‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பகலாகியும் இரவாகியும்
பருவங்கள் பலவாகியும்
அகலாதொரு அன்பாகியும்
அழியச்செயும் அம்பாகியும்
இகபரமென்றெதுவாகியும்
இல்லாததுள்ளதாயும்
குகையாகியும் பகையாகியும்
நகைக்கெல்லாம் நகையாகியும்
எல்லாமேதுமில்லாதாயும்
சொல்லாச்சொல் சேர்ந்த
செம்மாந்தமொழியாகவும்
ஆளவரமற்றதோர் அரங்காகியும்
அதில் யாருங்காணா நீலப்படங்களும்
அவ்வப்போது திரையிட்டுக்காட்டியும்
இப்போதையப்போதாக்கியும்
அப்போதையிப்போதாக்கியும்
எப்போதுமுறையாமல்
கரைபுரளும் அலைகடலாகியும்
மதில் மேல் பூனையாகவும்
மாடிவீட்டு ஏழையாகவும்
மிதித்தோடும் முரடனாகவும்
சதிசெய்யும் எதிரியாகவும்
கதிகலங்கச்செய்து
கதிமோட்சமளித்துக் கருணையுடன்
அருள்பாலிக்கவும் செய்து
பொருள் மீறிய பொருள் தந்து
சேரும் குப்பைக்கூளங்களெல்லாம்
போய்ச்சேரும் இடமறியாதொரு
பேரருட்சுரங்கமாகி
ஆறாக்காயங்களைக் குத்தியும் கிளறியும்
தீராக்கனிவில் நித்தியம் மருந்திட்டும்
புலரும் நாளென்பதே நீயாகி நானுமாகி
யாதுமாகி நின்றா யென்
மனமே என் மனமே….
ஏதுரைப்பேன் நன்றியென்றொன்றுனக்கு
மனமே என் மனமே…..