This entry is part 8 of 14 in the series 8 நவம்பர் 2026

வே. நாராயணசுவாமி

ஒன்று – புகை

குடமலைப் பிறந்த குணகடற் காவிரி,
மருதமர் திருவையாற்று மணித்துறை தழீஇ,
இளவேனில் வாயிலின் இளங்கதிர் நுழைய,
புள்ளுறை பொழில்வாய் புதுக்குரல் ஒடுங்க,
வெள்ளிளம் புகையும் வெய்யோன் ஒளியும்
ஒன்றிய கொடியென விண்ணிடை நெளிய,
தருப்புறு முன்றில் தழல்நா நிமிர்ந்து,
நறுநெய் மழையுண்டு நாநிறம் பூண்டு,
ஞாலமே அவியென நக்கிற்றோர் வேள்வி.

ஒருநா எழுப்பிய தொன்மறை வெள்ளம்,
பலநா தொடர்ந்து பரந்தெழு பொழிவாய்,
மண்ணுறை வேரையும் வானுறை முகட்டையும்
காணரு நூலாற்க் கட்டியது போல,
எழுந்தும் தாழ்ந்தும் இசைந்தும் வளைந்தும்,
சொல்லிடைத் தோன்றிய தொன்மை மௌனத்தால்
சொல்லையே பலியெனச் சுட்டது சாலை.

ஆற்றுநீர் ஓடிற்று; அழல்நா ஆடிற்று;
காற்றது ஊதக் கனற்பசி நீள,
வார்நெய் அவியொடு வானவர் பெயர்கள்
ஒன்றொன்றாய் வீழ்ந்து ஒருநிறம் ஆயின.

பெயருடன் வீழ்ந்தவை புகையாக எழுந்தன;
புகையினுள் பெயர்களின் பேதங்கள் அழிந்தன;
இடுவோன், ஏற்போன், இடுபொருள் மூன்றையும்
ஒருநா விழுங்கி ஒளியொன்றாய் நின்றது.

புறத்தொரு குண்டம் பொலிந்தது கண்டேன்;
அகத்தொரு குண்டம் அறிந்திலேன் அன்றே.

இரண்டு – வரவு

புழுதிவாய் திறந்த புறநெறி மருங்கின்
குறுநடை நிரைகள் கொட்டிலுள் போந்தன;
வெண்மயிர் சிலவும் கருந்தழும்புச் சிலவும்,
செங்கதிர் படர்ந்த சிறுமேனி சிலவும்,
முகர்நுனி உயர்த்தி முன்பனி நுகர்ந்து,
அறியாத் தடத்தினில் அடியடி பெயர்ந்தன.

பைந்தழை நீட்டினர்; பசும்புல் பரப்பினர்;
காய்கனி காட்டினர்; கனிவுரை கூறினர்;
மணமிகு தளிரால் மருங்குற அழைத்து,
இன்னுண வூட்டி இறுநெறி உய்த்தனர்.

நாவினைப் பற்றிய நறுந்தழை முன்னே;
நாளினைப் பற்றிய நாண்கயிற் பின்னே.

மஞ்சள் அப்பினர்; மலரணி சூட்டினர்;
செந்நிறக் குறியினைச் சென்னியில் தீட்டி,
நிறைகல நீரினை நெற்றிமேல் தெளித்து,
மறையொலி வளைவினுள் மந்தையை நிறுத்தினர்.

மலர்மணம் வீச மஞ்சளும் மணக்க;
மணமிலா முடிவொன்று மருங்குற நின்றது.

கழுத்துறு பிணிப்பில் கதுப்பு நெரிந்தது;
கனற்புகை மூக்கினைத் தொட்டு அலைத்தது;
குளம்பிணை புழுதியைக் குறுகுறுத் துழாவின;
குறுமூச்சு வயிற்றலை கூட்டித் தணிந்தது;
வாயிடைத் தழையொன்று மண்ணிடை வீழ்ந்தது;
கொம்பணி மலரொன்று கூம்பித் தளர்ந்தது.

சூழ்ந்தவர் முகங்களை ஒவ்வொன்றாய் அளந்து,
சுடரெழு குண்டத்தைச் சிறுபொழுது நோக்கி,
கால்களை மடக்கியே கனலருகமர்ந்தது;
மேனியின் அசைவுகள் மெல்லென ஓய்ந்தன;
விழியிரண் டொன்றையும் பற்றாது நின்றன.

காப்பினைக் கெஞ்சிய கலங்கு நோக்கன்று;
கூற்றினை வெறுத்துக் குமுறு நோக்கன்று;
விருப்பினைப் பற்றிய விழைவு நோக்கன்று;
வெறுப்பினால் உலகினை விலக்கு நோக்கன்று.

வரவையும் செலவையும் ஒருவெளி கண்ட
இமைப்பிலா அமைதியின் எச்சமாய் நின்றது.

யாம் கடாவைக் கண்டனம் அங்கே;
அவ்விழி எம்முள் காணா தொன்றளந்தது.

கடாவெனப் புறத்தே காணப்பட்ட அதுவே
கண்ணொளி மீளக் காண்போனை நோக்கிற்று;
பொருளென நின்றது பார்ப்பவனே ஆக,
பொருளாக்கும் பார்வை பொடிந்தது அங்கே.

மூன்று – திரை

மணியொலி எழுந்தது; மறையொலி சூழ்ந்தது;
திசைதொழு கரங்கள் தீமுகம் சேர்ந்தன;
நீர்த்துளி வீழ்ந்தது; நெடுங்காற்று நின்றது;
மலரணி சிறிதே மருங்குற அசைந்தது.

கண்ணிமை தாழ்ந்தது; கருமம் எழுந்தது;
காலம் தன் காலைக் கழற்றியது போல,
ஓடும் காவிரி ஓசையும் ஒடுங்க,
ஆடும் சுடரின் அசைவும் உறைந்தது.

திரையொன்று வீழ்ந்தது.

துகிலன்று;
புகையன்று;
காண்பவன் கண்ணின் கடைச்சுவர் அது.

திரையின் இப்புறம் திரண்டவர் நின்றார்;
அப்புறம் நின்றதை அறிந்திலர் யாரும்.

முன்னின்ற மேனி பின்னின்ற தில்லை;
முன்னின்ற பார்வை முடிந்ததும் இல்லை.

பெயருரு வேற்றுமை பேணிய அகவிழி
அவ்விழி முன்பே அடியொடு தளர்ந்தது;
காண்போன், காண்பொருள் எனும் இரு கரையும்
நீள்நோக் கொன்றினுள் நிழலென ஒடுங்கின.

கழுவிய கரங்கள் கலங்களை ஏந்த,
பகுத்த கூறுகள் பசுநெய் தோய்ந்து,
மறைபெயர் சூடி மலரழல் புகுந்தன.

உள்ளுறைத் துடிப்பும் ஊட்டத்தின் வழியும்,
செந்நிறச் செறிவும் சுருள்நெறிக் கூறும்,
பிறப்பொடு பிணைந்த பெருமறைப் பொருளும்
ஒன்றொன்றாய் வீழ்ந்து ஒருபுகை ஆயின.

பெயருடன் வீழ்ந்தன; பெயரற்று மீண்டன;
வேறு வேறெனப்பட்டு வெவ்வழி சென்றன;
மேலெழு புகையுள் வேற்றுமை காணேன்.

இடுவோன் வேறென, ஏற்போன் வேறென,
இடுபொருள் வேறென இயம்பினர் அங்கே;
மூன்றையும் ஒருநா முற்ற விழுங்கித்
தழலது சிரித்தது; மொழியொன்றும் இல்லாது.

அறுத்தது கரமோ?
அறுபட்டது மேனியோ?
இரண்டெனப் பிரித்த பெயர்தானோ அங்கே?

குருதி துடைத்தனர் மாந்தர்;

நான்கு – சோமம்

கணுவுடைக் கொடியைக் கல்லிடை வைத்து,
நீர்தர நெகிழ்த்தி நெரித்தனர் மறையோர்;
ஒருமுறை பிழிந்தும் உறுசாறு எஞ்ச,
மறுமுறை பிழிந்தும் மணித்துளி எய்தி,
மூன்றாம் நெருக்கில் மூச்சறும் நாரின்
இறுதித் துளியையும் இழந்திடச் செய்தனர்.

கருமயிர் வடிகலன் கசிதரப் புகுந்து,
மங்கிய பசுஞ்சாறு மணிநிறம் பெற்றது;
பாலொடு படர்ந்தது; பழந்தயிர் தழீஇயது;
நீரொடு மெலிந்தது; நிறைபல கொண்டது.

ஒருகலம் வாய்க்கு; ஒருகலம் தீக்கு;
ஒருகலம் தேவர்க்கு; ஒருகலம் தேவிக்கு;
கணங்களும் துணையும் கலந்துணும் வண்ணம்
மறைமுறை கூறி வகுத்தனர் சோமம்.

அருந்தினர் மறையோர்; அழலும் அருந்திற்று;
வானமும் புகையாய் வாங்குதல் செய்தது.

பிரண்டையின் கடுஞ்சுவைப் பிழிவென நாவில்
கசப்பொடு துவர்ப்புக் கனன்றது சாறு;
கல்லிடைக் கொடியினும் கடிதென நெஞ்சைக்
கடாவின் நோக்கே நெரித்தது மெல்ல.

கொடிக்குள் சோமம்;
சோமத்துள் மதி;
மதிக்குள் நிழல்;
நிழலுக்குள் பார்வை;
பார்வைக்குள் பார்த்தவன்
பலியென நின்றான்.

கலம் வற்றிற்று;
கல்லொலி ஓய்ந்தது;
வற்றாத ஒன்றது
விழியிடை நின்றது.

ஐந்து – கணபலி

கடாவிற்கு அக்கணம்; எமக்கெது நாழிகை?
அதற்கழல் முன்னே; எமக்குக் கூற்றெங்கே?
அதனுடல் போவதை அருகிருந்து கண்டோம்;
எம்மெய் போவதை இமைப்பினுள் மறந்தோம்.

அதற்கது கண பலி என்றனர் மாந்தர்;
எமக்கிது நெடும்பலி என்றிடல் கூடுமோ?
கணமும் நெடிதும் கருத்தள வல்லது;
கூற்றுவன் வருதற்குக் காலவரை உண்டோ?

ஆட்டினை அறுத்தது அரிவாளோ அன்று;
“ஆடு” எனப் பிரித்த அறிவே அறுத்தது;
காண்பவன் தன்னை வேறென நிறுத்திய
பிரிவெனும் திரையே கடும்பலி கொண்டது.

அத்திரை கிழிந்த அக்கணந் தன்னில்
அறுப்போன், அறுபடுவோன், ஆற்றாது நோக்குவோன்,
ஏற்போன், இடுபொருள் என்றெழு பெயர்கள்
ஒருதழல் நாவினுள் உருவறியாதாயின.

ஆட்டின் கண பலி அக்கணம் முடிந்தது;
“யான்” எனும் பலியோ அக்கணம் தொடங்கிற்று.

எவ்வுயிர்க் கண்ணும் செந்தண்மை பூண்டொழுகல்
அந்தணர் இயல்பென அறமுரை கூறிற்று;
அவ்வுயிர் ஒன்றை அவியென நிறுத்தின்,
அவ்வறம் எங்கே? அருளெங்கே அங்கே?

அறவாழி தாளின்றிப் பிறவாழி அரிதெனில்,
பிறவுயிர் வேறெனப் பிரித்ததே பிறவியாம்;
ஆத்மாவை உணரா ஒவ்வொரு கணமும்
அறியாமைத் தீயினில் கண பலி தானே.

“யான்” எனும் விருத்தி; “எனது” எனும் பற்று;
ஒன்றினைத் தொடர்ந்தே மற்றொன்று எழுந்தது;
கடாவிழி வீச்சில் இரண்டும் நிலைகுலைந்து,
இரண்டுமே அகவேள்வி அவியென வீழ்ந்தன.

“யான்” ஒடுங்கியபின் “எனது” எங்கு நிற்கும்?
பெயருரு வேற்றுமை எவ்விடம் தோன்றும்?
பார்ப்பவன் தானும் பார்வையுள் ஒடுங்க,
பார்வை மட்டும் பரந்தது முடிவிலியே.


பிறவுயிர் தன்னில் பேருயிர் கண்டபின்,
பலியெனப் பிறிதொன்று நிற்பதும் உண்டோ?
புறத்துயிர் அன்று புகையிட வேண்டியது;
“யான்”, “எனது” எனும் இருவிருத்தியே அவி.

பிறந்தவை இறக்கு மென்றுரைத்தனர் கற்றோர்;
பிறந்திலர் போலவே பெருநாள் வகுத்தனர்;
அடுத்ததோர் மூச்சினை ஆள்வதுபோல் நாமும்
ஆயிரம் நாளுக்கு அரண்களை எழுப்பினோம்.

நோயென வரலாம்; நொடிப்பொழு தெனலாம்;
தீயென வரலாம்; திரையென வரலாம்;
துயிலிடை வரலாம்; தொழிலிடை வரலாம்;
வரும்வழி கூறாது வருவதே கூற்று.

கருவறை வாயிலில் ஒருதிரை திறக்கும்;
ஈமவாய் நெருங்க மறுதிரை மூடும்;
திறப்பதும் மூடலும் அரங்கின் இருகை;
திரையிடை நடந்ததை வாழ்க்கை யென்றுரைத்தோம்.

பிறப்பினில் திறந்தனர் பெயர்பூண் பெட்டியை;
பெயரொன்றை அணிவித்துப் பேணினர் சுற்றம்;
மெய்த்துகில் வளர்ந்தது; மெலிந்தது; மாறிற்று;
மேவிய உறவெல்லாம் மேல்வேடம் ஆயின.

மகவெனத் தோன்றி, மைந்தனென வளர்ந்து,
தந்தையாய் நின்று, தளர்முதுமை எய்தி,
ஒருகூத்தின் உள்ளே ஒருவனே தன்னைப்
பலகோலம் புனைந்து பழகினன் போல.

வேடம் கழன்றது; ஆடுவோன் கழிந்தானோ?
துகிலது வீழ்ந்தது; தொன்முதல் வீழ்ந்ததோ?
திரையது மூடியது; திறந்தவெளி மூடுமோ?
பெயரது நீங்கிற்று; பெயரிலி நீங்குமோ?

ஒருநோக்கு பல்விழி ஒளிவழி வந்ததோ?
ஒருயிர் பலமெய்யின் உள்வழி நடந்ததோ?
கடாவுரு வாயிலிற் கணப்பொழுது தோன்றி,
பிறப்பிலா நினைவொன்று பிறந்ததோ என்னுள்?

முதற்சுவாசம் தன்னில் முழங்காத செய்தியும்,
மழலைக்கண் ஆழத்தில் மறைந்திருந்த ஒளியும்,
“வருவது புதிதன்று; போவது முடிவன்று”
என்றுரை யில்லாமல் எடுத்துணர்த் தினவோ?

பிறப்பின் புதுமையில் பிறப்பிலா ஒன்றின்
மெல்லிய நினைவொன்று மின்னுதல் உண்டோ?
இறப்பின் இருளிலும் இறவாத ஒன்றின்
எச்சமொன்று இயல்பாய் ஒளிர்ந்ததுவோ?

பிறப்பினை வரவெனப் பேணினர் சுற்றம்;
இறப்பினைச் செலவென இரங்கினர் சுற்றம்;
வந்தது எங்கிருந்து? சென்றது எவ்விடம்?
வழியறி யாதவர் வரவுசெலவு வகுத்தார்.

அலைமிசை நுரைபிறந்து அகன்றிடும் பொழுதில்
ஆழி பிறப்பதும் அழிவதும் உண்டோ?
மரமிசை இலைவந்து மண்ணிடை வீழ்ந்தால்
மண்ணுயிர் குறைவதும் மரணமும் உண்டோ?

ஆயினும் உடல்வலி அருவுரை அன்றே;
அவசமுறு மூச்சும் அஞ்சலும் பொய்யன்றே;
மெய்யெனும் பெயரால் மேனியை மறுத்தால்
உயிருறு துயரத்தை உணர்ந்தது எங்கே?

அறிந்ததோ கடா?
அறியாது துயின்றதோ?
எதிர்வரும் கணத்தை எதிராது இருந்ததோ?

நேற்றினைப் பற்றாது நாளையும் வேண்டாது,
இப்பொழு தென்னும் இடமிலா வெளியில்
இருப்பதே முற்றென இருந்தது போல.

ஆறு – அகவேள்வி

என் கண்ணே சமித்தெனக் காட்சிகள் சுமந்தது;
என் செவியே சமித்தென இசையெலாம் சுமந்தது;
என் மூக்கே சமித்தென மணமெலாம் சுமந்தது;
என் நாவே அவியென அறுசுவை சுமந்தது;
என் மெய்யே நெய்யெனத் தீண்டலைச் சுமந்தது.

ஐம்பொறி விறகால் அகத்தழல் கனன்று,
அகன்ற நனவினை அவியென விழுங்கிற்று.

மூச்செனும் வாயு முறையற வீச,
உணவெனும் அவியை உட்குண்டம் பெய்ய,
மனமெனும் செந்தீ மாநிலம் அனைத்தையும்
பகலெனத் தோற்றிப் பற்றியுண்ண,

பொன்னொரு சமித்து; புகழொரு நெய்யே;
பதவியோர் அவி; புலமையோர் சோமம்;
புலனின்பப் புகையால் புறமெலாம் மூட,
காலமே பலியாய்க் கனலிடை வீழ்ந்தது.

ஒருகயிற் பூண்ட கடாவினைச் சூழ்ந்த
கண்ணுக்குப் புலப்படாக் கயிற்றினில் நிரைநாம்.

ஊதியம் பைந்தழை;
உயர்வு பழங்கனி;
பட்டம் மலரணி;
பாராட்டு மஞ்சள்;
செல்வம் செங்குறி;
செருக்கொரு மந்திரம்.

அவற்றின் மணத்தால் அணுகினோம் குண்டம்.

அதன் கழுத்தைக் கண்டு அழுதது என்கண்;
அதன் விழி கண்டது என் கழுத்துப் பாசம்.

அதன் கயிறு புறத்தே; எனதுகயிற் அகத்தே;
அதன் தழை வாயிலே; எனதுதழை நாளையே;
அதன் பலி கணத்தில்; எனதுபலி நாள்தோறும்;
அதற்கோர் குண்டம்; எனக்குலகே குண்டம்.

அதற்காய் நொந்தேனோ?
எனக்காய் நொந்தேனோ?

இருவினா இடையிலென் மௌனம் எரிந்தது.

கொட்டிலே கூத்தரங்கு; கொழுந்தழல் விளக்கு;
மறையுளோர் தத்தம் முறைத்தொழில் ஆட,
மலர்புனை கடாவும் பலியுருப் பூண,
காணவந்த யாமும் பார்ப்பவர் கோலம் கொண்டோம்.

அறுப்போன் கரத்துக்கு ஆற்றுவேடம் அமைந்தது;
அறுபடும் உயிர்க்குப் பலிக்கோலம் புனைந்தது;
இரங்குவோன் நெஞ்சுக்கு இடர்வேடம் வாய்த்தது;
ஏற்போன் எனப்பட்ட இறைக்கோலம் எழுந்தது.

கைவினை வேற்றுமை காட்டியது வேடம்;
மெய்யுருத் தோற்றத்தை விளக்கியது கோலம்;
வேடமும் கோலமும் வினையொடு பிணைந்து
நிகழ்வுற விரிந்தது நெடுங்கூத்து ஆங்கே.

அறுப்போன், அறுபடுவோன், ஆற்றாது நோக்குவோன்,
ஏற்போன் எனப்பட்ட எல்லைகள் மாற,
ஏற்ற வேடந்தனை இயல்பெனக் கொண்டவர்
நடுவே வேடமிலா நோக்கொன்று விழித்தது.

கடாவெனும் கோலம் கணப்பொழுது நீங்கின்,
அதன்வழி நோக்கியது அழிந்திடுமோ ஆங்கே?
யானெனும் கோலம் யாக்கையொடு வீழின்,
என்னூடு நோக்கியது எவ்வழி ஏகுமோ?

மகவெனும் கோலம்; மைந்தனெனும் கோலம்;
தந்தையென் கோலம்; தளர்முதுக் கோலம்;
தலைவனென் வேடம்; தாழ்ந்தோன் வேடம்;
இரவலன் வேடம்; ஈவோனின் வேடம்.

கோலங்கள் மாறின; குறித்தபெயர் மாறின;
வேடங்கள் மாறின; வினைமுறை மாறின;
அவற்றினூ டொழுகிய அறியொணா நோக்கோ
விழியொறும் விழியொறும் வேறுருக் கொண்டது.

கடாவின் விழியெனக் கணப்பொழுது தோன்றி,
என்விழி வழியென எதிர்ப்புறம் மீண்டு,
இரண்டிற்கும் உரியதன் றென்பதுபோல
இருமையின் இடைச்சுவர் இற்றது மெல்ல.

வேடம் கழன்றபின் ஆடுநன் எவனோ?
கோலம் அழிந்தபின் கூத்தன் எவனோ?
காண்பவன் அகன்றபின் காண்பொருள் எதுவோ?
காட்சிக்கும் முன்னின்ற கண்ணுறா ஒளியெதுவோ?

திரையிற் பிறந்தன சிறுபெயர் உருவங்கள்;
திரையிடை நடந்தன செறிவினைக் கதைகள்;
திரையுற மறைந்தன திண்ணுடல் கோலங்கள்;
திரைக்குமுன் நின்றதும் திரைக்குப்பின் நின்றதும்
அரங்கினும் அகன்றதோர் அறியொணா நோக்கு.

இடுகரம் தானே; இடுபொருள் தானே;
எரிவாய் தானே; எரிப்பதும் தானே;
நெய்யெனப் பெய்ததும் நிறைபொருள் தானே;
நெய்யினை ஏற்ற நெருப்பதும் தானே;
அவியென வீழ்ந்ததும், அவியினை ஏற்றதும்,
அவியுறு வேள்வியின் அமைதியும் தானே.

கொடுப்பதும் கொள்வதும் குறித்தபெயர் நீங்க,
இடுவோன், ஏற்போன், இடுபொருள் மூன்றும்
ஒருசுடர் நாவின் வளைவென ஒடுங்கி,
செல்பவன், செல்நெறி, சேர்பொருள் மூன்றும்
திசையற்ற ஒன்றின் திருநிறை ஆயின.

வேள்வியும் அதுவே; வேள்விசெய்வோன் அதுவே;
வேள்வியின் அவியும், விளைபயன் அதுவே;
“அது” எனச் சுட்டிய அறிவதும் அவியாய்,
சுட்டுவோன் தானும் சுடுபலி ஆனான்.

கொடுப்பவன், கொள்பவன், கொடைப்பொருள் மூன்றும்
கொழுந்தின் ஒருநா வளைவெனத் தோன்றி,
எழுந்தும் விழுந்தும் எரிந்தும் மறைந்தன.

உண்போனும் உணவும் உண்டலும் ஒன்றாய்,
காண்போனும் காட்சியும் காண்பதும் ஒன்றாய்,
பெயரிடும் முன்னே பெயரிலி நின்றது.

ஏழு – பார்வை

மாலைக் கதிர் மருதிடை மறைய,
வேள்விப் புகையும் விண்ணிடை மெலிய,
கலங்களும் கரங்களும் கடைவழி நீங்க,
கருஞ்சாம்பல் நடுவே கண்சுடர் நின்றது.

தணிந்தன தழல்கள்; தணியாத கனலொன்று
கண் வடிவாகக் கருமையுள் ஒளிர்ந்தது;
காற்றது தீண்டக் கனலொளி அசைய,
கடாவின் நீள்நோக்கு மீண்டதோ அங்கே?

அணுகக் குனிந்தேன்;
அணுகாது நின்றேன்.

எனக்கும் கனலுக்கும் இடையுறை வெளியில்
இமைப்பிலா நீள்நோக்கு எழுந்தது மீண்டும்;
சாம்பலின் சுடரோ? சான்றுயிர்க் கண்ணோ?
காண்பானோடு கண்சுடர் ஒளிர்ந்தது.

மழலைநாள் விழியுள் மறந்தொளி போலவும்,
இறுதிநாள் இருளில் எழுமொளி போலவும்,
வருவதன் முன்னும் போவதன் பின்னும்
ஒருபடி நீங்காது உடனுறை தொன்மை
கடாவின் கண்ணெனக் கணப்பொழுது திறந்தது.

அவ்விழி அதற்கன்று; எனக்கன்று; யார்க்கும்
உரிமையாய் நில்லா உருவிலா வாயில்;
உருவொறும் புகுந்தும் உருவொடும் போகா,
பெயரொறும் தோன்றியும் பெயரொடும் சாயா,
தெய்வமென் றோதுமுன் திசையிலா ஒளியது.

கண்டது கடாவோ? கடாவழி கண்டதோ?
கண்டவன் யானோ? என்னூடு கண்டதோ?
கண்ணெனும் கருவியும் காட்சியும் மாய,
காண்பதே தன்னைக் கண்டதோ அங்கே?

கடாவென்ற பெயர்க்குக் கட்டுண்ட தன்றது;
யானென்ற பெயர்க்கும் இயைந்து நின்றதன்றது;
விழியிரு வாயிலுள் வெளியாகித் தோன்றி,
வழியினைத் தானே விழுங்கிற்று பார்வை.

மஞ்சளும் இல்லை;
மலரணி இல்லை;
செந்நிறக் குறியும் சிறிதும் அங்கில்லை;
கயிறும் இல்லை;
கழுத்தும் இல்லை;

காண்பது மட்டும்.

அப்பார்வை கடாவின் உரிமையோ அறியேன்;
என்னுடை நோக்கே எதிர்வந்ததோ அறியேன்;
காண்பதும் காணப்படுவதும் இடையில்
காற்றினும் நுண்ணிய கதவொன்று திறந்தது.

கடாவினைக் காணும் கண்கள் எனதென்றேன்;
கடாவிழி மீண்டு எனையே கண்டது;
கண்டதும் காண்பதும் காண்போனும் மூன்றும்
அந்நோக் கினுள்ளே அடங்கின அன்றே.

பெயரெனப் பூண்டது பெயரற்று வீழ்ந்தது;
உருவென நின்றது ஒளியினுள் ஒடுங்கியது;
வேறெனக் காட்டிய விழிப்புணர் வெல்லாம்
வேற்றுமை கரைக்கும் பார்வையில் தணிந்தது.

கடாவென அதனைக் கண்டனர் அவையோர்;
கடாக்களாய் அவையோரைக் கண்டதோ அவ்விழி?

பெயர்களை முகமெனப் பேணிய மாந்தரும்,
மேனியைத் தாமென மெய்ப்பித்த மாந்தரும்,
தாம் புனை வேடத்தைத் தம்மெனக் கொண்டு,
நாடொறும் தம்மையே நாடொறும் இழந்தார்.

ஒருபலி தானென உலகவர் கருத,
உலகமே பலியென ஒருகணம் திறந்தது.

உரையாது உரைத்து,
குறியாது குறித்து,
இமைப்பிலா நோக்கால்
எம்மையே அறுத்தது.

இறையென அழைத்ததும் இறுதியோர் அவியே;
ஆன்மா எனச்சுட்ட அச்சொல்லும் அவியே;
ஒன்றென உணர்ந்த உணர்வதும் அவியே;
உணர்ந்தவன் தானும் இறுதியோர் அவியே.

பெயரெலாம் வீழ்ந்தன; புகையதும் எழாஅது;
விருப்பும் வெறுப்பும் விளிம்பறக் கரைந்தன;
பிறப்பும் இறப்பும் பெயரிழந் தொழிந்தன;
காண்பவன் கண்ணும் காணப்படும் பொருளும்
நீர்மிசை நிழல்போல் நிலையின்றி ஒழிந்தன.

பெயர்பூண் உதிர்ந்தது; மெய்த்துகில் வீழ்ந்தது;
பிறப்பிறப் பரப்பின் பெருந்திரை தாழ்ந்தது;
காண்பவன், ஆடுவோன், காண்பொருள், அரங்கம்
நான்குமே தத்தம் பெயர்கள் இழந்தன.

கடாவெனும் கோலம் கழன்றதெக் கணமோ,
யானெனும் கோலம் எழுந்ததக் கணமே;
ஒன்றினை நோக்கிய மற்றொன்றின் நிலையென
நின்ற இருமையும் நீர்நிழல் ஆயிற்று.

காவிரி ஏகிற்றுக் கரையிரண் டறியாது;
காலமும் ஏகிற்றுத் திசையிரண் டறியாது;
யானெனும் வேடம் யார்மிசை வீழ்ந்ததோ?
கடாவெனும் கோலம் யார்மிசை நீங்கியதோ?

திரைமுகம் மூடியும் தீர்ந்திலது கூத்து;
கூத்தரும் கோலமும் குறித்திடம் நீங்க,
அரங்கென ஒன்றும் அறியொணா கணத்தில்
எவர்க்கும் உரியதல்லா விழிப்பொன்று எங்கணும் ஆயிற்று.

கணமெனத் தோன்றிய காலமும் வீழ்ந்தது;
பலியென நின்ற பேதமும் வீழ்ந்தது;
யானெனும் விருத்தியும் எனதெனும் பற்றும் ஒடுங்கின;
காண்பதொன்றே நின்றது; முடிவிலியே.

Series Navigationஉம்மாச்சி புருஷலட்சணம்.