாதையில் நடந்தேன். வாய்க்கால் தெரிந்ததும் என் இதயம் வேகமாகத் துடித்தது. நேற்று அந்தப் பறவை கிடந்த இடத்தை நெருங்கியபோது நான் நடையை மெதுவாக்கினேன். புற்கள் அசைந்தன, ஒரு கணம் மூச்சே நின்றுவிட்டது.
அங்கே அந்தப் பறவை இருந்தது. ஆனால் நேற்று இருந்த நிலையில் இல்லை. அது தலையை உயர்த்தியிருந்தது. சிறகை மெதுவாக விரித்துப் பார்த்தது. காயம் இருந்த இடத்தில் உலர்ந்த ரத்தத்தின் தடம் தெரிந்தது. என்னைப் பார்த்ததும் அது அசைந்தது. நான் அங்கேயே நின்றுவிட்டேன். நீ இன்னும் உயிரோடுதானா என்று என்னையறியாமல் என் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வந்தன.
அது பதில் சொல்லவில்லை. ஆனால் மெதுவாகச் சிறகை விரித்து, அருகிலிருந்த நீரின் விளிம்புக்கே சென்றது. ஒரு கணம் தயங்கி, பின்னர் சிறகுகளை வேகமாக அடித்தது. முதலில் அது தரையிலிருந்து சில அங்குலங்கள் மட்டுமே உயர்ந்தது, மீண்டும் கீழே இறங்கியது, மீண்டும் முயன்றது. இந்த முறை சற்றே உயர்ந்தது. மூன்றாவது முயற்சியில் அது வாய்க்காலின் மறுபுறம் இருந்த மரக்கிளையைத் தொட்டது.
நான் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் சிறகுகள் இன்னும் பலவீனமாக இருந்தன, ஆனால் உயிர் அதற்குள் இருந்தது. வாழ வேண்டும் என்ற பிடிவாதமும் இருந்தது. சிறிது நேரம் கிளையில் அமர்ந்திருந்த அது, திடீரென மீண்டும் சிறகுகளை விரித்தது. இந்த முறை அது பறந்தது. வளைந்து நெளிந்த அந்தக் கிராமச் சாலையின் மேல், மரங்களின் உச்சியைத் தாண்டி, நீல வானத்தை நோக்கி அது மெதுவாக உயர்ந்து சென்றது.
என் கண்கள் ஈரமாகின. நேற்று நான் செய்யத் தயங்கியதை இயற்கையே செய்துவிட்டது. நான் அதைக் காப்பாற்றவில்லை, ஆனால் அது தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டது. அந்தக் கணத்தில் என் மனத்தில் ஒரு விசித்திரமான அமைதி பிறந்தது. நான் நேற்று தோற்ற மனிதன் அல்ல என்று எனக்கே தோன்றியது. ஏனெனில், குறைந்தபட்சம் இன்று, நான் அந்த உயிரை விட்டுவிட்டு நடந்து செல்லவில்லை. நான் நின்றேன், பார்த்தேன், அதன் உயிர்ப்பை உணர்ந்தேன். அது போதுமா? எனக்குத் தெரியவில்லை.
ஆனால் அந்த நாளிலிருந்து, என் கண்முன்னே உதவியற்ற நிலையில் கிடக்கும் ஓர் உயிரைப் பார்த்தால், எனக்கு என்ன பிரச்சினை என்று முதலில் கேட்பதற்குப் பதிலாக, என்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.
அன்று அந்தப் பறவையின் காயம் மட்டும் ஆறவில்லை, என் மனசாட்சியிலும் ஒரு காயம் ஆறத் தொடங்கியது. பச்சாதாபம் என்பது பிற உயிர்களின் வலியைப் பார்த்து வருந்துவது மட்டும் அல்ல, அந்த வலியை நம்முடையதாக உணர்ந்து முடிந்தவரை அதைக் குறைக்க முன்வருவதுதான் உண்மையான மனிதநேயம். அன்று நான் ஒரு பறவையைக் காப்பாற்றவில்லை, ஆனால் அந்தப் பறவை என்னைக் காப்பாற்றியது. என்னுள் மெதுவாக இறந்து கொண்டிருந்த மனிதநேயத்தை அது மீட்டெடுத்தது. அது சிறகடித்துப் பறந்தபோது, என் மனத்திலும் பச்சாதாபம் சிறகடித்தது.
ஜமீல்
- அம்மாவின் கைகளுக்கு மூப்பில்லை.
- தீபாவளியில் இன்று
- 2025 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள்
- 80களில் “தீபாவளி”எப்படி தான் இருந்தது….
- விடை பெற்று விட்டாயா, நண்பனே?
- பச்சாதாபம்
- உம்மாச்சி
- கணபலி -திருவையாற்று வேள்வியில் பிறந்த அகப்பெருங்கவிதை
- புருஷலட்சணம்.
- விளையும் பயிர் முளையிலே
- எண்ணம் மாறுபட என்ன காரணம்?
- வெற்றிடம்
- கடைசி மணியும் முதல் வரியும்
- 6.மாவடு கண்ணல்லவோ