This entry is part 10 of 14 in the series 8 நவம்பர் 2026

சுந்தர மணிவண்ணன்

புரோகிதர் மாமாவுடன் வந்த இளைஞன், என்னைப் பார்த்ததும் என் கால்களைத் தொட்டு நமஸ்காரம் செய்தான்.

“சார், என்னை ஞாபகம் இருக்கா?” என்றான்.

சற்று நேரம் நிதானித்து நினைத்துப் பார்த்தேன்.

“நீ கோவிந்தன் தானே?” என்றேன் என் நினைவினைத் தொட்டு.

அவன் முகத்தில் பொங்கி எழுந்த மகிழ்ச்சி, என் நினைவுகளை வருடியது.

புரோகிதர் மாமாவுக்கு அவன் நெருக்கமானவன். என் சதாபிஷேகத்தை முன்னிட்டு வேத பாராயணம் நடக்கிறது என்று அவர் சொன்னதும், சம்பாவனை எதுவும் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் வருவதற்கு அவரிடம் அனுமதி கேட்டதாகச் சொன்னான்.

அவனை அணைத்துக் கொண்டேன். என் மனம் பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வை நினைத்து, அந்த மாலைக்குத் திரும்பியது.

அன்று மாலை நான்கு மணியளவில், வேத பாடசாலையில் இருந்த பிள்ளைகளுக்குக் கோசாலையில் கறந்து வந்த பாலைக் காய்ச்சிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது சன்னமான குரலில், “சார்” என்று யாரோ அழைக்க, திரும்பிப் பார்த்தேன். சோர்வும் ஏக்கமும் கலந்த முகத்துடன் ஒரு பெண்மணி நின்றிருந்தாள். அவளுடன் பால் மணம் மாறாத சிறுவனும் நின்றிருந்தான்.

“யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்றேன்.

“இவன் என் பையன். பாடசாலையில் சேர்க்க வேண்டும்” என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

“பையனுக்கு என்ன வயசு?” என்றேன்.

“நாலரை” என்றாள்.

விதிமுறைப்படி ஏழு வயதான பிறகே பாடசாலையில் சேர்க்க முடியும். உபநயனம் ஆன பிறகுதான் வேதம் கற்க முடியும் என்பதை விளக்கிவிட்டு, நிர்வாகியைப் பார்க்கச் சொன்னேன்.

சற்று நேரத்தில் நிர்வாகியிடமிருந்து அழைப்பு வந்தது.

“குழந்தையை இப்போதே சேர்த்துக்கொள்ளலாம். ஐந்து வயதில் உபநயனம் செய்வோம். அதுவரை உங்கள் பொறுப்பில் கவனித்துக் கொள்ளுங்கள்” என்றார்.

எனக்குள் தயக்கம் எழுந்தது. இவ்வளவு சிறு குழந்தையை எப்படிச் சமாளிப்பேன்? இரவில் அம்மா என்று அழுதால் என்ன செய்வேன்? இருந்தாலும் சம்மதித்தேன்.

அந்த அம்மாவிடம் முகவரியும் ஃபோன் எண்ணும் கேட்டேன். விருத்தாசலம் அருகிலுள்ள கிராமத்தின் பெயரை மட்டும் சொன்னாள். தன்னிடம் ஃபோன் எதுவும் இல்லை என்றாள்.

குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு, எங்கள் மனம் மாறிவிடுமோ என்ற பயத்தில் விரைவாக அங்கிருந்து மறைந்துவிட்டாள்.

குழந்தை முதல் சில நிமிடங்கள் அங்கிருந்த சூழலைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். சிறிது நேரத்தில் மற்ற பிள்ளைகளுடன் விளையாட்டில் கலந்து கொண்டான்.

இரவில் பணிக்கு வரும் வார்டன் இரண்டு வார விடுமுறையில் சென்றிருந்ததால், அவனைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஒரு சீனியர் மாணவனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றேன். இரவு முழுவதும் அவன் நினைவாகவே இருந்தேன்.

காலையில் வந்தபோது, அந்த சீனியர் மாணவன் என்னை நோக்கி ஓடி வந்து சொன்னான்:

“சார், கோவிந்தன் ரொம்ப சமர்த்தா இருந்தான். இரவில் இரண்டு முறை எழுந்தான். ஆனால் சத்தமில்லை. காலையில் எழுந்ததும் தானே பல் துலக்கிக் கொண்டு, குளித்துவிட்டு, ஓரமாக உட்கார்ந்திருந்தான்.”

கோவிந்தன் என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டான். அந்த அணைப்பில் ஒரு நம்பிக்கை இருந்தது.

ஒருநாள் அவனைத் திடீரெனக் காணவில்லை. தேடிப் பார்த்தபோது, கோசாலையில் ஒரு கன்றுக்குட்டிக்குப் புல் கொடுத்து, அதைத் தழுவிக் கொண்டிருந்தான்.

“மாடு முட்டும். இங்கே வராதே” என்றேன்.

“என்னை எந்த மாடும் முட்டாது” என்று பயமின்றிச் சொன்னான்.

அவனுடைய தைரியமும் துறுதுறுப்பும் எல்லோரையும் கவர்ந்தன.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவன் அம்மா பாடசாலைக்குத் தொலைபேசியில் அழைத்தாள்.

“கோவிந்தன் எப்படி இருக்கான் சார்?” அவள் குரலில் தாயின் ஏக்கம் தெறித்தது.

“முத்தான பையன்” என்றேன்.

என் பாராட்டைக் கேட்டதும் அவள் அமைதியாகிவிட்டாள். ஆனந்தத்தில் அவள் அழுவதை என்னால் உணர முடிந்தது.

வேதப் பயிற்சி தொடங்கியபோது, கடினமான மந்திரங்களைக்கூட எளிதாக உச்சரித்தான். அவனுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்பினேன்.

ஒருநாள் ஒரு மாணவன் அழுதுகொண்டிருந்தான். அவன் அம்மா வருவதாகச் சொல்லியிருந்தும் வரவில்லை.

“நம்ம சார் இருக்கார். உங்க அம்மா வரலையேன்னு கவலைப்படாதே” என்று கோவிந்தன் அவனுக்கு ஆறுதல் சொல்லி, என்னிடம் அழைத்து வந்தான்.

“நம்ம சார் இருக்காரு” என்ற அவன் வார்த்தைகள் என் உள்ளத்தில் பதிந்தன. அந்தச் சிறு வயதிலேயே அவனிடம் தலைமைப் பண்பு மிளிரத் தொடங்கியது.

பல ஆண்டுகள் கழித்து, இன்று என் முன்னே நிற்பவன் அதே கோவிந்தன்.

“கோவிந்தா, இப்ப என்ன செய்கிறாய்?” என்றேன்.

“ஒரு Startup Software Company-ல CFO-ஆ வேலை செய்கிறேன்” என்றான்.

வேதத்தில் கனாந்தம் வரை படித்து முடித்ததும், என் ஊக்கத்தால் NIOS மூலம் பத்தாம் வகுப்பு முடித்து, பின்னர் +2, CA அனைத்தையும் முடித்ததாகச் சொன்னான்.

“அம்மா?” என்று கேட்டேன்.

“நான் வேதப் பகுதியை முழுவதுமாக முடித்ததை மகிழ்ச்சியோடு கேட்க மட்டுமே அவள் இருந்தாள். இப்போது அம்மாவின் நினைவாகப் பாடசாலைக்குத் தொடர்ந்து நன்கொடை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

பாராயணம் தொடங்கியது.

“கணானாம் த்வா…” என்ற அவன் குரல் வேதகோஷ்டியில் ஒலித்தது.

அன்று சிறு முளையாக வந்த சிறுவன், இன்று செழித்த பயிராக என் கண் முன்னே நின்றான்.

Series Navigationபுருஷலட்சணம்.எண்ணம் மாறுபட என்ன காரணம்?