– ஏ.நஸ்புள்ளாஹ்

நவீன தமிழ்க் கவிதை வெளியில் வாசிப்பவனின் மனதை அதன் வழக்கமான இலகுவான தளங்களிலிருந்து பெயர்த்து முற்றிலும் புதியதொரு பிரபஞ்ச வெளிக்கு அழைத்துச் செல்லும் வல்லமை படைத்தவை ஜமீலின் கவிதைகள். ‘வால் பிடித்தல்’ என்னும் கவிதைத் தொகுப்பு. வழக்கமான பாடுபொருள்களைக் கடந்து மனித வாழ்வின் மிக நுட்பமான அசைவுகளையும் புலன்களுக்கு எட்டாத அல்லது விளிம்புகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான ஆன்ம அனுபவங்களையும் தன் கவிதைகள் வாயிலாகப் பதிவு செய்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் யாவும் இயற்கை, மனித மனம், காலம், மௌனம் மற்றும் தனிமை ஆகியவற்றின் ஊடே நடத்தும் அரண் மற்றும் அழகியல் உரையாடல்களாக மிளிர்கின்றன.
மனித மனம் காலம், வெளி, தனிமை, அழிவு மற்றும் இருத்தலுக்கான போராட்டம் ஆகியவற்றின் சங்கமிக்கும் ஒரு புள்ளி. ஜமீல் தனது ‘வால் பிடித்தல்’ தொகுப்பில் இந்தச் சங்கமிப்புப் புள்ளிகளைத் தொட்டுக்காட்டுகிறார். ஒரு கவிதையின் வரிகள் மனிதனின் அகவெளிக்கும் புறவெளிக்கும் இடையே நடக்கும் உராய்வின் வெளிப்பாடுகள். ஜமீலின் கவிதைகளில் உள்ள நுண்ணிய அழகியலையும், மனித மனத்தின் விளிம்புகளுக்கு அப்பாற்பட்டுப் பேசும் புலன் அனுபவங்களையும் பல்வேறு கோணங்களில் விரிவாக வாசிப்பு அனுபவமாக தருகிறேன்.
சுரண்டல் மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு என்பது எப்போதுமே ஒரு பரஸ்பர சமநிலையோடு தொடங்கினாலும், காலப்போக்கில் அது அதிகாரத்தின் கோர முகமாக மாறுவதை சுரண்டல் கவிதை மிகத் துல்லியமாகப் பதிவு செய்கிறது.
மரங்கள் கூட்டம் கூட்டமாக
வாழும் இடத்தை
காடென அழைக்கிறோம்
…….
என்கிற வரிகள் காட்டின் இயல்பான கூட்டு வாழ்வையும் அதன் பிரம்மாண்டமான தனித்துவத்தையும் எளிய மொழியில் வெளிப்படுத்துகின்றன. அந்த வெளி விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி வாழ்விற்கான அனைத்தையும் பரிசளித்தது. இருப்பினும் காலப்போக்கில் மனிதன் அதில் அத்துமீறி நுழைந்து தன் பாதைகளையும் பரண்களையும் அமைத்துக் கொண்டான்.
இக்கவிதையின் நுண்ணிய அழகியல் மனிதன் தான் சுரண்டியது காட்டை இல்லை, தன் சொந்த வாழ்வின் இருப்பையே என்பதைப் புரிந்து கொள்ளாமல் போவதைச் சுட்டிக் காட்டுவதானது வானுயர வளர்ந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள் இயற்கையின் அழிவின் மீது கட்டப்பட்டவை என்றாலும் அவற்றுள் மனிதன் தனது சுயநாசத்தின் விளிம்பை உணராமல் வாழ்வது கவிதையின் உச்சபட்ச உளவியல் வெளிப்பாடாகும்.
குமிழி வாழ்வின் தற்காலிகத்தன்மையை ஒரு சவ்க்காரக் குமிழியின் உருவகத்தின் மூலம் ஜமீல் பேசும் விதம் மனதை உலுக்கக் கூடியது.
ஊதிப் பெருத்து
உடையக் காத்திருக்கும்
சவர்க்காரக் குமிழி நான்
வானவில்லின் வர்ணங்களை
கன கச்சிதமாக
எனக்குள் வரைந்து வைத்துள்ளேன்
காலமெனும் காற்று
நிச்சயமெனை உடைத்தே தீரும்
எப்போது உடைக்குமென்றுதான்
அனுமானிக்க முடியாதுள்ளது
காற்றில் மிதக்கும்
அச் சிறு கணங்கள்தான் எனக்கென்று
விதியாக்கப்பட்ட ஆயுளாகும்
காற்று நெருங்குவதற்குிடையில்
ஆகக் குறைந்த பட்சம்
ஒரு குழந்தையின் கண்ணையாவது
கவர்ந்து விட்டு உடைதலில்தான்
என் வாழ்வும் அர்த்தமுள்ளதாகிறது
…….
என்ற அறிமுகத்தோடு தொடங்கும் கவிதை, வானவிலின் வர்ணங்களை தனக்குள் கச்சிதமாக வரைந்து கொண்டுள்ள அக உலகைக் காட்சிப்படுத்துகிறது. எப்போது உடைக்குமென்று கணிக்க முடியாத காலமெனும் காற்று, இந்தச் சிறிய குமிழியை எண்ணத்திலும் உடைத்துத் தீரும். காற்றில் மிதக்கும் அச்சிவ கணங்கள்தான் தனக்கான ஆயுள் என்றாலும் ஒரு குழந்தையின் கண்ணையாவது கவர்ந்துவிட்டு உடைவதில்தான் தன் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது என்கிற வரி பேரழிவிற்கும் தற்காலிகத்தன்மைக்கும் இடையேயான அழகியலைச் செவ்வனே பேசுகிறது.
மனித மனத்தின் விளிம்பு நிலை இந்தத் தற்காலிகத்தின் உச்சத்தில் நின்று பிரபஞ்சத்தோடு கொள்ளும் மௌனமான உரையாடல்தான்.
பிறகு உறவு மற்றும் காதலின் எல்லைகளுக்கு அப்பால் விரியும் நினைவுகளின் வெளியை பிறகு கவிதை பேசுகிறது.
என் கரமிறுகப் பற்றிய பிறகு
அத்தனை தீவிரமாக
நீ என்னை துரத்தித் துரத்தி
நேசிக்க வேண்டுமென்று
எந்த உத்தரவுகளுமில்லை
……..
எனும் வரிகள் காதலின் நிபந்தனையற்ற விடுதலையைப் பேசுகின்றன. வழக்கமான காதலின் கோரிக்கைகளிலிருந்து விலகி கண்ணீரைத் துடைக்கும் விரலாகவும், உடைந்து விழும் போது ஆற்றுப்படுத்தும் சக்தியாகவும் காதலின் வடிவங்கள் மாறுகின்றன.
இங்கு புலன் அனுபவம் உடல்சார்ந்த ஈர்ப்பைக் கடந்து, ஒரு முத்தத்தின் வழியேயோ அல்லது மெய் மறக்கச் செய்யும் இசையின் வழியேயோ ஆன்மாவின் ஆழத்தில் சென்று படியும் தடத்தில் அமைகிறது.
சிறுமியின் மனசுக்குள் ஆர்ப்பரிக்கும் புகார்கள்
கடல் முன்றவெளியில் தன் கனவு வீட்டை மிக நேர்த்தியாகக் கட்டிக் கொண்டிருக்கும் ஏழைச் சிறுமியின் மன உலகை இக்கவிதை விவரிக்கிறது.
அதனை இரக்கமற்று
உடைத்துச் செல்வதும்
திரும்பி வருவதுமாக இருக்கின்றன
கடலின் கட்டுக்கடங்கா அலைகள்
…….
அலைகள் தகர்க்கத் தகர்க்க நம்பிக்கை தளராமல் மீண்டும் மீண்டும் வீட்டை கட்டும் சிறுமியின் செயல், மனித குலத்தின் அழியாத கனவுத் தேடலைக் குறிக்கிறது. ஒரு கட்டத்தில் அலைகள் எல்லை மீறி நடக்கையில், அந்த அதீத புகார்கள் சிறுமியின் மனசுக்குள் ஆர்ப்பரிக்காமல் போவது யதார்த்தத்தின் பெருந்துயரம் கனவுகளையே மரக்கடித்துவிடும் விளிம்பு நிலை உணர்வை அழகாகக் கடத்துகிறது.
இரண்டு முகங்கள்
நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல மனிதனுக்குள் இருக்கும் முரண்பட்ட முகங்களின் உளவியலை ஜமீல் மிக ஆழமாக ஆராய்கிறார்.
இரண்டு முகங்களை
ஒரு நாணயம்
அணிந்திருப்பதன் புதிர்
என்னவென்று எனக்குத் தெரியாது
தான் அணிந்திருக்கும் முகங்களுக்குள்ளும் வெவ்வேறு சூட்சுமங்கள் இருப்பதாகவும், ஒன்று தனக்கானது மற்றது உங்களுக்கானது என்றும் கவிஞன் பிரித்துக் காட்டுகிறான்.
மனிதன் தனது சமூக முகத்திற்கும் அக முகத்திற்கும் இடையே நடத்தும் போராட்டம், இந்த ஆயுளை அத்தனை எளிதாக வரைந்து தீர்க்க முடியாத ஒரு புதிராக மாற்றுகிறது என்பதை இக்கவிதை சுட்டுகிறது. விளிம்புகளுக்கு அப்பாற்பட்ட ஆன்மாவின் தேடலில், சுயத்தை அடையாளம் காண்பது ஒரு முகமூடியைக் கழற்றுவதை விடக் கடினமானது என்ற உண்மையை இது உணர்த்துகிறது.
மற்றுமொரு கவிதை அது எல்லாவற்றின் தொடக்கமும் முடிவும் ஆகும் என்ற பிரபஞ்ச உண்மையை இக்கவிதை பேசுகிறது.
சில சமயம் மௌனமென்பது
மா கடலாகவும்
தொடர் மலைகளாகவும்
பெரு நிலமாகவும்
சிறு விதைகளாகவும்
ஏன் வெண் பஞ்சு
மேகமாகவும் கூட இருக்கலாம்
ஆனால் ஒன்றுமில்லாமல் மட்டும்
இருக்கச் சாத்தியமில்லை
அப்படி இருந்தால்
அதனை மௌனமென்று சொல்வதில்
எந்த அர்த்தமுமில்லை
ஏனெனில் மௌனமாக இருந்துதான்
கடல் பெருக்கெடுக்கிறது
மலைகள் குமுறுகின்றன
நிலம் வெடிக்கிறது
விதைகள் அடர் வனமாகின்றன
வானம் முழங்குகிறது
……
ஒன்றுமில்லாமல் இருக்க சாத்தியமில்லாத அந்த மௌனத்திற்குள் தான் கடல் பெருக்கு எடுக்கிறது, மலைகள் குமுறுகின்றன, நிலம் வெடிக்கிறது. புலன்களின் எல்லைகள் மௌனத்தில் சுருங்கி, பின்னர் அங்கிருந்தே பிரபஞ்சத்தின் பேரொலிகள் பிறக்கின்றன. மௌனத்தின் பேரமைதிக்கு பின்னால் இருக்கும் ஆக்ரோஷமான வாழ்வுணர்வை இக்கவிதை நுண்ணிய அழகியலோடு வெளிப்படுத்துகிறது.
அந்நியம் பொம்மைகளற்ற அறை குழந்தைகளுக்கு அந்நியமாவது போல, விண் மீன்களற்ற வானம் இரவுகளுக்கும், துளைகளற்ற மூங்கில்கள் காற்றுக்கும் அந்நியமாவது வாழ்வின் அடிப்படை விதிகளாகின்றன.
பொம்மைகளற்ற அறை
குழந்தைகளுக்கு
அந்நியமாவதைப் போன்று
வீண் மீன்களற்ற வானம்
இரவுகளுக்கு
அந்நியமாவதைப் போன்று
துளைகளற்ற மூங்கில்கள்
காற்றுக்கு அந்நியமாவதைப் போன்று
மரங்களற்ற வீடுகள்
எப்போதும் பறவைகளுக்கு
அந்நியமாவதைப் போன்று
யாரும் எதிர்பாராத தருணங்களில்
மிக அலட்சியமாக
நிகழ்ந்து விடுகிறது அந்நியம்
சில அந்நியம் தற்காலிகமானது
சில அந்நியம் நிரந்தரமானது
இருந்தும் அவாவும்று இருப்பு
சாத்தியமற்றுப் போதலில்
அந்நியமாகவே இருக்கிறது வாழ்வு
…..
சில அந்நியம் தற்காலிகமானது
சில நிரந்தரமானது. இருப்பினும் அவாவும் இருப்பும் சாத்தியமற்றுப் போதலில், வாழ்வே ஒரு அந்நியமாகவே தொடர்கிறது என்ற தத்துவார்த்த முடிவை இக்கவிதை வழங்குகிறது. மனித மனம் சமூகச் சூழலில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் வாழ் நிலையின் உளவியலை இது பேசுகிறது.
இருளை நிராகரிக்கும் மின்மினிகள்
மின்மினிகள் சுதந்திரமாகப் பறப்பதற்கான இருளை ரசித்து வரையும் தருணங்களை விவரிக்கும் கவிதை, தன்னைத் திட்டிட்டு வருத்துவதாகக் கருதும் மின்மினிகளின் உளவியலைப் பேசுகிறது.
மின்மினி பூச்சிகள்
சுதந்திரமாக பறப்பதற்கான
இருளை ரசித்து
வரையும் தருணமெல்லாம்
தங்களை திட்டமிட்டு வருத்துவதாக
கருதுகின்றன மின்மினிகள்
ஒரு கட்டத்தில் ஓவியனை
ஜென்ம விரோதியாகவும்
பார்க்கத் துவங்குகின்றன
மிக அலட்சியமாக
இருளை நிராகரிக்கும் மின்மினிகள்
நாளை வசப்படவிருக்கும்
எல்லைகளற்ற ஆகாயம் பற்றிய
ஓவியனின் தீராக் கனவுகளை
ஒரு போதும் உய்த்துணர்வதில்லை
இருளை வரையும்
ஒவ்வொரு முறையும்
ஓவியனின் விரல்களுக்கு
எப்படியும் வலிக்காமலா போகும்
அதோ காலத்தின் தூரிகையிலிருந்து
துளித் துளியாக சிந்துகின்றன
மின்மினிகள் பற்றிய
……….
என்ற வரிகள் கலை உருவாக்கத்தின் துயரத்தையும், ஒளியைத் தேடும் ஆன்மாவின் தவிப்பையும் அழகாக இணைக்கின்றன. காலத்தின் தூரிகையிலிருந்து சிந்தும் மின்மினி பற்றிய மாபெரும் கனவுகள், புலன்களின் எல்லைகளைக் கடந்து பிரபஞ்ச வெளிச்சத்துடன் மனிதனை இணைக்கின்றன.
ஜமீலின் ‘வால் பிடித்தல்’ தொகுப்பில் உள்ள இக்கவிதைகள் யாவும் மனித மனத்தின் எளிய எல்லைகளைக் கடந்து, பிரபஞ்சத்தின் ஆழமான விளிம்புகளுக்கு வாசிப்பவனை அழைத்துச் செல்கின்றன. இயற்கையின் அழிவு, வாழ்வின் தற்காலிகம், மௌனத்தின் பிரம்மாண்டம், அந்நியமாதல் மற்றும் காதலின் தீவிரம் ஆகியவற்றைத் தன் நுட்பமான கவிமொழி மூலமாக ஜமீல் பதிவு செய்துள்ளார். இக்கவிதைகளின் வழியாக வாசகர் அடையும் புலன் அனுபவம் வாசிப்புடன் நின்றுவிடுவதில்லை அது மனிதனின் ஆன்மாவைத் தொட்டு எழுப்பும் ஒரு அழகியல் அற்புதமாக எஞ்சுகிறது.
நவீன தமிழ்க் கவிதைகளின் வரலாற்றில் தனித்துவமான திசையை நோக்கிப் பயணித்த ஆளுமைகளில் ஜமீல் அவர்களின் கவிதைகள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. மனித மனதின் ஆழங்களை, வாழ்வியலின் முரண்களை, சமூகத்தின் வேதனைகளை மற்றும் பிரபஞ்சத்தின் பேரமைதியைத் தனது கவிதைகளில் பேசுபவர் ஜமீல். இவரது கவிதைகள் ஆன்மாவின் வெளிப்பாடுகள் காலத்தின் காட்சிகள் மற்றும் சமூகத்தின் மனசாட்சி ஆகும்.
பாரதிக்குப் பிறகு கவிதையில் பல புதுப்புது பரிமாணங்கள் தோன்றின. புதுக்கவிதை இயக்கம், நவீன கவிதை, பின்நவீனத்துவக் கவிதை சமகாலத்தில் பின்உண்மை கவிதை என்று கவிதையின் வடிவம் பலகட்ட நகர்வுகளைச் சந்தித்தது. சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில், மரபின் வேர்களைப் பற்றிக்கொண்டு நவீனத்தின் உச்சத்தைத் தொடும் பாணியை ஜமீல் புனைகிறார்.
- மழை புராணம் : 45
- சமரசம்
- ஜமீலின் ‘வால் பிடித்தல்’ கவிதைகள்: நுண்ணிய அழகியலும் மனித விளிம்பு நிலை புலன் அனுபவங்களும்
- திண்ணை
- மிட்டாய் தாத்தா
- மேகமலை — ஒரு மலையின் குரல்
- அரா கவிதைகள்
- கவிதை
- திடீர் சிந்தனைகள்!