பாலமுருகன்.லோ

“ஹலோ ஹரீஷ், எப்படி இருக்க? நீ அங்க போயி பல மாதங்கள் ஆச்சே! என்ன, போனையே காணோம்?”
“என்னடா, அங்க போன உடனே எங்களையெல்லாம் மறந்துப்போச்சா?”
“அசோக், அப்படியெல்லாம் ஒண்ணுமில்லடா. கொஞ்சம் வேலை டைட்டாப் போகுது. அதான் நானும் தொடர்புகொள்ள முடியல.”
“சரி, அதை விடுடா. நீ எப்படி இருக்க? ஊட்டுல எல்லாம் சௌக்கியமா?”
“டேய் ஹரீஷ், நம்ம ஊரு வாசம் இன்னும் உங்கிட்ட இருக்குடா. சரி, இவன் வடக்கே போயி பல மாசங்கள் ஆச்சே, நடுவுல வடக்கத்திய பேச்சு ஆதிக்கம் செலுத்துமுன்னு நினைச்சேன்டா. ஆனா, நீ மாறவே இல்லடா.”
“ஏன்டா அசோக், எப்படிடா பிறந்த ஊரையும் மொழியையும் மறக்க முடியும்? ஆனா ஒண்ணுடா, இங்க வந்த பிறகு இப்ப எனக்கு மூணு மொழி தெரியும்டா.”
“ஹரீஷ், நான் ஏன் கூப்பிட்டேன்னா, எனக்கும் ஏதாவது வேலை அந்தப் பக்கம் இருந்தாச் சொல்லேன். நானும் அங்க வந்துடுறேன்.”
“இல்லடா, மாடு மாதிரி வேலை வாங்குறாங்க. நேரம் காலம் பார்க்காம வேலை செய்யறோம்டா. ஆனா, மாசம் முதலில கொடுக்கப்படும் சம்பளம் பத்து, பதினைஞ்சு நாளிலேயே காணாமப் போயிடுதுடா.
மேனேஜர் கிட்ட, ‘சார், சம்பளம் போதல. கொஞ்சம் ரெக்கமெண்ட் பண்ணுங்க’ன்னு சொன்னா, அவர்கிட்ட இருந்து என்ன பதில் வருதுன்னு தெரியுமா?
‘எப்பா, நீ என்னப்பா அப்படி வேலை செஞ்சுட்ட? காலையில வர்ற. கேண்டீனுக்குப் போயிக் காலை உணவை முடிக்கிற. பின்னர் வேலையைத் தொடங்குற. சரி, எடுத்த வேலையை உடனே முடிக்கிறியா, இல்லையே! ஒரு வேலையை எடுத்தா குறைஞ்சது அரை ஷிஃப்ட் ஆக்குற.
இங்க பாரு அசோக், நீ நேரம் காலம் பார்க்காம வேலை செய்யறேன்னு சொல்லுற. ஆனா, நீ வேலையைத் துரிதமாச் செஞ்சா நேரம் காலம் பார்க்காம வேலை ஏன் செய்யப் போறே? மணி அடிச்சவுடனே நீ கிளம்பிப் போயிடலாமே!’
‘சார், என்ன இப்படிச் சொல்லுறீங்க?’
‘வேற எப்படி சொல்லச் சொல்லுற? உங்க எல்லோருக்கும் வந்துப் போகக் கம்பெனி வண்டி விட்டிருக்கு. மூணு வேளையும் சாப்பாடு போடுறோம். பத்தாததுக்கு தங்கும் விடுதியும் கொடுத்திருக்கோம்.’
‘சார், நான் மறுக்கலையே. ஆனா, வேலை முடிச்சுட்டுத்தான் போகணும்னு சொல்லாமச் சொல்லுறீங்களே! சார், உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். என்னை மாதிரி பலர் குறைஞ்சது பன்னண்டு மணி நேரம் வேலை செய்யுறாங்க. இங்க இப்படி வேலை பார்த்துட்டு விடுதிக்குப் போயி எப்படி சமைக்க முடியும்? எவ்வளவு நாள் எங்க மாதிரி உள்ளவங்க பசியோட படுத்திருக்கோம் தெரியுமா?’
‘ஏம்பா, இதுக்கு நான் என்ன செய்ய முடியும்? வசதி செஞ்சு தரலேன்னா நீ என்னைத் தாராளமா கேள்வி கேட்கலாம்’னு சொல்லுறாருடா ஹரீஷ்.”
“ஹரீஷ், இப்பெல்லாம் ஏன்டா வேலைக்குப் போறோம்னே தோணுதுடா. டேய், உனக்குத் தெரியும், நான் வேலைக்கு அஞ்சமாட்டேன்னு. ஆனா, இங்க பண்ணுற வேலைக்கு ஏத்த ஊதியம் இல்லேங்கிறதுதான்டா உண்மை.
இதைக் கேட்டா அவன் பொல்லாதவன், அடாவடி, முற்போக்குவாதின்னு முத்திரை குத்துறாங்கடா. இங்க சங்கமெல்லாம் இல்லடா. எங்க தொழிலாளர் சங்கமெல்லாம் ஆரம்பிச்சு எங்க வம்புல போயி முடியும்னு சங்கம் ஆரம்பிக்கிறதுக்கு ஒத்துவர மாட்டேங்கிறாங்க.
பின்ன, எப்படிடா தொழிலாளியோட நியாயமான கோரிக்கையை முன்வைக்கிறது?
நீ என்னடானா பெரிய எம்.என்.சி.யில போயிச் சேர்ந்துட்ட!”
“அசோக், டேய், இங்கேயும் ஒர்க் பிரஷர் இருக்குடா. இல்லேன்னு நான் மறுக்கல. என்ன, ஒண்ணும் வேற எந்தத் திணிப்பும் இல்லடா. ஒரு வேலையை எடுத்தா, அதைத் தெளிவா, சரியா செய்யணும். ஒவ்வொரு வேலைக்கும் தகுந்த உபகரணங்கள் இருக்குடா. முதல்ல நம்மளோட பாதுகாப்பு முக்கியம்டா.”
“ஆமாம்டா ஹரீஷ், நீ சொன்ன மாதிரி எல்லாத்தையும் கொடுத்துட்டு கேட்டா அதுல ஒரு நியாயம் இருக்கு.
இப்படித்தான் பாரேன், டீ டின்னு ஒண்ணு தராங்க; அதை வாயில வைக்க முடியலடா.
அதை விடு, கேண்டீனுக்குச் சரியான நேரத்துக்குப் போக முடியுதா? இல்லையே!
லேட்டாப் போனாலும் மணி அடிச்சா உடனே ஆட்கள் வந்து, ‘எந்திரீங்க, நேரம் ஆச்சு, எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பீங்க?’ அப்படின்னு எல்லாம் சொல்வான்.
அங்க பன்னாட்டு நிறுவனத்துல கேண்டீனுக்கு நீயே போய் டீ குடிச்சுக்கலாம். யாரும் உடனே கேள்வி கேட்க மாட்டாங்க, ‘ஏன் நீ கேண்டீனுக்குப் போன?’ன்னு.
எல்லாத்தையும் கொடுக்கிறோம்னு சொல்லிட்டு, பின்னாடியே நின்னுகிட்டு டார்ச்சர் பண்ற மாதிரி பண்ணினா எப்படிடா சாத்தியம்?”
“அதுக்குப் பிறகுதான் மத்த எல்லாமே ஹரீஷு… டேய், அங்க மாதிரி இல்லடா. ஒரு மீட்டர் உயரத்துல வேலை செய்யணும்னாலே, இங்க பல பாதுகாப்புப் படிவங்களைப் பூர்த்தி செஞ்சு, பாதுகாப்பு ஆபீசர்கிட்ட முறையா கையொப்பம் வாங்கினாதான்டா அடுத்த வேலையையே செய்ய முடியும். இங்க தொழிலாளர்களோட பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க.
அதுக்காக, அங்க பாதுகாப்பே இல்லேன்னு நான் சொல்ல வரல. சில நேரங்கள்ல தொழிலாளர்களோ, அவங்களோட மேலதிகாரிகளோகூட, வேலையை அவசரமா முடிக்கணும்ங்கிற காரணத்தால பாதுகாப்பு நடைமுறைகளைத் தவிர்த்துடுறாங்க. ‘அவரு ஒரு மீட்டர்தானே ஏறி வேலை செய்யப் போறாரு, என்ன ஆகப்போகுது?’ங்கிற நினைப்புத்தான்டா அதுக்குக் காரணம்.”
“நீ சொல்லுறது சரிதான்டா. இங்கயும் பாதுகாப்பு இருக்குடா. ஆனா, உயரத்துல ஏதாவது வேலை செஞ்சாலோ, கரண்ட்ல வேலை செஞ்சாலோ, சூடான இடத்துல வேலை செஞ்சாலோ, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லேன்னு சொல்ல முடியாது. ஆனா, உன்ன மாதிரி எம்.என்.சி. கம்பெனிக்குள்ளே நுழைந்ததிலிருந்து, வேலை செய்ய ஆரம்பிச்சதிலிருந்து, தொழிலாளியோட பாதுகாப்பு உறுதி செய்யப்படுதுடா.”
“ஆமாண்டா, அதென்னமோ உண்மைதான். பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்ளூர்ல இருக்கிற கம்பெனிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கத்தான் செய்யுது.”
“டேய் அசோக், இங்கயும் வங்கியில கடன் வாங்கித்தான் கம்பெனியை நடத்துறாங்க. பன்னாட்டு நிறுவனங்களும் கடன் வாங்கித்தான்டா நிறுவனத்தை நடத்துறாங்க. ஆனா, ரெண்டு நிறுவனங்களுக்கும் கம்பெனி பாலிசிதான்டா வேற.
இவங்களோட நோக்கம் வேற, அவங்களோட எண்ணம் வேற.
டேய் அசோக், நான் ஒரு சின்ன உதாரணத்தை உனக்குச் சொல்லுறேன். உனக்கே தெரியும், நானும் உன்ன மாதிரி ஊர்லதானே வேலை பார்த்தேன்.”
“ஆமாம், அதான் எனக்குத் தெரியுமே!”
“நான் வேலை செஞ்ச கம்பெனியிலயும் தொழிலாளி உட்கார ஒரு நாற்காலி இல்லடா. ஏன்னா, நாற்காலி போட்டா வேலை செய்யாம நாற்காலியில உட்கார்ந்து நேரத்தைப் போக்குவாங்கங்கிற நினைப்புத்தான்டா!
ஆனா, இங்க முதல்ல தொழிலாளிக்குத் தேவையான சகல வசதிகளையும் செஞ்சு கொடுத்திடுறாங்க. அப்புறம்தான் வேலை. எல்லா வசதிகளையும் பயன்படுத்திக்கிட்டு வேலையை ஒழுங்காச் செய்யலேன்னா, அவனை வேலையைவிட்டு அனுப்ப உடனே முடிவெடுத்திடுவாங்க.”
“சரிடா, இதையெல்லாத்தையும் ஓரம் கட்டு. நீ சொன்னதைப் பார்ப்போம். உன்னோட பயோடேட்டாவை அனுப்புடா. பார்ப்போம், என்ன செய்யலாமுன்னு!”
“டேய் அசோக், நம்ம ஊரு பசங்களெல்லாம் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர்களா இருக்கிறாங்களா?”
“ஏன்டா, நீயும் அப்படித்தானாடா? சங்கோஜத்தையெல்லாம் விட்டெறிஞ்சுட்டு தைரியமா வரணும்டா. நம்ம மொழியில இதுவரைக்கும் பேசியிருப்ப. ஆனா, இனி நீ ஆங்கிலமும், எங்க போறையோ அந்த மொழியையும் கத்துக்கிடணும்டா. அது உனக்கு உதவியா இருக்கும்.”
“சரிடா ஹரீஷ், அப்படி ஆகட்டும்டா. இந்த வாரத்துல நான் உனக்கு என் பயோடேட்டாவை அனுப்புறேன். நீ என்ன பண்ணலாமுன்னு யோசிச்சுச் சொல்லுடா.
நீ சொன்ன மாதிரி தைரியமா, எந்தச் சங்கோஜமும் இல்லாமத்தான் நான் இருக்கிறேன். எனக்குத் தேவை ஒரு நல்ல வேலை, வேலைக்கு ஏத்த ஊதியம். அவ்வளவுதான்டா. இங்க அம்மா, அப்பா, அக்கா, தங்கையின்னு நான் வாங்குற சம்பளமும் அப்பா வாங்குற சம்பளமும் பத்த மாட்டேங்குது.
அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். கூடிய விரைவில் அவளுக்குக் கல்யாணம் பண்ணണം. அதைத் தொடர்ந்து தங்கையும் இருக்கா. அவளுக்கு இன்னும் மூணு வருஷத்துல கால்கட்டு போடணும்.
இதற்கெல்லாம் நான் நல்ல வேலையில உட்காரணும்டா. கைநிறையச் சம்பாதிக்கணும்டா.
டேய் அசோக், நான் உனக்கு உத்தரவாதம் தர்றேன்டா. நான் எடுத்த வேலையை முடிப்பேன்; வேலையிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
எனக்கு இங்கேயே நான் எதிர்பார்க்கிற சம்பளம் கிடைச்சா, நான் ஏன்டா ஊரைவிட்டு வெளியே போயி, அப்பா, அம்மாவை விட்டு, கூடப் பிறந்தவங்களையெல்லாம் விட்டுத் தனியா வேலை பார்க்கணும்?
ஆனா, என்ன பண்ணச் சொல்லுற? என்னோட நிர்ப்பந்தம்…”
பாலமுருகன்.லோ ✍️
- அம்மாவின் கைகளுக்கு மூப்பில்லை.
- தீபாவளியில் இன்று
- 2025 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள்
- 80களில் “தீபாவளி”எப்படி தான் இருந்தது….
- விடை பெற்று விட்டாயா, நண்பனே?
- பச்சாதாபம்
- உம்மாச்சி
- கணபலி -திருவையாற்று வேள்வியில் பிறந்த அகப்பெருங்கவிதை
- புருஷலட்சணம்.
- விளையும் பயிர் முளையிலே
- எண்ணம் மாறுபட என்ன காரணம்?
- வெற்றிடம்
- கடைசி மணியும் முதல் வரியும்
- 6.மாவடு கண்ணல்லவோ